TNPSC Thervupettagam

இந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை

May 22 , 2022 1029 days 576 0
  • காவிரிப் படுகையின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம், அந்த அமைப்பின் தலைவரும் மாநில முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. 2012-ல் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கிய காவிரிப் படுகை மக்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 2013-ல் இடைக்காலத் தடையையும், 2015-ல் நிரந்தரத் தடையையும் விதித்தார்.
  • ஆனாலும், ஒன்றிய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய HELP (Hydrocarbon Exploration Licencing Policy) கொள்கையின் அடிப்படையில், மாறுபட்ட வடிவங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் உட்புகுந்தன. அதன் விளைவாக, காவிரிப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்துக்கும் எதிர்ப்பு உருவானது. எனவே, 2020-ல் காவிரிப் படுகையின் பிரதானப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.
  • 20.02.2020-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் பழனிசாமியால் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட’த்தை வரவேற்ற இன்றைய முதல்வர், மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரியும், விடுபட்ட காவிரிப் படுகைப் பகுதிகளை இணைக்கக் கோரியும் வெளிநடப்பு செய்தார். ஆனாலும், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 2020-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
  • அந்தச் சட்டப்படி தமிழ்நாடு அளவில் முதல்வர் தலைமையிலான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் அமைக்க வேண்டும். அதில் துறைசார் அமைச்சர்கள், அலுவலர்கள் 20 பேரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மூவர், வேளாண் அறிவியல், தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளைச் சேர்ந்த தலா ஒரு நிபுணர்கள் என 29 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
  • சட்டத்தின் விதி எண் 7(1) படி, தேவையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டலாம் என்று கூறப்பட்டாலும், ஆண்டுக்கு இரண்டு முறை கண்டிப்பாகக் கூட்டம் நடத்த வேண்டும். செப்டம்பர் 2020-லேயே அமைப்பு உருவாக்கப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, மற்றும் விவசாயப் பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்ட பின்னரும் அன்றைய அரசு ஆணையக் கூட்டத்தைக் கூட்டாத சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
  • 2021-ல் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, முதல் முறையாக வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்தது. அதை வரவேற்ற அதே வேளையில், ஆணையத்தை விரைந்து கூட்டுமாறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன.
  • அதனைத் தொடர்ந்து விதி எண் 6(1)படி புதிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ஜனவரி 2022-ல் மாநில அரசு நியமித்தது. சட்டம் அரசிதழில் வெளிவந்து 21 மாதங்கள் கழித்து, நடைபெற்ற முதல் கூட்டம் வரவேற்கக் கூடிய ஒன்று. கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர், முந்தைய அரசு கொண்டுவந்த சட்டம் என்றாலும் அதன் கூறுகளை முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று கூறியிருப்பது சிறப்பானது.
  • விதி எண் 10-ன்படி மாநில ஆணையத்தின் முடிவுகளைச் செயல்படுத்தவும் மற்றும் ஆணையத்துக்கு உதவிசெய்யும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் துறைசார் அலுவலர்கள் 11 பேர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்வுசெய்யப்படும் விவசாயப் பிரதிநிதிகள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைக்க வேண்டும்.
  • இதுவரை அமைக்கப்படாத மேற்கண்ட குழுவைச் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். மாநில அரசு ஏற்கெனவே பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் ஒரு குழு அமைத்து, தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டங்களின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்தது.
  • அக்குழுவும் தனது அறிக்கையைக் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மாநிலத் தொழிற்துறைச் செயலரிடம் அளித்தது. அப்போது பேசிய அதன் தலைவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த ஏப்ரல்,12 2022-ல் கனடா நாட்டின் கியூபெக் மாகாணம், எண்ணெய் மற்றும் எரிவாயு முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் முதல் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. அம்மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்படும். 2011 தொடங்கி அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
  • தமிழ்நாட்டோடு கியூபெக் மாகாணத்தை ஒப்பிட்டால் நிலப்பரப்பில் 12 மடங்கு அதிகம். ஆனால், அதே வேளை மக்கள்தொகையில் 9 மடங்கு குறைவானது. அதாவது, கியூபெக்கில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6.23 பேர் மட்டுமே வசிக்க, தமிழ்நாட்டில் சுமார் 550 பேர் (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ) வசிக்கும் சூழலில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கியூபெக் போன்ற நடவடிக்கை தேவைப்படுகிறது.
  • இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் வளத்தில் தமிழ்நாட்டின் பங்கு அதிகபட்சமாக எண்ணெயில் 2 சதவீதமாகவும் எரிவாயுவில் 4 சதவீதமாகவும் உள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த அளவே. மேலும், இந்த வளங்களை எடுத்தால் அதிகபட்சமாக 60 அல்லது 70 ஆண்டுகளில் முடிந்துவிடும். ஆனால், இப்பகுதியில் விவசாயம் என்பது 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது, இந்த நில வளத்தையும் நீர் வளத்தையும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டால், மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உணவுத் தேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • ஆகவே, ஆணையம் இதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக முக்கியமான காரணியாக இருந்த எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியில் பழைய திட்டங்கள் தொடர்வதற்குச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் மாற்றப்பட்ட எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில், அனுமதி பெற்ற பழைய எண்ணெய்க் கிணறுகளில் ஒற்றை அனுமதி அடிப்படையில் ஷேல், மீத்தேன் உள்ளிட்ட செயல்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது. அது காவிரிப் படுகையின் நில வளத்தையும் நீர் வளத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆணையத்தின் விவாதக் குறிப்புகள் வெளிவரவில்லை. அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றிருந்தால் நல்லது. இல்லையெனில் அதையும் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • விடுபட்ட பகுதிகளை இணைப்பது, மண்ணின் வளமும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வண்ணம் விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கான ஆய்வுகள் செய்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், வேளாண் சந்தையை விரிவுசெய்தால், தமிழ்நாடு கியூபெக் போல வரலாற்றில் இடம்பிடிக்கும்.

நன்றி: தி இந்து (22 – 05 – 2022)

1298 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top