இந்திய ‘அரிசி’யியல் வரலாறு!
- உலகில் அதிகம் அரிசி விளைவிக்கும் இரண்டாவது நாடு இந்தியா. அரிசியை அதிகம் உண்ணுவதில் இரண்டாமிடம் இந்தியர்களுக்கு. நமது அன்றாட வாழ்க்கையோடு கலந்தது அரிசி. மதம், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, பொருளாதாரம், நம்பிக்கை என ஒவ்வொன்றுடனும் அரிசி பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம் சரித்திரத்தின் பாதையெங்கும் மினுமினுக்கும் இந்தியர்களுக்கும் (குறிப்பாகத் தமிழர்களுக்கும்) அரிசிக்குமான ஆழமான உறவை ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம்போலக் காட்சிப்படுத்துவதே. ‘அரிசி’ என்கிற சொல்லிலிருந்தே ஆரம்பிப்போம்.
- ‘அரி’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பொருள்கள் உண்டு. ‘அரிசி’ என்கிற பொருளும் உண்டு. ‘அரியே ஐம்மை’ என்கிறது தொல்காப்பியம். ஐம்மை என்றால் ‘நுண்ணிய’ என்று அர்த்தம். பருப்பைவிட நுண்ணிய தானியம் எனலாம். ஆக, நெல், வரகு, சாமை, ஏலம் எனப் பலவற்றிலிருந்தும் பெறப்படும் சிறிய தானியம் எல்லாமே அரிசி (சாமை அரிசி, வரகரிசி, ஏல அரிசி) என்றே அழைக்கப்பட்டன. இருந்தாலும் பொதுவான பயன்பாட்டில் அரிசி என்பது நெல்லிலிருந்து பெறப்பட்டதையே குறிக்கிறது.
- அரபி மொழியில் ‘அல்ருஸ்’, லத்தீன் மொழியில் ‘ஒரைசா’, இத்தாலிய மொழியில் ‘ரைசே’, ஸ்பானிய மொழியில் ‘அராஸ்’, ஜெர்மனியில் ‘ரெய்ஸ்’, ஆங்கிலத்தில் ‘ரைஸ்’ - இந்தச் சொற்களுக்கெல்லாம் மூலம் மூத்தக்குடி மொழியான தமிழில் இருந்து தோன்றிய ‘அரிசி’ என்கிற சொல்லே.
- ஐவனம், வெண்ணெல், செந்நெல், தோரை ஆகிய சொற்கள் சங்க இலக்கியத்தில் நெல்லைக் குறிப்பிடுவதாக அமைகின்றன. அடிசில், அமலை, அமிர்து, அயினி, அவி, உணா, உண்டி, கூழ், சதி, சாதம், துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிதவை, வல்சி போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் சோறு அல்லது அரிசியைக் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியத்தில் அரிசி
- ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ அறிவும் திறமையும் உடையவர்களுக்கு எங்கு சென்றாலும் சோறு கிடைக்கும் என்று ஔவையார், அதியமானின் வாயிற்காவலனிடம் சொல்வதாகப் புறநானூறு (பாடல் 206) காட்சி பகிர்கிறது. ‘ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப’ - அரிசி அரைக்கும்போது திருவை ஒலி எழுப்புவதுபோல, தேர்ச்சக்கரம் மணலில் ஓடும்போது ஒலி எழுவதாக அகநானூறு அரிசியை உவமையாக்குகிறது. ‘ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் - காக்கையே!’ உன் சுற்றத்துடன் வயிறார உண்ணுவதற்குப் பச்சை ஊன் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் பொன் வட்டிலில் தருவேன் என்று ஐங்குறுநூறு பிற உயிர்களிடத்தும் அன்பு பேணுகிறது.
- பெருஞ்சேரல் இரும்பொறை ஆளுகைக்குள் அடங்காத நாட்டின் பண்டைய வளத்தையும், போருக்குப் பின்னர் அடையப் போகும் பாழ்நிலையையும், ‘வெள் வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார்’ என்கிற வரிகள் குறிப்பிடுகின்றன. ‘வெள்ளை வரகு பயிரிட உழும் நிலமாகவும் கொள்ளு பயிரிடும் கரம்பை நிலமாகவும் மாறும்; மக்கள் நெல் அரிசியையே அறியாத நிலை உண்டாகும்’ என்று பதிற்றுப்பத்தில் ‘அரிசில் கிழார்’ தம் அடிசிலுக்காக இரும்பொறையைப் புகழ்ந்திருக்கிறார்.
- சேற்று நிலத்தில் நெல்லை விதைத்துப் பயிரிட்டதை ஐங்குறுநூறும், ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் செந்நெல் விளைவித்ததைப் பொருநராற்றுப் படையும், தானியங்களைச் சேமித்து வைப்பதற்கான நெற்குதிர்கள் உழவர் வீடுகளில் இருந்ததைப் பெரும் பாணாற்றுப்படையும், மருத நிலத்தில் நெற்சோறு முக்கியமானது, அங்கே உழவர்கள் ஆட்டிறைச்சியையும் வாளை மீனையும் பழைய சோற்றுடன் உண்டனர் என்பதைப் புறநானூறும் காட்சிப்படுத்துகின்றன. இவ்வாறாகப் பண்டைத் தமிழர்கள் வேளாண் தொழிலில் சிறப்பாக நெல் பயிரிட்டு வளமாக வாழ்ந்ததைச் சங்க இலக்கியம் நிறைவாகச் சொல்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2024)