TNPSC Thervupettagam

இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள ஈரநிலங்கள் – பகுதி I

May 18 , 2023 599 days 2893 0

(For the English version of this Article Please click Here)

  • ஈரநிலம் என்பது நிரந்தமாகவோ அல்லது அவ்வப்போது நீர் நிரம்பிய ஒரு தனித்துவமான சூழ்நிலை மண்டல அமைப்பாகவோ காணப்படுகிறது.
  • ஈரநிலங்கள் சுற்று சூழல் அமைப்பில், நீர்ச் சுத்திகரிப்பு, வெள்ளத்தடுப்பு, கார்பன் தேக்கங்கள் மற்றும் நிலையான கரையோர அமைப்பு போன்ற பல பணிகளைச் செய்கின்றது.
  • ஈர நிலங்கள் நீர் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கு உயிரினங்களைப் பரவலாகக் கொண்டு உள்ளன.
  • ஈர நிலங்கள் நன்னீர், உவர்நீர் அல்லது உப்புநீராக இருக்கலாம்.
  • எ.கா. சதுப்பு நிலத்தில் செழித்து வாழும் நீர் வாழ் தாவரங்கள், பால் களை (Milk weed), வழுக்கை புன்னை மரம் (ball cypress tree), சதுப்பு நிலக்காடுகள் மற்றும் தால்கள் (Catails) ஆகியனவாகும்.

இந்தியாவில் உள்ள  ஈரநிலங்களின் நிலை

  • சுதந்திர இந்தியாவின் 75 ஆம்  ஆண்டில் (2022) இந்திய ராம்சார் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்களை இந்தியா சேர்த்துள்ளது. இதன் மூலம் 13,26,677 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 75 ராம்சார் தளங்களை இந்தியா கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் நான்கு (4) தளங்கள், ஒடிசாவில் மூன்று (3), ஜம்மு & காஷ்மீரில் இரண்டு (2) மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று (1) ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட இந்தியாவின்  11 ராம்சார் தளங்களாகும்.
  • இந்தத் தளங்களின் மூலம் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் அவற்றின் வளங்களை அறிவுப் பூர்வமாகப் பயன்படுத்த உதவும்.
  • 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ராம்சார் நகரில் நடைபெற்ற மாநாட்டில்  ராம்சார் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஒப்பந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

 

  • 1981 ஆம் ஆண்டில் சிலிக்கா ஏரி, ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்தியாவின்  முதல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த  ஈரநிலமாகும்.
  • 1982  ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டது. 1982 முதல் 2013 வரை மொத்தம் 26 தளங்கள் ராம்சார் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது, இருப்பினும் 2014 முதல் 2022 ஆம் ஆண்டு  வரை நாட்டில்   சேர்க்கப்பட்ட ராம்சார் தளங்களின் பட்டியலில் உள்ள ஈரநிலங்களின் எண்ணிக்கை 49 ஆகும்.  
  • 2022 ஆம் ஆண்டில்  மட்டும் புதிதாக  28 இடங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

  • அதிகபட்சமான ராம்சர் தளங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 14 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் 10 ராம்சார் தளங்களைக் கொண்டு உள்ளது.
  • உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளை கொண்ட பகுதியான சுந்தரவனக் காடுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் ரேணுகா ஈரநிலம் தான் இந்தியாவின் மிகச்சிறிய ராம்சார் தளம் ஆகும்.
  • இந்த ஈரநிலத்தின் மொத்தப்  பரப்பளவு 0.2 கிமீ² ஆகும். இந்த ஈரநிலம்  2012 ஆம் ஆண்டு  அக்டோபர் 15 தேதி அன்று ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது.

ஈரநிலங்களின்  வகைகள்

  • ஈரநிலங்களின் பண்புகள் அடிப்படையில்  சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலங்கள், மாங்குரோவ் சதுப்பு நிலம் (ஸ்வாம்ப்), சேறு நிறைந்த சதுப்பு நிலம், ஃபென், ஆற்றுக் கழிமுகம், ஏரிகள் மற்றும் குளங்கள், ஆற்று வெள்ளச் சமவெளி மற்றும் குதிரைக் குளம்பு ஏரி என அவை வகைப்படுத்தப் பட்டுள்ளன.

சதுப்பு நிலம் (மார்ஷ்)

  • இவ்வகை ஈரநிலங்கள் நீரினால் முழுவதும் ழுழ்கியும், தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற  வகையில் நிறைவுற்ற மண்ணையும்  கொண்டுள்ளது.
  • உள்நாட்டு மற்றும் கடலோரச் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டு இடங்களிலும் இவை காணப் படுகின்றன.
  • இந்த வகையான சதுப்பு நிலங்கள் நிலத்தடியின் மேற்பரப்பிலும் நிலத்தின் அடியிலும் காணப் படுகின்றது.

.

