- இந்திய அரசமைப்பு 1950இல் நடைமுறைக்கு வந்தபோதுதான் இந்திய சுதந்திரத்தின் திசை கண்ணுக்குப் புலனானது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், நாடாளுமன்றம், அவற்றின் அதிகாரங்கள், ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள அடிப்படை உரிமைகள், அவற்றைச் செயல்படுத்த வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், அதிகார வர்க்கத்தின் வரம்புகள் எனப் பலவற்றையும் அரசமைப்பு வரையறுத்துள்ளது.
- இந்தியச் சமூகத்தின் ஆன்மாவாக இருந்துவரும் அரசமைப்பை முக்கியமான சில வழக்குகளின் தீர்ப்புகள் உயா்த்திப்பிடித்து நம்பிக்கை தந்துவருகின்றன. அப்படிப்பட்ட சில தீா்ப்புகள்:
அரசமைப்பே பெரிது!: ஒரு மடத்தின் சொத்துரிமை பற்றிய பிரச்சினையில் அரசின் தலையீடு கூடாது என்று கோரி, கேசவானந்த பாரதி என்பவர் 1972இல் மனு தாக்கல் செய்திருந்தார். 13 நீதிபதிகள் கொண்ட அமா்வு இவ்வழக்கை விசாரித்த பிறகு ஏழுக்கு ஆறு என்கிற எண்ணிக்கையில் தீா்ப்பளித்தனா்.
- பெரும்பான்மையானவர்கள், அரசமைப்பின் அடிப்படைக் கட்டுமானத்தை மீறக்கூடிய வகையில் கொண்டு வரக்கூடிய எவ்விதமான சீர்திருத்தத்தையும் ரத்துசெய்யும் அதிகாரம் அரசமைப்பின் கீழ் உள்ளதாக வலியுறுத்தினர். அரசமைப்புக்கு முன், மக்களால் தோ்வு செய்யப்பட்ட நாடாளுமன்றமும் பெரிதல்ல என்கிற தீா்ப்பு இன்றுவரை நம் நாட்டைக் காத்துவருகிறது.
வங்கிகள் நாட்டுடைமையாக்கம்: தனியாரின் உடைமைகளை, நிறுவனங்களை அரசு பொதுப் பயன்பாட்டுக்குக் கையகப்படுத்தி, அதற்குரிய இழப்பீட்டைத் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் ‘ஆர்.சி.கூப்பர் எதிர் மத்திய அரசு’ வழக்கில் தீர்ப்பளித்தது. இது பெரும்பான்மையோரின் நலனை அரசு பிரதிபலிக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைந்தது. எனவே, தனிநபரோ நிறுவனங்களோ தங்களின் சொத்துரிமையை அடிப்படை உரிமையாகக் கோர முடியாது என்பதைக் கூறியது. இதன் காரணமாகவே நம் நாட்டில் வங்கிகள், நிறுவனங்கள் பலவும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தனிநபர் வாழ்வுரிமை: மேனகா காந்தி வழக்கின் தீர்ப்பு மூலமாக வாழ்வுரிமையின் எல்லை விரிவாக்கப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாகத் தனிநபர் சுதந்திரத்தை அரசு பறிக்குமானால், அதை அரசமைப்பின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகக் கருதியது. சட்டத்துக்கு உட்பட்ட வகையில், சட்டபூர்வமான வழிமுறைகளின்றி தனிநபா் சுதந்திரத்தைத் தடைசெய்ய இயலாது என்று தீா்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பலரது தனிப்பட்ட வாழ்க்கையில், அரசியல் பணிகளில் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
சிறைவாசிகளும் மனிதர்களே: எந்தவொரு விசாரணை சிறைவாசியும் சட்டப்படி 60 அல்லது 90 நாட்கள் சிறைப்படுத்தப்பட்ட பின் நீதிமன்றங்கள் சட்டப்படி பிணை வழங்க வேண்டும் என்பதையும், பிணையில் வெளிவரக்கூடிய உரிமை இருப்பதை நீதிமன்ற நடுவர்கள் சிறைவாசிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதையும் 1979 இல் வெளியான தீர்ப்பு (ஹுசைனரா காட்டூன் வழக்கு) எடுத்துரைத்தது.
- குறிப்பாக, எல்லா குடிநபர்களுக்கும் சட்ட உதவி கிடைக்க அரசு வழிவகைசெய்ய வேண்டும் என்றும், சட்ட உதவிபெறுவது அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறைக்குள் இருப்பவர்கள் எல்லாரும் குற்றவாளிகளும் அல்லர் வெளியே சுதந்திரமாக உலவும் அனைவரும் குற்றம் செய்யாதவர்களும் அல்லர் என்பதையும் இது உணர்த்தியது.
கைது செய்ய 11 கட்டளைகள்: கரடுதட்டிப்போன காவல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அறைகூவலாக டி.கே.பாசு வழக்கின் (1997) தீர்ப்பு இருந்தது. ஒருவரைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய 11 கட்டளைகளை இந்தியாவில் காவல்துறைக்கான புதிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
- கைது செய்யப்படும் நபர்களுக்கு அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் தெரிவிப்பது காவல்துறையின் கடமை எனக் கூறியது. காவல்துறை அந்த 11 கட்டளைகளை மீறினால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் காவல்துறையினருக்குத் தண்டனை உண்டு எனவும் கூறியது. குற்றம் சுமத்தப்பட்ட சாதாரண மக்களுக்காக அமைப்புகளும் வழக்கறிஞர்களும் போராடுவதற்கும் நியாயம் பெறுவதற்கும் மிகப்பெரிய சாதனமாக இத்தீர்ப்பு செயல்படுகிறது.
