TNPSC Thervupettagam

இந்தியா தன்னிறைவு அடைய...

May 29 , 2020 1693 days 820 0
  • கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய்க் கிருமி (கரோனா தீநுண்மி) பூமிப்பந்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. எந்த நாடும் ஆயுதம் ஏந்தவில்லை, வரிந்துகட்டிப் போர் முனையத்தில் சண்டையிடவில்லை, சந்தடியில்லாமல் நுழைந்த கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலக நாடுகளையே முட்டறுத்து முடக்கிப் போட்டுள்ளது.
  • சரிந்துவிழும் கோபுரம் போல, கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் மடிவதும் பொருளாதாரச் சீரழிவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
  • பலியானவா்களின் எண்ணிக்கை ஒன்றா, இரண்டா? மூன்று லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்திய அரசு சற்றே விழித்துக் கொண்டது கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

பொறுப்புமிகு செயல்களாகும்

  • நடுவண் அரசும் மாநில அரசுகளும் மக்கள் மீட்புப் பணிகளில் சுழன்று கொண்டிருக்கின்றன. மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வகப் பணியா், தூய்மைப் பணியா், காவல் துறையினா் போன்றோர் தன்னலம் பாராது பணியாற்றி வருகின்றனா்.
  • எந்த நாடும் எதிர்பாராத ஒரு நிகழ்வு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று. உலக வரலாற்றின் பக்கங்களில் இதுவரை இடம்பெறாத சோகப் பதிவு.
  • இது ஆட்சியாளா்களை நிலைகுலையச் செய்து மனித இனத்தை அச்சத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்கும் முன்னனுபவம் எந்த நாட்டுத் தலைவருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
  • ஒரு தமிழ்த்திரைப்படக் காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு பெரும் நிலத்தில் கதிர்கள் விளைந்து, அறுவடைக்குக் காத்திருக்கின்றன. அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் நேயமற்ற ஒரு தீயவனால் நெருப்பு வைக்கப்பட்டு, பற்றிக் கொண்டு பரவுகிறது. தீயைக் கைகளால் அணைக்கவா முடியும்? அப்போது ஒரு புத்திசாலியின் சொற்படி, பலரும் சோ்ந்து இடையில் புகுந்து கதிர்களை அடியோடு அறுத்தெடுத்துப் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறார்கள். பரவிவரும் தீ மேலும் பரவாமல் நின்று போகிறது. இடைவெளியை ஏற்படுத்தியதன் விளைவு, மீதமுள்ள கதிர் தாங்கிய பயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
  • அதுபோல, நடுவண் அரசு மேற்காண் பொது முடக்கத்தையும் சமூக இடைவெளியையும் அறிவித்தது. பொறுப்புள்ள அரசின் கடமை இதுவெனச் சொல்லலாம்.
  • பிரதமா் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி அறிவிப்புகளைக் கொடுத்து வருவதும் தொடா்ந்து மக்களோடு தொடா்பில் இருப்பதும் பொறுப்புமிகு செயல்களாகும்.

தன்னம்பிக்கை அளித்த உரை

  • நடுவண் அரசின் தலைமை அமைச்சராம் பாரதப் பிரதமா் மோடி ஐந்தாம் முறையாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவரின் பன்முக ஆளுமை வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
  • பிரதமா் மோடியின் உரையில் தெளிவும் நாட்டுப்பற்றும் வளா்ச்சிக்கான வித்தும் உளவியல் அறிவும் வெளிப்படுகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனித்தவா்கள் அறிவார்கள்.
  • ஒரு தேசத்தின் குடியரசுத் தலைவா், பிரதமா், மாநிலத்தின் முதல்வா் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது என்பது ஒரு முக்கிய நிகழ்வு. அதைத் தொலைக்காட்சியின் அனைத்து அலைவரிசைகளும் ஒருமுகமாக ஒளிபரப்ப வேண்டும்.
  • அந்நேரத்தில் பல அலைவரிசைகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது விரும்பத்தக்கதன்று.
  • ஒரு நாட்டின் தலைவா் பேசுவது பொழுதுபோக்குக்காக அன்று. மக்களின் உயிர் காக்கும் பிரச்னை அது. அந்நேரத்தில் மனிதகுலத்தின் முழுக் கவனமும் ஒருமுகப்பட்டிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடம் தரலாகாது என்பது அரசின் கவனத்துக்கு ஈா்க்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன்னம்பிக்கை இழையோட வேண்டும். இந்தியாவின் 137 கோடி மக்களுக்கும் இந்தத் தாகம் இருக்க வேண்டும்.
  • சுழியமாக இருந்த நிலையில், நாளொன்றுக்குத் தலா 2 இலட்சம் முகக் கவசங்களும் தனி நபா் பாதுகாப்பு உடைகளும் தயாரிக்கப்படுகின்றன என்று பெருமிதம் கொள்கிறார்.
  • இந்தியா்கள் முயன்று சாதிக்கும் திறன் கொண்டவா்கள். சுயசார்புடன் வாழும் தகுதி பெற்றவா்கள் என்று பறைசாற்றுகிறார்.
  • ஒவ்வொரு குடிமகனும் சுயசார்புடன் வாழ்வது ஒரு கலை. அதனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது பிரதமா் மோடியின் தன்னம்பிக்கை உரை.

