TNPSC Thervupettagam

இந்தியாவின் முதுகெலும்பு

February 6 , 2022 911 days 419 0
  • "எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்,'எந்தப் பள்ளி மாணவ மாணவியைக் கேட்டாலும் இந்த உற்சாக வாக்கியத்தை உரைத்தவர் சுவாமி விவேகானந்தர் என்று சொல்வார்கள்.
  • இந்த மந்திர வாக்கியத்தில் மூன்று பதங்கள் மிக முக்கியமானவை. எழுந்திரு, விழித்திரு மற்றும் நிற்காதே.
  • இந்த முழக்கத்தை சுவாமிஜி செய்தபோது நம் தேசம் அடிமைப்பட்டிருந்தது. அதனால் அவர் முதலில் நம்மிடம் அடிமைத்தனத்திலிருந்து எழுந்திரு என்றார்.
  • இனி எந்த விதமான அடிமைத்தனத்திலும் - அரசியலிலோ, பொருளாதாரத்திலோ, கலாசாரத்திலோ, மத வியாபாரத்திலோ சிக்காமல் இருந்திட விழித்திரு என்றார்.
  • நல்ல நிலையில் நாம் இருக்கும்போது அந்த நிலையிலேயே தேங்கி நின்று தொய்வடையக் கூடாது என்பதை முழங்கினார். அதற்காகவே, நில்லாது செல்லுங்கள் என்று நம்மைப் பணித்தார்.
  • உலகின் பல பாகங்களுக்கும் விவேகானந்தர் சென்று நமது நாட்டின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பரப்பி வந்தார். 1897-ஆம் ஆண்டு ஜனவரியில் கடல்வழியாக மேலை நாட்டிலிருந்து இலங்கை வந்தார். தொடர்ச்சியாக இலங்கையிலிருந்து பாம்பன், ராமநாதபுரம் மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் அடைந்தார்.
  • எல்லா ஊர்களிலும் மக்கள் அவரது உன்னதமான தெய்வீக சாந்நித்தியத்தில் திளைத்தார்கள். தனி மனிதனையும் சமுதாயத்தையும் நாட்டையும் சமயத்தையும் முன்னேற்றும் நலமிகு கருத்துகள் பலவற்றை வள்ளலாக வழங்கி வந்தார் விவேகானந்தர்.
  • மக்கள் நலனுக்காக விடும் மூச்சு போன்று நொடிக்கெல்லாம் நூறு வேலை செய்து, ஆயிரம் நற்சிந்தனைகளை யோசித்து வந்த அவருக்கு மூன்று நாட்கள் ஓய்வைத் தந்தது கும்பகோணம் பெருநகரம்தான். 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சுவாமிஜி கும்பகோணத்தில் தங்கி ஓய்வும் உற்சாகமும் பெற்றார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவு தான் "வேதாந்தப் பணி' என்ற "தி மிஷன் ஆஃப் வேதாந்தா' என்ற அருமையான ஒரு சொற்பொழிவு.
  • அதில்தான் அவர் ""எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாது செல்லுங்கள்'' ("அரைஸ், அவேக் அண்ட் ஸ்டாப் நாட் டில் தி கோல் ஈஸ் ரீச்டு') என்ற மந்திர வாக்கியத்தை முதன்முதலில் உலகிற்காக முழங்கினார். இன்றும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் இந்த சிங்கநாதம் தாரக மந்திரம்தான்.
  • சுதந்திரத்திற்கு முன்னர் போராட்ட வீரர்கள், அவர்கள் மிதவாதிகளோ அல்லது தீவிரமாகப் போராடியவர்களோ யாராக இருந்தாலும் விவேகானந்தருடைய இந்த உரை கொண்ட நூல் கட்டாயம் அவர்கள் கையில் இருந்தது. சுதந்திரப் போராட்டம் மட்டுமல்லாமல், வாழ்க்கையில் எதிலும் எங்கும் யாருக்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் சாரமான கருத்து.
  • எழுந்திரு, விழித்திரு என்று உற்சாகப்படுத்தும் பல தலைவர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அவர்களிடம் இல்லாத ஆன்ம சக்தியுடன் கூடிய பேச்சாற்றல் சுவாமி விவேகானந்தரிடம் உள்ளது. விழிப்புடன் நமது சிந்தனையிலும் செயலிலும் தொய்வில்லாமல் இருப்பதைத்தான் சுவாமிஜி விரும்புகிறார். அதனால்தான், நில்லாது செல்லுங்கள் என்று முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
  • நாம் பல்லாயிரம் தியாக சீலர்களைப் பலி கொடுத்து சுதந்திரம் பெற்றோம். இன்று அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் தியாகம் என்ற பேரொழுக்கம் இல்லாத காரணத்தால் நாட்டில் ஒரு மந்த நிலை இருக்கிறது. வீண் விவாதங்களிலும் வெற்றுப் பூசல்களிலும் நம் மக்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது நாட்டின் முன்னேற்றம் புறக்கணிக்கப்படுகிறது.
  • முன்னேறும் போது இதுபோன்ற முடக்கம் தவிர்க்கப்பட வேண்டும் அல்லது தகர்த்தெறியப்பட வேண்டும் இதனால்தான் விவேகானந்தர், "லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள்' என்றார். விவேகானந்தர் கும்பகோணத்தில் உரைத்ததன் சாரம் இது.
  • ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் சுவாமி ரங்கநாதானந்தர். அவரை இரண்டாவது விவேகானந்தர் என்று அறிஞர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட சுவாமிகள் ஒருமுறை கூறினார்:
