TNPSC Thervupettagam

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 1

April 30 , 2024 61 days 509 0

(For English version to this please click here)

தேர்தல் ஆணையம்:

  • இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது நாட்டில் தேர்தல் செயல்முறைகளின் ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிரந்தர மற்றும் சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்பாகும்.
  • அரசியலமைப்பின் பிரிவு 324ன் கீழ், நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியவற்றுக்கானத் தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்குகிறது.
  • இது ஒரு அகில இந்திய அமைப்பாகச் செயல்படுகிறது என்ற நிலையில் மத்திய மற்றும் மாநில அளவில் தேர்தல்களை மேற்பார்வையிடுகிறது.

நீண்ட கால நோக்கம்:

  • இந்தியத் தேர்தல் ஆணையம் செயலில் ஈடுபாடு, பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறப்பான அமைப்பாக இருக்க முயற்சிக்கிறது; மற்றும் இந்தியாவிலும், உலக அளவிலும், தேர்தல் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

குறுகிய கால நோக்கம்:

  • இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரம், ஒருமைப்பாடு மற்றும் சுயாட்சி ஆகியவற்றைப் பேணுகிறது; வாக்காளர்களின் அணுகல், உள்ளடக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த பங்கேற்பை உறுதி செய்கிறது; மற்றும் தேர்தல் ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையானத் தேர்தல்களை வழங்கச் செய்வதற்கான தொழில்முறையின் மிக உயர்ந்தத் தரத்தை ஏற்றுக் கொள்கிறது.

வழிகாட்டும் கோட்பாடுகள்:

  • நல் ஆளுகைக்கான வழிகாட்டும் கொள்கைகளை ஆணையம் வகுத்துள்ளது:
    • அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதிப்புகளான சமத்துவம், சமபங்கு, பாரபட்சமற்றத் தன்மை, சுதந்திரம் மற்றும் தேர்தல் நிர்வாகத்தின் மீதான கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டில் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல்.
    • நம்பகத் தன்மை, சுதந்திரம், நேர்மை, வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு, பொறுப்புடைமை, சுயாட்சி மற்றும் தொழில்முறை ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்துடன் தேர்தல்களை நடத்துதல்.
    • வாக்காளர்களை மையப்படுத்திய மற்றும் வாக்காளர் நட்பு சூழலில் அனைத்துத் தகுதியான குடிமக்களும் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதி செய்தல்.
    • தேர்தல் செயல்முறையின் நலன்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுடனும் ஈடுபடுதல்.
    • பங்குதாரர்கள், அதாவது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தேர்தல் செயல்முறை மற்றும் தேர்தல் நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் இந்த நாட்டின் தேர்தல் முறையில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.
    • தேர்தல் சேவைகளைத் திறம்பட மற்றும் தொழில் ரீதியாக வழங்குவதற்கு மனித வளத்தை மேம்படுத்துதல்.
    • தேர்தல் செயல்முறையைச் சுமூகமாக நடத்துவதற்கு வேண்டிய தரமான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
    • தேர்தல் செயல்முறையின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னேற்றத்திற்கான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
    • சிறப்பினை அடைவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நோக்கங்களின் ஒட்டுமொத்த உணர்தலுக்கும் புதுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு முயற்சி செய்தல்.
    • நாட்டின் தேர்தல் முறையின் மீது மக்களின் நம்பிக்கையையும், நம்பிக்கையைப் பேணுவதன் மூலமும், வலுப்படுத்துவதன் மூலமும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்தல்.

கூட்டமைப்பு:

  • தேர்தல் ஆணையம் என்பது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
  • ஆரம்பத்தில், இது ஒரு உறுப்பினர் அமைப்பாக செயல்பட்டது, பின்னர் 1993 ஆம் ஆண்டு மூன்று தேர்தல் ஆணையர்களைக் கொண்ட பல உறுப்பினர் அமைப்பாக விரிவடைந்தது.
  • ஆணையாளர்களின் நியமனம், பதவிக்காலம் மற்றும் பணியின் நிபந்தனைகள் ஜனாதிபதியால் தீர்மானிக்கப் படுகிறது.
  • அவர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை அப்பதவியில் இருப்பார்கள் என்பதோடு இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குரியச் சிறப்பு உரிமையையும், சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள்.

