TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 11

December 7 , 2024 31 days 310 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 11

(For English version to this please click here)

மிஷன் இந்திரதனுஷ் (IMI) 5.0

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • அக்டோபர் 18, 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு.

நோக்கங்கள்:

  • தொண்டை அழற்சி, டெட்டனஸ், போலியோ, தட்டம்மை, ரூபெல்லா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை உள்ளடக்கிய பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான பரவலை அதிகரித்தல்.
  • வழக்கமான நோய்த் தடுப்புச் சேவைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்தல்.

  • இந்த நோய்களுக்கான தடுப்பூசிப் பரவலை மேம்படுத்துவதன் மூலம் 2023 ஆம் ஆண்டிற்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை ஒழிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
  • குறிப்பாக மருத்துவ வசதிகளை அணுக முடியாத பகுதிகளில் உள்ள எந்தவொரு குழந்தையோ அல்லது கர்ப்பிணிப் பெண்ணோ அத்தியாவசியத் தடுப்பூசிகளைத் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்தல்.
  • நோய்த் தடுப்புச் சேவைகளைக் கண்காணிக்க U-WIN எண்ம தளத்தைப் பயன்படுத்துதல்.

பயனாளிகள்:

  • 5 வயது வரையிலான குழந்தைகள் (2 வயது வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்ட முந்தைய முன்னெடுப்புகளில் இருந்து நீட்டிக்கப் பட்டது).
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள்.
  • வழக்கமான தடுப்பூசிகளை தவற விட்ட கர்ப்பிணிப் பெண்கள்.

பலன்கள்:

  • மேம்படுத்தப்பட்ட நோய்த் தடுப்பு பரவல்: குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள மக்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அடைய முடியாத பகுதிகளில் அதிகரிக்கப்பட்ட தடுப்பூசி விகிதங்கள்.

  • குறைக்கப்பட்ட நோய்ச் சுமை: தடுப்பூசியினால் தடுக்கக் கூடிய நோய்களால் நோயின் வீரியம் மற்றும் இறப்பு குறைந்துள்ளது.
  • குறைந்த செலவில் பொது சுகாதார உத்திகள்: நோய்த் தடுப்பு என்பது பொது சுகாதாரத்தில் மிகவும் குறைந்த செலவுடைய தலையீடுகளில் ஒன்றாகும்.
  • சுகாதார இலக்குகளுக்கான ஆதரவு: உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குப் பங்களிக்கிறது (அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு SDG 3, நாடுகளுக்கு உள்ளும் நாடுகளுக்கிடையிலும் குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் SDG 10).

கூடுதல் தகவல்கள்:

  • மூன்றாவது சுற்று 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிக்க சில விதிவிலக்குகளுடன் (பீகார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பஞ்சாப்) திட்டமிடப்பட்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விழிப்புணர்வு முகாம்கள் முடிவடைந்துள்ளது.
  • இந்திர தனுஷ் திட்டத்தின் முந்தையக் கட்டங்களில் 5 கோடி குழந்தைகளுக்கும், 1.25 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

  • IMI 5.0 முகாமானது விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை அதிகரிக்க என்று சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் உள்ளூர்ப் பிரதிநிதிகள் (கிராம ஊராட்சித் தலைவர்) போன்ற புதுமையான முறைகளைக் கையாள்கிறது.
  • U-WIN தளத்தின் பயன்பாடு, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் விளைவுகளை உறுதிப்படுத்த, நோய்த் தடுப்புத் தரவின் நிகழ்நேரக் கண்காணிப்பை அனுமதிக்கிறது.

தீவிரப் படுத்தப் பட்ட இந்திரதனுஷ் திட்டத்தின் (IMI) கட்டங்கள்:

  • IMI 1.0: 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, வழக்கமாகப் போடப்படும் தடுப்பூசியை தவற விட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதில் பெரும் கவனம் செலுத்துகிறது.

  • IMI 2.0: 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைந்த நோய்த் தடுப்பு விகிதம் உள்ள பகுதிகளில் இருக்கின்றக் கர்ப்பிணிப் பெண்களை இலக்காகக் கொண்டது.

  • IMI 3.0: 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, கோவிட்-19 இடையூறுகளால் ஏற்பட்ட பரவல் இடைவெளிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • IMI 4.0: 2022 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது, அனைத்து மாவட்டங்களிலும் பரவல்களை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

பொது நோய்த் தடுப்புத் திட்டம் (UIP):

  • தொடங்கப்பட்ட ஆண்டு: 1978 (விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டமாக அறிமுகப் படுத்தப் பட்டது), 1985 ஆம் ஆண்டில் UIP எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
  • வழங்கப்படும் தடுப்பூசிகள்: போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, கல்லிரல் அழற்சி (ஹெபடைடிஸ்) B மற்றும் பல நோய்கள் உட்பட முன்கூட்டியே தடுக்கக் கூடிய நோய்களுக்கான 12 தடுப்பூசிகளை UIP உள்ளடக்கியது.
  • நோக்கம்: குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குதல் மற்றும் முழு நோய்த் தடுப்புப் பரவலை அடைதல்.
  • முக்கிய சாதனை: 2014 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாகச் சான்றிதழ் பெற்றது.

