TNPSC Thervupettagam

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 10

May 23 , 2024 38 days 280 0

(For English version to this please click here)

15வது லோக்சபா தேர்தல் (2009 / 2014)

  • வெற்றி பெற்ற கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)
  • பிரதமர்: மன்மோகன் சிங்
  • காலம்: மே 22, 2009 - மே 26, 2014
  • எதிர்க்கட்சித் தலைவர்: பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜ்
  • சபாநாயகர்: மீரா குமார்
  • மக்களவையின் பதவிக் காலம்: ஜூன் 3, 2009 - ஜூன் 4, 2014

மீள்பார்வை:

காங்கிரஸின் எழுச்சி மற்றும் சவால்கள்:

  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஒரு வலுவான ஆணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
  • இந்திரா காந்திக்குப் பிறகு, ஆட்சி காலத்தில் இரண்டு முறை முழுமையாகப் பதவி வகித்த முதல் பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்.
  • உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
  • தெலுங்கானா இயக்கம் உச்சத்தை எட்டியதன் காரணமாக ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • இருப்பினும், இந்தப் பதவிக்காலம் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மந்தநிலை, நலத்திட்டங்களின் மோசமான விநியோகம் மற்றும் ஊழல்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள்:

  • பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.
  • சுதந்திரப் போராட்ட வீரர் ஜக்ஜீவன் ராமின் மகளான மீரா குமார், மக்களவையின் முதல் பெண் சபாநாயகரானார்.

பாராளுமன்ற இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள்:

  • கடந்த 50 ஆண்டுகளில் மிக மோசமான ஒன்றாக பாராளுமன்றத்தின் உற்பத்தித் திறன் 61% மட்டுமே இருந்த நிலையில் அதன் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருந்தது.
  • 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்கங்கள், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், மற்றும் ஆதர்ஷ் வீடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்தன.
  • நரேந்திர மோடி மற்றும் நிதின் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
  • திறமையான தலைமையின்மை, விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாமை, ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை வாக்காளர்களின் உணர்வைப் பாதித்தன.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • அவையில் 222 மசோதாக்கள் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில் 165 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன என்பதோடு மேலும் அதில் 71% நாடாளுமன்றக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப் பட்டன.
  • முக்கியச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டதில் கல்வி உரிமை, நிலம் கையகப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, அணுசக்தி பாதிப்பு மீதான சிவில் பொறுப்பு மற்றும் லோக்பால் மசோதா ஆகியன அடங்கும்.
  • மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் கீழ், இந்தியா பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

பொருளாதார சவால்கள்:

  • பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும், விலைவாசி உயர்வு, வளர்ச்சியின் குறைபாடு, பலவீனமான பணமதிப்பு மற்றும் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை பண வீக்கத்தை நிர்வகிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிவின் (UPA) திறனைத் தடுத்தன.
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA)  அரசியல் பிரச்சனைகளானது, வேகமான வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் விளைவுகளைச் சமாளிக்க முடியாததற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

ஆட்சி கலைப்பு:

  • 15வது மக்களவை மே 18, 2014 அன்று கலைக்கப்பட்டது.
  • காங்கிரஸ் தலைமையின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)  ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது, ஆனால் பொருளாதார மந்தநிலை மற்றும் ஊழல் அதிகரிப்பால் அரசாங்கம் தடுமாறியது.

16வது லோக்சபா தேர்தல் (2014 / 2019)

  • வெற்றி பெற்ற கட்சி: பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)
  • பிரதமர்: நரேந்திர மோடி
  • காலம்: மே 26, 2014 - மே 23, 2019
  • எதிர்க் கட்சித் தலைவர்: பாஜகவின் கணிசமான பெரும்பான்மை காரணமாகவும் மற்றும் எந்த ஒரு எதிர்க் கட்சியும் 10% இடங்களைப் பெற்று தகுதியினைப் பூர்த்தி செய்யாததாலும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்று யாரும் இல்லை.
  • பேச்சாளர்: சுமித்ரா மகாஜன்
  • காலம்: ஜூன் 5, 2014 -ஜூன் 17, 2019

மீள்பார்வை:

  • பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றது.
  • பாஜக, நரேந்திர மோடியின் புகழையும், தலைமைத்துவத்தையும் பயன்படுத்திக் கொண்டது.
  • நல்ல நாட்கள் வரும் என உறுதியளிக்கும் 'அச்சே தின்' முழக்கம் வாக்காளர்களிடம் நன்கு எதிரொலித்தது.
  • இது மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நம்பிக்கையை அளித்தது.
  • இது தற்போதைய ஆட்சி நிலையைச் சவால் செய்தது.
  • இது அப்போதைய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ஊழலை வெளிப்படுத்தியது.
  • இது நிர்வாகத்திற்கு சாத்தியமான மாற்றாக பாஜகவை நிலைநிறுத்தியது
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்டன.
  • சமூக மேம்பாட்டிற்காக 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'ஸ்வச் பாரத் அபியான்' போன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன.

