TNPSC Thervupettagam

இந்திய கல்விக் கொள்கை வரலாறு

July 30 , 2019 1992 days 3737 0

மெக்காலே கல்விக் கொள்கை (Lord Macaulay education policy)

  • 1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் (Charter Act of 1813) எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை.
  • பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளில் புத்தகங்களை வெளியிடுவதற்கான ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்காலே வாதிட்டார்
  • 1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு – பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்கு பிப்ரவரி, 2, 1835 சமர்ப்பித்தார். அதன்படி, ஆங்கில கல்வி சட்டம் 1835 (English Education Act 1835 ) இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • ஆங்கிலக் கல்வியை முழுதும் ‘வேலையாள்’ தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான – கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
  • 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கம்பெனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

 

பரோன் ஆக்லாண்ட் தீர்மானம் (Baron Auckland Minutes)

  • வில்லியம் பெண்டிங்குக்குப் பிறகு 1839 ஆம் ஆண்டு ஆக்லாண்ட் பிரபு பிறகு கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார், மெக்காலே இங்கிலாந்து திரும்பினார். பாரம்பரிய ஓரியண்டல் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்தாமல் பென்டிங்கின் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரிகளை ஆதரிக்கப் போதுமான நிதி கண்டுபிடிக்க ஆக்லாண்ட் திட்டமிட்டார்.
  • அவர் (நவம்பர் 24, 1839) ல் ஒரு தீர்மானம் இயற்றினார்; அதன்படி ஓரியண்டல் மற்றும் ஆங்கிலக் கல்லூரிகளுக்குப் போதுமான நிதி வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிழக்கிந்திய கம்பெனி சமஸ்கிருதம் மற்றும் அரபி படைப்புகளை வெளியிடுவதற்கு மீண்டும் மானியம் வழங்கத் தொடங்கியது, 1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது.
  • நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

 

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

  • நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல;
  • அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

 

டாக்டர் லட்சுமணசாமி குழு

  • 1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர்.
  • பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

 

கோத்தாரி கல்விக் குழு

  • டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.
  • அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

 

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை

  • 1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
  • ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

 

யஷ்பால் கல்விக் குழு

  • உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன.
  • சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரியான கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

 

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

  • இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே – ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி.
  • எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

 

இதன் முக்கிய அம்சங்கள்

    • பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன. அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
    • திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
    • இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    • ஆசிரியர்களின் தரம் – தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.
    • மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.
    • ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.
    • கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.
    • ”இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு உரிய மொழி” என்று சமஸ்கிருதத்தை இந்தக் கல்விக் கொள்கை கட்டாயமாக்குகிறது (4.5.14)
    • மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி ஒன்றை கட்டாயமாகக் கற்பதுவும் திருத்தப்பட்ட வரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.
    • இந்தியாவின் இருபெரும் இசைகள் என்ற பெயரில் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையயும் மட்டுமே வகைப்படுத்தும் இக்கலிவிக் கொள்கை (4.6.2.1) , தமிழ் பண்ணிசை, சிறு பழங்குடிகளின் இனக்குழு இசைகளை ’பிற’ (Others) என புறந்தள்ளுகிறது.
    •  முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் “தேசிய கல்வி ஆணையம்” (National Education Commission)- இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்ற அதிகார கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது. (2.3.1) ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசிய கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக மட்டுமே செயல்படும். (8.1.3.)
    • மழலையர் கல்வியிலிருந்து உயராய்வு கல்வி வரை கல்வித் துறையின் அனைத்து நிலையிலும் கொள்கைகள் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை வகுப்பது இந்த “தேசிய கல்வி ஆணையத்தின்” அதிகாரத்திற்குட்பட்டது. மாநில அரசு இதன் கொள்கை செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர வேறு பணி எதுவும் அதற்குக் கிடையாது. (அத்தியாயம் 23)
    • மனித வள மேம்பாட்டுத்துறையை கல்வித்துறை (Ministry of Education) என்பதாக பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கின்றது. இது பெயர் மாற்றமல்ல, இந்திய அரசு கல்வித்துறை அதிகாரத்தை கையிலெடுத்துக் கொள்ளும் அறிவிப்பெனலாம்.
    • மாநில அளவில் பள்ளிக் கல்வியை ஒழுங்கு செய்ய ஒரு “மாநிலக் கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (State School Regulatory Authority) அமைய வேண்மென்றும், அது தேசிய கல்வி ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பு என்றும் இந்த கல்விக் கொள்கை சொல்கிறது( 8.1.3)
    • கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசு ஒன்று குவிக்க , தேசிய கல்வி ஆணையத்தின் கீழ் “தேசிய தேர்வு முகமை” (National Testing Agency) “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம், பொதுக் கல்விக் குழு”,( General Education Council) “உயர்கல்வி நல்கைக் குழு, (Higher Education Grants Commission) தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் வெளிமாநிலத்தவர் நுழைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
    • பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும். (பத்தி 4.9.6) இனி பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், மருத்துவம், சட்டம், பொறியியல் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும்.
    • இந்திய அரசின் அதிகாரத்தை கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (National Higher Educational Regulatory Authority-NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2)
    • இதுவரை உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம், இந்திய பார்கவுன்சில், தேசிய தொழிநுட்பக் கல்வி ஆணையம் ஆகியவை தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக மாறும். மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)
    • கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம். இந்தக் குழு கல்லூரி மட்டுமின்றி, பள்ளியின் பாடத் திட்டத்தையும் முடிவு செய்யும்(18.3.2).
    • மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக “தேசிய ஆய்வு நிறுவனம்” அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.
    • மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், உயராய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அதிகாரம் வழங்கும் அதிகாரம், தேசிய ஆய்வு நிறுவனத்திற்கே உண்டு. மாநில அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. (10.9)
    • தனியார் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பலகலைக்கழகங்களோடு கூட்டு வைத்து “கல்வித் தொழில்” செய்யலாம். (12.4.3)
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குள் கடை விரிக்கலாம்.(12.4.11)
    • 23.B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக்கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது.
      மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உருவான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண்டாடிய குருதியில் தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.
  • 1994-ம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை.

நன்றி: தினமணி(30-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்