TNPSC Thervupettagam

இந்தியா: 2024-ல் கவனம் ஈர்த்தவர்கள்

December 31 , 2024 10 days 49 0

இந்தியா: 2024-ல் கவனம் ஈர்த்தவர்கள்

மோடி 3.0:

  • மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டார். மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உள்ளிட்ட எதிர்மறை நிகழ்வுகளுக்கு இடையே முக்கியமான மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்தி வெற்றி ஈட்டினார்.
  • நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு எனக் கூட்டணித் தலைவர்களைச் சரியான முறையில் கவனித்தபடி காய்நகர்த்துகிறார். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உடனான உறவை மேம்படுத்த முயல்கிறார். நண்பர் டிரம்ப் மீண்டும் அதிபராகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், குடியேற்றம், இறக்குமதி எனப் பல விஷயங்களில் இந்தியாவுக்குக் கசப்பு மருந்தை சகா அளிப்பதில் சற்றே சங்கடமும் உண்டு.

ஏற்றமும் இறக்கமும்:

  • 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவரே இல்லை என்கிற குறையை, மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸை வெற்றிபெற வைத்ததன் மூலம் நிவர்த்திசெய்திருக்கிறார் ராகுல் காந்தி. ‘பாரத் ஜோடோ’ நீதி யாத்திரை அவரது செல்வாக்கைக் கணிசமாக உயர்த்தியிருப்பதை வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் கிடைத்த வெற்றி உணர்த்தியது.
  • பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்றத்தை அதிரவைப்பதிலும் கவனம் ஈர்க்கிறார். ஆனால், சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து கிடைக்கும் பின்னடைவால் இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பைக் காங்கிரஸ் இழக்கும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

நிறைவேறிய சபதம்:

  • இரண்டு முறை மகாராஷ்டிர முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸ், 2022இல் நடந்த அரசியல் சதுரங்கத்தில் உத்தவ் தாக்கரே அரசை வீழ்த்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக - கட்சித் தலைமையின் ஆணைக்கேற்ப - இசைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 132 இடங்களில் இமாலய வெற்றிபெற உழைத்தார். ஆர்எஸ்எஸ்ஸுடனான பிணக்கைத் தீர்த்து வகுத்த இவரது வியூகம் எடுபட்டது. மீண்டும் முதல்வராகிவிட்டார்.

நிம்மதியிழந்த நிதீஷ்:

  • பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணியைக் கட்டி எழுப்பிய முக்கியத் தலைவரான நிதீஷ், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்படாத அதிருப்தியில் மீண்டும் பாஜக பக்கமே சாய்ந்தார். மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்று, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரியணை ஏற வழிவகுத்தது. ஆனால், பாஜகவுடனான நட்பு முரண் இன்றுவரை தொடர்கிறது. 2025 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் நடுவில் புகைச்சல் தொடங்கியிருக்கிறது.

பேசுபொருளான நீதிபதி:

  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கி பரபரப்பான பேசுபொருளாக இருந்தார். 2024இல், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடியது செல்லும்’, ‘தேர்தல் பத்திரம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்பன உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கினார். விசாரணை அமைப்புகள் வரம்புமீறிச் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
  • ஆனாலும், ஞானவாபி மசூதியில் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய உத்தரவிட்டது, அதேபோல் பல மசூதிகள் தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் வழக்குத் தொடர அவர் வழிவகுத்ததாக விமர்சிக்கப்பட்டது. பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்காக ராமரைப் பிரார்த்தித்ததாகக் கூறியதும், அவரது வீட்டின் விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டதும் சர்ச்சையானது!

அடங்காத அதானி சர்ச்சை:

  • அதானி குழுமம் குறித்து 2023இல் ஹிண்டன்பெர்க் நிறுவனம் கிளப்பிய சர்ச்சை சற்றே ஓய்ந்த நிலையில், 2024 நவம்பரில் புது பிரச்சினை முளைத்தது. இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் சில ஒப்பந்தங்களைக் கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்க, சர்வதேச முதலீட்டாளர்களிடம் அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டைப் பெற்றபோது லஞ்ச விவகாரத்தை மறைத்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டியது. அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு அரசு துணைபோவதாகத் தேர்தல் பிரச்சாரங்களிலும் நாடாளுமன்றத்திலும் முழங்கினார் ராகுல் காந்தி. தமிழகம் வரை அதானி சர்ச்சையின் அலை வீசியது!

வென்று காட்டிய வினேஷ்:

  • இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துப் போராடிய வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகட், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை வித்தியாசம் காரணமாகப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கி ஜுலானா தொகுதியைக் கைப்பற்றினார்.

பதக்கமும் சங்கடமும்:

  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆனார், துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாகர். எனினும், கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது தொடர்பாக அவர் வெளிப்படுத்திய விசனமும், பின்னர் தந்த விளக்கமும் பேசுபொருளாகின. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றதும் தேசத்துக்குப் பெருமை சேர்த்தது.

வெகுண்டெழுந்த மருத்துவர்கள்:

  • கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மருத்துவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து மம்தா பானர்ஜி அரசை நிலைகுலைய வைத்தனர். நிபந்தனைகள் இதுவரை முழுமையாக ஏற்கப்படாத நிலையில், கொல்கத்தா மருத்துவர்கள் மீண்டும் போராட முனைந்திருக்கின்றனர்.

வரலாற்றுத் தருணம்:

  • ஐஆர்எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம். அனுசுயா தனது பாலினத்தை ஆண் என மாற்றியதையும், பெயரை அனுகதிர் சூர்யா என மாற்றியதையும் மத்திய நிதித் துறை அமைச்சகம் அங்கீகரித்தது இந்த ஆண்டின் மிக முக்கியமான தருணம். இந்தியக் குடிமைப் பணியில் இது முதல் முறை. ‘பாலின அடையாளம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவு’ என்று 2014இல் நால்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த வரலாற்றுத் தருணத்துக்கு வழிவகுத்தது!

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்