இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 15
(For English version to this please click here)
ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் (EMRS)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்.
- பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS): பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
நோக்கங்கள்:
- குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குதல்.
- பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களிடையே கல்வி அணுகலில் உள்ள இடைவெளியைக் குறைத்தல்.
- ST மாணவர்கள் கல்வியில் உள்ள வாய்ப்புகளை அணுகுவதற்கும், பொது மக்களுடன் அவர்களை இணைப்பதற்கும் உதவுதல்.
- கல்வி கற்றல் மட்டுமல்ல, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கல்விக்கான முழுமையான அணுகுமுறையை வழங்குதல்.
பயனாளிகள்:
- இந்தியா முழுவதும் உள்ள தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) மாணவர்கள்.
- ST பிரிவு அல்லாத மாணவர்களை மொத்த இடங்களில் 10% வரை அனுமதிக்கலாம்.
தகுதி அளவுகோல்கள்:
- நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொலைதூரப் பகுதிகளில் உள்ள ST மாணவர்கள்.
- பொதுவாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான சேர்க்கை.
- ST பிரிவு அல்லாத மாணவர்களுக்கு, மொத்த இடங்களில் அதிகபட்சமாக 10% இடங்கள் உள்ளன.
பலன்கள்:
- இலவசக் கல்வி: கல்வி, உறைவிடம், தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் உட்பட.
- பாடத்திட்டம்: இது CBSE பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதோடு, தேசியத் தரநிலைகளுடன் இது சீரமைக்கப் படுவதை உறுதி செய்கிறது.
- திறன்: ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 480 மாணவர்கள் தங்கியுள்ளனர், மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இங்கு சமமான இடங்கள் உள்ளன.
- கலாச்சாரப் பாதுகாப்பு: உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- திறன் மேம்பாடு: விளையாட்டு மற்றும் தொழில் திறன்களில் கவனம் செலுத்தும் பயிற்சி இங்கு வழங்கப் படுகிறது.
- விரிவான வசதிகள்: கல்வியாளர்கள், விளையாட்டு மற்றும் கலைகளுக்கான அதிநவீன உள்கட்டமைப்புகளை உள்ளடக்கியது.
கூடுதல் தகவல்கள்:
- EMRS பள்ளிகள் கிராமப்புறங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் நவோதயா வித்யாலயாக்களின் தரத்துடன் பொருந்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- 50%க்கும் மேற்பட்ட ST மக்கள்தொகை மற்றும் குறைந்தது 20,000 பழங்குடியின மக்கள் உள்ள ஒவ்வொரு தொகுதியும் 2022 ஆம் ஆண்டிற்குள் EMRS பள்ளியினைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கல்வி வழங்குவதில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி, EMRS பள்ளிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் விரிவுபடுத்தி வருகிறது.
- சமீபத்தில், EMRS பள்ளிகளுக்கான பணியாளர்களின் பொறுப்பு NESTS அமைப்பிற்கு மாற்றப் பட்டது, இந்தப் பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்களைப் பணியமர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.
- இருப்பினும், ஆட்சேர்ப்பினை மையப்படுத்தல் மற்றும் கட்டாயத் தேவையாக இந்தி மொழித் திறனை அறிமுகப் படுத்துதல் ஆகியவை குறிப்பாக, இந்தி குறைவாகப் பேசப்படும் தென் மாநிலங்களில் சில சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
- இதனால் இந்தப் புதிய முறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து எதிர்ப்புகளும், இடமாறுதல் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
- ST பிரிவு சமூகங்கள் நவீன கல்வியினை அணுகுவதை உறுதி செய்வதில் இந்தப் பள்ளிகள் ஒருங்கிணைந்தவை, அதே நேரத்தில் அவர்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
ராஷ்ட்ரிய அவிஷ்கர் அபியான் (RAA)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கல்வி அமைச்சகம்.
- இந்த முன்னெடுப்பு சமக்ரா சிக்சா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நோக்கங்கள்:
- குழந்தைகள் (6 முதல் 18 வயது வரை) அறிவியல், கணிதம் மற்றும் ஆய்வின் மூலம் தொழில் நுட்பம் அறிதல், கண்காணிப்பு மற்றும் நடைமுறைப் பயன்பாடு மூலம் கல்வி கற்க ஊக்கப் படுத்துதல்.
- பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தையும், உற்சாகத்தையும், புத்தாக்க உணர்வையும் உருவாக்குதல்.
- திறனாய்வு அடிப்படையிலான கற்றலை ஊக்குவித்தல், புதுமை மற்றும் கற்றல் ஆகியவற்றைக் கொண்டு கலாச்சாரத்தை மேம்படுத்துதல்.
