TNPSC Thervupettagam

இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமா

April 23 , 2023 614 days 337 0

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஒபெக்+'

  • கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. அப்போது கச்சாஎண்ணெய் விலை சர்வதேசசந்தையில் கணிசமாக அதிகரித்தது. ஆனால், இவ்வாண்டு பிப்ரவரியில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலராக சரிவடைந்தது.
  • இந்நிலையில்,கச்சா எண்ணெய்உற்பத்தியை இன்னும் அதிகப் படுத்தினால் அதன் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்று ஒபெக் கூட்டமைப்புகணித்துள்ளது. இந்நிலையில், தேவையைசரி செய்யவும், சந்தைகளை ஸ்திரப்படுத்தவும் எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. விநியோகத்தை குறைப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை அதிகமாக நிலைநிறுத்தும் யுக்தியை இந்த கூட்டமைப்பு கையிலெடுத்துள்ளது.

36 லட்சம் பீப்பாய் குறைப்பு

  • ஒபெக் நாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாக கூடி விவாதித்து கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்க நாளொன்றுக்கு அதன் உற்பத்தியை 36.60 லட்சம் பீப்பாய் குறைக்க முடிவு செய்துள்ளன. இது, உலகளாவிய தேவையில் 3.7 சதவீதத்துக்கு சமம்.
  • கரோனா தொற்றின்போது இக்கூட்டமைப்புநாடுகள் நாளொன்றுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை 1 கோடி பீப்பாய் வரை குறைத்தன.அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரியஉற்பத்தி குறைப்பு நடவடிக்கை இதுவாகும்.
  • ஒபெக் கூட்டமைப்பு தாமாக முன்வந்து அறிவித்துள்ள இந்த உற்பத்தி குறைப்பு வரும் மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரையில் உற்பத்தி குறைப்பை தொடர உறுப்பு நாடுகள் முடிவெடுத்துள்ளன.
  • அதன் அடிப்படையில், இராக் அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 2.11 லட்சம் பீப்பாய் குறைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 1.44 லட்சம் பீப்பாய், குவைத் 1.28 லட்சம் பீப்பாய், ஓமன் 40 ஆயிரம் பீப்பாய், அல்ஜீரியா 48 ஆயிரம் பீப்பாய், கஜகஸ்தான் 78 ஆயிரம் பீப்பாய் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.
  • ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக், தினசரி கச்சா எண்ணெய்உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய் குறைக்கவுள்ளதாகவும், இதே நிலை 2023 இறுதி வரை தொடரும் என்றும் உறுதிபட அறிவித்துள்ளார்.
  • ஒபெக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் தற்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. ஒபெக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன, தற்போதைய அதன் முடிவு இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
  • ஒபெக் என்பது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். ஈரான், குவைத், சவுதி அரேபியா, வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த கூட்டமைப்பு கடந்த 1960 செப்டம்பரில் பாக்தாத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் செயல்பட்டு வருகிறது.
  • பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான மற்றும் நிலையான விலை கிடைக்கவும், உறுப்பு நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பெட்ரோலிய நுகர்வு நாடுகளுக்கு தேவையான பெட்ரோலிய விநியோகத்தை உறுதி செய்வதும் இந்த கூட்டமைப்பின் முக்கிய பணியாகும். சர்வதேச எண்ணெய் சந்தையின் நிலையை மதிப்பாய்வு செய்து, எண்ணெய் சந்தையில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்த கூட்டமைப்பு ஆண்டுக்கு இருமுறை கூடி முடிவு செய்கிறது.

ஒபெக் கூட்டமைப்பு

  • ஒபெக் கூட்டமைப்பு 2016 பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்க எண்ணெய் உற்பத்தி மிகவும் அதிகரித்ததன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இது, ஒபெக் கூட்டமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ரஷ்யா உட்பட மேலும் 10 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒபெக் குழுவுடன் இணைந்ததையடுத்து இப்புதிய கூட்டணி உருவானது.
  • அஜர்பைஜான், பஹ்ரைன், புருனே, கஜகஸ்தான், மலேசியா, மெக்சிகோ, ஓமன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சூடான் ஆகிய நாடுகள் ஒபெக் கூட்டமைப்பில் இணைந்ததையடுத்து மொத்தம் 23 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்தகச்சா எண்ணெயில் 40 சதவீதம் இக்கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பாக உள்ளது. அத்துடன் உலகளாவிய பெட்ரோலிய வர்த்தகத்தில் 60 சதவீத பங்கையும் வைத்துள்ளது.
  • ஒபெக் உறுப்பு நாடுகளிடம் நிரூபணம் செய்யப்பட்ட 82 சதவீத கச்சா எண்ணெய் வளம் இருப்பில் உள்ளது. மேலும், ரஷ்யா, மெக்சிகோ மற்றும் கஜகஸ்தான் ஒபெக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளதால் ஒபெக் நாடுகளை விட உலகப் பொருளாதாரத்தில் ஒபெக் கூட்டமைப்புக்கு செல்வாக்கு அதிகம்.
  • அமெரிக்க எரிசக்தி தகவல் மைய கணிப்பின்படி உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 51% அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, கனடா, இராக் ஆகிய 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு

  • இந்தச் சூழலில்தான் ஒபெக் கூட்டமைப்பின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைன்-ரஷ்யா போர், கரோனா தொற்று அதிகரிப்பு, அமெரிக்க வங்கி துறை வீழ்ச்சி போன்ற நிகழ்வுகள் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
  • இந்நிலையில், ஒபெக் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளதை, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய விவேகமற்ற செயல் என்று அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருக்க வேண்டும் என அமெரிக்கா வாதிட்டுள்ளது.
  • உக்ரைன் போரை நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிக வருவாய் ஈட்டுவதை தடுப்பதற்கும் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய தாக்கம்

  • ஒபெக் கூட்டமைப்பின் முடிவு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) தெரிவித்துள்ளது.
  • கரோனவால் வளர்ந்து வரும் நாடுகளில் திவாலான பொருளாதாரம் தற்போதுதான் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.
  • அதுதவிர, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு நிதியளிக்க விளாடிமிர் புதின் அதிக வருவாயைப் பெறுவதைத் தடுப்பதற்கும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது அவசியம். இல்லையெனில், கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பெரும் லாபத்தை ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்திக் கொள்ளும் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவில் தாக்கம்

  • உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 84% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது.
  • இந்தியா ஆண்டுக்கு 228 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 120 பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது.
  • உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கச்சா எண்ணெயை குறைவான விலையில் வழங்க ரஷ்யா முன்வந்தது.
  • இதையடுத்து,அமெரிக்காவின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு பெருமளவில் அந்நியச் செலாவணி மிச்சமாகி வருகிறது.
  • அதேநேரம் ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின்உற்பத்தி குறைப்பு முடிவால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலர் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், அது இந்தியாவின் இறக்குமதி செலவினத்தை பெருமளவு அதிகரிக்கும். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுவதுடன், பணவீக்கமும் அதிகரிக்கும். ஏற்கெனவே உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பது கூடுதல் சுமையை உருவாக்கும்.
  • இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதற்கான முயற்சியின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம். உள்நாட்டுகச்சா எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளுடன் ராஜ்ய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

நன்றி: தி இந்து (23 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்