TNPSC Thervupettagam

இந்தியா எப்படி வாக்களிக்கிறது?

March 29 , 2021 1219 days 509 0
  • மக்களவைத் தேர்தல் 2019-ஐ அடுத்து ‘இந்தியா எப்படி வாக்களித்தது?’ என்ற தலைப்பில் ‘செமினார்’ ஆய்விதழ் ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.
  • கட்சியின் அமைப்பு இயந்திரம், நிதியாதாரங்கள், ஊடகங்களின் கதையாடல்களைக் கட்டுப்படுத்துதல், கட்சித் தலைவர்களின் அபரிமிதமான பிரபலம், அவர்களுக்கு இருக்கும் கருத்தியல்ரீதியான தெளிவு ஆகியவை தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
  • இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலைப் பற்றிய அவதானிப்புகள் தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும்.
  • பிஹாரிலும் உத்தர பிரதேசத்திலும் மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ராமநவமி விழாக்கள் வழக்கத்துக்கு மாறான வகையில் அரசியல் பிரச்சார மேடைகளாக மாறியிருந்தன என்று கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் வந்திதா மிஷ்ரா.
  • சமயச் சார்பற்ற அரசியலர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமயப் பின்னணியோடு நடத்தப்படுகிற இத்தகைய விழாக்கள் வாக்கு அரசியலில் கணிசமான தாக்கத்தை விளைவிக்கின்றன என்பதே உண்மை.
  • மேலும், ஆளுங்கட்சியாக இருந்தாலுமேகூட அந்தக் கட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் காட்டுகிற அதீதப் பேரார்வமும் முயற்சிகளுமே அந்தக் கட்சியின் வெற்றிக்கு வலுசேர்க்கின்றன என்கிறார் வந்திதா மிஷ்ரா.
  • அவரது கருத்தின்படி, நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், வலிமை மிக்க தலைவர் மட்டுமே அதைக் காப்பாற்ற முடியும் என்ற கதையாடலும் வெற்றியைத் தீர்மானிக்கிறது. மாநில சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, இந்த உத்தியை மாநில உரிமைகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.
  • மக்கள் நலத் திட்டங்களைச் செயற்படுத்துவதோடு என்னென்ன திட்டங்களை இந்த ஆட்சியில் செயல்படுத்தியிருக்கிறாம் என்று மக்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தும் வேலையையும் ஆளுங்கட்சிகள் செய்கின்றன.
  • இத்தகைய விளம்பரங்களால் திட்டத்தின் பயனாளியாக இல்லாதவர்களும்கூட அது குறித்த நல்ல அபிப்ராயம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.
  • அந்தத் திட்டத்தால் தானும் பயனடையக்கூடும் என்ற அவரது எதிர்பார்ப்பு வாக்காக மாறும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது.

கட்சியா? தலைவரா?

