இந்திய காலனி வரலாற்றை எழுதிய வந்தவாசி போர் - 264 ஆண்டு சரித்திர கோட்டை!
வேலூர்:
- இந்திய காலனி வரலாற்றை எழுதிய நாள் 1760 ஜன.22 என்பது யாராலும் மறுக்க முடியாது. 265 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தமிழ்நாட்டின் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆங்கிலேய படைகளுக்கும், பிரெஞ்சு படைகளுக்கும் இடையே நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால், அடுத்த 187 ஆண்டுகள் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டே கிடக்க வேண்டிய அவல நிலைக்கு வழிவகுத்த நாள் இந்த நாள்தான். இந்த போரில் பிரெஞ்சு படைகள் வென்றிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
வாஸ்கோடகாமா:
- உலக வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு உண்மை விளங்கும். 1453-ம் ஆண்டு, மே மாதம் 29-ம் நாள் ஆட்டோமானிய பேரரசின் துருக்கியர்கள், ரோமானிய பேரரசுக்கு சொந்தமான தங்க ஆப்பிள் என்றழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல் எனப்படும் கான்டாண்டி நோபிள் நகரை கைப்பற்றியதால் ஐரோப்பியர்களின், ஆசியாவுக்கான வணிக பாதை மூடப்பட்டது. வேறு வழியில்லை, புதிய வணிக பாதையை கண்டறிய வேண்டிய கட்டாயத்துக்கு ஐரோப்பியர்கள் தள்ளப்பட்டனர்.
- எனவே, போர்த்துக்கீசிய மன்னரின் உத்தரவின் பேரில், பயணவியலை கற்றுத்தேர்ந்த வாஸ்கோடகாமா, இந்திய பெருங்கடலின் வணிக காற்றின் வீச்சை நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் வழிகாட்டுதலில், புதிய வழியை கண்டறிந்து கேரளா கள்ளிக்கோட்டையை 1498 மே 20-ம் தேதி வந்தடைந்தார்.
- போர்த்துக்கீசியர்களை தொடர்ந்து டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள், கடைசியாக ஆங்கிலேயர்கள் என இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கியதும் வணிக போட்டி ஆரம்ப மானது. 1757-ல் நடைபெற்ற பிளாசிப் போரால், ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் வணிக உரிமை கிடைத்தது. இதன் மூன்றாண்டுகளுக்கு பின்பு 1760-ல் நடந்த வந்தவாசி போர், ஆங்கிலேயர்களின் வணிக உரிமையை, ஆட்சி உரிமையையாக மாற்றி தந்தது.
வந்தவாசி கோட்டை:
- மராட்டியர்களால் கட்டப்பட்ட பல கோட்டைகளில் வந்தவாசி கோட்டையும் ஒன்று. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவுடன் நீள்சதுர வடிவம் கொண்டது இந்த கோட்டை. மொகலாயர்கள் காலத்தில் ஜாகீர்தாரி முறையில், ஆற்காடு நவாப்புகளுக்கு வந்தவாசி கிடைத்தது. லெப்டினன்ட் என்ற அந்தஸ்த்தில் மொகலாயர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும், முஸ்லிம் செல்வ சீமான்கள் தென்னிந்திய கர்நாடகத்தின் ஆட்சியாளராக இருந்தார்கள்.
- அவர்கள் ஆண்கள் என்றால் நவாப் என்றும், பெண்கள் என்றால் பேகம் என்றும் அழைக்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அவர்களின் தலைநகரம் என்பதால், ஆற்காடு நவாப் ஆனார்கள். 1690 முதல் நவாப்புகள், தென்னிந்தியாவில் வரி வசூல் செய்தனர். 1749-ல் ஆட்சிக்கு வந்த முகமது அலிகான் வாலாஜா (வாலாஜா என்பது பெயர்) என்பவர் பிரெஞ்சு படை அதிகாரிகளை, வந்தவாசி கோட்டையில் தங்குவதற்கு அனுமதித்தார். அப்பொழுதிலிருந்து பிரெஞ்சு ராணுவ தளமாக வந்தவாசி மாறியது.
ஆங்கிலேயர்களின் முயற்சி:
- இத்தகைய சூழலில், இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களது வணிக ஆதிக்கத்தை மேம்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1751-ல் ராபர்ட் கிளைவ், ஆற்காட்டை கைப்பற்றினார். இந்த சூழலில், அப்போது ஆட்சியில் இருந்த முகமது அலிகான் வாலாஜா என்பவரை தூக்கி எறிந்துவிட்டு, அந்த பதவியில் அமர்வதற்கு சந்தாசாகிப் என்பவர் உரிமை கோரினார்.
- அவருக்கு பிரெஞ்சுக்காரர்கள் ஆதரவு தந்ததால், முகமது அலிகான் வாலாஜா ஆங்கிலேயர்களை ஆதரித்தார். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டியிருந்ததால், வந்தவாசியில் இருந்த பிரெஞ்சு படைகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் பதவியில் இருந்த முகமது அலிகான் வாலாஜாவுக்கு ஏற்பட்டது.
- மேலும், ஆங்கிலேய படைகளை நிறுத்திவைக்க வசதியாக, ஆற்காட்டில் இருந்து வெறும் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வந்தவாசி கோட்டையை கைப்பற்ற 1752, 1757, 1759 ஆண்டுகளில் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். இறுதியாக 1760 ஜன.22-ல் வெற்றியடைந்தனர். இந்த வெற்றியே டெல்லி நோக்கி ஆங்கிலேயர்கள் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தனர். இந்த வெற்றிக்கான அடித்தளமாக ஆற்காட்டில் ராபர்ட் கிளைவால் டெல்லி கேட் கட்டப்பட்டு இதன் தொடர்ச்சியாகவே இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையானது.
