TNPSC Thervupettagam

இந்தியா - சீனா எல்லை பிரச்னை

July 27 , 2022 743 days 423 0
  • சர்வதேச நிகழ்வுகளும், உள்நாட்டு பிரச்னைகளும் எல்லையில் தொடரும் பதற்றம் குறித்த செய்திகளைப் பின்னுக்குத் தள்ளி இருக்கின்றன. 2020 மே 5-ஆம் தேதி நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.
  • ஜூலை 17-ஆம் தேதி, இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதுவரை 16 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை என்பதுடன், பேச்சுவார்த்தைகளை சீன ராணுவம் கண்துடைப்புக்காக நடத்துகிறதோ என்கிற ஐயப்பாடும் எழுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து சீன ராணுவத்தின் சார்பாக செய்திக் குறிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • ஜூலை 17-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு முன்னர் நடந்த சில நிகழ்வுகள் முக்கியமானவை. லடாக் பகுதியின் ராணுவத் தலைமையிடமான ஷின்ஜியாங்குக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜூலை 15-ஆம் தேதி விஜயம் செய்தார். கல்வான் மோதலில் படுகாயம் அடைந்த சீன ராணுவத்தின் ரெஜிமெண்டல் கமாண்டர் ஜீ ஃபாடோ உள்ளிட்ட ராணுவ தளபதிகளை அவர் பாராட்டினார். அதன் மூலம், சீன ராணுவத்தின் கல்வான் பள்ளத்தாக்கு ஊடுருவல் அதிபர் ஷி ஜின்பிங்கின் அனுமதியுடனும், ஆசிர்வாதத்துடனும்தான் நடந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
  • இந்தியத் தரப்பிலும் சில முக்கியமான நிகழ்வுகள் இது தொடர்பாக நடக்காமலில்லை. ஒரு மாத ஓய்வுக்காக திபெத்திய பெளத்தர்களின் தலைமை மதகுருவும், தலைவருமான தலால் லாமா ஜூலை 13-ஆம் தேதி லடாக்கின் தலைநகரான லே சென்றடைந்தார். சீனாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாததால், அதிகாரிகள் தலாய் லாமாவை சந்திப்பதைக்கூட அனுமதிக்காமல் இருந்த இந்திய அரசு, அவருக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. அவரது 87-ஆவது பிறந்த நாளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தது எதிர்பாராத திருப்பம்.
  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம் என்று சமீபத்தில் சிங்கப்பூரில் அளித்த ஒரு பேட்டியில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கே தெரிவித்தார். "இந்தியா தனது எல்லையில் ராணுவத்தையும், ஆயுதங்களையும் குவித்திருக்கிறது. சீனாவுக்குள் இந்தியர்களை ஊடுருவ அனுமதித்திருக்கிறது' உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார். அதை மறுத்துப் பேச, அவரது தகுதிக்கு நிகரான ஒருவரும் இந்தியத் தரப்பில் இருக்கவில்லை என்பது சீனாவுக்கு வசதியாகப் போய்விட்டது.
  • நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது சீன சகாவான வாங் யீயை மூன்று முறை சந்தித்திருக்கிறார். வாங் யீ தில்லி விஜயத்தில் மட்டுமல்லாமல், ஆசியான், ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றிலும் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து அவர்கள் விவாதிக்கவும் செய்தார்கள். ஆனால், இருவரும் அவரவர் வாதங்களை முன்வைத்தார்களே தவிர, எந்தவித முடிவை நோக்கியும் நகரவில்லை.
  • "இதுதான் தீர்வு என்று ஒரு நாடு சொல்வதன் அடிப்படையில் எப்படி பிரச்னைக்கு முடிவெடுக்க முடியும்? பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுகள், பரஸ்பர உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கருத்து' என்று அமைச்சர் ஜெய்சங்கர் தனது வாதத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனை ஏற்க சீனத் தரப்பு தயாராக இல்லை.
  • எல்லைக் கோட்டில் நடந்த சீன ராணுவத்தின் வெளிப்படையான அத்துமீறலுக்குப் பிறகும்கூட, "இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று அச்சுறுத்தல்ல' என்று வாங் யீ கூறியதுடன் நின்றுவிடவில்லை. "எல்லை பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு, இருநாடுகளும், இருதரப்பு உறவில் கவனம் செலுத்த வேண்டும்' என்றும், "நாம் பகையாளியாக இல்லாமல் கூட்டாளிகளாக இருப்போம்' என்றும் கூறுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
  • எல்லையில் சீனா தனது கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருவதும், எல்லையோர கிராமங்களில் குடியேற்றத்தை அதிகரிப்பதும், ராணுவத்தைக் குவிப்பதும் இந்தியா எதிர்பார்க்காததல்ல. இந்தியாவும் எல்லையோரக் கட்டமைப்பு வசதிகளை விரைவுபடுத்தி வருகிறது. அதே நேரத்தில், பாங்காங் úஸா ஏரியில் சீனா கட்டிக்கொண்டிருக்கும் கனரக பாலம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சர்வதேச அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவு சீனா தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது. கொவைட் 19 நோய்த்தொற்று, தென்சீனக் கடல் நாடுகளுடன் மோதல் போக்கு, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைக் கடன் வலையில் சிக்க வைத்தது, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் படுகொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் என்று பல வகையிலும் சீனா எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.
  • வரையறுக்கப்படாத 3,500 கி.மீ. இந்திய - சீன எல்லை பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டால்தான், இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர சமாதானம் ஏற்படும். அதற்காக சில பகுதிகளை விட்டுக் கொடுத்தும், சில பகுதிகளைக் கேட்டு வாங்கியும் துணிந்து முடிவு காண்பதுதான் புத்திசாலித்தனம்.
  • எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கையிலும் கையாளப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய - சீன எல்லை பிரச்னைக்கு முடிவு காண்பதற்கான தருணம் இது.

நன்றி: தினமணி (27 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்