TNPSC Thervupettagam

இந்திய வளர்ச்சிக்கு 7 தடைக் கற்கள்

August 4 , 2024 161 days 144 0
  • ஒன்றிய அரசு அளித்துள்ள 2024 - 2025க்கான நிதிநிலை அறிக்கை, பல அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் ஒருங்கிணைந்த உத்தி; அரசை ஆதரிக்கும் தோழமைக் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிகொடுத்தும், 2047க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆனால், உள்நாட்டில் நிலவும் பல்வேறு சமூக – பொருளாதாரக் காரணங்களாலும் உலக அளவில் நிலவும் நிதித் துறை பிரச்சினைகளாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவது கடுமையான சோதனைகளைச் சந்திக்க வைக்கும்.
  • உக்ரைனிலும் பாலஸ்தீனத்தின் காஸாவிலும் நடைபெறும் தாக்குதல்கள் உலக அளவில் பொருள் போக்குவரத்தைப் பெருமளவு பாதித்திருப்பதுடன், உலக சந்தையையும் வெகுவாக பாழ்படுத்திவிட்டன.
  • உலக அளவில் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 3% ஆக மட்டுமே இருக்கும் என்ற கணிப்பு, கடந்த பல பத்தாண்டுகளில் மிக மிகக் குறைவாகும். உலகச் சூழல் இப்படி இருக்கும்போது இந்தியா வளர்ச்சி காண்பது கடினமான முயற்சியாகவே அமையும்.

இழந்ததை மீட்கும் முயற்சி

  • நிதிநிலை அறிக்கையானது மக்களவை பொதுத் தேர்தலில் மக்களிடம் பாஜக இழந்த ஆதரவை மீட்கும் முயற்சி என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேவேளையில் இது மக்களுக்கு இலவசங்களை அள்ளித்தரும் ஜனமயக்கு அம்சங்களை நிரம்ப கொண்டிருக்கவில்லை, பொறுப்பற்ற முறையிலும் தயாரிக்கப்படவில்லை.
  • அரசின் செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்கும் முயற்சிகளுக்கும், ஸ்திரமான நிதிநிலை தொடரவும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையை 2024 – 2025இல் 4.9% என்ற அளவில் கட்டுப்படுத்துவோம் என்று உறுதி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது, காரணம் கடந்த ஆண்டு இந்தப் பற்றாக்குறை 5.6% ஆக இருந்தது.
  • அடுத்த ஆண்டு இந்தப் பற்றாக்குறையை 4.5% ஆகக் குறைப்பது அரசின் அடுத்த இலக்கு என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

அர்த்தமுள்ள அவநம்பிக்கை!

  • ‘இந்தியாவாவது - அடுத்த இருபதாண்டுகளில் வல்லரசு நாடாக ஆவதாவது’ என்று உலக அரங்கிலும், நாட்டுக்குள்ளேயும் பலர் அவநம்பிக்கையுடன் இகழ்வதற்கும் காரணம் இருக்கிறது.
  • வளரும் நாடாக இருக்கும் இந்தியாவால் எளிதில் வெற்றிபெற முடியாத பல சவால்கள் சமூக – பொருளாதார தளங்களில் இன்னமும் தொடர்கின்றன, அத்துடன் 2014க்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்ரீதியிலான பிளவு மேலும் மேலும் தீவிரமாகிக்கொண்டேவருகிறது.
  • அரசின் செயல்களை விமர்சிக்கவும், முயற்சிகளைத் தடுக்கவும் விஷம் தோய்ந்த பிரச்சாரங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சாதிரீதியிலான பிளவைப் பெரிதுபடுத்துவது இப்போதைய அரசியல் களத்தில் மிகவும் விரும்பப்படும் அரசியல் உத்தியாக இருக்கிறது.

நம்பிக்கை தருவது எது?

