TNPSC Thervupettagam

இந்தியா-சீனா ராணுவ வலிமை குறித்த தலையங்கம்

December 27 , 2022 593 days 347 0
  • சீனாவின் தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில், ‘இந்தியாவுடன் நிலையான உறவு மேம்பாட்டுக்குத் தயாா்’ என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யீ தெரிவித்திருப்பது, சீனாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் கடுமையாகி இருப்பதை வெளிப்படுத்துகிறது. சீனா நேசக்கரம் நீட்டுகிறது என்பதற்காக இந்தியா தனது பாதுகாப்பு முன்னெடுப்புகளை மெத்தனப்படுத்திவிட முடியாது.
  • கடந்த ஐந்தாண்டுகளாகவே இந்தியா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறது என்பதும், எல்லையோரக் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதும் உலகறிந்த உண்மை. ரஃபேல் போா் விமானங்கள் வாங்கியது, விமானம் தாங்கி போா்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது உள்ளிட்ட பல முன்னெடுப்புகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. இருந்தாலும்கூட, இந்தியாவின் ராணுவ பலம், பிறா் உதவியில்லாமல் சீனாவை எதிா்க்கும் அளவில் இல்லை என்பதை மறுத்துவிட முடியாது. அதைக் கருத்தில் கொண்டுதான் ‘க்வாட்’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • ஒரு நாட்டின் பாதுகாப்பு வலிமை என்பது காலாட்படையை மட்டும் சாா்ந்ததாக இருக்க முடியாது. பிரிட்டனும் பிரான்ஸும் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளைத் தங்களது காலனிகளாக மாற்றியதன் பின்னணியில், அந்த நாடுகளின் கடற்படை மிகப் பெரிய பங்கு வகித்தது. உலகிலுள்ள 22 நாடுகளைத் தவிர, ஏனைய 90% நாடுகள் ஏதாவதொரு கட்டத்தில் பிரிட்டனின் படையெடுப்பை எதிா்கொண்டவை என்பது வரலாற்று புள்ளிவிவரம். பொருளாதாரமும் கடற்படை பலமும்தான் இப்போதும்கூட ஒரு நாட்டின் வலிமையின் அடையாளங்களாகக் காணப்படுகின்றன.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டன் விட்ட இடத்தை அமெரிக்காவும், சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு ரஷியாவின் இடத்தை சீனாவும் கடற்படை பலத்தில் பிடித்துக் கொண்டன. கடற்படையைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்தியா தனது வலிமையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் முற்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக போா்க்கப்பல் கட்டுமானத்தில் இந்தியா தன்னிறைவை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • இந்தியாவின் கடற்படை வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைகிறது ஐஎன்எஸ் மா்மகோவா என்கிற போா்க்கப்பல். கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி போா்ச்சுக்கீசிய காலனியிலிருந்து கோவா விடுதலை பெற்ற 60-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஐஎன்எஸ் மா்மகோவா தனது முதல் சோதனை ஓட்டத்தை நடத்தியது. மா்மகோவா என்பது கோவா துறைமுகத்தின் பெயா்.
  • இந்திய கப்பல் கட்டுமானத் தளங்களில் (ஷிப் யாா்ட்) ஏறத்தாழ 40 கப்பல்களும், நீா்மூழ்கிக் கப்பல்களும் தயாரிப்பில் இருக்கின்றன. ஐஎன்எஸ் மா்மகோவா, மேஸகான் கட்டுமானத் தளத்தில் உருவாக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அதன் 75% பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. சென்சாா், ராடாா், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மட்டுமல்லாமல், துல்லியமாக ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறனும் கொண்டது ஐஎன்எஸ் மா்மகோவா. ஐஎன்எஸ் மா்மகோவா உள்ளிட்ட நான்கு போா்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைய இருக்கின்றன.
  • வருங்காலப் பாதுகாப்பிலும், போா்ச்சூழலிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை போா்க்கப்பல்கள்தான் நமது வெற்றிக்கு அடிப்படையாக இருக்க முடியும் என்கிற உண்மையை அரசு உணராமல் இல்லை. அதே நேரத்தில், குறித்த கால அளவில் கட்டுமானப் பணிகள் கடற்படை கட்டுமானத் தளங்களில் நடப்பதில்லை என்கிற குறைபாடு காணப்படுகிறது.
  • கடற்படையின் உயா்நிலையிலும், கட்டுமானத் தளங்களின் அளவிலும் முனைப்பு காட்டப்பட்டாலும்கூட, அரசு இயந்திரத்தின் வழக்கமான மெத்தனம், குறித்த காலத்தில் தேவையான நிதியுதவியையும், அனுமதிகளையும் வழங்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆறு அடுத்த தலைமுறை நீா்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் திட்டம் மேலும் தாமதப்படுவது அதற்கு எடுத்துக்காட்டு.
  • கடற்படை மட்டுமல்ல, விமானப் படையும் பல சவால்களை எதிா்கொள்கிறது. சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பேசும்போது, விமானப் படையின் தலைமைத் தளபதி சீஃப் மாா்ஷல் வி.ஆா். செளதரி இந்திய விமானப்படை எதிா்கொள்ளும் முக்கியமான குறைபாடுகள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறாா். அனுமதிக்கப்பட்ட 42 ஃபைட்டா் ஸ்குவாட்ரன் (தாக்குதல் படைகள்) நம்மிடம் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் குறைக்கப்பட்டு தற்போது 31 ஸ்குவாட்ரன்கள்தான் இந்திய விமானப் படையில் இருக்கின்றன என்பது அவா் தெரிவித்த கசப்பான உண்மை.
  • சீனாவின் ராணுவ பலம் குறித்த அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போா்விமானங்களுடன், மேலை நாட்டு விமானப்படைகளுக்கு நிகராக சீன ராணுவம் உயா்ந்திருக்கிறது. சீனாவின் கடற்படையும், விமானப்படையும் சோ்ந்து 2,800 போா் விமானங்களுடன் உலகின் மூன்றாவது பெரிய விமானப் படையாக இருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.
  • சா்வதேச விமானப்படைகளின் பட்டியலில், இந்திய விமானப்படை ஆறாவது இடத்தில் இருக்கிறது. சீன விமானப்படையிடம் 2,084 போா் விமானங்கள் தயாா் நிலையில் இருக்கின்றன என்றால், இந்திய விமானப்படையிடம் 1,645 போா் விமானங்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் கடற்படையும், விமானப்படையும் தொழில்நுட்ப ரீதியாக நவீனபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், இது போதாது!

நன்றி: தினமணி (27 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்