  • அரசறிவியல் துறை பேராசிரியரான தாரிக் தாசில் கருத்துப்படி, தேர்தலில் கட்சிகளும் கொள்கைகளும் செல்வாக்கு செலுத்துவதைப் போலவே தலைவர்களின் தனிப்பட்ட ஆளுமையும் அவர்களைப் பற்றிய கதையாடல்களும் வாக்காளர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்வதாகத் தெரிகிறது.
  • கட்சிக்கான ஆதரவு, தலைவருக்கான ஆதரவு இரண்டும் ஒன்றுசேரும்போது அது வெற்றியை இன்னும் எளிதாக்குகிறது. அனைத்துக்கும் மேலாக, களத்தில் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கு ஒரு கட்சி எவ்வளவு செலவழிக்கிறது என்பதும்கூட முக்கியமானதாக இருக்கிறது என்கிறார் தாரிக் தாசில்.
  • கடந்த மக்களவைத் தேர்தலின்போது வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஊழியரைக் காட்டிலும் பாஜக ஊழியருக்கு மூன்று மடங்கு அதிகமாகத் தினசரிச் செலவுக்குப் பணம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பத்திரிகையாளர் ஜி.சம்பத் கருத்துப்படி, எதிர்க்கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்குவதோடு தமது தேர்தல் அறிக்கை மக்களைச் சென்றடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டும்.
  • அதுபோலவே, ஆளுங்கட்சி தம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தயாராக இருக்கவும் வேண்டும்.
  • காங்கிரஸின் தோல்விக்கு இவை முக்கியக் காரணங்களாக அமைந்துவிட்டதாகக் கூறுகிறார் ஜி.சம்பத். அவற்றைக் காட்டிலும் முக்கியமாக, ஒரு கட்சித் தலைவர் தம்மைப் பற்றிய கதையாடல்களைத் தொடர்ந்து உருவாக்குவதும் அவற்றை வெற்றிகரமாக உலவ விடுவதும் வெற்றிக்கு அவசியமானதாக அவர் உதாரணம் காட்டுகிறார்.
  • தேநீர் விற்றவர் என்பதில் தொடங்கி சாமானிய விவசாயி என்பது வரை இந்தக் கதையாடல்களை விரித்தெடுக்க முடியும்.

கட்சி சாராத வாக்காளர்கள்

  • எந்தவொரு கட்சியையும் சேராத வாக்காளர்களையும் பிரதானக் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களையும் ஒரு தேர்தல் பிரச்சாரம் எப்படிக் கவர்கிறது என்பதும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அரசறிவியல் பேராசிரியரான கே.கே.கைலாஷ்.
  • பிரதானக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆட்சியதிகாரத்தின் பயனைச் சுவைத்தவர்களாகவோ அல்லது அதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவோ இருப்பார்கள். எனவே, அவர்களின் வாக்குகள் பெரிதும் மாறப் போவதில்லை.
  • எனவே, கட்சிகளைச் சாராத வாக்காளர்களின் ஊசலாடும் வாக்குகளைத் திரட்ட முடிபவர் தேர்தல் வெற்றியை நெருங்குகிறார்.
  • மேலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான வாக்கு என்பது அந்தத் தொகுதி அளவிலானதா அல்லது மாநில, தேச அளவிலானதா என்பதும் கவனத்துக்குரியது என்கிறார் கைலாஷ்.
  • மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுடன் சேர்ந்து தேசியக் கட்சி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்போது மாநில ஆளுங்கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்றால் அது கூட்டணி சேர்ந்துள்ள தேசியக் கட்சிக்கான ஆதரவாகவும் மாறும் என்பதும் அவருடைய அவதானிப்பு.
  • ஒடிஷாவை அவர் உதாரணம் காட்டுகிறார். இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டை உதாரணமாக்கி நாம் வேறொரு முடிவையும் பெற முடியும். மத்தியில் ஆளுங்கட்சி மீது மக்களிடம் திருப்தியுணர்வு நிலவுகையில் அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டு வைத்தால் அதே விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா என்று தெரியவில்லை. ஒருவேளை மக்களிடம் அதிருப்தியுணர்வு எழுந்தால் அதன் விளைவுகள் எதிர்மறையாக இருக்குமா?

