TNPSC Thervupettagam

இந்தியா 75 - நெருக்கடிகளை மீறித் தொடரும் உழவர்களின் சேவை

August 12 , 2022 727 days 386 0
  • விடுதலைக்குப் பிந்தைய இந்திய வேளாண்மை மூன்று முக்கிய காலகட்டங்களைக் கடந்து வந்துள்ளது. ஒன்று, தொடக்கக் கால வளங்களைக் கட்டமைத்த காலம் (1950-60). இரண்டாவது, பசுமைப் புரட்சிக் காலம் (1961-90). மூன்றாவது, உலகமயக் காலம் (1991 முதல் இன்றுவரை).
  • கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண்மை பல உச்சங்களைத் தொட்டுள்ளது. வாழைப்பழ விளைச்சலில் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதேபோல எருமைப்பாலில் முதலிடம், நெல், கோதுமை, கரும்பு, பச்சைக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, பருத்தி, பசும்பால் ஆகியவற்றில் உலகில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. அணைகள், நீர்நிலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
  • நில மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு மேல் இருக்கும் பேரணைகளால் ஏற்பட்டுள்ள சூழலியல் சீர்கேடுகள் ஒருபுறம் இருக்க, இந்தியாவில் இப்போது நாம் பெற்றிருக்கும் 5,000 பெரிய அணைகள் மூலம் 220 டெராலிட்டர் நீரைச் சேமித்துவைக்க முடியும். நேருவின் கனவுத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டம், சோவியத் ரஷ்யாவின் திட்டத்தை மாதிரியாகக் கொண்டது.
  • முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை, மீன் வளம் போன்ற முதன்மைத் துறைகளுக்கான ஒதுக்கீடு அதிகமாக்கப்பட்டு, மூலப்பொருள்களை உருவாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தலைகீழ் மாற்றம்: மின்சாரம் இல்லை என்றால் இந்திய வேளாண்மையே இல்லை என்று கூறும் அளவிற்கு மின்சாரத்தின் பயன்பாடு மிக அதிக அளவு உயர்ந்தது. இயந்திரங்களின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. உழவு மாடுகளின் இடத்தில் உழவுந்துகள் (டிராக்டர்கள்) உலவுகின்றன.

  • மக்களின் கைகளில் இருந்த நாட்டு விதைகளின் இடத்தில் நிறுவனங்களின் கலப்பின விதைகளும், சாண உரங்கள் - வண்டல் உரங்களின் இடத்தில் யூரியா, டிஏபி போன்ற வேதி உரங்களும் வந்துவிட்டன. குறிப்பாக, ‘பசுமைப் புரட்சி’ இந்திய வேளாண் துறையில் மட்டுமல்லாது, சமூக அளவிலும் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது.
  • தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வேளாண்மையிலிருந்து வெளியேறி தொழில்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கின.
  • நிலத்தடி நீர் எட்ட முடியாத ஆழத்திற்குச் சென்றுவிட்டது. மண்ணின் வளமை வேதிப்பொருட்களால் பாழ்பட்டது. இயற்கைச் சூழலுக்கும் வேளாண்மைக்கும் இருந்த உறவு துண்டிக்கப்பட்டது. வேளாண்மைத் தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளின் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஆண்டுக்கு 12,000 உழவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
  • கடன் இல்லாத உழவர்கள் இல்லை என்று தகவல்கள் உள்ளன. உத்தரவாதமற்ற மழை, வெயில், பூச்சிகள் என்று பருவநிலை சார்ந்த நெருக்கடிகள் இருந்தபோதிலும் இந்திய உழவர்கள் தங்களை வருத்திக்கொண்டு உணவை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

உலகமயத்தின் பின்னணியில்…: பசுமைப் புரட்சிக் காலத்தில் விதைகள், உரங்கள் போன்றவற்றில் இந்தியா எப்படிப் பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்றோ, அதேபோல 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.

  • மரபீனித் தொழில்நுட்பங்கள் முற்றிலும் பெரும் விதை நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று. வேளாண்மையை வணிகத்திற்குள் கொண்டுவரும் போக்கு உருகுவே நாட்டில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வணிக நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டது.
  • இதன் விளைவாகப் பல்வேறு ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் உலக அளவில் வேளாண்மையை வணிகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.
  • அந்த ஒப்பந்தங்களில் இந்தியாவும் கையொப்பமிட்டது. ‘வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைக்கான பொது உடன்படிக்கை’யின் (GATT) விளைவாக ஏற்பட்ட ‘வேளாண்மைக்கான ஒப்பந்தம்’ (AoA), வேளாண்மைக்கான மானியங்கள் யாவற்றையும் நீக்கியது.
  • இந்த ஒப்பந்தங்கள் 1994ஆம் ஆண்டு மொராக்கோவின் மரகேசில் அங்கீகரிக்கப்பட்டன. இறையாண்மை கொண்ட இந்தியா தனக்கான முடிவுகளை எடுக்க இயலாதவாறு வணிக ஒப்பந்தங்கள் இறுக்கிவிட்டன.

