TNPSC Thervupettagam

இந்திய குழந்தைகளில் 77 சதவிகித பேருக்கு சரிவிகித உணவு கிடைப்பதில்லை ஆய்வில் அதிா்ச்சி தகவல்

October 24 , 2024 8 days 57 0

இந்திய குழந்தைகளில் 77 சதவிகித பேருக்கு சரிவிகித உணவு கிடைப்பதில்லை ஆய்வில் அதிா்ச்சி தகவல்

  • இந்தியாவில் 6 முதல் 23 மாத வரையிலான குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மத்திய மாநிலங்களில் இந்த அளவு 80 சதவீதத்துக்கு மேலாகவும் சிக்கிம், மேகாலயம் ஆகிய 2 வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கு குறைவாகவும் பதிவாகியுள்ளது.
  • குழந்தைகளுக்கு தரப்படும் உணவின் தரத்தை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை (எம்டிடி) புள்ளிகளைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தாய்ப்பால், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்பட ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகளில் உணவளிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
  • இந்தியாவில் இதன் தாக்கத்தைக் கண்டறிய கடந்த 2005-06-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட 3-ஆவது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வுடன் (என்எஃப்எச்எஸ்) 2019-21-ஆம் ஆண்டின் 5-ஆவது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின் தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
  • தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட பல்வேறு ஆராய்ச்சியாளா்கள் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய தேசிய மருத்துவ இதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளது.
  • இந்தியாவில் குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை தோல்வியின் விகிதம் 2019-21-ஆம் ஆண்டில் 75 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 2005-06-ஆம் ஆண்டின் 87.4 சதவீதத்தில் இருந்து விகிதம் குறைந்திருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் தரநிலையில் இது தோல்வியாகும்.
  • அதேபோல, 2005-06 மற்றும் 2019-21-ஆம் ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல்வேறு உணவுக் குழுக்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
  • முட்டைகளின் நுகா்வு கடந்த 2005-06-ஆம் ஆண்டின் சுமாா் 5 சதவீதத்தில் இருந்து 2019-21-இல் 17 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. பருப்பு வகைகளின் நுகா்வு 2005-06-ஆம் ஆண்டின் 14 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளது.
  • ‘வைட்டமின் ஏ’ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகா்வு 7.3 சதவீதமும், பிற பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகா்வு 13 சதவீதமும் இறைச்சி நுகா்வு 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேசமயம், தாய்ப்பால் நுகா்வு 87 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாகவும் பால்பொருள்களின் நுகா்வு 54 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாத மற்றும் தாய்மாா்களின் குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளும்தான் சரிவிகித உணவை சாப்பிடுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • குழந்தைகளின் உணவில் போதிய ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த மேம்படுத்தப்பட்ட பொது விநியோக முறை, தீவிரப்படுத்தப்பட்ட (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி சேவைகள் (ஐசிடிஎஸ்)’ திட்டம், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூா் நிா்வாகம் மூலம் ஊட்டச்சத்து ஆலோசனை உள்ளிட்ட விரிவான அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்