இந்தியாவில் நோய்த் தடுப்பு நிலை:

  • முன்னேற்றம்: 12-23 மாத வயதுடைய குழந்தைகளிடையே முழுமையான நோய்த் தடுப்புப் பாதுகாப்பு என்பது 62% என்ற அளவிலிருந்து (NFHS-4) 74% (NFHS-5) ஆக அதிகரித்துள்ளது.
  • தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி: NFHS-4 மற்றும் NFHS-5 ஆகியவற்றுக்கு இடையே பரவலானது 81% அளவிலிருந்து 88% ஆக அதிகரித்துள்ளது.
  • புதிய தடுப்பூசிகள்: ரோட்டா வைரஸ், நிமோகோகல் துணைத் தடுப்பு மருந்து (PCV) மற்றும் செயல்படுத்தப் படாத போலியோ தடுப்பூசி (IPV) பொது நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப் பட்டது.

சாக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • நிதியாண்டு 2021-22 ஆம் ஆண்டில், 15வது நிதிக் குழுவின் மூலம் (2021-22 முதல் 2025-26 வரை) இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (MWCD) ஆனது இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முதன்மை அமைச்சகமாகும்.
  • யோகா போன்ற ஆரோக்கிய நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தொழில்நுட்ப ஆதரவை ஆயுஷ் அமைச்சகம் வழங்குகிறது.

நோக்கங்கள்:

  • மனித மூலதன வளர்ச்சி: ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதன் மூலம் மனித மூல தனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்.
  • ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்தல்: குழந்தைகள், பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து குறைபாட்டைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது.

  • ஊட்டச்சத்து விழிப்புணர்வு: ஊட்டச்சத்து விழிப்புணர்வு மூலம் நல்ல உணவுப் பழக்கம் மற்றும் நிலையான ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: முக்கிய உத்திகள் மூலம் ஊட்டச்சத்து தொடர்பான பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
  • ஆயுஷ் ஒருங்கிணைப்பு: ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த ஆயுஷ் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs): குறிப்பாக SDG 2 (பட்டினியின்மை), இலக்கு 03 (அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) மற்றும் SDG 4 (தரமான கல்வி) ஆகிய இலக்குகளுக்குப் பங்களிக்கிறது.

பயனாளிகள்:

  • குழந்தைகள்: 6 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை.
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (PWLM).
  • பருவப் பெண்கள்: குறிப்பாக உயர் லட்சிய மாவட்டங்கள் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தில் (NER) உள்ள 14 முதல் 18 வயது வரையுள்ள பருவப் பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • பொதுவான தகுதி: அனைத்துப் பயனாளிகளும் ஆதார் அடையாளத்துடன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • இளம் பருவப் பெண்கள்: குறிப்பாக உயர் லட்சிய மாவட்டங்கள் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தில் இலக்கு குழுவிற்கு (14-18 வயது) மாநிலங்களால் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

பலன்கள்:

  • துணை ஊட்டச்சத்து திட்டம் (SNP): குழந்தைகள் (6 மாதங்கள் முதல் 6 வயது வரை), கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பருவப் பெண்களுக்கான ஊட்டச்சத்து ஆதரவினை வழங்குதல்.
  • ஆரம்பகால குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி: குழந்தைகளுக்கான வயதுக்கு ஏற்ற கல்வி (3-6 ஆண்டுகள்) மற்றும் குழந்தைகளுக்கான ஆரம்ப கால வளர்ச்சி (0-3 ஆண்டுகள்).

  • உள்கட்டமைப்பு: இணைய இணைப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் திறன் கற்றல் கருவிகள் போன்ற நவீன வசதிகளுடன் அங்கன்வாடி மையங்களை (AWCs) மேம்படுத்துதல்.
  • போஷன் அபியான்: சமூகம் சார்ந்த நிகழ்வுகள், மக்கள் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதல் ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்து விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
  • குபோஷன் முக்த் கிராமங்களுக்கு ஊக்கத் தொகை: ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத கிராமங்களாக மாற்ற ஊக்கப் படுத்தப் படுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • நிதியளிப்பு முறை: மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான செலவு-பகிர்வு விகிதம் 60:40, வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகள்.
  • சமூகம் சார்ந்த நிகழ்வுகள் (CBEs): பெரிய அளவிலான சமூக ஈடுபாட்டிற்காக போஷன் மா (செப்டம்பர்) மற்றும் போஷன் பக்வாடா (மார்ச்) போன்ற நிகழ்வுகளை போஷன் அபியான் ஏற்பாடு செய்கிறது.

  • தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் சிறந்தத் தரவுக் கண்காணிப்பிற்காக RCH தளத்துடன் (அன்மோல் செயலி) ஒருங்கிணைக்க ‘போஷன் கண்காணிப்பு’ அறிமுகப்படுத்தப் பட்டது.
  • திறன்பேசி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குதல்: முன்னணி ஊழியர்களுக்கு (அங்கன்வாடி பணியாளர்கள்) சிறந்த சேவை வழங்குவதற்காக வேண்டி திறன்பேசிகளை மேம்படுத்துதல்.

பிரதான் மந்திரி சுரக்சித் மாத்ரித்வா அபியான் (PMSMA)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஜூன் 9, 2016.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு.
  • பிரதான் மந்திரி சுரக்சித் மாத்ரித்வா அபியான் திட்டம் மகப்பேறு இறப்பைக் குறைப்பதையும், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் கர்ப்ப காலத்தில் போதுமான மற்றும் சரியான நேரத்தில் சுகாதாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

நோக்கங்கள்:

  • அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் 2வது / 3வது மூன்று மாதங்களில் உத்தரவாதமான, விரிவான மற்றும் தரமான வகையில் பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சையை (ANC – ante natal care) இலவசமாக வழங்குதல்.
  • இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் ஒரு மருத்துவர் அல்லது நிபுணரால் பிறப்புக்கு முந்தைய தருணத்தில் குறைந்தபட்சம் ஒரு பரிசோதனையை உறுதிப்படுத்தல்.
  • நோய்க் கண்டறிதல் சேவைகள், மருத்துவ நிலைகளுக்கான ஆய்வு செய்தல் மற்றும் இரத்த சோகை, கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு போன்ற தற்போதைய நிலைமைகளின் சரியான மேலாண்மை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தல்

  • அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம் அவற்றை நிர்வகித்தல்.
  • குறிப்பாக அரசாங்க வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் சேவைகளை வழங்குவதற்கு தனியார் துறைப் பங்களிப்பை ஊக்குவித்தல்.
  • முந்தைய காலத்தில் பிறப்பிற்கு முன்பான பாதுகாப்பு (ANC) குறித்த வருகைகளைத் தவற விட்ட அல்லது பதிவு செய்யப்படாத கர்ப்பிணிப் பெண்களை அணுகுதல்.

பயனாளிகள்:

  • இந்தியா முழுவதும் 2வது மற்றும் 3வது மாதங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்.
  • அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள், ANC வருகைகளைத் தவற விட்ட பெண்கள் மற்றும் ANC அமைப்பில் பதிவு செய்யாத பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது.

தகுதி அளவுகோல்கள்:

  • 2வது அல்லது 3வது மூன்று மாதங்களில் உள்ள எந்தவொரு கர்ப்பிணிப் பெண்ணும் மருத்துவ சேவைகளை அணுக தகுதியுடையவர்கள்.
  • இந்தத் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்களை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பலன்கள்:

  • மீயோலித் திறன் பரிசோதனை (அல்ட்ராசவுண்ட்), இரத்தப் பரிசோதனைகள் மற்றும் பிற தேவையான ஆய்வுகள் போன்ற கண்டறியும் சோதனைகள் உட்பட விரிவான பிரசவத்திற்கு முந்தையப் பராமரிப்புச் சேவைகளை வழங்குதல்.
  • இரும்பு மற்றும் ஃபோலிக் அமில (IFA) மாத்திரைகள் மற்றும் கால்சியம் துணை மருந்துகள் ஆகிய மருந்துகளுக்கான அணுகல்.
  • தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பிரசவ கால ஆபத்து அறிகுறிகள், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப் படும் பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆலோசனை அமர்வுகள்.
  • அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களைக் கண்டறிதல் மற்றும் அதில் தொடர்ந்து கவனம் செலுத்துதல்.
  • கர்ப்பத்தின் ஆரோக்கிய நிலையைக் குறிக்கும் வண்ணக் குறியிடப்பட்ட ஒட்டுப் பட்டைகளுடன் கூடிய தாய் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு (MCP) அட்டைகளை வழங்குதல்.
  • இந்தத் திட்டம் பாதுகாப்பானத் தாய்மை நடைமுறைகள், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப் படும் பிரசவம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விருப்பங்கள் பற்றிய பல்வேறு இலவச ஆலோசனைகளையும் வழங்குகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்கள் போன்ற நியமிக்கப்பட்ட பொது சுகாதார வசதிகளில் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதி PMSMA நடத்தப்படுகிறது.

  • இந்த முன்னேடுப்பில் பொது சுகாதார மையங்களில் சேவைகளை வழங்க, தனியார் நிறுவனங்கள் முன் வந்து சுகாதார வழங்குநர்களுடன் ஒத்துழைக்க முடிகிறது.
  • ஒரு எண்மத் தளம், e-PMSMA, அதிக ஆபத்துள்ள நேரும் பிரசவங்களைக் கண்காணிப்பதோடு, மேலும் பிரசவத்திற்குப் பிறகு 45 நாட்கள் வரை தொடர்ந்து பின்தொடர்வதையும் இது உறுதி செய்கிறது.

               -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்