TNPSC Thervupettagam

இந்தியத் தடுப்பூசியும் சீனாவின் கோபமும்

January 28 , 2021 1451 days 617 0
  • நேபாளத்தில் 1768-இல் மன்னர் பிரித்வி நாராயண் ஷா தொடங்கி வைத்த மன்னராட்சி முறை ஏறத்தாழ 240 ஆண்டுகள் நீடித்து, கடந்த 2008-ஆம் ஆண்டு மே 28-இல் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் நேபாளம் ஒரு கூட்டாட்சி ஜனநாயக குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
  • பதிமூன்று ஆண்டு கால இடைவெளியில், தற்போது நேபாளத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி கடந்த 15-ஆம் தேதி இந்தியாவில் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
  • ஏனெனில், நேபாளத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆளும் அரசுக்கு எதிராகவும், மன்னராட்சி முறைக்கு ஆதரவாகவும் மக்களின் மனநிலை காணப்படுகிறது. நேபாளத்தை ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு நிலைகுலைந்துவிட்டது.
  • கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையை நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி கலைத்ததன் வாயிலாக இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. 
  • கே.பி. சர்மா ஓலியின் தன்னிச்சையான இந்த முடிவு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
  • மேலும், அந்நாட்டின் உச்சநீதிமன்றத்திலும் கே.பி. சர்மா ஓலி மீது "ரிட்' வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நிலுவையில் இருப்பதால், "காபந்து அரசு' என்ற தகுதியைக்கூட தார்மிக அடிப்படையில் சர்மா ஓலி அரசு இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
  • பரபரப்பான இந்த அரசியல் சூழலில்தான் இந்திய- நேபாள உயர் அதிகாரிகளின் 6-ஆவது கூட்டுக்குழு கூட்டம் தில்லியில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலியும் சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
  • ஏற்கெனவே உத்தரகண்ட் மாநிலத்தின் காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளைத் தனது நாட்டுடன் இணைத்து நேபாளம் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. 
  • இந்த சந்திப்பின்போது, நேபாளத்தின் மோதிஹரி- அம்லேகஞ்ச் இடையிலான பெட்ரோலிய குழாய் திட்டத்தை சித்வான் வரை நீட்டிப்பது குறித்தும், நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சிலிகுரி- ஜாபா வரை புதிய குழாய் திட்டத்தை அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. 
  • மேலும் இந்தியா- நேபாளம் இடையே ஜனக்பூர் வழியாக ஜெய்நகர்- குர்தா வரையிலான மேம்படுத்தப்பட்ட முதல் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், எல்லையோர பகுதிகளை ஒருங்கிணைக்கும் ரக்ஷாவல்- காத்மாண்டு அகல ரயில் பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.
  • நேபாளத்தில் பிர்குஞ்ச், பிரத் நகரில் அண்மையில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் இரு நாடுகளிடையேயான தடையற்ற வணிகத்துக்கும், போக்குவரத்துக்கும் அடித்தளமிடுகின்றன.
  • இதுதவிர, நேபாள்கஞ்ச் பகுதியில் மற்றோர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பைராஹ்வா பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சோதனைச்சாவடி திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது.
  • இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் விளைவாக, நேபாளத்தில் அமையவுள்ள பஞ்சேஸ்வர் பன்னோக்குத் திட்டம் உள்ளிட்ட நீர்மின் திட்டங்களுக்கு சாதகமான சூழல் உருவாகியிருக்கிறது.
  • அண்டை நாடான சீனா, நேபாளத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு இடையூறு ஏற்படுத்திவரும் இன்றைய சூழலில், நேபாளத்தின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் காத்மாண்டு பசுபதிநாத் ஆற்றங்கரை வளர்ச்சித் திட்டம், பண்டர்கல் தோட்டம் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதை சீனாவால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
  • இதுதவிர, "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், நேபாளத்துக்கு கரோனா சிகிச்சைக்கான பத்து லட்சம் "கோவிஷீல்டு' தடுப்பூசிகளை  இந்தியா அனுப்பியது, சீனாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
  • இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசி மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா, நோயாளிகளின் உரிமையைக் காக்கும் அமைப்பிடம் இருந்து தடுப்பூசிகளுக்கு முறையான ஒப்புதல் பெறவில்லை என்றும், அவசர கதியில் இந்தியாவின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டி வருகிறது.
  • ஏனெனில், இந்தியா நீங்கலாக பிற "சார்க்' நாடுகளுடன் கடந்த ஆண்டு பேச்சு நடத்திய சீனா, கரோனா தொற்றுப் பரவலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அந்நாடுகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதோடு, பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றைத் தருவதாகவும் உறுதியளித்திருந்தது. இதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது.
  • தெற்காசிய நாடுகளுடன் சீனா தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும் "சார்க்' அமைப்பில் சீனா வெறும் பார்வையாளராகத்தான் நீடிக்கிறதே தவிர, அந்த அமைப்பில் உறுப்பினராக இயலவில்லை.
  • இதற்காக சீனா மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காததால், கரோனா தொற்றுப் பரவலை பயன்படுத்திக் கொண்டு சார்க் அமைப்பில் கால் பதிக்கலாம் என்று சீனா கணக்குப் போடுகிறது. 
  • இந்தச் சூழலில் நேபாளத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் சார்க் உயர்நிலைக் குழு கூட்டம், அரசியல் நோக்கர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தினமணி  (28-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்