- இந்தியாவில் 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை, உற்பத்தி மற்றும் வணிகம் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை உடைத்தது. 80-களில் வேகமாக வளரத் தொடங்கிய இந்தியப் பொருளாதாரம், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வேகமாக வளர்ந்தது. கல்வி, வேலைவாய்ப்புகள் பெருகின. வறுமை குறைந்தது. ஆனாலும், இந்தியாவின் முதுகெலும்பு எனச் சொல்லப்படும் வேளாண்மை லாபகரமாக மாறவில்லை.
- முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ரங்கராஜன் இன்றைய பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்து, பொருளாதார வளர்ச்சி குன்றியதற்கு ஒரு முக்கியமான காரணத்தை முன்வைக்கிறார்: 2011-12-ல் பொருளாதாரத்தில் 34.3% இருந்த மூலதன முதலீடு (gross capital investment), 2019-20-ல் 27.8% ஆகக் குறைந்துவிட்டது என்பதே அது. எனவே, மூலதன முதலீட்டை அரசு அதிகரிக்க வேண்டும் என்பது அவரது முக்கியமான பரிந்துரை.
- பொருளாதார வளர்ச்சி குறையும்போது மிகவும் பாதிக்கப்படுவது அதன் கீழ் அடுக்கில் இருக்கும் ஊரக வேளாண் பொருளாதாரமே. எனவே, ரங்கராஜன் பரிந்துரைக்கும் அரசு முதலீட்டை வேளாண் துறையில் செய்தால்தான் உற்பத்தி பெருகி, வேலைவாய்ப்பு அதிகரித்து, ஊரகப் பொருளாதாரம் வலுப்பெறும். அதன் நுகர்வு அதிகரித்து, அதைச் சார்ந்து நிற்கும் நுகர்வுப் பொருட்கள், வாகனங்கள் விற்பனை என மொத்தப் பொருளாதாரமும் பயன்பெறும்.
மானியங்கள்
- 1950-ல் 2.5 ஹெக்டேராக இருந்த சராசரி வேளாண் அலகு, இன்று ஒரு ஹெக்டேருக்கும் குறைவாகிவிட்டது. பொருளியல் அறிஞர்கள், வேளாண்மைக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டு, உழவர்கள் வேறு தொழில்களை நோக்கி நகர வேண்டும், அப்போதுதான் வேளாண் அலகுகள் லாபகரமான அளவுக்குப் பெரிதாகும் என்கிறார்கள். அமெரிக்காவின் சராசரி நில அலகு 440 ஹெக்டேர். அந்த அலகுக்கு இந்தியா உயர வேண்டுமானால், வேளாண்மையில் இருக்கும் 60 கோடி மக்களில் கிட்டத்தட்ட 55 கோடிப் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, சிறு அலகு வேளாண் அமைப்பு லாபகரமாக மாற்றப்படுவதே இந்தியச் சூழலில் சரியாக இருக்கும்.
- வேளாண் உற்பத்தி சீராக்கப்பட்டு, உற்பத்திக்கான மதிப்பு சரியாகக் கிடைக்கும் வழியிலான ஒரு முழுமையான கட்டமைப்பில் அரசு முதலீடு செய்ய வேண்டும். இந்தியா, மாறுபட்ட வேளாண் மண்டலங்களைக் கொண்டது. ஒவ்வொரு தனித்துவ வேளாண் மண்டல அளவிலும் உழவர்கள், உள்ளூர் வேளாண் துறை அதிகாரிகள், மேலாண் துறை அறிஞர்கள், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் கொண்ட குழுவால் கட்டமைப்புகள் திட்டமிடப்பட வேண்டும். மண்டல வேளாண்மைச் சாத்தியங்களுக்கேற்ப மட்டுமே கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். திட்டத்துக்கான வழிகாட்டுதலும் முதலீடும் மீளாய்வும் மட்டுமே அரசின் பங்களிப்பாக வைக்கப்பட்டு, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
முதலீடுதான் பிரதானம்
- இதுவரை நீர்ப்பாசனம், மின்சாரம், தொழில்நுட்பம் என சமூகத்துக்குப் பொதுவான கட்டமைப்புகளில் அரசுகள் முதலீடு செய்துவந்திருக்கின்றன. சமீபத்தில்தான், பொதுவான அலகுகள் தாண்டி, உழவர் நிலங்களில் பண்ணைக் குட்டைகள் போன்ற முதலீட்டைத் தொடங்கியிருக்கின்றன. உழவர்கள் சூரிய மின் உற்பத்திசெய்வதை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.
