TNPSC Thervupettagam

இந்திய - சீனப் படை விலக்கம்: ஒப்பந்தம் பலனளிக்க வேண்டும்!

October 29 , 2024 70 days 92 0

இந்திய - சீனப் படை விலக்கம்: ஒப்பந்தம் பலனளிக்க வேண்டும்!

  • கிழக்கு லடாக் பகுதியில், பதற்றத்துக்குரிய பகுதிகளாகக் கருதப்படும் டெப்சாங், டெம்சோக் பகுதிகளிலிருந்து தத்தமது படைகளை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதையடுத்து, 2020 ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலை திரும்பும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
  • 19ஆம் நூற்றாண்டில் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க பிரிட்டிஷ் இந்திய அரசு எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் பலவீனமான நிலையில் இருந்த சீனா அதை ஏற்றுக்கொண்டது.
  • மாசே துங் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி அமைந்த பின்னர் எல்லைப் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. 1962 இந்திய – சீனப் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின. இந்நிலையில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவரும் கல்வான் பகுதியில், 2020 ஜூன் 15 – 16 தேதிகளில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த கைகலப்பில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டன.
  • இதையடுத்து, கிழக்கு லடாக்கில் பதற்றம் நீடித்துவந்தது. இப்படியான சூழலில், அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷ்யாவின் கஸான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய – சீனப் படைகள் அருகருகே இருந்த சூழலில், கல்வான் சம்பவத்தைப் போல மீண்டும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம் என்கிற அச்சம் நீடித்துவந்தது. அதற்கு இந்த ஒப்பந்தம் முடிவுகட்டியிருக்கிறது. இரண்டு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகளும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் தனித்தனியாக நடத்திய பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இது சாத்தியமாகியிருக்கிறது.
  • இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளும் அமைத்திருந்த ராணுவ முகாம்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும், ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங்களும் அகற்றப்பட்டுவருகின்றன. முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர், அதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிருக்கின்றன. அதன் பின்னர் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் ரோந்துப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
  • தீபாவளி நாளுக்கு முன்னதாக இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவகையில் இந்திய வெளியுறவுத் துறை, தேசத்துக்கு அளித்திருக்கும் தீபாவளிப் பரிசு என்றும் இதைக் கருத முடியும். அதேவேளையில், இரண்டு தரப்பின் நம்பிக்கையும், ஒருங்கிணைந்து செயல்படும் விருப்பமும் கூடிவரக் கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவித்திருப்பதன் மூலம், நடைமுறை சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
  • உண்மையில், இந்தப் பணி எளிதல்ல என்பதை இரண்டு தரப்பும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’, ஜெய்சங்கரின் கருத்தை உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்றியிருக்கிறது. எளிதான காரியம் அல்ல என்றாலும் இதை முன்னெடுப்பது ஆசியப் புவி அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்னும் நம்பிக்கையையும் அந்நாளிதழ் பதிவுசெய்திருக்கிறது.
  • இந்திய - சீன உறவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அணுகும் விதமும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவை அமெரிக்கா சார்ந்திருப்பதாகவே கருதப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவகாரத்தில், கனடாவைப் போலவே அமெரிக்காவும் இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில், சீனாவுடனான இணக்கமான உறவைப் பேணுவதற்கான சமிக்ஞையை இந்தியா வெளிப்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மிக முக்கியமான இந்த ஒப்பந்தத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதில் இரண்டு தரப்பும் அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான் தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்க முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்