- 1949இல் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட திராவிடமுன்னேற்றக் கழகம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற ஒன்றிய அரசின் மோசமான முன்னெடுப்புக்கு இடையே தன்னுடைய 75ஆவது ஆண்டை எட்டிப் பிடிக்கிறது. இந்தக் கட்சி சந்தித்த பல்வேறு சவால்களை வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்கிற ஆபத்தை விளை விக்கும் முன்னெடுப்பையும் அரசியல் சட்ட சாதுரியத்துடன் இக்கட்சி முறியடித்துவிடும் என்றே தோன்றுகிறது. திமுக-வின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஜனநாயகப் புரட்சிக்கு அடிப்படை
- 1947இல் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்த போது, அந்த நாளை தந்தை பெரியார் ‘துக்க நாள்’ என்று வர்ணித்தார். ஆனால், அறிஞர் அண்ணாவோ அதனை ‘இன்ப நாள்’ என்று வர்ணித்தார். தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கும் மேலதிகாரம் ஒன்று குறைந்தால் அது நல்லதுதானே என்று அண்ணா நினைத்தார்.
- இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் ஒன்றிய அரச அதிகாரக் குவிப்பு நியாயப்படுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாகியிருந்த சூழலில், பிரிவினைக்கு எதிரான கோரிக்கையாக முன்வைத்து ஒன்றியத்தை மிகப் பலமானதாகவும் மாநிலங்களைப் பலமற்றதாகவும் மாற்ற ஒரு முயற்சி நடந்தது.
- இந்தச் சூழலில்தான் 1949 இல், மாநில அதிகாரங்களை முன்னிறுத்தக் கோரிய ஓர் அரசியல் கட்சியாக திமுக-வை அண்ணா தொடங்கினார். இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கிய வித்தியாசம் என்னவென்றால், சமூக மாற்றத்தை விரும்பிய நீதிக் கட்சியின் தொடக்க காலத் தலைவர்கள் அனைவரும் செல்வாக்கான பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
- ஆனால், அண்ணாவின் கட்சியில் இணைந்த அனைத்து இளைஞர்களும் சாமானியர்கள். பொருளாதார வல்லமையோ அரசியல் செல்வாக்கோ இல்லாதவர்கள். இதுவே பின்னால் ஏற்பட்ட பெரிய ஜனநாயகப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்குத் தமிழ்ச் சமுதாயத்தைத் தயார்செய்த இயக்கம்தான் திமுக.
- உதாரணமாக, இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடந்தபோது, ஜனநாயகக் கூறுகளின் மிக முக்கிய வெளிப்பாடாக திமுக-வின்கொள்கைகளை விளக்கக்கூடிய திரைப்படமாகக்கலைஞர் மு.கருணாநிதி எழுதிய ‘பராசக்தி’வெளியானது. ‘பராசக்தி’ எவ்வாறு திமுகவுக்கும் திராவிடர் கழகத்துக்கும் (தி.க.) உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றது என்பதைப் புகழ்பெற்ற ‘எகனாமிக் அன் பொலிடிகல் வீக்லி’யில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விளக்கியிருக்கிறார். உதாரணமாக, திக ஒரு நாத்திக இயக்கம்.
- ஆனால், திமுக ஆதரவாளராக இருக்க நாத்திகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. மதவாதத்தை எதிர்த்தால் போதும். 1952இல் வெளியான இத்திரைப்படம், திக-வின் தீவிரமான நிலைகளுக்கும் திமுக-வின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைகளுக்கும் இடையே நெகிழ்வான அரசியல் பார்வைகளை முன்வைத்து இயக்கத்தை வளர்த்தது.
அரசியல் கேடயங்கள்
- 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஒன்றிய அரசியலை முன்னெடுத்த அன்றைய காங்கிரஸ் கட்சி, சென்னை மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். பின்னர், நேருவும் ராஜாஜியும் இணைந்து காமன்வீல் கட்சியையும் ராமசாமிப் படையாட்சியின் உழைப்பாளர் கட்சியையும் கூட்டணியில் இணைத்து ஆட்சி அமைத்தார்கள் என்பதே வரலாற்று உண்மை. எதிர்க் கூட்டணியில் இருந்த இந்த இரண்டு கட்சிகளும் எடுத்த சந்தர்ப்பவாத முடிவு, ஒருவிதத்தில் ராஜாஜியின் எதிர்கால அரசியலை வெளிப்படுத்தியது. 1952இல் முதலமைச்சரான ராஜாஜி, இரண்டே ஆண்டுகளில் அந்த இடத்தைக் காமராஜரிடம் கொடுத்துவிட்டுப் பதவி விலக வேண்டிய நிலை உருவானது.
