TNPSC Thervupettagam

இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றம்

August 2 , 2021 1095 days 502 0
  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சட்டமன்றக் கட்டிடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிப் பொறுப்பாட்சிமாகாண சுயாட்சி முறைகளுக்கும் சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களின் கூட்டாட்சிக்கும் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது. பேரவை, மேலவை என்னும் இரு அவைகளை உள்ளடக்கிய சட்டமன்றமாகச் செயல்பட்ட அனுபவங்களையும் இது பெற்றுள்ளது.
  • தவிர, மாநிலங்களின் சுயாட்சிக் குரல்களுக்கான முன்னோடி மேடையாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பின் ஏழாம் அட்டவணையின்படி, மாநிலங்களுக்கு வகுத்துரைக்கப்பட்ட இனங்களில் சட்டமியற்றுவதுடன் மட்டுமின்றி, இந்தியக் கூட்டாட்சியில் மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்து தீவிரமான விவாதங்களும் இந்தச் சட்டமன்றத்தில் தொடர்ந்து நடந்துவருகின்றன.
  • பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையையும் அதன் மரபுகளையும் இந்திய நாடாளுமன்றத்தைப் போலவே மாநிலச் சட்டமன்றங்களும் பின்பற்றுகின்றன. அனுமதிக்கப்பட்ட வகையினங்களில் சட்டமியற்றுவது மட்டுமின்றிப் பொது நிதி மேலாண்மையும் சட்டமன்றத்தாலேயே முடிவுசெய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அரசின் வரவு - செலவுத் திட்டங்கள் சட்டமன்றத்தின் முன்னால் விவாதிக்கப்பட்டு, துறைவாரியாக ஒவ்வொரு செலவினமும் பெரும்பான்மையுடன் தீர்மானிக்கப்படுகிறது.
  • கூட்டாட்சியையும் மக்களாட்சியையும் வலுப்படுத்தும் இந்தச் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு தனது முன்னோடித் தடங்களைப் பதித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் பங்கேற்போடு தொடங்கிய சென்னை மாகாணச் சட்டமன்ற அனுபவங்கள், தமிழ்நாட்டுக்கு அரசியல் துறையில் இன்றும் வழிகாட்டுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தில் ஏற்கெனவே தமிழ்நாடு பெற்றிருந்த வரலாற்றுச் சிறப்புகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திலும் முத்திரை பதிக்க உதவி, பின்பு சட்டமன்றச் சாதனைகளுக்கும் வித்திட்டன.
  • சுதந்திர இந்தியாவிலும் மாநிலத்தின் பெயர்மாற்றத் தீர்மானம், மாநில சுயாட்சிக்கான தீர்மானம் என்று குறிப்பிடத்தக்க விவாதங்களைத் தமிழ்நாடு சட்டமன்றம் நடத்தி, நாட்டின் கவனத்தைத் தன் மீது ஈர்த்துள்ளது.
  • கிழக்கிந்திய கம்பெனியின் அடித்தளமாக 1640-ல் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நினைவுச்சின்னம் மட்டுமல்ல... அங்கு அமைந்திருக்கும் சட்டமன்றக் கட்டிடத்தின் காரணமாக இந்தியாவின் ஜனநாயக வரலாற்றைச் சொல்லும் சின்னமாகவும் விளங்கிவருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் ஒரு படைத்தளமாக வெற்றி தோல்விகளைச் சந்தித்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தை வெற்றிகளுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
  • பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட பேதங்களால், ஒடுக்கப்பட்ட பிரிவினரும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை இந்த அவையில் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தேசிய உணர்வின் தோற்றுவாயான தமிழ்நாடு, மாநில உரிமைகளுக்கும் அதே முக்கியத்துவத்தைக் கொடுத்துவருகிறது. மாநில நலன்கள் குறித்த விஷயங்களில் அனைத்துக் கட்சிகளும் கருத்தொன்றி தங்களது நிலைப்பாட்டைச் சட்டமன்றத் தீர்மானங்களாக்கி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கின்றன.
  • சட்டமன்றப் பணிகள் மாநில அரசின் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவதோடு, சீரிய விவாதங்களின் வழியே மத்திய - மாநில அரசுகளின் உறவையும் வலுப்படுத்திவருகின்றன. கூட்டாட்சி அமைப்பில் நாடாளுமன்றம்போலவே மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சமபங்கு இருக்கிறது. முன்னோடியாக விளங்கிவரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!

நன்றி: தி இந்து (02 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்