TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்?

October 1 , 2020 1571 days 702 0
  • இந்தியாவின் வளர்ச்சி 2020-21-ல் (-) 23.9%-ஆக இருக்கிறது. இது உலக அளவில் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 2020-ல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பலதரப்பட்ட நிறுவனங்களும் தரமதிப்பீட்டு முகமைகளும் உலகளாவிய வளர்ச்சி சாத்தியப்பாடுகளைக் கணித்திருக்கின்றன.
  • 2020-21-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி (-)5.8%லிருந்து (இந்தக் கணிப்பு ரிசர்வ் வங்கியுடையது) (-) 14.8% வரை (கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு) இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்புசெப்டம்பர் 2020-ல் முன்வைத்த தனது இடைக்காலப் பொருளாதாரக் கணிப்பானது நிதியாண்டு 2021-க்கு இந்தியாவில் பொருளாதாரச் சுருக்கம் (-)10.2%-ஆக இருக்கும் என்று கூறுகிறது.
  • வருடாந்திரக் கணிப்புகளும் 2020-21ல் பொருளாதாரச் சுருங்கலையே சுட்டுகின்றன. புள்ளியியல் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் ஆகஸ்ட் 2020-ன் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 6.7%-ஆக இருந்தது என்று சுட்டிக்காட்டுகின்றன.
  • நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான சராசரி பணவீக்கம் 2020-21 ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 6.6%-ஆகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதியை அமைப்புக்குள் செலுத்துவதையும் பணவீக்கத்தின் போக்குகளையும் வைத்துப் பார்க்கும்போது, நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஒட்டுமொத்த ஆண்டுக்கும் 7%-ஐத் தொடலாம்.
  • பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்புமுன்வைத்த உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்பான (-)10.2%-ஐயும் பணவாட்டம் அடிப்படையிலான பணவீக்கமான 5%-ஐயும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2020-21 ஆண்டுக்கான ஜிடிபியின் சுருங்குதல் (-)5.0% ஆக இருக்கிறது.

நம்பிக்கை என்னவாகும்?

  • மருத்துவம், நிவாரணம், புத்துயிர் தருதல் போன்றவற்றுக்காக நிறைய செலவிடப்படுகிறது. ஆகவே, விவசாயமும் அது தொடர்பான துறைகளும், அரசுத் துறை, பாதுகாப்புத் துறை போன்ற துறைகளும் வழக்கமாகவோ வழக்கத்தைவிட சிறப்பாகவோ இயங்கக்கூடும் என்று நினைத்ததால், நம்மில் சிலர் பொருளாதாரமானது மோசமாகாமல் இருக்கலாம் என்று எண்ணியது உண்மையே.
  • சிறிய அளவிலான, நேர்மறை வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் நாம் எதிர்பார்த்தோம். சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2020-21-ன் முதல் காலாண்டுக்கான தேசிய அளவிலான வருமானம் தொடர்பான தரவுகள் அது போன்ற எந்த நம்பிக்கையையும் தரவில்லை.
  • முதல் காலாண்டுக்கான தரவில் மிகவும் ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், ‘பொதுத் துறை, பாதுகாப்பு, பிற துறைகள்’ (-)10.3% அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கின்றன என்பதுதான்.
  • எந்த விதமான நிதி ஊக்குவிப்பும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. மாநிலங்களின் மூலதனச் செலவினம் 43.5% வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று தனிப்பட்ட அமைப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
  • செலவு அதிகரிப்பதைவிட வருமானம் குறைந்ததால்தான் நிதிப் பற்றாக்குறை மேலும் மோசமாகியிருக்கிறது.

