TNPSC Thervupettagam

இந்திய வரலாற்றாய்வுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த பிரெஞ்சு அறிஞர்!

December 5 , 2019 1864 days 829 0
  • பிரெஞ்சு கீழ்த்திசைப் பள்ளியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த ழான் தெலூஷ் (Jean Deloche), கோட்டைகள் பற்றிய ஆய்வில் தனிச் சிறப்பு பெற்றவர். ‘ஆரிஜின்ஸ் ஆஃப் தி அர்பன் டெவலப்மென்ட் ஆஃப் பாண்டிச்சேரி அக்கார்டிங் டு செவன்டீன்த் சென்ச்சுரி’, ‘செஞ்சி: எ ஃபோர்டிஃபைட் சிட்டி ஆஃப் தமிழ் கன்ட்ரி’, ‘ஸ்டடீஸ் ஆன் ஃபோர்டிஃபிகேஷன் ஆஃப் இந்தியா’, ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ழீன்-பாப்டிஸ்ட் செவாலியர் இன் ஈஸ்டர்ன் இந்தியா’, ‘ஃபோர் ஃபோர்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
  • செஞ்சிக்கோட்டை குறித்த இவரது ஆய்வு நூல் மிகவும் முக்கியமானது. திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள நாயக்கர் காலச் சுவரோவியங்கள் குறித்து இவர் எழுதியுள்ள நூல் (‘எ ஸ்டடி ஆஃப் நாயக்கா-பீரியட் சோஷியல் லைஃப்: திருப்புடைமருதூர் பெயின்டிங்ஸ் அண்டு கார்விங்க்ஸ்’) இந்தத் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வழிகாட்டி நூலாகக் கருதத்தக்கது. தனது ஆராய்ச்சி வாழ்க்கை முழுவதையும் இந்திய வரலாறு குறித்த ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பணித்தவர்.

தெலூஷ்

  • பிரான்ஸ் நாட்டின் க்ரேண்ட் பொர்னாண்ட் பகுதியில் 1929-ம் ஆண்டு பிறந்த தெலூஷ், இரண்டு வருடங்கள் கம்போடியாவில் உள்ள சீம் ரீப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர், 1966-ல் பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழ்த்திசைப் பள்ளியில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். 1982-ல், அவர் கலை மற்றும் மனிதநேயம் குறித்த ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றார். 1992 முதல் 1994 இறுதி வரை பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழ்த்திசைப் பள்ளியின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் மையத்துக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
  • ஒருபுறம், இந்திய தொழில்நுட்பத்தின் வரலாறு, குறிப்பாக போக்குவரத்து, ராணுவம், கடல் தொழில்நுட்பங்கள்; மறுபுறம், பிரெஞ்சு கையெழுத்துப் பிரதிகளைப் பதிப்பித்தல். இப்படி அவரது ஆராய்ச்சி இரண்டு பொருண்மைகளைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பணிகள்

  • புது டெல்லியில் உள்ள என்ஐஎஸ்டிஏடிஎஸ் மற்றும் தேசிய அறிவியல் அகாடமி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து பல பணிகளை மேற்கொண்டிருந்தார்.
  • ழான் தெலூஷ் டிசம்பர் 3 அன்று காலமானார். நமது நாட்டின் மகத்துவத்தை எடுத்துக்கூற பிரான்ஸ் நாட்டிலிருந்து இங்கே வந்து, தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார். ஓவியங்களை எப்படி ஆய்வுசெய்ய வேண்டும் என்பதற்கு இவரது ஆய்வுகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அறிஞர் தெலூஷுக்கு அஞ்சலி!

நன்றி: இந்து தமிழ் திசை (05-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்