இந்தியாவின் பணக்கார யூடியூபர்கள்!
- யூடியூப் அலைவரிசைத் தொடங்கும் எல்லோராலும் வருவாய் ஈட்ட முடிவதில்லை. ஏனெனில், முதலில் யூடியூப் வழியாகப் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். அதற்கு நல்ல, புதுமையான, வித்தியாசமான உள்ளடக்கங்களும் தேவை; கடுமையான உழைப்பும் தேவை. இதில் சமரசம் செய்துகொள்ளாமல் உழைப்பவர்களே வருவாய் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் 2024 நிலவரப்படி மிகவும் பணக்கார யூடியூபர்களாக வலம்வருபவர்கள் யார் எனப் பார்ப்போம்.
கௌரவ் செளத்ரி (டெக்னிக்கல் குருஜி):
- ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த 33 வயதான கவுரவ் செளத்ரி, தொழில்நுட்பம் சார்ந்த யூடியூப் அலைவரிசையை வைத்திருக்கிறார். 2015இல் தொடங்கப்பட்ட இந்த அலைவரிசையில், தொடக்கத்தில் தொழில்நுட்ப விமர்சனங்கள், பயிற்சிகளை அவர் வழங்கிவந்தார். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது. இந்தியாவில் 2018இலேயே 1 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட முதல் தொழில்நுட்ப அலைவரிசையாக ‘டெக்னிக்கல் குருஜி’ மாறியது. தற்போது 2.36 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.356 கோடியாம்.
புவன் பாம் (பிபி கி வைன்ஸ்):
- குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த 30 வயதான புவன் பாம் ஓர் இசைக் கலைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டே, 2015இல் ‘பிபி கி வைன்ஸ்’ என்கிற யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி, நகைச்சுவை தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வந்தார். அதேபோல நகைச்சுவையாகக் கதை சொல்லும் காணொளிகளையும் புவன் பதிவிட்டு வந்தார். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது 2.64 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.122 கோடி.
அமித் பதானா (அமித் பதானா):
- அமித் பதானாவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர். நகைச்சுவை ஓவிய உள்ளடக்கத்திற்குப் பெயர் பெற்றவர். டெல்லியைச் சேர்ந்த 30 வயதான அவருடைய யூடியூப் பயணம் 2012இல் தொடங்கியது. என்றாலும் 2017இல்தான் பிரபலமானார். நகைச்சுவையான உள்ளடக்கம், கேலிக்கூத்துகள், இந்தியர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் குறும்படங்கள் போன்றவற்றைக் காணொளிகளாக வெளியிட்டு வருகிறார். தற்போது ‘அமித் பதானா’ அலைவரிசைக்கு 2.45 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.80 கோடி.
அஜய் நாகர் (கேரிமினாடி):
- நகைச்சுவை மற்றும் கேமிங் உள்ளட கத்திற்குப் பெயர்போன அலைவரிசை இது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்தைச் சேர்ந்த அஜய், பள்ளியில் படிக்கும்போதே இந்த ‘கேரிமினாடி’ அலைவரிசையைத் தொடங்கிவிட்டார். பிற யூடியூபர்கள், பிரபலங்களைக் கேலி, கிண்டல் செய்து காணொளிகளை வெளியிட்டதன் மூலம் அலைவரிசை புகழடைந்தது. குறிப்பாக, கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இந்த அலைவரிசை பெரிய அளவில் பிரபலமடைந்தது. தற்போது இந்த அலைவரிசைக்கு 4.32 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.50 கோடி.
நிஷா மதுலிகா (நிஷா மதுலிகா):
- சைவ உணவு ரெசிபிகள் காணொளிகளை வெளியிட்டு பிரபலமடைந்தவர் நிஷா மதுலிகா. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான நிஷா, 2011இல் தன்னுடைய பெயரில் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினார். தொடக்கம் முதலே எளிதான சைவ உணவு ரெசிபிகளின் காணொளிகளை வெளியிட்டு புகழ்பெற்றார். வீட்டு முறைப்படி சமைப்பது தொடர்பாக அவர் அளிக்கும் விளக்கங்கள் அவருக்குப் பார்வையாளர்களைப் பெற்று தந்தன. தற்போது இந்த அலைவரிசைக்கு 1.44 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். தோராயமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.43 கோடி.
- இவர்கள் மட்டுமல்ல, இந்தியப் பணக்கார யூடியூபர்கள் வரிசையில் டெல்லியின் சந்தீப் மகேஸ்வரி (சந்தீப் செமினார் அலைவரிசை), பிஹாரின் ஃபைசல் கான் (கான் சார் அலைவரிசை), மகாராஷ்டிரத்தின் ஆசிஷ் சன்சாலனி (ஆசிஷ் சன்சாலனி கி வைன்ஸ் அலைவரிசை), டெல்லியின் ஹர்ஷ் பெனிவால் (ஹர்ஷ் பெனிவால் அலைவரிசை), ஹரியாணாவின் துருவ் ராத்தி (துருவ் ராத்தி அலைவரிசை) ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர். முதல் 10 பேர் கொண்ட பட்டியலில் தென்னிந்தியர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை!
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 10 – 2024)