TNPSC Thervupettagam

இந்தியத் தடுப்பூசிகள்: ஒரு மீள் பார்வை

January 4 , 2022 943 days 516 0
  • கரோனா வைரஸ் ஒமைக்ரான் வேடமிட்டு மூன்றாம் ஆண்டில் தடம்பதிக்கிறது. உலகளவில் இதை எதிர்கொள்ளத் தடுப்பூசிதான் ஒரே வழி என்று ஆரம்பம் முதலே பேசப்பட்டது.
  • கரோனாவுக்கு எதிராக பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி முதன்முதலில் 2020 டிசம்பர் 8-ல் பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது.
  • இதுவரை 10 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றாளருக்கு உயிரிழப்பைத் தவிர்ப்பதில் தடுப்பூசியின் பங்கு மகத்தானது.
  • இந்தியாவில் இலவச கரோனா தடுப்பூசித் திட்டம் 2021 ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது.
  • கோவிஷீல்டு, கோவேக்சின் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டது.
  • மார்ச்-1 தொடங்கி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோயுள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது. மே-1 தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
  • மே-14ல் ஸ்புட்னிக்-வி இணைந்துகொண்டது. இவற்றில் கோவிஷீல்டு 88.89%, கோவேக்சின் 10.79% பயன்படுத்தப்பட்டது. ஸ்புட்னிக்-வி 1%-க்கும் குறைவு.
  • நவம்பர் 3-ம் தேதி ‘வீடு தேடித் தடுப்பூசி'த் திட்டம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கு எதிரான பரப்புரைகளால் பொதுச் சமூகத்துக்கு ஏற்பட்ட தயக்கத்தாலும், நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உண்டானதாலும் இத்திட்டம் ஆரம்பத்தில் சுணக்கம் கண்டது.
  • பின்னர், வேகமெடுத்தது. இதுவரை 145 கோடித் தவணைகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன. முழுமையாகச் செலுத்திக்கொண்டவர்கள் 64.2% பேர். 3 மாநிலங்களில் 100% இரண்டு தவணைகளும் போடப்பட்டுள்ளன.
  • இதன் மூலம், இந்திய மருத்துவத் துறையில், குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசித் திட்டம் என்றிருந்த வரலாறு மாறிப்போனது. இதுவரை செய்யாத சாதனையாக ஒன்றிய அரசு இத்திட்டத்தை முன்வைத்தது.
  • ஆனாலும், 2021 டிசம்பருக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. எனவே, இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி

  • இத்திட்டத்தின் தொடக்கத்தில் மூன்று வகைத் தடுப்பூசிகளுக்குமே இரண்டு தவணைகள் போதும் என்றது அரசு.
  • ஆனால், களநிலவரத்தில், இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்களுக்குத் தடுப்பாற்றல் 6-9 மாதங்களே தாக்குப்பிடிப்பதாலும், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வேற்றுருவங்கள் இந்தத் தடுப்பூசிகளையும் தாண்டி மறுதொற்றை ஏற்படுத்துவதாலும், மூன்றாம் தவணையும் தேவை என்ற எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்தது.
  • அதைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மூன்றாம் தவணையைச் செலுத்தத் தொடங்கின.
  • இஸ்ரேல் நான்காவது தவணையைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் ‘முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி’ எனும் பெயரில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி, மூன்றாவது தவணையைச் செலுத்த உள்ளனர்.
  • ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கும் இணைநோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் தவணைக்கு, முதல் இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகளுக்குப் பதிலாக மாற்றுத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது மிகுந்த பாதுகாப்பைத் தருவதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
  • இந்தியாவில் மூன்றாம் தவணை தொடர்பான ஆராய்ச்சி வேலூரில் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்த ஆய்வின் முடிவு வெளிவந்ததும் இந்தியாவில் எதை முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியாகச் செலுத்திக்கொள்வது என்பது தெளிவாகிவிடும். அண்மையில், கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் ஆகிய புரத வகைத் தடுப்பூசிகளும் அரசின் அனுமதி பெற்றுள்ளன.
  • எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி, ஸ்புட்னிக் லைட், ஜைக்கோவ்-டி, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தும் இன்னும் செயலுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டின் நிலவரம்

