TNPSC Thervupettagam

இந்திய விடுதலை: அகிம்சையால் விளைந்த விந்தை!

August 16 , 2019 1967 days 958 0
  • இந்திய விடுதலைப் போர் என்ற பெரும் வரலாற்றை விவரிக்கும்போது சில நிகழ்வுகள் அநியாயத்துக்குச் சிறுத்துப்போகும். அவை வரலாற்றுக்குள் வராமல் ஒதுங்கிவிடுவதும் உண்டு. ஆனாலும், அவை இல்லாமல் வரலாறு முழுமையாகாது.
  • அந்நிய ஆட்சியானாலும் அகிம்சைப் போராட்டங்களைச் சமாளிக்கும்போது சட்டப்படியும், நியாயப்படியும்தான் அது நடந்துகொண்டது என்று சொல்வார்கள். அப்படி முழுமையாகவும் சொல்லிவிட முடியாது. சென்னை பூக்கடை காவல் நிலையத்துக்குச் சில தப்படிகள் முன்பாக அந்நியத் துணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தின்போது அந்த இடத்தில் தொண்டர்கள் மீது தடியடி நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேட்டை முத்துரங்க முதலியார் தலையில் அடிபட்டு ரத்தம் சிந்தினார்.
  • சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த பாஷ்யம் அய்யங்காரை போலீஸார் அடித்துத் தள்ளி குடோன் தெரு முழுதும் தரையில் உருட்டிக்கொண்டே வந்தார்களாம். அன்றைய அதிகாரிகள் சிலரின் வழக்கமான நடைமுறை இதுதான் என்று தோன்றுகிறது. மன்னார்குடியில் டாக்டர் முத்துகிருஷ்ணன் என்று ஒரு தியாகி. ஒரு போராட்டத்தின்போது போலீஸார் அவரைத் தெரு முனையில் அடித்துத் தள்ளி தெருக்கோடி வரை காலால் உருட்டியிருக்கிறார்கள்.
  • ஒருக்களித்து வைத்த கதவிடுக்கின் வழியாக இதைப் பார்த்த மக்கள் அரண்டுபோனார்கள். காகாஜி ராமசாமி என்று மன்னார்குடியில் ஒரு உன்னதமான தியாகி. தனிநபர் சத்தியாகிரகத்தின்போது நீதிமன்றக் காவலில் இருந்த அவரை அடித்துக் காலை முடமாக்கிவிட்டார்கள். தாங்கள் தேடிப்போகும் போராளிகள் வீட்டுக் கேணியில் ஒளிந்திருப்பதாக போலீஸார் சந்தேகப்பட்டால், பெரிய கற்களைக் கேணிக்குள் வீசுவார்கள் என்று கேள்வி.
அரசின் வன்முறை
  • வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின்போது அந்த மாவட்டத்தின் கலெக்டராக தஞ்சையில் இருந்தவர் தார்ன் என்ற ஆங்கிலேயர். வன்முறையைத் தவிர்த்து அகிம்சை வழியில் போராடும் தொண்டர்களைத் தடியால் அடிப்பது சட்டத்துக்கு இசைவானதுதான் என்று அவர் கண்டுபிடித்தார். இந்த அறிவுக்கூர்மை அவரது பெருமை என்று உள்ளுக்குள் நகைத்தவாறே ராஜாஜி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
  • தண்டனை சட்டத்தை சத்தியாகிரகிகளுக்கு எதிராக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற சூட்சுமங்களை நாட்டின் மற்ற இடங்களுக்கும் போதித்த பெருமை அவருடையதுதான் என்றும் சொல்கிறார். அதுவரை அகிம்சை வழியில் போராடுபவர்களை எப்படித் தடியால் அடிப்பது என்று ஆட்சியாளர்கள் தர்மசங்கடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அந்த சங்கடத்தை தஞ்சை கலெக்டர் தார்ன் கச்சிதமாகத் தீர்த்துவைத்திருக்கிறார். பிரிட்டிஷார் சட்டப்படி நடந்துகொண்ட விதம் இதுதான்.
