அரசுத் தலைவர்கள்/அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு
- உயர் மட்டத் தலைவர்களது வருகைகளின் ஒட்டுமொத்த முடிவுகள் இந்திய-சீன உறவுகளுக்கு குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.
- 2003 ஆம் ஆண்டில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பயணத்தின் போது, இந்தியாவும் சீனாவும் இருதரப்பு உறவுகள் மற்றும் விரிவான ஒத்துழைப்புக்கான கோட்பாடுகள் குறித்த ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டன. மேலும் அரசியல் கண்ணோட்டத்தில் ஒரு எல்லைத் தீர்வின் கட்டமைப்பை ஆராய சிறப்புப் பிரதிநிதிகளை நியமிக்கவும் பரஸ்பரம் அவை முடிவு செய்தன.
- 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் அரசுமுறைப் பயணத்தின் போது, வியாபாரம் மற்றும் வர்த்தகம், ரயில்வே, விண்வெளி ஒத்துழைப்பு, மருந்துகள், கேட்பொலி-காணொளிக் கூட்டு உற்பத்தி, கலாச்சாரம், தொழில்துறைப் பூங்காக்கள் நிறுவுதல், சகோதரி-நகர மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன.
- சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு கூடுதல் பாதை ஒன்றைத் திறக்க இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்தியாவில் இரண்டு சீன தொழில்துறைப் பூங்காக்களை நிறுவ சீனத் தரப்பு ஒப்புக் கொண்டதுடன், இந்தியாவில் சீன முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தையும் அந்நாடு வெளிப்படுத்தி யுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
- இந்தியாவுக்குப் பயணம் செய்ய விரும்பும் சீன நாட்டினருக்கு மின்னணு நுழைவு இசைவு (இ-விசா) வசதியை விரிவுபடுத்துவதாகவும் பிரதமர் அறிவித்தார்.
- தலைமை மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களின் உத்வேகம் 2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் செய்தார்.
- மேம்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றங்களுக்கான பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் செய்யப் பட்டன.
- பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் சீனாவுக்குச் சென்று ஹாங்க்சோவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும், 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜியாமெனில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்று, அங்கு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார்.
- கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
- இரு தலைவர்களும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தாஷ்கண்டிலும், 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்தானாவிலும் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் சந்தித்தனர்.
வணிக மற்றும் பொருளாதார உறவுகள்
- இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு கடந்த சில ஆண்டுகளில் துரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- வைரங்கள், பருத்தி நூல், இரும்புத் தாது, தாமிரம் மற்றும் கரிம வேதிப் பொருட்கள் ஆகியவை இந்தியாவிலிருந்துச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் அடங்கும்.
- சீனாவிற்கு வைரங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
- சீனாவுக்குப் பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
- சீனாவிலிருந்து உரங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா இருக்கிறது.
- சீன நுண்ணுயிர் கொல்லிகளின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக இந்தியா இருக்கிறது.
- சீன கரிம வேதிப் பொருட்களுக்கான இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா இருக்கிறது.
- சீனாவில் ஏழு இந்திய வங்கிகளின் பிரதிநிதி அலுவலகத்தின் கிளைகள் உள்ளன.
- சீன வங்கியான ஐசிபிசிக்கு இந்தியாவின் மும்பையில் ஒரு கிளை உள்ளது.
கல்விசார் உறவுகள்
- இந்தியாவும் சீனாவும் கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் 2006 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கான ஒரு தலைமை ஒப்பந்தமாகும்.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ், இருதரப்பு நாடுகளிலும் உயர் கல்வி கற்பிக்கும் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனங்களில், இரு தரப்பினரிடமிருந்தும், 25 மாணவர்களுக்கு அரசாங்க உதவித் தொகை வழங்கப் படுகிறது.
- இந்தியா வழங்கும் 25 உதவித் தொகைகள் இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தால் வழங்கப் படுகின்றன.
- இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் வழங்கிய கல்விப் பரிமாற்றத் திட்ட உதவித் தொகையின் கீழ் 2017-18 கல்வியாண்டிற்கான இந்தி மொழிப் பாடவழியில் சேர 25 சீன மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
- 5 நாடுகளில் இருந்து 12 பல்கலைக் கழகங்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒருவருக்கொருவர் ஈடுபடும் பிரிக்ஸ் அமைப்பு பல்கலைக் கழகம் ஆனது மற்றொரு பாராட்டத்தக்க முயற்சியாகும்.
- அவற்றில் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், காலநிலை மாற்றம், நீர்வளம் & மாசுபாடு மற்றும் பிரிக்ஸ் ஆய்வு ஒத்துழைப்புக்கான ஐந்து துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது. இந்த அனைத்துக் கூட்டுறவு முயற்சிகளிலும் இந்தியா முழு மனதுடன் பங்கேற்கும்.
- இந்தியத் தூதரகமானது சீனாவில் உள்ள கல்வி அமைச்சகம் மற்றும் இந்தியப் பல்கலைக் கழகங்களின் கணிசமான எண்ணிக்கையிலான அனைத்துப் பல்கலைக் கழகங்களுடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றது.
முறைசாரா உச்சி மாநாடுகள்
- பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இரண்டாவது “முறைசாரா உச்சி மாநாடு” 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று பல்லவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய மாமல்லபுரத்தில் நடந்தது.
