- இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மருத்துவத் துறையும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
- சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 30,813 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
- குறிப்பாக, குடும்ப நலத் துறை - குழந்தைகள் நல மையங்களின் சேவைகள் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. அடித்தட்டு மக்களின் உடல்நலம் காக்க இவை பெரிதும் உதவுகின்றன.
- 1947இல் இந்தியாவில் 19 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. இப்போது 612 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மத்திய அரசின் அண்மைக்காலப் புள்ளிவிவரப்படி, நாட்டில் 13 லட்சம் நவீன மருத்துவர்கள், 34 லட்சம் செவிலியர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்திருக்கின்றனர். 13 லட்சம் மருத்துவ உதவியாளர்கள் இருக்கின்றனர்.
- இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புக்கு 2014ஆம் ஆண்டு வரை 51,348 இடங்களே இருந்தன. இப்போது அது 92,927 இடங்களாகி இருக்கின்றன. அதுபோல், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 2014 வரை 31,185 இடங்களே இருந்தன. இப்போது அது 42,077 இடங்களாகி இருக்கின்றன.
மருத்துவ முன்னெடுப்புகள்
- உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிற நிலையில், இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இது இந்தியாவின் மருத்துவச் சாதனையாகப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், உலக நாடுகளில் கியூபாவிலும் ஸ்வீடனிலும் 1000 பேருக்கு 5 மருத்துவர்கள் இருக்கின்றனர்.
- இந்தியாவில் மருத்துவத் துறை வளர்ச்சி என்பது தொற்றுநோய்களை ஒழித்ததிலிருந்து தொடங்குகிறது. இந்தியா சுதந்திரம் பெறும்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள்தான். அது இப்போது 70 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. காரணம், அந்தக் காலத்தில் காலரா, மலேரியா, பிளேக் போன்ற கடுமையான மரணத் தொற்றுகளுக்குச் சிகிச்சை கிடைக்காமல் போனது.
- சுற்றுப்புறச் சுகாதாரம் படுமோசமாக இருந்தது. மக்களில் பெரும்பாலானோர் மருத்துவ விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். இப்போது அந்த நிலை மாறியுள்ளது. நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புகள் பெருகியுள்ளன. தொற்றுப் பாதிப்புகளும் குறைந்துள்ளன.
- உதாரணத்துக்கு, இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பலியாகிவந்தனர். உலக மலேரியா எண்ணிக்கையின்படி, 2018இல் இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 37,000 பேர்.
- இவர்களில் இறந்தவர்கள் 9,620 பேர் மட்டுமே. இதற்கு முழு முதற்காரணம், 1958இல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ‘தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ என்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.
- 20ஆம் நூற்றாண்டில் உலக அளவில் மனித இறப்புக்குக் காசநோய் பெரிதும் காரணமாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டில் ஆண்டுக்கு 2,22,000 பேர் காசநோயால் இறந்துவந்தனர். இதைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் ‘தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்’ (NTCP) 1962இல் தொடங்கப்பட்டது.
- இதன்படி, காசநோய்க்கெனச் சிறப்பு மருத்துவமனைகளும் சானடோரியங்களும் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டன. 2001இல் ஒரு லட்சம் பேரில் 288 பேருக்குக் காசநோய் பாதிப்பு இருந்தது. 2020இல் ஒரு லட்சம் பேரில் 188 பேருக்குக் காசநோய் என அதன் பாதிப்பு குறைந்தது. ஆனாலும், அதே ஆண்டில் கரோனா காரணமாகத் தொடர் சிகிச்சைக்கு வழியில்லாமல் போனது. இதனால், 20 லட்சம் புதிய நோயாளிகள் காணப்பட்டனர்.
- உலக அளவில் அந்த ஆண்டில் கனடாவில் மட்டுமே 1,600 புதிய காசநோயாளிகள். இப்போது இது ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்’ (RNTCP) என்றாகிவிட்டது. இது 2025இல் காசநோயை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் அரசு செயல்பட்டுவருகிறது. 1990-களில் உலக அளவில் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தனர்.