சுதந்திரமான அமைப்பு:

  • தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிசெய்ய, அரசியலமைப்பு பிரிவு 324ன் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலப் பாதுகாப்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் போன்ற பணி நீக்க வழிமுறைகள் மற்றும் பணி நிலைமைகளில் பாதகமான மாறுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்றப் பாதுகாப்புகளை வழங்குகிறது.
  • இந்த விதிகள் தேர்தல் ஆணைக் குழுவின் சுதந்திரத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு இருந்தாலும், அதன் செயல்திறனை அதிகரிக்க மேலும் வலுப்படுத்துவதற்கான பகுதிகளும் உள்ளன.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • தேர்தல் ஆணையம் நிர்வாகம், ஆலோசனை மற்றும் பகுதி நீதித்துறைப் பங்களிப்பு உட்பட பலவிதமான அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைச் செயல்படுத்துகிறது:
    • தேர்தல் தொகுதிகளுக்கான பிராந்தியப் பகுதிகளின் எல்லை நிர்ணயம்.
    • வாக்காளர் பட்டியல்களைத் தொகுத்தல் மற்றும் திருத்துதல்.
    • தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிடுதல்.
    • அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்தல்.
    • கட்சி அங்கீகாரம் மற்றும் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளைத் தீர்த்தல்.
    • தேர்தல் தகராறுகளை விசாரிக்க அதிகாரிகளை நியமித்தல்.
    • கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்குதல்.
    • தேர்தல்களின் போது கட்சியின் கொள்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதை ஒழுங்குபடுத்துதல்.
    • உறுப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான விஷயங்களில் ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்.
    • முறைகேடுகள் அல்லது வன்முறை வழக்குகளில் வாக்கெடுப்பை நிறுத்துதல்.
    • தேர்தலுக்குத் தேவையான பணியாளர்களைக் கோருதல்.
    • நேர்மையை உறுதிப்படுத்த தேர்தல் எந்திரங்களை மேற்பார்வை செய்தல்.
    • குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
    • அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் தேசிய அல்லது மாநில கட்சி அந்தஸ்து வழங்குதல்.
  • தேர்தல் ஆணையம் திறம்படச் செயல்படுவதற்கு, மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள துணைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பிற பணியாளர்களால் செயல்படுத்தப் படுகிறது.
  • மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் மாவட்டத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார், வாக்குச் சாவடி ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார் மற்றும் தலைமை அதிகாரிகளை நியமிப்பார்.

தேர்தல் இயந்திரங்களைப் பயன்படுத்துதல்

  • தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்திற்கு, பன்னிரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடி பணியாளர்கள் மற்றும் குடிமையியல் காவல் படைகளைக் கொண்ட ஒரு மாபெரும் பணிக்குழுவானது நியமிக்கப் படுகிறது.
  • மேலும் தேர்தல் ஆணையமானது  நாடு தழுவிய அளவில் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு அவசியமான பயனுள்ளக் கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்கிறது.

பட்ஜெட் & செலவினங்கள்

  • தேர்தல் ஆணையத்தின் செயலகம் ஒரு தன்னிச்சையான பட்ஜெட்டில் செயல்படுகிறது, இந்தப் பட்ஜெட் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படுகிறது.
  • தேர்தல் நடத்தைக்கான செலவினம் என்பது மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப் படுகிறது, ஒரே நேரத்தில் நடத்தப் படும் தேர்தல்களில் செலவினம் சமமாகப் பகிர்வதற்கான ஏற்பாடுகளும் உள்ளன.

நிர்வாகத் தலையீட்டில் இருந்து சுதந்திரமான அமைப்பை உறுதி செய்தல்

  • தேர்தல் ஆணையம் சுயாதீனமாகச் செயல்படுகிறது, தேர்தல் அட்டவணைகள், வாக்குச் சாவடி இருப்பிடங்கள் மற்றும் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அரசு நிர்வாகிகளின் தலையீடு இல்லாமல் தீர்மானிக்கிறது.
  • இந்தச் சுயாட்சியானது தேர்தல்களை மிகவும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடத்துவதை உறுதி செய்கிறது.

