- இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த உடன்பாடு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
- இதன் காரணமாக, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர்.
- போர் நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் விவசாயப் பணிகள் முழு மூச்சாக நடந்துவருகின்றன. அப்பகுதியின் முக்கிய விளைபொருளான வால்நட் என்று அழைக்கப்படும் வாதுமைப் பருப்பு வகைகளை வெளிச் சந்தைக்கும் அனுப்ப முடிகிறது.
- இதனால், விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் பயனடைகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்துவருகின்றன, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
- கடந்த காலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இருபுறங்களிலிருந்தும் நடந்த ராணுவத் தாக்குதல்களின் காரணமாக, அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயிருந்தது.
- ஓராண்டு அமைதியில், எல்லைப் பகுதியில் மீண்டும் மகிழ்ச்சி அரும்பத் தொடங்கியிருக்கிறது. அது தொடர வேண்டும்.
- 2003-லேயே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது என்றபோதும், தொடர்ந்து அது மீறப்பட்டது.
- 2018-ல் 1,629 தடவைகள்; 2019-ல் 3,168 தடவைகள்; 2020-ல் 4,645 தடவைகள் என்று பாகிஸ்தான் ராணுவத்தால் போர் நிறுத்த உடன்பாடு மீறப்படுவது தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.
- 2010 முதல் 2021 பிப்ரவரி வரையில் போர் நிறுத்த உடன்பாடு மொத்தம் 14,411 முறை மீறப்பட்டு, எல்லை தாண்டிய தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன.
- இத்தாக்குதல்களில், 138 பாதுகாப்பு வீரர்களும் 129 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
- காயமுற்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 664, பொதுமக்களில் காயமுற்றவர்கள் 708. தாக்குதல்களின்போது இடிந்த வீடுகள், சேதமடைந்த பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என்று தொடர் பாதிப்புகளை காஷ்மீர் எல்லைப் பகுதி மக்கள் சந்தித்துவந்தனர்.
- கடந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே 592 முறை உடன்பாடு மீறப்பட்டது.
- இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர்-ஜெனரல்கள் இடையே 2021 பிப்ரவரி 23-ல் உடன்பாடு உறுதிசெய்யப்பட்டு, அதற்கடுத்த நாளிலேயே அது நடைமுறைக்கும் வந்தது. பிப்ரவரி 25-ல் இரு நாடுகளின் ராணுவமும் தங்களது போர் நிறுத்த அறிவிப்பைக் கூட்டறிக்கையாகவும் வெளியிட்டன.
- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை உருவாக்க இதுவரை நடந்த பல்வேறு தொடர்முயற்சிகளில், இந்த உடன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியை வர்த்தக உறவாக வளர்த்தெடுக்க முடியவில்லை.
- பயங்கரவாதிகளின் ஊடுருவல், ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் இந்திய எல்லைக்குள் அனுப்புதல் ஆகியவை இந்தியாவுக்கு சவாலாகவே தொடர்கின்றன.
- ரஷ்ய - உக்ரைன் யுத்தமும் அதன் விளைவுகளும் உலகம் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அருகமை நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
நன்றி: தி இந்து (08 – 03 – 2022)