TNPSC Thervupettagam

இந்தியக் கூட்டாட்சி சமச்சீரற்று இருப்பது ஏன்?

August 13 , 2019 1977 days 970 0
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது கூறு அளித்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக்கொண்டுவிட்டது; அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இருவேறு பகுதிகளாக, அதுவும் மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட நேரடி ஒன்றியப் பிரதேசமாகப் பிரித்திருக்கிறது. அதில் லடாக் பகுதிக்கு சட்டமன்றம் கிடையாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் சட்டமன்றம் உண்டு. இதையொட்டி, கூட்டாட்சித்துவம் குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
  • நாடுகளை ‘கூட்டாட்சி நாடு’ என்றோ, ‘ஒற்றையாட்சி நாடு’ என்றோ அவற்றின் நிர்வாக அமைப்பையொட்டி அழைப்பார்கள். ஒற்றையாட்சி நாட்டில் மத்திய அரசுக்கே நிர்வாகத்திலும் சட்டம் இயற்றுவதிலும் உச்சபட்ச அதிகாரங்கள் இருக்கும்; அதன் உறுப்பு மாநிலங்களுக்கு சுயாட்சியே இருக்காது. கூட்டாட்சி அமைப்பில் உறுப்பு மாநிலங்கள் அவற்றின் பிராந்தியம் அல்லது இன அடிப்படையில் அடையாளம் காணப்படும். வெவ்வேறு வடிவங்களில் அவற்றுக்கு சுயாட்சி வழங்கப்படும் அல்லது சில நிலைகளில் நிர்வாக அதிகாரங்களும் சட்டமியற்றும் அதிகாரங்களும் வழங்கப்படும்.
  • தான் இயற்றும் சட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் தன்னுடைய பகுதியில் செல்லுபடியாகும் என்று ஒருவித சுயாட்சி அந்தஸ்தில் இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு, ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டு, அந்தஸ்து குறைந்திருப்பது நமது கூட்டாட்சி முறை குறித்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பகுதி அளவிலான கூட்டாட்சி
  • இந்திய ஒன்றியத்தின் இயற்கைத் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் சில வழக்குகளின்போது கருத்து தெரிவித்துள்ளது. எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய அரசு வழக்கில், கூட்டாட்சி என்பதற்கு அமெரிக்க நாட்டை ஒப்புமை காட்டி விளக்கம் அளித்திருக்கிறது. கூட்டாட்சி என்பது மாநிலங்களின் ஐக்கியம், அதில் அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருக்கும். மாநிலங்களின் ஐக்கிய நாடாக அமெரிக்கா இருக்கிறது, அங்கே மாநிலங்கள் சுதந்திரமானதாகவும் இறையாண்மை மிக்கதாகவும் இருக்கின்றன.
  • அமெரிக்க மாநிலங்களின் எல்லைகளையோ பரப்பளவையோ மத்திய அரசால் சட்டமியற்றி மாற்றிவிட முடியாது. இந்தியாவிலோ இப்போதுள்ள மாநிலங்களைப் பிரிக்கவும், எல்லைகளை மறுவரையறுக்கவும், இரு வேறு பிரதேசங்களை இணைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் பெயர்களைக்கூட மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
  • அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதுவரை இருந்திராத வகையில் ஒரு மாநிலம் இரண்டு ஒன்றியப் பகுதிகளாகமாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலும், இதை மாநிலங்களின் ஆலோசனைப்படியும் விருப்பப்படியும்தான் மத்திய அரசு செய்துவருகிறது. ஆனால், அப்படி மாநிலங்களின் ஒப்புதல் அல்லது சம்மதத்துடன்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களின் அதிகாரங்களை நிராகரிக்கும் அதிகாரமானது மத்திய அரசுக்கு அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது
  • கூட்டாட்சி முறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. மாநிலங்களின் அதிகாரப்பட்டியல், மத்திய அரசின் அதிகாரப்பட்டியல், இரண்டுக்கும் பொதுவான அதிகாரப்பட்டியல் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் இல்லாத புதிய விஷயம் தோன்றுமானால், அது தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.