- பல்லவ மன்னர்களுடனான சீனாவின் வரலாற்று தொடர்பைக் கருத்தில் கொண்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான முறை சாரா உச்சி மாநாட்டிற்கான இடமாக பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் அவ்விடத்தை தேர்வு செய்தார்.
- இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர் மற்றும் இந்தியா-சீனா கூட்டுப் பங்காண்மையை ஆழப்படுத்துவதற்கான கருத்துகளையும் முன்னோக்கையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
- 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், டோக்லாம் நெருக்கடியை அடுத்து சீனாவின் வுஹானில் முதல் முறைசாரா உச்சி மாநாடு நடந்தது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைக் குறைப்பதில் வுஹான் உச்சி மாநாடு முக்கியமானதாகத் திகழ்ந்தது.
உச்சி மாநாட்டின் முக்கியத் தீர்மானங்கள்
- தகராறுகள் குறித்த அமைதியான தீர்வு:
- அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்திற்காக உழைப்பதற்கான பொதுவான நோக்கத்தை இந்தியாவும் சீனாவும் பகிர்ந்து கொள்கின்றன என்ற கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
- இது சம்பந்தமாக, இரு நாடுகளும் தங்களது எல்லைப் பிரச்சினைகளை இணக்கமாகத் தீர்ப்பதாகவும், இந்த நோக்கத்தைத் தொடர கூடுதல் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்துப் பணியாற்றுவதாகவும் அவை முடிவு செய்துள்ளன.
- உலகளாவிய வர்த்தகப் போருக்கு எதிரான பொதுவான நிலைப்பாடு:
- அமெரிக்காவால் தொடங்கப்பட்ட உலகளாவிய வர்த்தகப் போர் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார நலன்களை மோசமாக பாதித்துள்ளது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான நிலைப்பாடு:
- தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் மையமாக கருதப்படும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து வரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தினால் இந்தியாவும் சீனாவும் பாதிக்கப் பட்டுள்ளன.
- நாகரிக உறவுகளை வலுப்படுத்துதல்:
- இந்தியாவும் சீனாவும் தமிழ்நாட்டிற்கும் புஜியான் மாகாணத்திற்கும் இடையில் சகோதரி-அரசு உறவுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
- புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பண்டையத் துறைமுக நகரமான குவான்ஜோவில் 12 ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டதன் மூலம் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் அறிய முடிகிறது.
- இந்தியாவும் சீனாவும் புஜியான் மாகாணத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவுவதற்கான சாத்தியத்தை ஆராய முடிவு செய்துள்ளன.
- இந்திய-சீன மக்கள் உறவுகளைப் பலப்படுத்துதல்:
- இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக இரு நாடுகளும் 70 செயல்பாடுகளை ஏற்பாடு செய்யும். இரு நாடுகளின் நாகரிகங்களுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு கப்பல் பயணத்தில் ஒரு மாநாடு நடத்தவதும் அதில் அமைய உள்ளது.
- இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துதல்:
- சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 54 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.
- சீனாவின் முந்தைய வாக்குறுதிகள் இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதாக இருந்த போதிலும், நடைமுறையில் சீன அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 0.52% மட்டுமே உள்ளது.
- “சென்னை இணைப்பை” முன்னோக்கி எடுத்துச் செல்லுதல்:
- முறைசாரா உச்சி மாநாட்டின் நடைமுறை உரையாடலை ஆழப் படுத்தவும் இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரப் புரிந்துணர்வை ஊக்குவிக்கவும் ஒரு முக்கியமான வாய்ப்பை இந்த முறைசாரா உச்சி மாநாடு வழங்குகிறது என்பதை இரு தலைவர்களும் எடுத்துரைத்து உள்ளனர்.
- ‘வுஹான் ஸ்பிரிட்’ மற்றும் ‘சென்னை கனெக்ட்’ ஆகியவற்றுக்கு இணங்க, முறைசாரா உச்சிமாநாட்டின் நடைமுறை எதிர்காலத்திலும் தொடரும்.
- 3வது முறைசாரா உச்சி மாநாட்டிற்குச் சீனாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடியை ஜனாதிபதி ஜி அழைத்திருக்கிறார். பிரதமர் மோடி அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முடிவுரை
- இருதரப்புப் பிரச்சினைகள், குறிப்பாக எல்லைப் பிரச்சினை, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய உள்கட்டமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றில் சீனாவுடனான வேறுபாடுகளைக் குறைப்பதற்கான சிறிய மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
- இந்தியாவும் சீனாவும் இன்னும் ஒரு தந்திரோபாய ஈடுபாட்டில் உள்ளன. ஒரு மூலோபாயக் கூட்டுறவில் இல்லை. ஆனால் இது குறுகிய கால வெளியுறவுக் கொள்கையை சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாக அல்லாமல் ஆழமான ஈடுபாட்டுடன் கூடிய ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கின்றது.
- சக்திவாய்ந்த சீனாவுடன் ஒரு ஆழ்ந்த தந்திரோபாய ஈடுபாட்டின் வழிகளை விரிவுபடுத்துவதற்கு இந்தியா ஒரு பரந்த ஆனால் யதார்த்தமான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
****************************