- வகுப்பறை மற்றும் வகுப்பறை அல்லாத செயல்பாடுகளை உள்ளடக்கியதன் மூலம் அறிவியல் மற்றும் கணிதக் கல்வியை மிகவும் ஈடுபாட்டுடனும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுதல்.
- இடைநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவளிப்பதில் உயர் கல்வி நிறுவனங்களின் (HEIs) ஈடுபாட்டை ஊக்குவித்தல்.
- தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 என்பதின் படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் வடிவமைப்புச் சிந்தனை போன்ற சமகாலப் பாடங்களைப் பாடத் திட்டத்தில் ஒருங்கிணைத்தல்.
பயனாளிகள்:
- 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள்.
- ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள்.
- திறந்தவெளிப் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் கல்வி பெறும் (மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான) குழந்தைகள்.
- மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசு பள்ளிகள், நவோதயா வித்யாலயாக்கள், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகள்.
தகுதி அளவுகோல்கள்:
- அரசு மற்றும் உள்ளாட்சி பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் (நவோதயா, கேந்திரிய வித்யாலயாக்கள்), திறந்தவெளிப் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் உள்ள குழந்தைகள்.
- வயது பிரிவு: 6 முதல் 18 வயது வரை.
பலன்கள்:
- கற்றல், சோதனைகள் மற்றும் மாதிரி உருவாக்கம் மூலம் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடு.
- திறனாய்வு அடிப்படையிலான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவை ஊக்குவிக்கப் படுகிறது.
- பள்ளி சார்ந்த மற்றும் வெளிப்புறச் செயல்பாடுகள் (எ.கா., அறிவியல் அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு வருகை) மூலம் ஆர்வமுள்ள மற்றும் புதுமையான மனநிலையை உருவாக்குதல்.
- பள்ளிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து (HEIs) வழிகாட்டுதல்.
- ஆர்வமூட்டக்கூடிய அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் பொருட்கள்.
- போட்டிகள், ஒலிம்பியாட்கள் மற்றும் பிற அறிவியல் தொடர்பான நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ளும் சூழல்களை உருவாக்குதல்.
- அறிவியல் மற்றும் கணிதக் கல்வியின் முக்கியத்துவத்தைச் சமூகமாக அறிதல்.
கூடுதல் தகவல்கள்:
- RAA ஆனது சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் செயல்படுவதோடு, இது கல்வியின் தரம் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துகிறது.
- இந்த முன்னெடுப்பானது அறிவியல் சங்கங்கள், கணித மேளாக்கள் மற்றும் ஆசிரியர் வட்டங்கள் போன்றவற்றை ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன் உள்ளடக்குகிறது.
- கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆசிரியர் தயாரிப்பை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
- உயர் கல்வி நிறுவனங்கள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிகளில் மாணவர் பங்கேற்பு ஆகியவற்றுக்கான களப் பயணத்தை RAA ஆதரிக்கிறது.
தகுதி அடிப்படையிலான தேசியக் கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் (NMMSS)
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கல்வி அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை.
நோக்கங்கள்:
- இரண்டாம் நிலை (ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் கல்வியைத் தொடர ஊக்குவித்தல்.
- கல்வித் திறனை வளர்ப்பதற்கும், நிதி உதவி மூலம் கல்விக்கான தடைகளைக் குறைப்பதற்கும் உதவுதல்.
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்து, தேசிய வளர்ச்சிக்குப் பங்களித்தல்.
பயனாளிகள்:
- சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள்.
- அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்.
- அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சத்திற்கு மேல் இல்லாத மாணவர்கள்.
தகுதி அளவுகோல்கள்:
- மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் அல்லது உள்ளாட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
- கேந்திரிய வித்யாலயாக்கள் (KVs), ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNVs) அல்லது குடியிருப்புப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பங்கு பெற தகுதி அற்றவர்கள்.
- தேர்வின் போது, மாணவர் VIII வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் (SC/ST மாணவர்களுக்கு 5% தளர்வு உண்டு).
மாணவர்கள் இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்:
- மனத் திறன் தேர்வு (MAT)
- மாணவர்களுக்கான தகுதித் தேர்வு (SAT)
- இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கு எடுக்க வேண்டியது மொத்தத்தில் 40% ஆகும் (SC/ST மாணவர்களுக்கு 32% தளர்வு) .
பலன்கள்:
- உதவித் தொகையாக ரூ. 12,000 ரூபாய் (மாதம் ரூ. 1,000) ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு வழங்கப் படுகிறது.
- உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் செலுத்தப் படுகிறது.