  • அதாவது, ‘எஞ்சிய அதிகாரம்’ அனைத்தும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கூட்டாட்சி முறையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்குள்ள அதிகாரங்கள் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டன. இவற்றில் குறிப்பிடாத புதிய விஷயம் எதுவாக இருந்தாலும், அது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் அங்கிருக்கும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய மாநிலங்களின் நிதி திரட்டுவதற்கான அதிகாரங்கள் வரைமுறைகளுக்கு உட்பட்டது. கூடுதல் நிதி வேண்டுமானால் மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். இந்திய மாநிலங்கள் சட்டம் இயற்றிக்கொள்ளலாம், நிதி நிர்வாகத்தைச் சுதந்திரமாக மேற்கொள்ளலாம், ஆனால், மத்திய அரசுக்கு இணையான அதிகாரம் மாநிலங்களுக்குக் கிடையாது; இதனால்தான், இந்தியாவை ‘பகுதியளவிலான கூட்டாட்சி’ (குவாசி பெடரல்) அரசு என்கிறார்கள்.
ஒன்றியப் பகுதிகளின் தோற்றம்
  • இந்தியாவின் முக்கிய நிர்வாக அலகுகளின் வடிவங்கள் மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகியவைதான். இவை போக குறிப்பான பிரச்சினைகளுக்கு அல்லது வேலைகளுக்கு வேறு சில நிர்வாக அலகுகளையும் ஏற்படுத்துவது உண்டு. அதற்கு உள்ளூர் காரணம், வரலாற்றுபூர்வமான காரணம், புவியியல் காரணங்கள் ஏற்படுவதுண்டு. மத்திய, மாநில அரசுகளைத் தவிர சட்டமன்றங்களுடன் கூடிய ஒன்றியப் பகுதிகளும், சட்டமன்றங்களே இல்லாத ஒன்றியப் பகுதிகளும்கூட இருக்கின்றன.
  • அரசியல் சட்டம் அமலுக்கு வந்தபோது நிர்வாக அலகுகளை ஏ, பி, சி, டி என்று வகைப்படுத்தினார்கள். ஏ என்பது தொடக்க காலத்திலிருந்தே செயல்பட்டுவந்த மாகாண அரசுகள். பி என்பது சுதேச மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் அல்லது சமஸ்தானங்கள். சி என்பது முதன்மை ஆணையரின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகள். அவை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட ஒன்றியப் பகுதிகளாயின. பின்னாளில் அவற்றுடன் சட்டமன்றம் இணைக்கப்பட்டது. மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை முழு மாநில அந்தஸ்தையும் பெற்றன. இமாசல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், கோவா இப்பிரிவில் வருகின்றன.
  • புதுச்சேரியும் டெல்லியும் சட்டமன்றங்கள் உள்ளவை. இதர ஒன்றியப் பகுதிகளில் சட்டமன்றமோ, ஆளுநருக்கு ஆலோசனை கூறவல்ல அமைச்சரவையோ கிடையாது. புதுச்சேரிக்கும் டெல்லிக்கும் இடையிலேயேகூடப் பல வேறுபாடுகள் நிலவுகின்றன. மாநில அதிகாரப்பட்டியல், பொது அதிகாரப்பட்டியல் என்று எதுவாக இருந்தாலும் அவற்றில் உள்ளவை தொடர்பாகச் சட்டம் இயற்றும் அதிகாரம் புதுச்சேரிக்கு இருக்கிறது. டெல்லியும் புதுச்சேரிக்குச் சமமானதுதான் என்றாலும் உள்துறை, நிலம், பொது அமைதி ஆகியவை தொடர்பான நிர்வாக அதிகாரங்கள் துணை நிலை ஆளுநருக்குத் தரப்பட்டுள்ளன. மாநிலங்களானாலும், ஒன்றியப் பகுதியானாலும் அவை இயற்றும் சட்டமெல்லாம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவையே.
  • புதுச்சேரிக்கு மேலும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்துக்குக் கட்டுப்பட்ட காரைக்கால் (தமிழ்நாடு), ஏனாம் (ஆந்திரம்), மாஹி (கேரளம்) ஆகியவை வெவ்வேறு பகுதிகளில் உள்ளவை. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்ததே இவற்றை இணைக்கும் கயிறு. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் எப்படி எல்லா விஷயங்களிலும் சம அதிகாரங்கள் இல்லையோ அப்படியே சில மாநிலங்களுக்கும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனாலும் இந்தியக் கூட்டாட்சி முறை சமச்சீரற்றதாகிவிடுகிறது.