  • சுதந்திரத்திற்கு முன் நமது அரசியல்வாதிகள் லட்சியத்துடன் விவேகானந்தரை முறையாக வாசித்தார்கள். அதனால் எழுச்சியுடன் போராடி சுதந்திரம் பெற்றோம் அதன் பிறகு அவர்களது மனநிலையில் ஒரு தேக்கம் வந்துவிட்டது. அரசியல் சுகங்களிலும் அதிகார மிதப்பிலும் கவனம் வைத்து "ஹனிமூன் மூடு' என்ற "தேன் நிலவு' மனநிலையில் சிக்கி மக்களை மறந்தார்கள். தேச சேவையை நிராகரித்தார்கள்.
  • இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே சுவாமி விவேகானந்தர், "நில்லாது தொடர்ந்து செல்லுங்கள்' என்று தமது உரையில் முழங்கினார்.
  • உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டு பெயர் புகழ், பணம் இவற்றில் உழலும் மக்களை அவர் தட்டி எழுப்புகிறார். மனிதன் இன்ப நாட்டத்திலேயே பணம். சம்பாதிப்பதிலேயே அல்லது தூக்கத்திலேயே காலத்தைக் கழித்துவிடக் கூடாது. அவனது ஆன்மா விழித்தெழ வேண்டும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சுவாமிஜி இந்தச் சொற்பொழிவில் விளக்குகிறார். ஆன்ம விழிப்புணர்வு அவசியம். அதை உணரும்போது அதன் மூலம் பெறும் நன்மைகளை சுவாமிஜி பட்டியலிடுகிறார்.
  • "அளவுக்கதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மன வசியம் - இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது. படிந்த வண்ணம் உள்ளது. "" தற்கால இந்தியர்களே, மனவசியத்தில் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்''.
  • "ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன்  செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும் எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்'.
  • ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய லட்சியம் இருக்கும். சில நாடுகளுக்கு அரசியல் தேசிய லட்சியமாக இருக்கும் பொருளாதாரம் ஒரு நாட்டிற்கு லட்சியமாக இருக்கும். இவ்வாறெல்லாம் கூறிவந்த சுவாமிஜி சமய வாழ்க்கை அதாவது ஆன்மிக வாழ்க்கைதான் இந்தியாவின் முதுகெலும்பு (ரிலீஜியன் ஈஸ் தி பேக்போன் ஆஃப் இந்தியா) என்ற தேசிய லட்சியத்தைக் கண்டார்; நமக்குக் காண்பித்தார்.
  • சமய வாழ்க்கை நமது தேசிய லட்சியமாக இருக்கும்வரை  இந்தியாவிற்கு அழிவு கிடையாது என்பது சுவாமிஜியின் அனுபவ உண்மை.
  • சுவாமிஜி இந்த உரையில் மேலும் குறிப்பிடுகிறார்:
  • "ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங்கடலில் நீர்க்குமிழி போல, ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்துவிட்டன. இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...'
  • "நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல. நம்மிடம் போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும்போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கிப் பெருகி உலகை நிரப்பவே செய்கிறது' என்று சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் உண்மையான வலிமையை இந்தச் சொற்பொழிவில் அறைகூவலிட்டார்.
  • இந்த உண்மையை மதித்த, குறைந்தபட்சம் நம்பிய அரசியல்வாதிகள் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, நல்ல ஆட்சியையே நமக்குத் தந்திருக்கிறார்கள்.
  • நாட்டிற்கே புத்தெழுச்சி ஏற்படுத்திய இந்த ஓர் ஆன்மிக உண்மையை சுவாமிஜி முழங்கியபோது, அடிமை நாட்டிலிருந்து ஒருவர் எவ்வாறு இப்படி முழங்க முடிந்தது என்று உங்களால் வியக்காமல் இருக்க முடியாது.
  • கும்பகோணத்து உரையின் நிறைவாக, சுவாமிஜி ஒட்டுமொத்த இந்தியர்களை அழைத்து ஒரு தந்தையாக, ஒரு தாயாக இருந்து ஆசி கூறுகிறார்:
  • "கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை வாழ்ந்து செய்ததைவிட மகத்தான காரியங்களைச் சாதிக்க வேண்டும். பின்னோக்கிச் செல்வது என்பது ஒரு நாட்டை நாசத்திற்கும் மரணத்திற்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம்.
  • "எனதருமை மக்களே. நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. ஒருவேளை அதில் ஓர் ஓட்டை விழுந்து இருக்கலாம். ஒருவேளை கொஞ்சம் பழுதுபட்டு இருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்துத் தண்ணீர் உள்ளே நுழைவதைத் தடுப்பதுதான் நீங்கள், நான் என்று நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலை. நாட்டு மக்களுக்கு நிலைமையை, அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் சென்று உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்...'
  • விவேகானந்தரின் சிங்க கர்ஜனை, சிம்மநாதம் இன்றும் கேட்கிறது. எழுந்து வா, இந்தியனே!

நன்றி: தினமணி (06 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்