TNPSC Thervupettagam

இந்திய பொருளாதார வளர்ச்சியை காலநிலை மாற்றம் எப்படி பாதிக்கும்

August 5 , 2024 115 days 104 0
  • எல்லோரும் எல்லாமும் பெறபொருளாதார வளர்ச்சி அவசியம். அதற்கு, அவ்வப்போது இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்க சப்-பிரைம் பிரச்சினை, கோவிட் 19, அதனால் ஊரடங்கு போன்ற சர்வதேசஅளவிலான தடைகள் வருகின்றன.இப்படி எப்போதாவது எதிர்பாராமல் வரும், முன்கூட்டியே கணிக்க இயலாத, ஓரிரு ஆண்டுகளுக்கு தாக்கம் கொடுக்கிற‘பிளாக் ஸ்வான்’ நிகழ்வுகள் தவிர, பல ஆண்டுகளுக்கு வளர்ச்சியைக் கெடுக்கும்,பொருளாதார பெருமந்தம் போன்ற வேறு சிலவும் சில பல தசமங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.
  • அவைகூட பரவாயில்லை என்று சொல்லும் அளளவுக்கு மொத்த பூமிப்பந்தையும் நிரந்தரமாக பாதிக்க இருக்கும் ஒரு பெருஞ் சிக்கல் உருவாகி வளர்ந்து வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்த மனித இனத்தை மட்டுமல்ல, பல்லுயிர்களையும் பாதிக்கும் அளவு கோரமானது. அதன் பெயர், காலநிலை மாற்றம் (Climate Change). கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், குறிப்பாக தொழில் புரட்சிக்குப் பிறகு காலநிலை மாற்றம் பெரும் வேகத்தில்நடந்து வருகிறது.
  • 1800-களில் இருந்ததைவிட தற்போது பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. 1850-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தசமத்திலும் பூமியின் சூடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அதிகரிக்கும் வெப்பம் தவிர, வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, காட்டுத் தீ, பனிமலைகள் உருகல், வெள்ளம், கடல் மட்டம் உயர்வு, சூறாவளிகள், பல்லுயிர்கள் அழிப்பு என பலவும் ஏற்படுகின்றன. சென்னை, தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்த இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட உலக நாடுகளின் நகரங்களும் அவ்வப்போது தண்ணீரில்மிதக்கின்றன.
  • காரணம், ஓராண்டு மழை சில நாட்களில் கொட்டித் தீர்ப்பதுதான். இவையும் காலநிலை மாற்றங்களின் விளைவுதான். பூமியின் வெப்பம் அதிகரிக்கக் காரணம், புதைபடிவ எரிபொருட்கள்என்று வகைப்படுத்தப்படும்நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு ஆகியவற்றின் அதீத பயன்பாடு.இவை, மின்சார உற்பத்தி தொழிற்சாலைகள், போக்குவரத்து,கட்டுமானம் மற்றும் விவசாயத் துறைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை முழுவதும் நிறுத்தாவிட்டாலும் கணிசமாக குறைக்காவிட்டால்,இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்
  • பூமியின் வெப்பம், மேலும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து, உயிரினங்களுக்கு பேரழிவைஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. தொடங்கிவிட்ட இந்த காலநிலை மாற்றத்தை என்ன செய்து நிறுத்துவது? பூமியை எப்படி பழைய நிலைக்குத் திருப்புவது? என்பது மனித இனத்தின் முன் நிற்கும் பெரும் கேள்விகள். அதற்காக அவ்வப்போது உலக நாடுகளின் தலைவர்கள், ‘சஸ்டெயினபிள்டெவலப் மெண்ட்’‘பாரிஸ் கூட்டம்’போன்ற கூட்டங்கள் நடத்தி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசி, முடிவுக்கு வருகிறார்கள்.
  • சீனா, அமெரிக்கா, இந்தியா,ஐரோப்பிய யூனியன், இந்தோனேசியா, ரஷ்யா, பிரேசில் ஆகியவை காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரியமில வாயு (Co2) மற்றும் மீத்தேன் உமிழ்வுகளை அதிகம் வெளியிடுவது தெரியவந்துள்ளது. இந்த நாடுகள் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்தால்,தற்போதைய மொத்த உமிழ்வில் 50% குறையும் என்கிறார்கள்.2021-ல் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா நிகரமாக பூஜ்ய உமிழ்வு (ஜீரோ எமிஷன்) என்கிற நிலையை அடைந்துவிடும் என்றுஉறுதி அளித்திருக்கிறார்.
  • அதற்காக நாட்டின் மரபுசாரா எரிசக்திகளான சூரிய ஒளி, காற்றாலை, பயோ பியூல் மற்றும் நீர்மின்சார உற்பத்தியை அதிகப்
  • படுத்த முயற்சிகள் நடக்கின்றன.கிரீன் ஹைட்ரஜன் என்கிறகரிமில வாயு உமிழாத எரிபொருள் உற்பத்திக்கான வேலைகளும் நடந்து வருகின்றன. 2022-ம் ஆண்டு கணக்கின்படி,புதிப்பிக்கத்தக்க எரிசக்தி மொத்தத் தேவையான 400 கிகாவாட்டில் 160 கிகாவாட்உற்பத் திறனுடன் (40%),உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. 2050-க்குள் 500 கி.வா. சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது.