  • நூறு தொண்டர்களோடுதான் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்துக்கு திருச்சியிலிருந்து ராஜாஜி புறப்பட்டிருக்கிறார். கட்டுப்பாட்டை மீறியதற்காக ஒருவரை இடையில் நீக்கியதும் தொண்டர்கள் எண்ணிக்கை 99 ஆகக் குறைந்தது என்று படித்த நினைவு. சுதந்திரப் போரின் கவர்ச்சிகளில் ஒன்று, தொண்டர்களின் கட்டுப்பாடு என்று சொல்வார்கள். தங்கும் இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்குப் பிரச்சாரங்கள் செய்துகொண்டே சென்றிருக்கிறார்கள். வள்ளலார் ராமலிங்க சுவாமிகளையும் சுதந்திரப் போரையும் சாதாரணமாக நம்மால் தொடர்புபடுத்திப் பார்க்க இயலாது.
  • உப்புச் சத்தியாகிரகப் பயணத்தின்போது தொண்டர்கள் பாடிக்கொண்டே சென்ற பாட்டுகளில் ராமலிங்கரின் ‘ஒருமையுடன் நினது திருமலரடி…’ என்ற அருட்பாவும் ஒன்று. தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்யும் காந்தியத் தொண்டர்களுக்கு அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பெரிய மிராசுதாரர்கள் சிலர் உற்சாகமான ஆதரவு கொடுத்துப் பொருளுதவியும் செய்தார்கள் என்பதை நம்புவீர்களா?.
பெண்களின் ஈடுபாடு
  • காவல் இருந்த போலீஸாருக்குத் தெரியாமல் அதிகாலையிலேயே ராஜாஜி உப்பு அள்ளி வந்துவிட்டார். அவர் கைதானதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் தொண்டர்கள் படைபடையாக தமிழகம் முழுவதிலிருந்தும் வேதாரண்யத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கைதாவதையும், போலீஸாரிடம் அடிபடுவதையும் பார்த்த பெண்கள், கோயிலுக்குச் சென்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்களாம். பிரார்த்தனை ஒரு போராட்ட முறையா என்று எளிதாக நினைத்துவிட முடியாது. போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையோடுதான் தொடங்கியிருக்கிறது. சத்தியாகிரகிகளுக்கு அகிம்சையிலும் சத்தியத்திலும் இருந்த பிடிப்புக்கும் இந்த பிரார்த்தனைகளுக்கும் நெருக்கம் உண்டு.
  • பிரார்த்தனையைத் தாண்டிய அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் அப்போது ஈடுபடவில்லை என்று நினைக்கக் கூடாது. சென்னைக்கு வந்த மகாத்மா காந்தி, அட்வகேட் ஜெனரல் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்கியிருந்தார். மகாத்மாவும் அவர் மனைவி கஸ்தூரிபாவும் விவசாயக் குடும்பத்துத் தம்பதிகளாகத் தோன்றினார்கள் என்கிறார் ஸ்ரீனிவாச அய்யங்காரின் மகள் அம்புஜம்மாள். காதரின் மேயோ அப்போது எழுதியிருந்த ‘மதர் இந்தியா’ என்ற புத்தகம் நம் நாட்டை மிகவும் தாழ்த்திப்பேசும் புத்தகம். அம்புஜம்மாளோடு காந்தி இந்த நூலைப் பற்றிப் பேசியதன் விளைவாக சென்னையில் மாதர் சங்கங்களை உருவாக்கி அவற்றை நாட்டுப்பணியில் ஈடுபடுத்தியுள்ளார் அந்த அம்மையார்.
காந்திக்கும் எதிர்ப்பு
  • மக்களுக்குத் தீவிர அரசியல் சிந்தனையோ, விடுதலை இயக்கத் திட்டங்களைப் பற்றிய விவாதங்களோ இல்லை. சத்தியம், அகிம்சை, பிரார்த்தனை என்று அவர்களின் சாதுவான மனப்போக்கைப் பயன்படுத்தி விரைவில் மறைந்துபோகும் மாயை ஒன்றை காந்தி செய்துகொண்டிருந்தார் என்று நினைக்கக் கூடாது.
    காந்தியின் தீண்டாமை ஒழிப்போ, கதர் இயக்கமோ அன்றைய சமூக நிலவரத்தில் எளிதாக விறுவிறுப்படையும் நடவடிக்கைகள் அல்ல.