- உதவித் தொகையானது மாணவர் தமது திறன் புதுப்பித்தல் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், வகுப்பு IX முதல் XII வரையிலான முழு காலத்திற்கும் புதுப்பிக்கத்தக்கது.
கூடுதல் தகவல்கள்:
- இந்தத் திட்டம் தேசிய உதவித்தொகை தளத்துடன் (NSP) முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளது.
- இந்தப் புதுப்பித்தலுக்குப் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் தேவை (SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5% தளர்வு).
- பதவி உயர்வுக்கான அளவுகோல்கள்: மாணவர் தொடர்ச்சியான உதவித் தொகைக்கான முதல் முயற்சியில் IX முதல் X வகுப்பு வரை மற்றும் XI முதல் XII வகுப்பு வரை தேர்ச்சி பெற வேண்டும்.
- மாநில விதிமுறைகளின்படி மாநில வாரியான இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
- வெளிநாட்டில் படிக்கும் அல்லது டிப்ளமோ / சான்றிதழ் படிப்புகளுக்கு இதில் உதவித் தொகை வழங்கப் படுவதில்லை.
பதே பாரத் பாதே பாரத் திட்டம்
தொடங்கப்பட்ட ஆண்டு:
அமைச்சகம் அல்லது தலைமை முகமை:
- கல்வி அமைச்சகம் (முன்னாள் மனித வள மேம்பாட்டு அமைச்சகம்).
நோக்கங்கள்:
- குழந்தைகள் சுதந்திரமாகவும், உந்துதலாகவும், ஈடுபாடுடைய வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குவதற்கு உதவுதல்.
- அளவீடு, எண்கள் மற்றும் வடிவங்களின் களத்தில் தர்க்க அறிவைக் குழந்தைகள் புரிந்து கொள்ள உதவுதல்.
- இடஞ்சார்ந்தப் புரிதல் மற்றும் எண்ணியல் மூலம் சுயாதீனமான சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துதல்.
- எழுதுவதையும், வாசிப்பதையும் நிஜ வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களுடன் தொடர்புபடுத்துதல்.
- எழுதுதல் மற்றும் வாசிப்புத் திறன்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் போது வீட்டிலிருந்து பள்ளிக்குச் சுமூகமான மாற்றத்தை எளிதாக்குதல்.
பயனாளிகள்:
- அரசு தொடக்கப் பள்ளிகளில் குறிப்பாக I மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள்.
- பால்வதிகா (ஆரம்பக் கல்வி) முதல் வகுப்பு 8 வரையிலான பள்ளிக் குழந்தைகள், அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணில் கவனம் செலுத்துகின்றனர்.
தகுதி அளவுகோல்கள்:
- அரசு தொடக்கப் பள்ளிகளில் (I-II வகுப்புகள்) அல்லது பால்வதிகா (ஆரம்பக் கல்வி) முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள்.
- இந்தத் திட்டம் ஆரம்ப காலக் கல்வியறிவு மற்றும் எண்ணில் ஆதரவு தேவைப்படுகின்ற, குறிப்பாக இந்த அடிப்படையிலான திறன்களில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது,.
பலன்கள்:
- அதிக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.
- ஆரம்பக் கல்வியில் இருந்து, குறிப்பாக குழந்தைகளின் தாய்மொழியில் கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- இது திறனாய்வின் மூலம் சிந்தனை, சொற்களஞ்சியம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இது வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வெளிப்படுத்தும் குழந்தையின் திறனை மேம்படுத்துகிறது.
- வசதியான மொழிகளில் படிக்கும் பொருட்களை வழங்குகிறது என்பதோடு படிப்படியாக குழந்தைகளை ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்துகிறது என்பதனால் இது எதிர்கால வெற்றிக்கு அவசியமாகும்.
கூடுதல் தகவல்கள்:
- சர்வ சிக்சா அபியான் (SSA) திட்டத்தின் ஒரு துணை அங்கமான இந்தத் திட்டம் இப்போது சமக்ரா சிக்சாவில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
- பதே பாரத் பாதே பாரத் திட்டத்தில் ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுக்கள் (SMCகள்) ஆகியோருக்கான திறனை வளர்ப்பதும் அடங்கும்.
- பல்வேறு செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடையே மகிழ்ச்சியான வாசிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், 2022 ஆம் ஆண்டில் 100 நாள் பதே பாரத் வாசிப்பு பிரச்சாரம் தொடங்கப் பட்டது.
- இது மாற்றுக் கற்பித்தல், பள்ளிகளுக்கான நூலக மானியங்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் அறிவியல் மற்றும் கணிதப் பெட்டிகளை வழங்குதல் போன்ற பல்வேறு முயற்சிகளை ஆதரிக்கிறது.
-------------------------------------