தேர்தல் மாற்றங்கள் மற்றும் வாக்காளர் எண்ணிக்கை:

  • ஏப்ரல் 7 முதல் மே 12, 2014 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
  • வாக்குப்பதிவு சதவிகிதம் 8.25% என்ற அளவு அதிகரித்து 66.4% என்ற நிலையினை அடைந்தது.
  • 'மேற்கண்டவற்றில் யாரும் இல்லை' (NOTA) என்ற விருப்பத்துடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத் தக்கது.

வரலாற்று வெற்றி மற்றும் பாராளுமன்றச் செயல்பாடு:

  • பாஜக 282 இடங்களைக் கைப்பற்றியது என்ற வகையில், இது  அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் காங்கிரஸ் அல்லாத கட்சியாகும்.
  • முத்தலாக் மசோதா மற்றும் குடியுரிமை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்ட முக்கியச் சட்டங்களில் அடங்கும்.

சட்டமன்ற மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள்:

  • ராஜ்ய சபாவில் ஓட்டளிப்பைப் புறக்கணிக்க, ஆதார் சட்டம் போன்ற சட்டங்கள் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டன.

  • தேர்தல் பத்திரத் திட்டமானது 2017 ஒன்றியப் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது 'கிழக்கித்திய நாடுகளுடன் செயல்படுதல்' மற்றும் 'முதலில் அண்டை நாடுகள்' என்ற கொள்கைகளை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள்:

  • அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் சமூக நலத் திட்டக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.
  • 2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் தரவரிசையில் இந்தியா இருந்தாலும், பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்களின் நிலையானது முன்னிலைப் படுத்தப்பட்டது.

சவால்கள் மற்றும் விமர்சனங்கள்:

  • மனிதாபிமான மற்றும் ஜனநாயகக் குறியீடுகளில் இந்தியாவின் செயல்திறன் குறைந்துள்ளது.
  • சாதி அடிப்படையிலான வன்முறை மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான மத வெறி ஆகியவை அதிகரித்தன.

அவைக் கலைப்பு:

  • 16வது மக்களவை மே 25, 2019 அன்று கலைக்கப்பட்டது என்பது பிரதமராக நரேந்திர மோடியின் முதல் முறையிலான பதவிக் காலம் முடிவடைந்ததைக் குறித்தது.

17வது மக்களவை (2019 / 2024)

  • வெற்றி பெற்ற கட்சி: பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)
  • பிரதமர்: நரேந்திர மோடி
  • பதவிக் காலம்: மே 23, 2019 - தற்போது வரை
  • எதிர்க்கட்சித் தலைவர்: இந்திய தேசிய காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தது, ஆனாலும் அது 10% மதிப்பினைப் பூர்த்தி செய்யவில்லை.
  • சபாநாயகர்: ஓம் பிர்லா
  • மக்களவையின் பதவிக்காலம்: ஜூன் 19, 2019 – தற்போது வரை

மீள்பார்வை:

  • இந்தத் தேர்தலானது உலகிலேயே மிகப் பெரிய தேர்தலாக நடத்தப் பட்டது.
  • ஏப்ரல் 11 முதல் மே 23 வரை 7 கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் பட்டது.
  • பெண் வாக்காளர்களின் கணிசமானப் பங்கேற்புடன், இதுவரையில் இல்லாத அளவுக்கு 67.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • அதிகபட்சமாக போட்டியிட்ட 726 பெண் வேட்பாளர்களில் 78 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
  • 2014 ஆம் ஆண்டில் 'மேற்கண்டவற்றில் எவரும் இல்லை' (NOTA) என்ற விருப்பம் அறிமுகப் படுத்தப் பட்டது, இது 1.06% வாக்குகளைப் பெற்றது, இது பீகாரின் கோபால்கஞ்சில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்றது.