- 1957இல் நடைபெற்ற தேர்தலில், முதல் முறையாக திமுக நேரடியாகத் தேர்தலில் போட்டியிட்டது. இதில் 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. தொடர்ந்து 1962இல் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய பலத்தை 50ஆக அக்கட்சி உயர்த்திக்கொண்டது. ஆட்சியைப் பிடிக்கக்கூடிய வல்லமை இக்கட்சிக்கு வந்துவிடும் என்கிற பயம் ஒன்றிய அரசிடம் தோன்றியது. இதன் காரணமாகவே சீனப் போரை முன்வைத்துச் சில அரசியல் சட்டத்திருத்தங்களைச் செய்தது.
- அந்த அரசியல் சட்டத்திருத்தங்களின்படி, தனிநாடு கோரிக்கையைக் கைவிடாவிட்டால் திமுக தடைசெய்யப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. அந்த வேளையில்தான் திமுக தலைவர்கள், ‘எங்கள் போராட்டங்களில் வாளும் உண்டு, கேடயங்களும் உண்டு.
- கேடயங்களைப் பயன்படுத்துவது கோழைத்தனமல்ல. தற்காப்பு மிக முக்கியமான அரசியல் கருவியாகும். திமுக என்கிற அரசியல் கட்சி இருந்தால்தான் அதன் அரசியல் கனவுகளை நிறைவேற்ற முடியும். திமுகவைக் காப்பாற்ற வாளைவிட கேடயம் சிறந்தது என்றால், அதைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுதல் என்பதைக் கேடயத்தைப் பயன்படுத்துவதைப் போன்றதென்றே நாம் புரிந்துகொள்ளலாம்’ என்றனர்.
திமுகவின் கொள்கைப் பிடிப்பு
- 1967இல் காங்கிரஸைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது திமுக. அதற்காக அது கையாண்ட அரசியல் உத்தி என்னவென்றால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்ததுதான். 1967இல் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த அரசியல் பார்வைதான் இன்று இந்தியாவின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ‘இண்டியா’ கூட்டணிக்கு வித்தாகும்.
- ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகாரக் குவிப்புக்கு எதிராகப் பல்வேறு முன்னெடுப்புகளைத் திமுக செய்தது.அதில் மிக முக்கியமான முயற்சி, நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் பற்றி ஆராய்வதற்கான குழு. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு ஏற்படும்போதெல்லாம் அதற்கு எதிரான கேடயமாக இன்றுவரையில் செயல்படுவது ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்தான்.
- ஒன்றிய அரசுடன் இணைந்து சென்றிருந்தால் திமுக தன்னுடைய ஆட்சிக் காலத்தை அதிகரித்திருந்திருக்க முடியும். உதாரணமாக, நெருக்கடிநிலை காலகட்டத்தின் ஆட்சியை நியாயப்படுத்தியிருந்தால், 1976இல் திமுக-வின் ஆட்சி நீக்கப்பட்டிருக்காது. அதேபோல், 1990இல்விபி சிங்-உடன் இணைந்த ‘சமூக நீதியை நிலைநிறுத்தும் மண்டல் குழு’வின் பரிந்துரைகளை அமல்படுத்தும் பணிகளை முன்னெடுக்காமல் இருந்திருந்தால், 1991இல் அதனுடைய ஆட்சியை இழந்திருக்காது.
- ஆட்சியை இழந்ததன் மூலம் கட்சியையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் காப்பாற்றி ஜனநாயக மாண்புகள் என்ன என்பதைத் தனக்கு எதிரே உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிட்டுத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உணர்த்தியது திமுக.
- ஒன்றிய அரசு மாநிலக் கட்சிகளை அச்சுறுத்திய காலத்தில், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’என்ற கட்சி ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்தது. ஆனால், திமுகவினரிடம் இயல்பாகவே உருவாகியிருந்த போராட்டக் குணம், இப்படியான எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறனை அக்கட்சியினருக்கு வழங்கியிருந்தது. இன்றைய அரசியல் களத்திலும் அது தொடர்கிறது.
- செப்டம்பர் 18: திமுக 75ஆம் ஆண்டு தொடக்கம்
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2023)