புதைபடிவ எரிபொருளை குறைக்க வேண்டும்

  • தற்போதைய இந்த நிலைக்கு ஏற்கெனவே முன்னேற்றம் கண்டிருக்கிற பல்வேறு தேசங்களின் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடுதான் காரணம்.காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக வளரும் நாடுகள், மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டுமானால், அந்த மாற்றம் செய்ய தேவைப்படும் நிதியை வளர்ந்த நாடுகள் கொடுக்க வேண்டும் என்று 2009-ம் ஆண்டே பேசப்பட்டது. இதற்காக, ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.   ஆனால், இப்போது வரை எந்த ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் கொடுக்கப்படவில்லை. குறைந்த அளவே வழங்கப்படுகிறது.
  • காலநிலை மாற்றங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய நாடுகளின் வரிசையான ‘குளோபல் கிளைமேட் ரிஸ்க்’ குறியீட்டில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் காலநிலையால் ஏற்படும் பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர்.

அதிகம் பாதிக்கும் மாநிலங்கள் 

  • இந்தியாவில் அசாம், பிஹார், ஒடிசா, மிசோரம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை அதிக பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய மாநிலங்களாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் உற்பத்தித் திறனும் கடுமையாக பாதிக்கப்படும்.விளைச்சல் குறைந்து, விலைவாசி உயர்வுஆகியவை தவிர்க்க முடியாததாகிவிடும்.இதுதவிர, கட்டுமான துறைமற்றும் தொழிற்சாலை வேலைகளும் கூடுதல் வெப்பம் காரணமாக பாதிக்கப்படும்.இவற்றை சமாளிக்க,குளிரூட்டல் உள்ளிட்ட பல்வேறுகூடுதல் செலவுகள் ஏற்படும்.
  • அனல் மின்சாரம் மற்றும் இரும்பு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில் தண்ணீர் தேவை. இதனால் விவசாயம், கட்டுமானத் துறை, மின்சார உற்பத்தி, இரும்பு உற்பத்தி மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
  • காலநிலை மாற்றங்களால் வரக்கூடிய பொருளாதாரம் மற்றும் நிதிக்கான ஆபத்துகள் தவிர,அவற்றை எதிர்கொள்ள எடுக்கப்படும் மாற்று நடவடிக்கைகளாலும் ஆபத்துகள் வரக்கூடும்.
  • உதாரணமாக, அனல் மின்சார உற்பத்தியிலிருந்து மரபுசாரா மின்சாரம் தயாரிக்கவும் மின்சார வாகனங்கள் தயாரிக்கவும் அதிக முதலீடுகள் தேவைப்படும். இடைப்பட்ட காலத்தில் அந்த முதலீடுகளிலிருந்து வருமானம் வராது. தவிர, அவற்றுக்கான மானியசெலவு அதிகரிக்கும். மேலும் பலருக்கும் தொடர்ந்து வருமானம் குறைந்தால் அது சமூக அமைதியைக் கெடுக்கும் ஆபத்தும் இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களால், இந்தியாவின் சாவரீன் ரேட்டிங் குறைக்கப்படலாம் என்று மூடீஸ் என்ற ரேட்டிங் நிறுவனம் சொல்லியிருக்கிறது. இப்படியாக பல்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்பட, உலக பொருளாதார வளர்ச்சி 1.5% முதல் மிக அதிக பாதிப்பான காலங்களில் 10, 12 % வரை கூட பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?