  • சூழல் இப்படி இருக்க, மோடி அரசால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று நம்புவதற்கு அடிப்படைதான் என்ன? பத்தாண்டுகளில் அவர் எடுத்த சில நடவடிக்கைகள்தான்; நாடு இப்படியேதான் செல்லும் என்ற கருத்தை சில விஷயங்களில் மாற்றிக் காட்டியுள்ளார். அரசின் நிதி ஒதுக்கீடுகள் - செல்லும் வழியெல்லாம் கசிந்து கடைசியில் மிகக் குறைவாகத்தான் பயனாளிகளுக்குக் கிட்டும் என்ற பழைய வரலாற்றை மாற்றியிருக்கிறார்.
  • ஏழைக் குடும்பங்கள் விறகு அடுப்பைக் கைவிட்டு சமையல் எரிவாயு இணைப்பு பெற உதவி வருகிறார், பொது விநியோக முறை மூலம் அரிசி – கோதுமை ஆகியவற்றை வழங்குகிறார், கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசின் மானிய உதவியில் சொந்தமாக கட்டவைத்திருக்கிறார், வீடுகளைக் கட்டித் தருகிறார், பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குழாய் வழியாக அளிக்கும் ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துகிறார், கிராமங்களுக்குக் கிராம சாலை வசதிகளையும், எல்லையோரங்களில் நெடுஞ்சாலை திட்டங்களையும் அதிகப்படுத்திவருகிறார். இந்தத் திட்டங்களால் வறுமை கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.
  • ஆனால், இவை போதுமானவையும் அல்ல, மக்களுக்கு திருப்தி அளிப்பவையும் அல்ல. வறுமையிலிருந்து விடுபட்டவர்களும் விடுபட நினைப்பவர்களும் தங்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் உயர வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர். இதனால் அரசு, முன்பைவிட விரைவாகவும் பல மடங்கும் வெவ்வேறு துறைகளில் மக்களுக்கு நன்மைகளைச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்திய இளைஞர்களின் நல்வாழ்க்கை எதிர்பார்ப்பு இதுவரை இருந்திராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அனைவருமே நியாயமான – கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை அடைய விரும்புகின்றனர். அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் நிலையில் நாடு இருக்கிறதா? அவ்வாறு செய்வதற்கு ஏழு அம்சங்கள் தடையாக இருக்கின்றன.

7 தடைக் கற்கள்

கல்வி – வேலைவாய்ப்பு:

  • இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம் என்பதைச் சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் போக வேண்டும் என்றால் ஆண்டுக்கு 78.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதை எதிர்கொள்ள அரசு ஐந்து திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள், பிரச்சினைக்கு ஒட்டுப்போடும் முயற்சியாக இருக்குமே தவிர, அதைத் தீர்த்துவிடாது.
  • இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை, இருக்கும் வேலைக்குப் பொருத்தமானவர்களைத் தயாரிக்க முடியாததே பிரச்சினையாகத் தொடர்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத் தரத்தில் சில கல்வி நிலையங்கள் இருந்தாலும் பெரும்பாலான – கல்விக்கூடங்கள் என்று சொல்லப்படும் - நிறுவனங்கள் கல்வியைப் புகட்டி திறமையை வளர்ப்பதற்குப் பதிலாக, வெறும் காகிதத்தில் பட்டங்களை அச்சிட்டு வழங்குகின்றன. அரசுகள் நடத்தும் பெரும்பாலான கல்வி நிலையங்களின் நிலைமை சொல்லும் தரத்தில் இல்லை. அவற்றை மீட்பதற்கான தீவிர முயற்சிகளும் இல்லை.
  • கல்வி தொடர்பாக 2023இல் வெளியான ஆய்வறிக்கை, 14 வயது முதல் 18 வயதிலான மாணவர்களில் 25% பேரால் அவரவர் தாய்மொழியில் இருக்கும் இரண்டாம் வகுப்பு பாடங்களைக்கூட சரளமாகப் படிக்க முடியவில்லை என்கிறது. அவர்களில் 43% மாணவர்களால்தான் சாதாரண கூட்டல்-கழித்தல், வகுத்தல்-பெருக்கல் கணக்குகளைப் போட முடிகிறது!
  • வேலை செய்யும் தகுதியுள்ளவர்களுக்காக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. தகுதிவாய்ந்தவர்கள் பற்றாக்குறையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. வேலை செய்யும் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்றே 81% தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படித் திறன் பற்றாக்குறை அளவு 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை இருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கும்போது, லட்சக்கணக்கான வேலைகளுக்குத் தகுதியான வேலைக்காரர்கள் கிடைக்கவில்லை என்பது நகைமுரண்.

சீனத்துடன் வர்த்தகப் பற்றாக்குறை:

  • இந்தியாவுக்கும் சீனத்துக்குமான வர்த்தக விற்றுமுதல் மதிப்பு 11,800 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து சீனத்துக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பு வெறும் 1,667 கோடி அமெரிக்க டாலர்கள்தான். இதனால் வெளிவர்த்தக பற்றாக்குறை 10,000 கோடி டாலர்களுக்கும் மேல். இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனாவே தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் என்பதிலும், இந்தியாவுக்குக் கட்டளைகள் இட்டுச் செயல்பட வைக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகத் தொடரும்.