சமூக ஊடகங்களின் தாக்கம்

  • தேர்தல் பிரச்சாரத்திலும் வெற்றியைத் தீர்மானிப்பதிலும் சமூக ஊடகங்கள் வகிக்கும் பங்கை ஜோயோஜீத் பால், அழகு மீனா உள்ளிட்டோர் எழுதிய கட்டுரை விரிவாக அணுகியுள்ளது.
  • சமூக ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் இருந்தாலும் அவற்றை நிர்வகிக்கும் தொழில்நுட்ப அணியினர் தங்களது பிரச்சார அறையைப் போர்க் கட்டுப்பாட்டு அறையாகத்தான் கருதுகிறார்கள்.
  • கடந்த மக்களவைத் தேர்தலின்போது பெரும்பாலான தலைவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஐந்து ட்விட்டர் பதிவுகளை இட்டிருக்கிறார்கள்.
  • அவை உடனுக்குடன் பலராலும் தொடர்ந்து பகிரப்பட்டுள்ளன. மோடி, ராகுல் ஆகிய தேசியத் தலைவர்களையடுத்து அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சமூக ஊடங்களின் வழியாகப் பிரச்சாரம் செய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
  • தேர்தல் முறைக்கும் சமூக ஊடகங்களுக்குமான உறவைக் குறித்து சமூக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வாக்காளர்களில் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இல்லை.
  • வாக்காளர்கள் அதிகம் பயன்படுத்தாத சமூக ஊடகங்கள்தான் அரசியல் தலைவர்களின் முக்கிய பிரச்சார சாதனங்களில் ஒன்றாக இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்.
  • பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பாத தலைவர்களுக்குச் சமூக ஊடகங்கள் தங்களது செய்திகளைத் தெரிவிப்பதற்கு நல்லதொரு உபாயமாக இருக்கலாம். ஆனால், தேர்தலில் வெற்றிபெற விரும்புபவர்கள் மக்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.
  • சுவரொட்டி, சுவரெழுத்துப் பிரச்சாரங்கள் அவை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் வெளிப்படையான கவன ஈர்ப்புகளைப் பெறுகின்றன என்றபோதும் அச்சு, வண்ணச் செலவுகள் அதிகமாகிவிட்டதன் காரணமாக அரசியல் கட்சிகள் செலவு குறைவான சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
  • அதிகாரபூர்வமான செய்திகளுக்கு ட்விட்டர், அதையே மறுபதிவிடும் வசதியுள்ள ஃபேஸ்புக், பொது நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புக்கு யூட்யூப், எதிர்க்கட்சிகளை நையாண்டி செய்வதற்கு ஷேர்ஷாட் என ஒவ்வொன்றையும் கட்சித் தலைவர்களும் அவர்களது சமூக ஊடக நிர்வாகிகளும் தனித்தனியாகவே பராமரிக்கிறார்கள்.
  • இவை அனைவரது பார்வைக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால், பொதுப்பார்வைக்கு வாய்ப்பில்லாத வாட்ஸ்அப் வழியாக பரவவிடப்படும் செய்திகளில் தீய நோக்கங்கள் கலந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • தமக்கு அனுப்பப்படும் வாட்ஸ்அப் செய்திகளை உடனுக்குடன் தனது தொடர்பில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுப்பிவைப்பது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறியிருக்கிறது.
  • அதே நேரத்தில் அரசியல் கட்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் உள்ளவர்கள் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் விவாதிக்கவும் திட்டமிடவும் வாட்ஸ்அப் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
  • குறிப்பாக, தேர்தல் நாட்களில் இன்னும் வாக்குச்சாவடிக்கு வந்து சேராத கட்சி ஆதரவு வளையத்தில் இருக்கும் வாக்காளர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவும் அவர்களை உடனே அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும்கூட இது உதவியாக இருக்கிறது.
  • கடைசியாக, கடந்த தேர்தலின் வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களே வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கவும் கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் கழற்றிவிடவும் உதவும்.
  • தேர்தலுக்கு முந்தைய சில தினங்களில் வாக்காளர்களின் மனங்களைச் சலனப்படுத்தும் பணப்புழக்கத்தின் விளைவுகள் குறித்த ஆய்வுகள் எதுவும் தெளிவாக இல்லை. அரசு அமைப்புகளான உளவுத் துறை உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதே இல்லை.
  • குறிப்பாக, இந்தியா எப்படி வாக்களிக்கிறது என்ற கேள்விக்கான துல்லியமான பதில், கட்சிகள் தேர்தலுக்கு எப்படி தயாராகின்றன என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 -03 -2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்