- இந்தியாவில் கடந்த சில வருடங்களாகப் புற்றுநோய் பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதே நிலை தொடர்ந்தால் புற்றுநோயின் தலைநகராக இந்தியா மாறக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
- வருடத்துக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்கள். இச்சூழலில் அடுத்த 20 வருடங்களில் புற்றுநோயின் பாதிப்பு எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
என்ன காரணம்?
- உலக சுகாதார நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கைபடி, இந்தியாவில் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான புற்றுநோய் இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆரோக்கியமற்ற உணவுமுறை, சூழல் மாசு, மோசமான வாழ்க்கை முறை (புகைபிடித்தல், மது அருந்துதல்) போன்றவற்றால் இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்குப் பாதிப்பு அதிகம்:
- ஆண்களைக் காட்டிலும் பெண்களே புற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் ஆண்களிடையே அதிகம்.
- பெண்கள் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்கள், நுரையீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் போன்றவற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
புற்றுநோயைத் தவிர்க்க:
- புற்றுநோய் வருவதைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட உணவு, செயற்கை இனிப்பூட்டிகள், உப்பு, நொறுக்குத் தீனிகள் போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலு மாக விலகி இருப்பது உடல் நலத்துக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)