  • மரபுசாரா எரிசக்தி பயன்பாடு தவிர வேறு வகைகளிலும் காலநிலை மாற்ற ஆபத்தைக் குறைக்க வேண்டும். உதாரணமாக, காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு தொடர்ந்து விளைச்சல் தரக்கூடிய உணவு தானியங்களை உருவாக்கல்; அதற்கான ஆய்வுகளில் தேவையான முதலீடு; கிடைக்கும் தண்ணீரை சரியாக சேமிக்க ஏற்பாடு; பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிவிக்கிற ஏற்பாடுகள்; விவசாயிகளுக்கு காலநிலை மாற்றம் அதன் விளைவுகள் குறித்து தெரிவித்தல்; குறைவான தண்ணீரில் விளையக் கூடியவற்றை பயிர் செய்ய ஊக்கத்தொகை வழங்குதல் போன்றவற்றையும் விரைந்து செய்தாக வேண்டும்.
  • வரும் 2070-ம் ஆண்டு வரையில் இந்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கென்றேகிரீன் பைனான்ஸ் பாண்டு கள் வெளியிடப்படுகின்றன. ஆயினும் போதிய பணம் கிடைக்கவில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கிற பணத்தை எவ்வாறுமுதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வகுப்பெடுத்தேன். இடையில், பங்கேற்பாளர்களின் யோசனைகளைக் கேட்டேன். அப்போது, ‘‘நாங்கள் எல்லாம் அவ்வளவு வயது வாழும் அளவுக்கு இந்த உலகம் இருக்குமா?” என 30 வயது இளைஞர் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
  • வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் - என்றார் வள்ளுவர்.
  • ஆபத்து கண்ணுக்கு தெரிகிறது. இன்னும் நெருங்கி வந்துவிடவில்லை. இப்போதிலிருந்தே செயல்பட்டால் தப்பித்துக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: 

  • காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.‘‘நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஸ்த்திரத்தன்மையைகாலநிலை மாற்றங்கள்சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடும்’’ என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ், JP Morgan India Leadership Seriesஉரையில் பேசும்போது எச்சரித்து இருக்கிறார்.
  • ‘‘கடன் பெறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களால் காலநிலை மாற்ற பாதிப்புகள் காரணமாககடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் நாட்டின் நிதி அமைப்பே ஆட்டம் காணும். தற்போது நடைமுறையிலுள்ள காப்பீடு போன்ற பாதுகாப்பு மட்டும் அவ்வளவு பெரிய ஆபத்துகளிலிருந்து வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் காப்பாற்றி விடாது. இத்துறை சார்ந்த அனைவரும்இணைந்து செய்ய வேண்டிய பல்வேறு வேலைகள் இருக்கின்றன’’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.
  • அந்த ஆபத்துகளை தவிர்க்க, காலநிலை மாற்றங்களால் அவற்றுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தணிக்க மற்றும் கண்காணிக்கும் செயல்முறைகள், அதற்கான நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் உத்திகள் குறித்ததகவல்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஸ்க்ளோசர் முறையில் 2025-2026-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தங்களது ஆண்டறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தி இந்து (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்