- 1995இல் தொடங்கப்பட்ட ‘இளம்பிள்ளைவாத ஒழிப்பு இயக்கம்’ ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நாடு முழுவதிலும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுத்து, இந்த நோய்க்கு முடிவு கட்டியது. 2014 இல் இளம்பிள்ளைவாதம் இல்லாத இந்தியாவானது. கடந்த 2 வருடங்களாக உலகமே கரோனாவுக்குப் பயந்துகொண்டிருந்தபோது, இந்தியா கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரண்டு தடுப்பூசிகள் மூலம் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
குறைந்த குழந்தைகள் இறப்பு
- ஒரு நாட்டின் மருத்துவ வளர்ச்சியைக் கணிக்கும் அளவீடுகள் குழந்தைகளின் இறப்பு விகிதமும் (Infant Mortality Rate - IMR) கர்ப்பிணிகளின் இறப்பு விகிதமும்தான் (Maternal Mortality Rate - MMR). 1950இல் இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் கிட்டத்தட்ட 200 பேர் வரை ஒரு வயதுக்குள் இறந்துகொண்டிருந்தனர்.
- 75 ஆண்டு காலச் சுதந்திரத்துக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 27 ஆகக் குறைந்துள்ளது. காரணம், தாய்ப்பால் விழிப்புணர்வும், தடுப்பூசிகளின் மகிமையும். இலங்கையில் இந்த எண்ணிக்கை 8 என்பது கவனிக்கத்தக்கது. அதுபோல், நாட்டில் பிரசவகால முன்கவனிப்பு மேம்பட்டுள்ளதாலும், வீட்டுப் பிரசவங்கள் குறைந்து மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது அதிகரித்துள்ளதாலும் கர்ப்பிணிகளின் இறப்புவிகிதமும் குறைந்துவருகிறது.
- 1940இல் ஒரு லட்சம் பிரசவங்கள் நிகழ்ந்தால் 2,000 கர்ப்பிணிகள் இறந்தநிலையில், 2015இல் அது 174 ஆகக் குறைந்தது. அதேநேரத்தில் தாய்லாந்து, சீனாவில் இந்த எண்ணிக்கை முறையே 20, 27 என இருக்கிறது. இந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா எட்ட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. பள்ளிகளில் செயல்படும் மதிய உணவுத் திட்டத்தின் பலனால் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மட்டுப்பட்டு வருகிறது.
மேம்பட்ட மருத்துவச் சுற்றுலா!
- இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மேல்நாடுகளுக்கு இணையான மருத்துவத் தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வருகின்றன. நோய்க்கணிப்பில் ‘செயற்கை நுண்ணறிவும்’ சிகிச்சையில் ‘ரோபாட்’டும், ‘நானோ தொழில்நுட்ப’மும் புகுந்துள்ளன. இதனால் சிகிச்சைகளின் தரம் முன்னேறிய நாடுகளுக்குச் சமமாக இருக்கிறது.
- குறிப்பாக, இதயநோய்களுக்கான சிகிச்சைகள், செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சைகள், உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் ஆகியவற்றைச் சொல்லலாம். இந்தியாவில் இவற்றுக்கு ஆகும் செலவு வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது பத்தில் ஒரு பங்குக்கும் குறைவானதே. இதன் பலனால், ‘மருத்துவச் சுற்றுலா’ (Medical Tourism) 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
- என்றாலும், இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியாளர்களை அமர்த்துவதில் பிரச்சினை, சம்பளப் பிரச்சினை, மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவக் கருவிகளைப் பராமரிப்பதில்லை, கழிவறைகள் சுத்தமில்லை, மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, புதிய மருத்துவ ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மருத்துவத் தரவுகளைச் சரியாக நிர்வகிப்பதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தொடர்கின்றன.
- இவற்றுக்கெல்லாம் நிவாரணம் கிடைக்க வேண்டுமானால், மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர நிதியை மேல்நாடுகளுக்கு இணையாக உயர்த்தினால் மட்டுமே முடியும்!
நன்றி: தி இந்து (12 – 08 – 2022)