கல்வி அடிப்படை உரிமை: சுதந்திர இந்தியாவில் அடிப்படைக் கல்வி பலருக்கும் கிட்டாத சூழ்நிலையே தொடர்ந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 1992 இல் ஆரம்பக் கல்வி என்பது அடிப்படை உரிமை எனவும், இந்திய அரசமைப்பில் சொல்லப்படாவிட்டாலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் ஒருங்கே வாசிக்கும்போது 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை எனக் கல்வியை உத்தரவாதப்படுத்தியது.
தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது: தனிநபர் ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிய தகவல்களைப் பொதுவெளியில் பகிராமல் தனியுரிமையாகப் பாதுகாத்துக்கொள்வதை Right to Privacy என்கிற அடிப்படை உரிமையாகக் கே.எஸ்.புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் நிறுவியது.
- குறிப்பாக, தன்னடையாள அட்டையைத் தரும் பணியை இந்திய அரசு மேற்கொண்ட பின் தங்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், கைரேகை, கருவிழிப் பதிவு போன்ற மிக அந்தரங்கமான தகவல்களை அரசு பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் விவரங்களை அரசு பயன்படுத்துவது குறித்து மிக முக்கியமான தீர்ப்பாக அமைந்தது.
- குறிப்பாகத் தனியுரிமை என்பது அடிப்படை உரிமை, அதைப் பாதுகாப்பதே அரசமைப்பின் உள்ளார்ந்த கருதுகோள், அரசால் அந்த உரிமைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியது; தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மிகப்பெரிய எல்லையைத் தொட்டிருக்கும் சூழலில் இது மிகவும் அத்தியாவசியமான தீர்ப்பு.
- பெண்களின் பணியிடப் பாதுகாப்பு: இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாகப் பெண்ணின் வாழ்வுரிமை என்பது கண்ணியமான வாழ்க்கை உரிமை என்கிற விளக்கத்துக்கு நீட்சியாக விளங்கியது இந்தத் தீர்ப்பு (விசாகா வழக்கு). கல்வியால் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய வேலை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை முடக்கும்விதமான பாலியல் வன்முறை என்பது பெண்ணின் அடிப்படை உரிமைகளை மீறுகிற செயல் என்பதை அங்கீகரித்து, பெண்கள் மீதான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் களைவதற்கான ‘சீடா ஒப்பந்த’த்தின் அடிப்படைக் கருத்துகளைக் கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு இது.
- பணியிடங்களில் பாலியல் சீண்டல் அல்லது பாலியல் துன்புறுத்தல் ஆகியவை அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று அது விளக்கம் அளித்தது. பெண்களுக்கான வேலை வெளியை, சமூகத்தின் ஒரு முக்கியமான பகுதியைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்கிய தீர்ப்பு, பெண்ணுரிமைப் பாதையில் மிகப்பெரிய மைல்கல்.
பால்புதுமையினருக்கான விடியல்: பால்புதுமையரின் மன்னிப்பைப் பெற வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்று நவ்ஜோத் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது இச்சமூகத்தின் மனசாட்சியின் குரல். காலம்காலமாகப் பாலினச் சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகப் பாவித்து, அவர்களை மனிதர்களுக்கும் கீழாக நடத்தும் பார்வையை இச்சமூகம் கொண்டிருந்தது.
- இந்நிலையில் மனித உரிமைப் பார்வையில் அவர்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த இந்தத் தீர்ப்பு உதவியது. அவர்களுடைய தனியுரிமை, வாழ்வுரிமை ஆகியவற்றை அரசு தனது கொள்கை மாற்றத்தால் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு கூறியது. ஆண், பெண் இருபாலர் தவிர பிறர் மக்களே அல்ல என்கிற குறுகிய பார்வையை மாற்றி, அந்தப் பார்வையை விரிவுபடுத்திச் சமூகத்தின், அரசின் கண்களைத் திறந்த ஒரு மிகப்பெரிய அடிவைப்பு இந்தத் தீர்ப்பு.
சமூக சுதந்திரம்: அரசியல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சமூக அளவிலான சுதந்திரத்தைப் பெறுவதற்கு இந்தியாவின் நீதித் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றியிருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் இருந்த பசி, வறுமை, தீண்டாமை, அரசின் எதேச்சதிகாரம், அரச வன்முறைப் பாகுபாடுகள், இயற்கை வளங்கள் போன்றவற்றை அனைவரும் சமமாகப் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையிலிருந்து ஒப்பீட்டளவில் பெரிய முன்னேற்றம் காண உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உதவின.
- ஆனால், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதுபோல அரசமைப்பின் உயரிய நோக்கங்களை நோக்கிச் செல்லும் பணியில், நீதிமன்றத் தீர்ப்புகளின் பெயராலேயே பல இடர்பாடுகள் தற்போது ஏற்படுத்தப்படுகின்றன. சாதாரண மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடும் சட்டப் போராட்டங்கள்கூடக் குற்றம் என்று அறிவிக்கப்படுகின்றன. கவலை அளிக்கும் இந்தச் சூழ்நிலையிலும்கூட அரசமைப்பு மட்டுமே நமது முன்னேற்றத்துக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய நல்வாழ்க்கைக்கும் நம்பிக்கை தருகிறது என்பதே 75 ஆண்டு இந்திய சுதந்திரத்தின் வெற்றி, நமது அரசமைப்பின் ஆளுமை!
நன்றி: தி இந்து (30 – 08 – 2022)