- இவை கொள்கை அளவில் நின்றுவிடாமல் அனைத்து உழவர்களின் நிலங்களிலும், பண்ணைக் குட்டைகளும் சூரியஒளி மின்சாரக் கட்டமைப்புகளும் உருவாக, முதலீடுகளை அரசு செய்ய வேண்டும். உழவர்கள் தங்கள் தேவை போக உபரி மின்சாரத்தை உற்பத்திசெய்து, அதன் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுபோல ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி உறுதிசெய்ய வேண்டும்.
- ஆனால், இவை மட்டுமே போதாது. உற்பத்திக்குச் சரியான விலை கிடைப்பது மிக அவசியம். சிறு அலகு உழவர்கள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்துகையில், சந்தை பேர மேசையின் பலவீனமான பக்கத்தில் இருக்கிறார்கள். தங்கள் பொருட்களுக்கான சரியான விலையை நிர்ணயிப்பதில், கொஞ்சமும் அதிகாரமற்றவர்களாக இருக்கிறார்கள். சந்தை விலை அதிகம் இருக்கையில்கூட வணிகர்களிடம் பல வகைகளில் ஏமாறுகிறார்கள்.
நேரடி விற்பனைகள்
- இங்கேதான், மாற்று அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. சிறு தனிமனித அலகுகள் இணைந்து செயல்படும் வகையில் நிறுவனங்கள் உருவாகும்போது, அவை பெரும் பொருளாதார அலகாக மாறி, விற்பனை விலையை நிர்ணயிக்கும் செல்வாக்கை அடைகின்றன. அமுல் போன்ற சுதந்திர மேலாண்மை கொண்ட நிறுவனங்களால் தங்கள் பொருட்களுக்கான விலையைத் தாங்களே முடிவுசெய்ய முடிகிறது. தினமும் 5 லிட்டர் பால் உற்பத்திசெய்யும் உழவர், வருடம் ரூ.60ஆயிரம் மதிப்புள்ள பாலை விற்பனைசெய்யும் நுண் அலகு.
- அவர் தொழில்நுட்பம், விளம்பரம் செய்தல் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலாது. ஆனால், 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிணையும்போது, அது வருடம் ரூ.7,000 கோடி விற்பனை செய்யும் ‘ஆவின் நிறுவனம்’ எனப் பேருருகொள்கிறது. பெரும் ஆலைகள், நவீனத் தொழில்நுட்பம், தொடர்புச் சங்கிலி, விளம்பரம் செய்தல் போன்றவற்றில் முதலீடு செய்து, தொழிலைச் செயல்திறன் மிக்க ஒன்றாக மாற்றுவது எளிதாகிறது.
- ஆனால் காய்கறிகள், உணவு தானியங்கள், ஆடு, கோழி வளர்த்தல் போன்றவற்றில் இது இன்னும் சாத்தியமாகவில்லை. டெல்லியில் ‘மதர் டெய்ரி’ எனும் தன்னாட்சி அரசு நிறுவனம் ‘சஃபல்’ என்னும் காய்கறி நிறுவனத்தை நடத்திவருகிறது. அது உழவர்களிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து, டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் 400-க்கும் மேற்பட்ட அங்காடிகளில் நேரடியாக விற்பனை செய்துவருகிறது. பழ உற்பத்தி மண்டலங்களில், பதப்படுத்தும் ஆலைகளை நிறுவி, தரமான பொருட்களை உற்பத்திசெய்து, ஐரோப்பாவில் தங்கள் விற்பனையகங்களை நிறுவி விற்பனை செய்துவருகிறது. தமிழகத்திலும், மீன் வளர்ச்சிக் கழகம், சில்லறை அங்காடிகள் மூலம் மீன்களை நேரடி விற்பனை செய்துவருகிறது.
உழவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்
- சஃபல் போல பெருநகரங்களைச் சுற்றி இருக்கும் உழவர்களை இணைத்து பழங்கள், காய்கறிகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை உற்பத்திசெய்து நகரங்களில் விற்பனை செய்யும் அங்காடிகளை உருவாக்க வேண்டும். பழ உற்பத்தி மண்டலங்களில் பதப்படுத்தும் ஆலைகளை நிறுவி, வெளிநாடுகளில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
- பண்ணைக் குட்டைகள், மின்உற்பத்தி என உற்பத்தியைச் சீராக்கி, உழவர்களை ஒன்றிணைத்து, அனைத்துப் பொருட்களுக்கும், பிராந்திய அளவில், உழவர் சந்தைகள், தொடர்புச் சங்கிலிகள், பதன ஆலைகள், விற்பனை நிறுவனங்கள் என உருவாக்கப்படும் முழுமையான கட்டமைப்பில் செய்யப்படும் முதலீடுகளே, உற்பத்திக்கான சரியான விலையைப் பெற்றுத்தரும். வேளாண்மைக்கான மானியங்களையும் அரசு குறைத்து, நீண்ட கால நோக்கில், செயல்திறன் மிக்க லாபகரமான வேளாண் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
அமுல் நிறுவன முன்னுதாரணம்
- அமுல் பால் கூட்டுறவுத் தொழிலின் வெற்றியைக் கேள்விப்பட்ட பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தானே நேரில் குஜராத் சென்று அதற்கான காரணங்களை ஆராய முடிவெடுத்தார். ஒருநாள் இரவு முழுவதும் அமுல் பால் உற்பத்தியாளர்களுடன் உரையாடி, அதன் வெற்றிப் பின்னணியை உணர்ந்தார். பின்னர், அதன் தலைவர் குரியனை அழைத்து, அந்தத் தொழிலமைப்பை நாடு முழுதும் நிறுவச் சொன்னார். டாக்டர் குரியன் அதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் அல்லாமல் அமுல் வெற்றிபெற்ற குஜராத்தின் ஆனந்த் நகரில்தான் இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தை உருவாக்க முழுச் சுதந்திரம் வேண்டும் என்பன அவற்றுள் முக்கியமானவை. வழக்கமான அரசுத் துறைகள்போல் அல்லாமல், பால் துறை தொழில்நுட்பப் பொறியாளர்களை, மேலாண்மைப் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி, ஒரு தனித்துவமான நிறுவனத்தை உருவாக்கினார்.
- குரியனின் வேண்டுகோளின் பேரில் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தை ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக ஆக்கித்தந்தார், அடுத்த பிரதமர் இந்திரா காந்தி. கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான மேலாளர்களை உருவாக்க, ஊரக மேலாண்மைக் கழகம் என்னும் நிறுவனத்தை, அமதாபாத் மேலாண்மைக் கழக இயக்குநரின் உதவியோடு உருவாக்கினார் குரியன்.
- இந்த வெற்றிகரமான திட்டத்தில் சில படிப்பினைகள் உள்ளன. இது ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு தொழில் மாதிரியின் முன்னெடுப்பு; டெல்லி திட்ட கமிஷன் பொருளியல் அறிஞர்களின் மூளையில் உதித்ததல்ல. பால் வணிகத்தை நடத்த மாநில அளவில் அமுல் போன்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளைப் பால் துறை பொறியாளர்கள், மேலாளர்கள் கொண்ட தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் செய்தது. இந்தக் கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கியது. ஆவின், மில்மா, நந்தினி, விஜயா, வேர்க்கா, உருமுல் என இன்று 22 மாநிலங்களில் இவை வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.
சீரான லாபம்
- உழவர் உற்பத்திசெய்யும் பால், நேரடியாக நுகர்வோரை அடைகிறது. நடுவில் லாப நோக்கம் கொண்ட வணிகர் எவரும் இல்லாததால் நிர்ணயிக்கப்படும் விலை உற்பத்தியாளர், நுகர்வோர் இருவருக்கும் ஓரளவு கட்டுப்படியாகும் அளவில் உள்ளது. நுகர்வோர் கொடுக்கும் விலையில் 70-80% உற்பத்தியாளரைச் சென்றடைகிறது. மற்ற வேளாண் பொருட்கள்போல உற்பத்திக் காலத்தில் விலை வீழ்ச்சி, உற்பத்தி இல்லாக் காலத்தில் அதீத விலை உயர்ச்சி என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளாமல் விலை சீராக இருக்கிறது. உற்பத்திக்கான பணம் வாரா வாரம் உற்பத்தியாளரைச் சென்றடைகிறது. இது வணிகரீதியாக வெற்றிகரமாக இயங்குவதால், இதற்கான அரசு மானியத் தேவை மிகக் குறைவு.
- 2017-ல் முதன்முறையாக பால் உற்பத்தியின் மதிப்பு, இந்திய தானிய உற்பத்தி மதிப்பைவிட அதிகமானது. 1950-ல் 1.7 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2018-ல் 17.6 கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. இன்று உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளர் இந்தியா. பால் போன்ற அழுகும் பொருள் உற்பத்தியில் இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணம், இந்தத் துறைக்குப் பொருத்தமான, நீடித்து நிலைக்கும் கட்டமைப்பானது உழவர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டதும், அதன் நிர்வாகம் பால் துறைத் தொழில்நுட்ப மேலாளர்கள் தலைமையில் அமைந்ததுமாகும்.