  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசித் திட்டம் வெற்றியடைய பல அடுக்கு நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. அவற்றில் மெகா தடுப்பூசி முகாம்கள் முக்கியமானவை.
  • சென்ற வாரம் வரை 17 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும், சிம்லா மற்றும் இமாசலப் பிரதேசத்தைப் போல 100% இலக்கை உடனடியாக அதனால் எட்ட முடியவில்லை.
  • புள்ளிவிவரப்படி பார்த்தால், தடுப்பூசிக்குத் தகுதியான 5.78 கோடிப் பேரில் 86% பேர் முதல் தவணைத் தடுப்பூசியையும் 59% பேர் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 
  •  80 லட்சம் பேர் முதல் தவணையையும், 96 லட்சம் பேர் இரண்டாம் தவணையையும் இன்னமும் செலுத்திக்கொள்ளவில்லை. இவர்களில் மூத்த குடிமக்கள்தான் அதிகம்.
  • அரசின் கணக்குப்படி, தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய மூத்த குடிமக்களில் இதுவரை 61% பேர் ஒரு தவணை மட்டும் செலுத்திக்கொண்டுள்ளனர். 44% பேர் இரண்டு தவணைகளைச் செலுத்திக்கொண்டு முழுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர்.

தயக்கம் வேண்டாம்!

  • இந்தச் சூழலில், ஒன்றிய அரசு இணைநோயுள்ள மூத்த குடிமக்களுக்கு மூன்றாம் தவணையாக முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.
  • இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஒமைக்ரான் தீவிரமாகப் பரவும் என்பதால், அதன் தாக்குதலுக்கு உள்ளாகிற அதிக வாய்ப்பு மூத்த குடிமக்களுக்கே இருக்கிறது. இவர்கள்தான் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசிக்கு முன்நிற்க வேண்டும்.
  • இவர்களோ இணைநோய்களின் அச்சம் காரணமாகத் தடுப்பூசிக்குத் தயங்குகின்றனர். இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால்தான் நாட்பட்ட பாதுகாப்பு உறுதிப்படும் என்பதையும், தடுப்பூசியால்தான் கரோனா மரணங்களை உலகளவில் குறைக்க முடிந்தது என்பதையும் உணர்ந்து, இவர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைக் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • இணைநோயுள்ளவர்களும் மூன்றாம் தவணையைச் செலுத்திக்கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைப் பிள்ளைகள் உறுதிப்படுத்த வேண்டும்.
  • இந்த வாரத்திலிருந்து 15 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இது, இந்தியக் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், குழந்தைகள் பயன்பாட்டுக்கு அரசின் அனுமதி பெற்றுள்ளது.
  • ஆகவே, பெற்றோர் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியை வடிவமைத்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசித் துறைப் பெண் பேராசிரியை சாரா கில்பர்ட் கூறியுள்ளதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
  • “கரோனா இன்னும் ஓய்ந்துவிடவில்லை. இந்தப் பெருந்தொற்றின் மூலம் நமக்குக் கிடைத்துள்ள தடுப்பூசி அறிவைத் தொலைத்துவிடக் கூடாது. தடுப்பூசித் தவணைகள் விஷயத்திலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அலட்சியம் ஆகாது.
  • மீறினால், அடுத்த பெருந்தொற்று இதைவிட மோசமானதாகக்கூட இருக்கும்”. டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தமிழ்நாட்டில் மூன்றாம் அலையைத் தொடங்கிவிட்டது என்ற எச்சரிக்கை வந்திருக்கும் இன்றைய சூழலில் எல்லோருக்குமான அறிவுறுத்தல் இது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்