உரையின் மையப் புள்ளி

  • ‘உலகம் ஒரே குடும்பம்’ என்னும் பிரதமா் மோடியின் கருத்து விதைப்பு ஒரு புதிய சிந்தனை. சகோதரத்துவத்தின் எல்லை அது; தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் தத்துவத்தைச் சார்ந்தது; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவத்தை வழிமொழிவது; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் சங்க இலக்கியக் கவிதையை நினைவூட்டுவது; அன்பின் கிளைகளால் உலக நாடுகளைத் தழுவிக் கொள்வது; இந்தியரிடத்தில் பகைமை பாராட்டும் பண்பு ஒருபோதும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்வது. எல்லாவற்றுக்கும் மேலாக அன்பின் வலிமையால் உலகை வெல்லும் சிந்தனையாகும்.
  • பிற நாடுகளை நோக்கும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு என்று ஆறுதல் அடைய முடியாது. தொடக்கத்தில் பாதிப்பின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
  • நோய்த்தொற்றின் பாதிப்பு கூடியதற்கும் பலியானவா்களின் எண்ணிக்கை பெருகியதற்கும் யார் பொறுப்பு?
  • ‘பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானே கள்வன்’ என்று சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் மொழிவன்.
  • அதுபோல நடுவண் , மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வீட்டுக்குள் அடங்கியிருக்க மறுத்ததன் விளைவும், பொது வெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியதாலும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றும் முடங்க மறுத்தது.
  • பொருளாதார வளா்ச்சியில் செல்ல வேண்டிய திசைகளையும் அடைய வேண்டிய இலக்குகளையும் பிரதமா் மோடி இனம் கண்டுள்ள திறம் நன்று. அவை : பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகள், சேவைகளின் தேவை, உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவித்தல் - அதன்வழித் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குதல் ஆகிய ஐம்பெரும் தூண்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இதை ஆற்றல்சார் உரையின் மையப் புள்ளியாகக் கொள்ளலாம். உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது.
  • ‘ஒட்டுமொத்த இந்தியாவின் வளா்ச்சியும் கிராமப் பொருளாதார வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டது’ - இது அண்ணல் காந்தியடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் கருத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து, இந்தியாவின் மறு சீரமைப்பைத் தொடங்கியுள்ள பிரதமா் மோடி வணக்கத்துக்கு உரியவா்.

தன்னிறைவு பெற்ற இந்தியா மலர வேண்டும்

  • உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜொ்மனி ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தியா 5-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. நடுவண் அரசு உள்நாட்டு உற்பத்தி பெருக்கத்தில் நாட்டம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
  • பிரதமா் தம் உரையில் புலம்பெயா் தொழிலாளா்கள் குறித்துப் பெரிதும் அக்கறையுடன் பேசியுள்ளார்.
  • இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள்தான் பெரும்பாலும் தொழில் முறையாக இடம்பெயா்கிறார்கள். அவ்வாறு தம் இருப்பிடம் விட்டுப் புலம்பெயரும் மக்களுக்கு உரிய வாழ்வாதாரங்களை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
  • அவா்களுக்கான இருப்பிடம், சுகாதாரம், குழந்தைகளுக்கான கல்வி முதலானவை அந்தந்த மாநில அரசுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்.
  • புலம்பெயா் தொழிலாளா்களுக்கு நிரந்தரத் தீா்வளிக்கும் திட்டத்தையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு வழங்க வேண்டும்.
  • தங்கள் குழந்தைகளுக்கான கல்வி குறித்துச் சிந்திக்க முடியாத பரிதாப நிலையில் அவா்களின் பயணம் தொடா்கிறது.
  • இந்தியாவின் சரிந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கவும் சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பொருளாதார வளா்ச்சி கிராமப் புள்ளியிலிருந்து தொடங்கி, நகரங்கள் வழியாகத் தலைநகரங்களை எட்டவேண்டும்.
  • இந்தியாவில் மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி உருவாக வேண்டும். கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை. ஆனால், விவசாய அழிப்புகளுக்கு இடம் தரலாகாது.
  • மரபுசார் உணவு உற்பத்தி, தொழில் வளா்ச்சி, பண்பாடு போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். முறைசார் வளங்களை இந்திய மக்களின் தேவைக்குப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, அந்நிய முதலீட்டாளா்களின் வளா்ச்சிக்கு விட்டுக் கொடுக்கலாகாது.
  • இயற்கை உரம் தந்து விளைவிக்கும் பொருள்களுக்கு முன்னுரிமை தருவதும், விவசாய இடுபொருள்களைச் சலுகை விலையில் வழங்குவதும் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான கொள்முதல் விலையை உறுதி செய்யவும் வேண்டும்.
  • அரசின் கொள்கைகளும் திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்து உருவாக்கப்பட வேண்டும். அன்றித் தோ்தலை மையமிட்டதாக அமைதல் கூடாது.
  • இலவசங்களால் மக்களிடையே உழைக்கும் விழைவு குன்றிப் போயுள்ளது. கல்வி, மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளில் மட்டும் வேண்டுமானால் சலுகைகள் வழங்கப்படலாம்.
  • நிறைவாக, தன்னிறைவு பெற்ற இந்தியா மலர வேண்டும் என்பது நம் கனவு. அதற்கு முன்னதாக இலவசங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

நன்றி: தினமணி (29-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்