- இதன் படிப்பினை என்னவென்றால், உழவர்கள் இணைக்கப்பட்டு, வணிகரீதியாக வெற்றி பெரும் வேளாண் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டால் உழவர்கள் தங்கள் உற்பத்திக்குச் சீரான, கட்டுப்படியாகும் விலை பெறுவார்கள். நுகர்வோருக்கும் சரியான விலையில் வேளாண் பொருட்கள் கிடைக்கும். அரசுக்கும் மானிய பாரம் குறையும். இதைப் போன்ற கட்டமைப்பை உருவாக்குகையில் எதிர்ப்படும் சவால்கள் என்ன? அரசின் திட்டத்தைத் தீட்டும் பொருளியல் அறிஞர்களின் மையப்படுத்தப்பட்ட புள்ளிவிவர மனச்சாய்வு கொண்ட நோக்கு, உழவர் நலனில் அக்கறையில்லாத அரசு அதிகாரிகளின் ஊழல் மலிந்த நிர்வாகம், அரசியல் தலையீடுகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
- மராத்திய மாநிலத்தில் கரும்பு உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் போன்றவை மாநில அரசியலர்களின் கோட்டைகளாக மாறிவிட்டன. தமிழகத்திலும் வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளூர் அரசியலர்களின் கோட்டைகளாக உள்ளன. கரையான் புற்றில் கருநாகங்கள் புகுந்துகொண்டதுபோல.
இதற்கான தீர்வுகள் என்னென்ன?
- முதலில், வேளாண் மண்டலங்கள் என்னும் சிறு அலகில் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். உழவர்கள், உள்ளூர் வேளாண் துறை அதிகாரிகள், மேலாண் துறை அறிஞர்கள், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் போன்றவர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பிரச்சினைக்கான தீர்வுகளை வணிக நோக்கில் அணுக வேண்டும். பின்னர், அதற்கான திட்டங்கள் அரசின் அனுமதியோடு, சிறு அலகுகளில் பரீட்சார்த்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும். அதன் வெற்றிக்கான இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு, அவற்றை அடைந்த பின்பு, அதை அந்த வேளாண் மண்டலம் முழுதும் விரிவாக்க வேண்டும்.
- ஏற்கெனவே, இந்திய அளவில் வெற்றிகரமாக டெல்லியில் சஃபல் என்னும் அரசு நிறுவனம் உழவர்களிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து, டெல்லி நகரத்தில் சில்லறை விற்பனை அங்காடிகளை நிறுவி விற்பனை செய்துவருகிறது. அதுபோன்ற நிறுவனங்களுடன் இணைந்து எல்லா மாநிலங்களிலும் அதேபோன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தத் திட்டங்களை வகுக்கலாம்.
- தீர்வுக்கான நிறுவனம், முழுக்க முழுக்க சிறு/குறு உழவர் நலன் சார்ந்து இயங்கும் சார்பு கொண்டு அமைக்கப்பட வேண்டும். அதை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் தவிர்த்த தொழில்நுட்ப, மேலாண்மை நிபுணர்கள் இந்தியாவின் சிறந்த கல்லூரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வேளாண் வணிகத் துறையில் வெற்றிகரமாக இயங்கும் மேலாண் நிபுணர் அடையாளம் காணப்பட்டு, அவர் தலைமையில் நிறுவனம் தன்னாட்சி கொண்டு இயங்க வேண்டும்.
- உழவர்கள் நிறுவனமாக இருப்பதால் இதில் உழவர்கள் என்னும் போர்வையில் அரசியலர்கள் நுழைவது எளிது. தொழில் முறை அரசியலர்கள், செல்வந்தர்கள், தொழில் செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, சிறு/குறு விவசாயிகள், உண்மையான தன்னார்வல நிறுவனர்கள், வேளாண் அறிஞர்கள், மேலாண்மை அறிஞர்கள் ஆகியோர் இதன் நிர்வாக இயக்குநர்கள் அமைப்பில் பங்கு பெற வேண்டும். இதற்கு ஆலோசகர்களாக இந்தியாவின் தலைசிறந்த வேளாண் அறிஞர் பெருமக்கள் இருக்க வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு இருப்பது சிறு உழவர்களுக்கான குறைந்தபட்சப் பொருளியல் பாதுகாப்பாக அமையும். அந்தப் பாதுகாப்பு இருந்தால், உழவர்கள் மானியங்கள் தேவைப்படாமல் லாபகரமாக உற்பத்தியைப் பெருக்கிச் சாதனைபுரிவார்கள். இந்தியாவின் வெண்மைப் புரட்சி நம் கண் முன்னே நிற்கும் வெற்றிகரமான சான்று!
நன்றி: இந்து தமிழ் திசை (09-01-2020)