காந்தியம் காட்டிய வழி: காந்தியடிகள், கிராமங்கள் உயிர் பெற்றால்தான் அமைதியும் மகிழ்ச்சியும் உள்ள இந்தியா உருவாகும் என்று கருதினார். அதை அறிவியல் முறையில் இலக்கணமாக மாற்றித் தந்தவர் ஜே.சி.குமரப்பா.

  • அவரைப் போன்றவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு 17.4%,அத்துடன் நீர்ப்பாசனத்தைச் சேர்த்தால் 31% ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 21%என்று குறைந்துகொண்டே வந்து 10ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 3.86% ஆகக் குறைக்கப்பட்டது. குமரப்பா இந்தியாவிற்கு ஏற்றதாக வேளாண்மையையும், கைத்தொழில் களையும் அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிதான் பொருத்தமானது என்று கருதினார்.
  • குவியல் முறையும், தனியார் துறையும் ஆபத்தானது என்று கூறினார். நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், கூட்டுறவு முறை வளர்ச்சியடைய வேண்டும், அதுவே உலகம் முழுமைக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என்று வலியுறுத்தினார். அது இந்தியாவில் நடைபெறவே இல்லை.

தாக்குப்பிடிக்கும் சாதனை: ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மரபைக் கொண்ட இந்திய வேளாண்மை, அதற்கே உரிய சூழலியல், திணையியல் பொருத்தப்பாட்டின் காரணமாக இன்னும் தாக்குப்பிடித்துப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவருகிறது.

  • இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து அரசியல் விடுதலை பெற்றபோது, மக்கள்தொகை ஏறத்தாழ 36 கோடி; அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்கு 51.9%.
  • இந்தியாவின் தற்போதைய உத்தேச மக்கள்தொகை ஏறத்தாழ 139 கோடி. அதே நேரம் வேளாண்மை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 2017ஆம் ஆண்டு, 15.4 % ஆகக் குறைந்தது.
  • அதன் பின்னர் கரோனாவின் தாக்கத்தால் 2021ஆம் ஆண்டில் 19.9%ஐத் தொட்டது. ஆக, வணிகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், வேளாண்மையின் இடம் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. ஆனால், இவ்வளவு சிரமங்களுக்கு உள்ளானபோதும் 63 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு (45.6%) வேளாண்மைத் துறை மூலமே கிடைத்துவருகிறது.

தேவை தொலைநோக்குப் பார்வை: இந்தியாவில் வேளாண்மையை வளர்த்தெடுக்க நபார்டு போன்ற அமைப்புகள், மாநில அரசு சார்ந்த திட்டங்கள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், சந்தையாக்க முயற்சிகள் மூலம் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்படுவதை மறுக்க இயலாது.

  • ஆனால், தெளிந்த தொலைநோக்குப் பார்வை இல்லாததால், நினைத்த நேரத்தில், நினைத்த திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 81% உழவர்களிடம் 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பே உள்ளது. ஆனால், வேளாண்மையை இயந்திரமயமாக்கம் என்ற பெயரில் பறகு ஊர்தி (ட்ரோன்) மூலம் மருந்து தெளிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • உலகமயமாக்கச் சூழலுக்குப் பின்னர் அனைத்தையும் வணிகமயமாக்கும் நிலை வந்துள்ளதாலும், அனைத்தையும் தனியார்மயமாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும், பரந்துபட்ட மக்களிடம் உள்ள நிலங்களைத் தொகுத்து, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் மூலம் மட்டுமே மையப்படுத்தப்பட்ட வேளாண்மை சாத்தியப்படும்.
  • துண்டுதுண்டான நிலங்கள் மூலம் பெருந்தோட்ட முறை சாகுபடி சாத்தியப்படாது. பரவல்மயத்திற்கும் குவியல்மயத்திற்குமான போட்டிதான் இன்றைய வேளாண்மையிலும் எதிரொலிக்கிறது. இந்தியா போன்ற பன்மயப்பட்ட வேளாண்மைக்குச் சாதகமான இயற்கைக் சூழல் உள்ள நாட்டில் நீடித்த வேளாண்மைக்கான திட்டங்களே, அனைவருக்குமான நல்வாழ்வை உறுதிப்படுத்தும் என்பதை நாடு விடுதலை பெற்ற 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின்போதாவது உணர வேண்டும்.

நன்றி: தி இந்து (12 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்