அதிகாரவர்க்கம்:

  • முடைநாற்றம் எடுத்துவிட்ட ஊழலும், மித மிஞ்சிய சோம்பலும் இந்திய அதிகார வர்க்கத்தின் இரண்டு பெரிய அடையாளங்கள். உயர் அதிகாரிகள் நிலையிலும் அமைச்சர்கள் அளவிலும் பெரிய ஊழல் புகார்களுக்கு இடம் வராமல் தடுத்திருக்கிறார் மோடி என்று பாராட்டலாம். ஆனால், அது நிர்வாக அடுக்கின் அனைத்து நிலைகளிலும் படர்ந்திருப்பதுடன் ஆழ வேரோடியிருக்கிறது. ‘நீட்’ தேர்வில் நடந்த மோசடிகளும் பூஜா கேட்கர் என்ற பெண் அதிகாரி ஐஏஎஸ் பயிற்சியில் இடம்பெற்ற விதம் தொடர்பான சர்ச்சைகளும் சமீபத்திய உதாரணங்கள். அரசு நிர்வாகம் நேர்மையாக இல்லாவிட்டால், எவ்வளவு கவனமாக தேர்வு நடைமுறைகளைத் திட்டமிட்டாலும் ஊழலும் முறைகேடுகளும் தொடரத்தான் செய்யும்.

நீதித் துறை சீர்திருத்தங்கள்:

  • ‘தாமதமான நீதி – மறுக்கப்பட்ட நீதி’ என்பார்கள். நீதித் துறை தொடர்பான புள்ளி விவரங்கள் அதைத்தான் சுட்டுகின்றன. நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் அனைத்து வகை வழக்குகளிலும் சேர்த்து நிலுவையில் உள்ளவற்றின் மொத்த எண்ணிக்கை 5.1 கோடிக்கும் மேல் என்று 2024இல் தயாரான அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் 1,80,000க்கும் மேற்பட்ட வழக்குகள் மாவட்ட – மாநில நீதிமன்றங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தீர்வின்றிக் காத்திருக்கின்றன.

வேளாண் துறை:

  • மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) வேளாண்மைத் துறையின் வளர்ச்சி 2023 – 2024இல் வெறும் 1.4% என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவதாக திரட்டப்பட்ட முன்மதிப்பீடு, 0.7% என்கிறது. இந்தத் துறையில்தான் 45.8% தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். விவசாயிகள் என்று அழைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கல்வி – பிற தகுதிகளுக்கேற்ப வேலை கிடைக்காமல் பிழைப்புக்காக வேளாண்மைக்கு வந்தவர்கள்தான்.
  • கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தலைக்கு 5 கிலோ கோதுமையோ, அரிசியோ மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பது ‘உதவி’தானே தவிர, ‘ஊதியம்’ அல்ல. இந்தத் துறையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு, உள்நோக்கத்துடன் காரணம் கற்பித்து அதை சுயநல சக்திகள் (2020 - 2021 விவசாயிகள் போராட்டம்) வெற்றிகரமாக முறியடித்துவிட்டன. நாடு வளர வேண்டும் என்றால் 45.8% உள்ள இந்த விவசாயிகளையும் வளர்ச்சித் திட்டங்களில் சேர்த்தாக வேண்டும்.

உண்மைகளைத் திரிக்கும் முயற்சிகள்:

  • வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவியுடன் செயல்படும் சில சக்திகள் - பச்சைப் பொய்கள், அரை உண்மைகள், திரித்துக்கூறும் தகவல்கள் மூலம் இந்தியாவின் பல துறைகளுக்குக் குறிவைத்து அவற்றை ஒவ்வொன்றாக சீர்குலைக்கின்றன. இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்போதும் விவசாய சட்டப் போராட்டத்தின்போதும் இந்தச் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டன.

மின்சார வெட்டு:

  • இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வு 1947இல் 16 யூனிட்டுகளாக இருந்தது, மக்கள்தொகை பல மடங்கு பெருகிய பிறகும் 2023 மார்ச்சில் 1,327 அலகுகளாக உயர்ந்திருக்கிறது. இருப்பினும் மின்சாரத்தைத் தயாரித்த இடங்களிலிருந்து கம்பி வடங்கள் மூலம் வேறிடங்களுக்குக் கொண்டுசெல்வதிலும் பிறகு நுகர்வோருக்கு வழங்குவதிலும் நிறைய மின்னிழப்புகள் ஏற்படுவது உலகிலேயே இந்தியாவில்தான் உச்சபட்சமாக இருக்கிறது. இந்தத் துறையில் நிலவும் ஊழல், திருட்டு, திறமைக் குறைவு ஆகியவைதான் இதற்குப் பெரும்பாலும் காரணம்.
  • மக்களுக்குக் குறைந்த செலவில் போதிய அளவில் நல்ல தரத்தில் கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காமல் போவதற்குக் காரணமான அம்சங்களை நீக்காமல் இந்தத் துறையை முன்னேற்ற முடியாது. எனவே, கோடிக்கணக்கான பணத்தை ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களுக்கு மக்களும் தொழில் – வணிக நிறுவனங்களும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இந்தத் துறையிலும் சீர்திருத்தங்கள் அவசியம்.

நன்றி: அருஞ்சொல் (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்