மக்களவையின் அமைப்பு மற்றும் செயல்பாடு:

  • 17வது மக்களவையின் சராசரி வருடாந்திர அமர்வு 55 நாட்கள் ஆகும், இது முதல் மக்களவையின் சராசரியில் பாதிக்கும் குறைவானதாக உள்ளது.
  • இந்த வாவியில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 58% மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 2019 மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, 2023, ஆகியன அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களில் நிறைவேற்றப்பட்டதுன
  • இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகளுக்கான சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப் பட்டது, ஆனால் இது 2026 ஆம் ஆண்டு வரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள எல்லை நிர்ணய நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மூலம் உடனடி முத்தலாக் தடை செய்யப்பட்டது.
  • அது இந்த நடைமுறையைக் குற்றவியல் சார்ந்த குற்றமாகவும் ஆக்கியது.
  • கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வது, புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கு இந்தியாவின் பதிலளிப்பு போன்றப் பிரச்சினைகள் குறித்து மக்களவை விவாதித்தது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பதிவுகள்:

  • ஒரே அமர்வில் அதிகபட்ச அளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது.
  • டிசம்பர் 13, 2023 அன்று மக்களவையில் பாதுகாப்பு மீறல் காரணமாக வரலாற்றில் மீண்டும் ஒரு அவ்வாறான நிகழ்வு நிகழ்ந்தது.
  • இது இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22வது ஆண்டு நினைவு தினத்துடன் ஒத்துப் போகிறது.

அரசாங்க கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள்:

  • அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
  • இந்தியா-சீனா பதட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • தவாங் பிராந்தியத்தில் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் யாங்சே பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் பிராந்திய நிலைத் தன்மை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
  • முன்னெப்போதும் இல்லாத அளவிலான விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன.
  • மே 2023 ஆம் ஆண்டில் மணிப்பூரில் இன வன்முறை ஏற்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வகுப்புவாத மோதல்கள் தூண்டப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டில் G-20 உச்சி மாநாடு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.

உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சவால்கள்:

  • ரஷ்யாவுடன் உறவுகளைப் பேணுகையில், வெளியுறவுக் கொள்கையை சமநிலைப்படுத்துவது என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான நட்புக் கூட்டணிகளை நிர்வகிப்பதாகும்.
  • குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் விவசாயிகளின் குறைகளுக்கு எதிரான போராட்டங்களால் அமைதியின்மை நீடித்தது.

எதிர்காலம் பற்றிய கருத்துகள்:

  • இந்தியா ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் 18வது பொதுத் தேர்தலில் பங்கேற்கிறது.
  • தேசியப் பாதுகாப்பு, கோவிட்-19 தொற்றுநோய், விவசாயிகள் அமைதியின்மை, வகுப்புவாத மோதல்கள், CAA எதிர்ப்புகள் மற்றும் 370வது பிரிவின் ரத்து தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அதிகாரத்தை உறுதிப்படுத்த எண்ணுகிறது.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்கள்

  • நமது தேர்தல் அமைப்பில் உள்ள தேர்தல் இயக்க முறை மற்றும் தேர்தல் செயல்முறைகளை ஆராய்ந்து, சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்த பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்கள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
  • தேர்தல் சட்டத் திருத்தங்களுக்கான கூட்டு நாடாளுமன்றக் குழு (1971–72).
  • தர்குண்டே குழு என்பது 1974 ஆண்டில் ஜெயப் பிரகாஷ் நாராயணனால் (JP) அவரது "ஒட்டு மொத்தப் புரட்சி" என்ற இயக்கத்தின் போது நியமிக்கப் பட்டது.
  • இந்த அதிகாரப்பூர்வமற்றக் குழு தனது அறிக்கையை 1975 ஆண்டில் சமர்ப்பித்தது.

  • தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தினேஷ் கோஸ்வாமி குழு (1990)
  • குற்றத்திற்கும், அரசியலுக்கும் இடையிலான தொடர்புகளைக் கூறும் வோஹ்ரா குழு (1993)
  • தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் (1998).
  • இந்திரஜித் குப்தா குழுவின் அரசு மூலமான தேர்தல் நிதியுதவி (1998)
  • இந்தியச் சட்ட ஆணையத்தின் 170வது தேர்தல் சட்டங்களின் சீர்திருத்த அறிக்கை (1999)
  • அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் (2000-2002).
  • இது எம்.என். வெங்கடாசலையாவால் தலைமை தாங்கப் பட்டது
  • முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை (2004).
  • இந்திய நிர்வாகச் சீர்திருத்தக் குழுவில், இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் நிர்வாகச் சீர்திருத்த நெறிமுறைகள் பற்றிய அறிக்கை (2007).
  • இது வீரப்ப மொய்லியால் தலைமை தாங்கப் பட்டது.
  • தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களின் முழு வரம்பையும் ஆராய்வதற்காக 2010 ஆண்டில் டங்கா குழு (மையக் குழு) நியமிக்கப்பட்டது.
  • குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் குறித்த ஜே.எஸ்.வர்மா குழு அறிக்கை (2013).
  • இந்தியச் சட்ட ஆணையத்தின் 244வது தேர்தல் தகுதியிழப்பு அறிக்கை (2014).
  • இந்தியச் சட்ட ஆணையத்தின் 255வது தேர்தல் சீர்திருத்த அறிக்கை (2015).

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்