வருமான அரிப்பு

  • மீதியுள்ள நிதியாண்டில் உண்மையான, வழக்கமான வளர்ச்சியில் ஏற்படும் சுருங்குதலை எப்படிக் குறைக்கப்போகிறோம் என்பது சவால்தான்.
  • வழக்கமான ஜிடிபி வளர்ச்சி மிகவும் சுருங்கிப்போயிருப்பது மத்திய, மாநில வரி வருமானங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • 2020-21 முதல் காலாண்டில் மத்திய அரசின் வரி வருமானங்கள் (-)32.6%-ஆக சுருங்கின. சிஏஜி தரும் தரவுகள் படி 19 மாநிலங்களின் வரி வருமானங்கள் (-)45% சுருங்கிப்போயிருக்கின்றன.
  • முதல் காலாண்டில் மத்திய, மாநில அரசுகளின் வரி வருமானங்களைச் சேர்த்துப் பார்த்தால், 1.65% அளவுக்கு எதிர்மறைப் பொருளாதாரச் செயல்பாடுகள் காணப்படுவதை இது உணர்த்துகிறது. பொது முடக்கம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளை வைத்துப் பார்க்கும்போது, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட வரியல்லாத வருமானங்கள்கூட கிடைப்பதற்கு வழியில்லை என்றே தெரிகிறது.
  • நாட்டின் வழக்கமான வருமானம் 10% என்ற அளவில் வளர்ச்சியடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பட்ஜெட்டின் வருமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • வழக்கமான வளர்ச்சியில் சுருங்குதல் ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளதால் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதுடன் ஒப்பிடும்போது மத்திய அரசின் வரி வருமானத்தில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிகிறது. சில மதிப்பீடுகளின் படி ரூ. 5 லட்சம் கோடிக்கும் மேலே பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை

  • பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட செலவினங்களின் அளவைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஊக்குவிப்பு கொடுக்கவும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது ஜிடிபியில் 8.8% அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையைச் சேர்த்தால் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 13.8% ஆக இருக்கும்.
  • 2020-21-ல் வழக்கமான ஜிடிபி சுருங்கும் என்றால், ஜிடிபியின் விகிதமாக நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். 2021-ன் முதல் காலாண்டில் ஜிடிபியின் விகிதத்தோடு ஒப்பிடும்போது நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 17.4% ஆகும்.
  • எந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்? பன்னாட்டுச் செலாவணி நிதியம் வெளியிட்ட ஜூன் 2020-க்கான உலகப் பொருளாதாரக் கணிப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 12.1% ஆக இருக்கும் என்று கூறுகிறது.
  • அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர, எல்லா நாடுகளும் இதைவிடக் குறைவான பற்றாக்குறையைக் கொண்டிருக்கின்றன. டாலரைக் கையிருப்பாகக் கொண்டிருப்பது அதற்கேயுரிய அனுகூலங்களைக் கொண்டிருப்பதுடன் இது அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கிறது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை ஜிடிபியில் கிட்டத்தட்ட 14% வரையிலான பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு நம்மிடம் போதுமான வழிவகை இல்லை.
  • இதற்கெல்லாம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவு நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவைப்படுகிறது. அரசின் கடனுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விகிதத்தில் ரிசர்வ் வங்கியே நேரடியாகப் பொறுப்பேற்கலாம்.
  • இது 1990-களில் நிகழ்ந்திருக்கிறது. மறைமுகமான கடன் வாங்குதலை ரிசர்வ் வங்கி ஆதரித்தாலும் அதை மிகவும் வெளிப்படையாகச் செய்யக் கூடாது. வட்டி விகிதம் குறித்து சந்தையானது இன்னமும் சமிக்ஞைகள் அனுப்பிக்கொண்டிருப்பதால் ரிசர்வ் வங்கியின் மறைமுக உதவியே விரும்பத்தக்கது.
  • இரண்டு வழிகளிலுமே ரிசர்வ் வங்கியானது நிதி செலுத்துநராக உள்ளது. மறைமுக வழிமுறை என்பது புதிதல்ல. எந்த அளவுக்குப் பணமூட்டுதல் நடைபெறும் என்பதுதான் கேள்வி. அதிகப் பணவீக்கத்துக்கு எதிராக நாடு தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
  • அரசின் கஜானா பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. செலவிடுதலை அரசு தீவிரப்படுத்த வேண்டிய அளவுக்குப் பொருளாதாரச் சூழ்நிலை எழுந்திருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும். இதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகள் செலவுசெய்யத் தயங்குவதுபோல் தோன்றுகிறது. இது சரியான அணுகுமுறையல்ல. அதே நேரத்தில், கடன் மதிப்புக்கு ஈடாக ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஒரு வரம்பு இருக்கிறது.
  • நடப்பாண்டில் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 14%-ஆக கட்டுக்குள் வைத்துக்கொண்டே, செலவுக்கு நிதியையும் திரட்டுவதே சரியான வழிமுறையாக இருக்கும். இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட வேண்டும். இயல்பு நிலைக்குத் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும்.

நன்றி: தி இந்து (01-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்