மோதிய படைகள்:
- ஆங்கிலேய படையில் 2,754 சிப்பாய்கள். பிரெஞ்சு படையில் 12,000 சிப்பாய்கள். ஆங்கிலேய படையில் 14 பீரங்கிகள், பிரெஞ்சு படையில் 25 பீரங்கிகள். ஆங்கிலேயர்களுக்கு சிகப்பு கோட், பிரெஞ்சுக்காரர்களுக்கு வெள்ளைகோட், ஆங்கிலேய படைகள் 3 இடங்களில் அணிவகுத்து நின்றனர், பிரெஞ்சு படைகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டனர்.
- வந்தவாசி கோட்டையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் 960 பிரெஞ்சு வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி நிறுத்தப்பட்டிருந்தனர்.
- அமைதியான குணம் கொண்ட, ஆங்கிலேய படைத்தளபதி சர் அயர் கூட்டின்(34). பிரெஞ்சு படை தளபதி ஜெனரல் லாலி (58). லாலியின் குதிரைப்படைக்கு யாரும் தலைமை ஏற்க மறுத்ததால், தானே தலைமை தாங்கினார். போர் தொடங்கியது. அப்போது, கர்னல் சர் அயர் கூட் தனது வீரர்களுக்கு சொன்ன முதல் வார்த்தை ‘இந்தியா நமது கையில்’ என்பதுதான்.
போரின் போக்கு:
- காலை 7 மணிக்கு முதல் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. 9 மணிக்கே ஆங்கிலேய படைகள் முன்னேறின. 11 மணிக்கு பிரெஞ்சு குதிரை படைகள் பின்வாங்கின. 12 மணிக்கு ஆங்கிலேய பீரங்கிகள் குண்டு மழைகளை பொழிந்தன. சரியாக மதியம் 2 மணிக்கு பிரெஞ்சு படைகள், வந்தவாசி கோட்டையை காலி செய்துவிட்டு ஓடினர். வெறும் 7 மணி நேரமே வந்தவாசி போர் நடந்தது. பிரெஞ்சு படையில் 800 பேர்களும், ஆங்கிலேய படை யில் 190 பேர்களும் உயிரிழந்து கிடந்தனர்.
ஜெனரல் லாலி:
- 20 பேர்களுடன், ஜெனரல் லாலி பாண்டிச்சேரிக்கு தப்பியோடினார். பின்பு, 1761 ஜனவரி 15-ல் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். தனது 7 வயதில், பிரான்ஸ் நாட்டின் ராணுவ கொடிகளை தூக்கி சுமக்கும் சாதாரண சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்தவர், 42 வயதில் அவர் பெயரிலேயே ஒரு ரெஜிமெண்ட், 55 வயதில் ஆர்டர் ஆப் செயின்ட் லூயிஸ் என்ற சிறப்பு பட்டம் என சிறந்து விளங்கிய ஜெனரல் லாலி மீது ராஜ துரோகம் சுமத்திய பிரெஞ்சு அரசின் ஆணையால் 9.5.1766ல் அவரது தலை வெட்டப்பட்டது.
சர் அயர் கூட்:
- சர் அயர் கூட் 1762-ல் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையை ஏற்றார். உயரிய வீரவாள் விருது தரப்பட்டது. 1769-ல் செயின்ட் ஹெலினா தீவின் கவர்னர் மகளை மணந்தார். சர் பட்டம் 1771-ல் வந்தது. 1783-ல் சர் அயர் கூட் உயிரிழந்த போது, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் அவருக்கு நினைவுத்தூணை ஆங்கில அரசு நிறுவியது.
போரின் விளைவு:
- வரலாற்று சிறப்பு மிக்க வந்தவாசி போர் குறித்து வரலாற்று மாணவரும் வேலூர் சரக முன்னாள் டிஐஜியுமான முத்துசாமி, கூறும்போது, ‘‘ஏற்கெனவே 1751-ல் இருந்து ஆங்கிலேயர்கள் ஆற்காட்டில் இருந்ததாலும், கர்நாடக நவாப் ஆதரவு இருந்ததாலும், வந்தவாசி போரின் விளைவாக தென்னிந்தியாவில் ஆங்கி லேயர்கள் ஆதிக்கம் வேரூன்றியது. 1763 பாரீஸ் உடன்படிக்கையின்படி, பிரெஞ்சுக் காரர்கள், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்துக்கு முழுவதும் ஒத்துக் கொண்டனர்.
- மேலும், வந்தவாசி போரை பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பிரெஞ்சு படைக்கு இருந்த சம்பள பாக்கியும், சரியான சாப்பாடு கிடைக்காமையுமே, அவர்களின் தோல்விக்கு காரணங்கள் என ஒரு ஓரத்தில் எழுதியுள்ளனர். சாப்பாடு முக்கியமல்லவா...விதி வலியது. முகமது அலிகான் வாலாஜா, ஆரம்பத்திலேயே யாரையும் ஒட்டவிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதில், பதவிச்சண்டை வேறு’’ என்றார்.
- உலக வரலாற்றில் பல சாம்ராஜ்யங்கள் அழிந்ததும், எழுந்ததும் போர்களால்தான். அப்படி, இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாடு எழுவதற்கு கராணமாக இருந்ததும் வந்தவாசி போர் என்று கூறினால் மிகை இல்லை. இந்திய வரலாற்றின் முதல் பக்க மாக இருக்கும் வந்தவாசி போரை தாக்கி நிற்கும் வந்தவாசி கோட்டையை நாம் பாதுகாக்க வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)