சிறப்பு அந்தஸ்து
  • சமச்சீரற்ற மத்திய – மாநில உறவுகளுக்குச் சிறந்த உதாரணம் 2019 ஆகஸ்ட் 6 வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இருந்ததுதான்; அரசியல் சட்டத்தின் 370-வது கூறின்படி தனக்கென்று தனி அரசியல் சட்டம், நிரந்தரக் குடிமக்கள் என்பதை வரையறுக்கும் அதிகாரம், பிற மாநிலத்தவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்கவிடாமல் தடுப்பது, மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலின்றி மத்திய அரசின் எந்தச் சட்டமும் தங்களுக்கு நேரடியான பயன்பாட்டுக்கு வந்துவிடாமல் தடுக்கும் அதிகாரம் ஆகியவை ஜம்மு - காஷ்மீருக்கு இருந்தது. தனக்கென்று தனி தண்டனையியல், குற்றவியல் சட்டத் தொகுப்புகளை மாநிலம் பயன்படுத்திவந்தது. இந்திய அரசியல் சட்டப்படி அதன் சில அம்சங்களைத் திருத்தியோ திருத்தாமலோ ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்துவதுபற்றி அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தரப்பட்டிருந்தது.
  • சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீருக்கு மட்டும் தரப்பட்டதல்ல; ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் நிலவிய சமச்சீரற்ற உறவு பிற மாநிலங்களுடன் கிடையாது. அரசியல் சட்டக் கூறு 371-ன்படி பிற மாநிலங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் என்பவை அம்மாநிலத்தின் சில பகுதிகள் அல்லது சில பிரிவினரின் வளர்ச்சிக்காக மாநில ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்கின. மகாராஷ்டிரம், குஜராத், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகியவை அந்த மாநிலங்கள். தனிப் பொறுப்புகளை வழங்கி அவற்றை ஆளுநர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இருந்தாலே அந்தந்த மாநில அமைச்சரவையுடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்ற விருப்ப அதிகாரம் அவர்களுக்குத் தரப்படுவது பொதுவான நடைமுறையாக இருக்கிறது.
அதிகாரப் பரவலின் உதாரணங்கள்
  • இந்த சமச்சீரற்ற கூட்டாட்சி சட்டகத்திலும் குறிப்பிடத்தக்க வகையிலான இன்னொரு அடுக்கு நிர்வாக முறை இருக்கிறது. அரசியல் சட்டத்தின் ஆறாவது அட்டவணை என்று அழைக்கப்படும் அது பழங்குடிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் அசாம், மேகாலயம், திரிபுரா, மிசோரம் தொடர்பானது. சுயாட்சி அதிகாரமுள்ள மாவட்டங்களையும் பிராந்தியங்களையும் இதனால் உருவாக்கிக்கொள்ள முடியும். வெவ்வேறு வகை பட்டியலினப் பழங்குடி மக்கள் வாழும் சுயேச்சை மாவட்டங்கள் சுயேச்சை பிராந்தியங்களாகப் பிரிக்கப்படும். இவற்றை மாவட்ட கவுன்சில் (பேரவை), அல்லது பிராந்திய கவுன்சில் (பேரவை) நிர்வகிக்கும்.
  • நிலங்களை ஒதுக்குவது, அதில் குடியேறச் செய்வது, பயன்படுத்துவது ஆகியவை தொடர்பான சட்டங்களை இவை இயற்றும். காப்புக் காடுகள், நீர்வழித் தடங்கள் நீங்கலாக இதர வனப் பகுதிகளைப் பராமரிப்பதற்குக்கூட இவற்றால் சட்டமியற்ற முடியும். சமூகப் பழக்கங்கள், திருமணம், மணவிலக்கு, சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றையும் இந்த கவுன்சில்களால் ஒழுங்குபடுத்த முடியும்.
  • அசாமில் கர்பி-ஆங்லாங் சுயாட்சிப் பேரவை, திமா ஹசாவ் சுயாட்சி மாவட்டப் பேரவை, போடோலாந்து பிரதேசப் பேரவை இப்படி ஆறாவது அட்டவணைப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளன. வேறு ஆறு சுயாட்சிப் பேரவைகள் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டன. லடாக் பிரதேசத்தில் லே, கார்கில் பகுதிகளுக்காக இரண்டு சுயாட்சி மலைப்பகுதி வளர்ச்சிப் பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் கோர்க்கா மலைப் பேரவை இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை(13-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்