தேர்தல் ஆணையத்துடன் அரசியல் கட்சிகளின் ஈடுபாடு

  • தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், உள்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது ஒருங்கமைப்புத் தேர்தல்களுக்கு உட்படுகின்றன.
  • மாநில மற்றும் தேசிய மட்டங்களில் அங்கீகாரம் என்பது வாக்கெடுப்பின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது.
  • மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குள் உள்ள சர்ச்சைகளைத் தேர்தல் ஆணையம் தீர்க்கிறது.

ஆலோசனை மற்றும் பகுதி-நீதித்துறை செயல்பாடுகள்

  • நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தலுக்குப் பிந்தையத் தகுதி நீக்கம் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்குகிறது.
  • இது ஊழல் நடைமுறைகளுக்கான தகுதியிழப்புகள் குறித்தும் முடிவு செய்கிறது மற்றும் சட்டத்தின் படி தகுதியிழப்புகளை இது குறைக்கலாம் அல்லது நீக்கலாம்.
  • மேலும் அதன் கருத்துக்கள் அந்தந்த அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும்.

நீதித்துறை மறு ஆய்வு மற்றும் தேர்தல் மனுக்கள்

  • நாடாளுமன்ற மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான சவால்கள் தேர்தல் மனுக்கள் மூலம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகின்றன.
  • தேர்தல் செயல்முறை தொடங்கியவுடன் நீதித்துறையின் தலையீடு கட்டுப்படுத்தப்படுகிறது,
  • தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் மனுக்கள் மூலம் மட்டுமே மறு ஆய்வு செய்ய அது அனுமதிக்கப்படுகிறது.

ஊடகக் கொள்கை மற்றும் வெளிப்படைத்தன்மை

  • தேர்தல்களின் போது தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வழக்கமான விளக்கங்களை விவரிக்கும் ஒரு விரிவான ஊடகக் கொள்கையை தேர்தல் ஆணையம் வழங்குகிறது.
  • ஊடகப் பிரதிநிதிகளுக்கு வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது என்ற நிலையில் இது அறிக்கையிடலில் மிகவும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.

வாக்காளர் கல்வி மற்றும் பங்கேற்பு

  • தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) மூலம், விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை அதிகரிக்கத் தேர்தல் செயல்முறை குறித்து குடி மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
  • இது வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் தகவலறிந்த வாக்களிப்பு ஆகியவற்றை நன்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தலைமைப்பண்பு

  • தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்தியா, முன்னணி ஜனநாயக நாடாக, உலகளவில் பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறது.
  • இது சர்வதேச தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒத்துழைக்கிறது, மேலும் சிறந்த நடைமுறைகள் மற்றும் திறனை வளர்ப்பதற்கான முன்முயற்சிகளையும் பகிர்ந்து கொள்கிறது.

தேர்தல் ஒருமைப்பாட்டிற்கான புதிய முன்னெடுப்புகள்

  • தேர்தல் ஒருமைப்பாட்டை அதிகரிக்க, அரசுக்குச் சொந்தமான மின்னணு ஊடகங்களை அரசியல் ஒளிபரப்பிற்குப் பயன்படுத்துதல், அரசியலில் குற்றமயமாக்கலை தடுக்கப் போராடுதல் மற்றும் வேட்பாளர்களுக்கான நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
  • இந்த நடவடிக்கைகள் மாதிரி நடத்தை நெறிமுறையை நிலைநிறுத்துகின்றன என்ற நிலையில் இது போட்டியாளர்களுக்குச் சமமான தளத்தை உறுதி செய்கிறது.

வேட்பாளர் விவரங்களில் வெளிப்படைத்தன்மை

  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி, அரசியல் கட்சிகளால் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டாயப் படுத்துகிறது.
  • இந்த முன்முயற்சி, தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் வேட்பாளர்களின் பின்னணிகள் பற்றிய முக்கியமான தகவல்களை வாக்காளர்கள் அணுகுவதை உறுதி செய்கிறது.

வாக்களிக்காத வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு

  • தேர்தல் நடத்தை விதிகள், 1961 மீதான திருத்தங்கள், வாக்குச் சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்கு விருப்பமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தபால் ஓட்டு வசதியை அனுமதிக்கின்றன.
  • அத்தியாவசியச் சேவைகளில் பணிபுரிபவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட தகுதியான நபர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தலாம்.
  • இந்த முன்முயற்சி தேர்தல் செயல்பாட்டில் உள்ளடங்கிய தன்மை மற்றும் அனைவரது அணுகலை ஊக்குவிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்