  • ஒத்துழையாமைப் போராட்டத்தை ஏற்று வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலைத் துறப்பார்கள் என்றும் பலர் நம்பவில்லை. மாணவர்கள் கல்லூரிகளையும் பள்ளிக்கூடங்களையும் புறக்கணிப்பர்கள் என்று நம்புவதும் கடினமாக இருந்தது. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும், பின்னர் நாகபுரியில் 1920-ல் நடந்த மாநாட்டிலும் எதிர்ப்பை மீறித்தான் ஒத்துழையாமை தீர்மானம் நிறைவேறியது. ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு என்ற மிதவாதப் போக்கு காங்கிரஸில் தொடர்ந்து இருந்தது. இருந்தாலும், கதர் இயக்கத்தின் இலக்காக இருபது லட்சம் ராட்டைகள் நாட்டில் சுழல வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு செயல் திட்டம் வகுத்திருந்தது.
  • காந்தியின் உண்மையான தொண்டர்களில் சிலரை கதர் இயக்கம் அவ்வளவாக ஈர்க்கவில்லை. ராட்டைகள் சுழன்றன. ஆனால், நெய்யப்பட்ட நூல் விளக்குத் திரிக்கும், தலைவர்களுக்கு மாலையாக அணிவிக்கவும்தான் பயன்பட்டது என்று காந்தியின் தீவிரத் தொண்டர் குமட்டித்திடல் சந்தானம் எழுதுகிறார். தொண்டர்களிடையே காந்திக்கு இருந்த அளவற்ற மரியாதையால் அவர் திட்டங்கள் செல்லுபடியானது என்றும் கருதுகிறார்கள்.
  • இருந்தாலும், அறிவார்ந்த விவாதங்களுக்கும், அவற்றின் அடிப்படையில் காந்தியோடு வந்த வேறுபாடுகளுக்கும் விடுதலை இயக்கத்தில் பஞ்சமிருந்ததில்லை. காந்தியின் ஒத்துழையாமைத் திட்டங்களை ஏற்றுக்கொண்ட குமட்டித்திடல் சந்தானம், தான் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டிருந்தாலும் ஒரு வழக்குகூட வாதிடாமல் தொழிலைத் துறந்திருக்கிறார். இவர்தான் இரண்டாவது நிதிக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குத் தண்டனையாக வழக்கறிஞர் தொழில் செய்ய அவருக்கு உரிமை தரும் சன்னதை ஆட்சியாளர்கள் முடக்கியிருக்கிறார்கள்.
சமூகம் தயாரானது
  • காந்திய இயக்கத்தில் சேரவிருந்த ஓ.வி.அளகேசனின் வீட்டார் அவரைத் தடுக்க திருவுளச்சீட்டை நம்பியிருக்கிறார்கள். சீட்டு அவருக்கு எதிராக வந்தாலும் அவர் பிடிவாதமாக உப்புச் சத்தியாகிரகத்தில் சேர்ந்துவிட்டார். பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டதே அவர்களின் சிறைவாசத்தில்தான்.
  • விடுதலைப் போரில் இருந்தவர்களின் திருமணத்துக்குப் பெண்கொடுக்க மறுத்தவர்களும் உண்டு. நிர்வாகத்தில் இந்தியர்களைச் சேர்த்துக்கொள்ளும் சீர்திருத்தம் மட்டுமே சிலருக்குப் போதுமானதாக இருந்தது. சிலருக்கு முழு விடுதலைக்கும் குறைவான டொமினியன் அந்தஸ்தே போதும்.
  • இவற்றைக் கடந்து, ‘பூரண ஸ்வராஜ்யம் என்ற முழு விடுதலையே இயக்கத்தின் லட்சியம்’ என்று நிச்சயிப்பதற்கு 1929 லாகூர் மாநாடு வரை விடுதலை இயக்கம் காத்திருந்தது. அன்றைய சமூகத்தை சிறைவாசத்துக்கும், தியாகத்துக்கும், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கோஷமிடுவதற்கும் பழக்குவது எளிதல்ல. நாட்டின் விடுதலை என்ற அரசியல் லட்சியத்துக்குத் தியாகம் செய்ய அதைத் தயாரித்தது சுதந்திரப் போராட்டம். காந்தியின் அகிம்சை வழியால்தானே இந்த உலக விந்தையைச் சாதிக்க முடிந்தது!

நன்றி: இந்து தமிழ் திசை(16-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்