 மாங்குரோவ் ஸ்வம்ப் (Mangrove Swamp)

  • இவ்வகை சதுப்பு நிலக்காடுகள் அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இவை வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • சதுப்பு நிலங்கள் பெரும்பாலும் ஆறுகளின் கழிமுகங்களிலும், நன்னீர் உவர் நீருடன் கலக்கும் இடங்களிலும் காணப்படும்.
  • அலையாத்திக் காடுகள் நன்னீரிலும், உவர் நீரிலும் அதிகளவில் காணப்படுகின்றன. சுந்தர வனக் காடுகள் தான் உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலப்பகுதியாகும்.
  • இது யுனெஸ்கோவின் (UNESCO) உலகப் பாரம்பரியத் தள அமைவிடமாகவும் கருதப் படுகிறது.

 

சேறு நிறைந்த சதுப்பு நிலம் (Bogs)

  • சேறு நிறைந்த சதுப்பு நிலம் என்பது ஈரமான, கடற்பஞ்சு போன்ற, குறிப்பாக இறந்த தன்மையுடைய பாசித் தாவரங்களால் உருவான நீர் வடியாத மண்ணைக் கொண்டுள்ள ஒரு வித்தியாசமான ஈர நிலம் ஆகும்.
  • இச்சூழலில் பாசி, புற்கள், பருத்தி புல், குடுவைத் தாவரம் போன்ற பூச்சியுண்ணும் தாவரங்கள் மற்றும் பல மந்தாரை வகைகள் வளர்கின்றன.
  • இங்கு சிதைந்தத் தாவரத்தின் பொருள் படிப்படியாகக் குவிக்கப் பட்டு சேறு நிறைந்த இடங்களில் அது கார்பன் தேக்கங்களாகச் செயல்படுகின்றது.

 

ஃபென் (Fen)

  • தாழ்வான சேறு என்பது முழுமையாகவோ அல்லது நிலப்பகுதியாலோ அல்லது ஓரளவு தண்ணீராலோ மூடப்பட்டு உள்ளன.
  • அவை  நிலத்தடி நீரிலிருந்து ஊட்டச் சத்துக்களைப் பெறுவதோடு, அவை காரத் தன்மை கொண்ட கரிம மண்ணைப் பெற்று இருக்கின்றன.
  • அமிலக் கரிம மண் கோரைகள், நாணல் ஆகியவை அந்நிலத்தின் தனிச்சிறப்புடைய தாவர வகைகள் ஆகும்.

 

ஏரிகள் மற்றும் குளங்கள்

  • ஏரிகள் மற்றும் குளங்கள் என்பது உலகம் முழுவதும் காணப்படுகின்ற உள்நாட்டு நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளாகும்.
  • இவை நிலவாழ் மற்றும் நீர்வாழ் ஆகியவற்றில் வாழும் உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச் சத்துப் பொருட்கள் மற்றும் வாழ்விடங்களை வழங்குகின்றது.

 

ஆற்றுக் கழிமுகம் (Estuary)

  • எஸ்சூரி என்ற சொல் கடலின் ஒரு நுழைவாயில் என்று பொருள்படும் லத்தீன் மொழியின் எஸ்சுவரியம் (Erurim) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • இது ஓதம் என்ற பொருள் கொண்ட ஏஸ்ட்ஸ்  என்ற சொல்லிலிருந்து பெறப் பட்டதாகும்..
  • ஒன்றுக்கு மேற்பட்ட ஆறுகள் கடலில் உள்ள உவர் நீருடன் கலக்குகின்ற கரையோரப் பகுதிகள் கடலுடன் திறந்த இணைப்புடனும் காணப்படுவதைக் கழிமுகம் என்கிறோம்
  • உவர் நீர் மற்றும் நன்னீர் சேரும் இடமானது வளமான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்ததாக நீரிலும் மற்றும் வண்டல் படிவிலும் காணப் படுகிறது.
  • எனவே, கழிமுகம் உலகின் மிக வளமான இயற்கைப் பகுதியாக உள்ளது.
  • நர்மதா ஆற்றில் அமைந்துள்ள கழிமுகம் குஜராத்தில் உள்ளது

 

ஆற்று வெள்ளச் சமவெளி (River Flood plain)

  • ஆற்றின் கரையை ஒட்டியுள்ள சமதளமான நிலப்பரப்பை நாம் ஆற்று வெள்ளச் சமவெளி என்கிறோம்.
  • இது ஆற்றுக் கிளைகளின் கரையிலிருந்து பள்ளத்தாக்கின் சுவர் வரையில் பரவிக் காணப் படுகிறது.
  • அதிகப்படியான ஆற்று நீரின் வெளியேற்றத்தினால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

 

குதிரைக் குளம்பு ஏரி (Oxbow lake)

  • முதன்மை ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனித்து காணப்படும் ஆற்று வளைவே குதிரைக் குளம்பு ஏரி எனப்படுகிறது.
  • இது குதிரை லாட வடிவில் காணப்படுவதால் இந்த நிலத்தோற்றம் இவ்வாறு அழைக்கப் படுகிறது.
  • கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப்படுகைகள் குதிரைக் குளம்பு ஏரிகள் நிறைந்து காணப் படுகின்றன.
  • உதாரணம்: அன்சுபா என்பது மகாநதி டெல்டாவின் உச்சியில் உள்ள குதிரைக் குளம்பு ஏரி ஆகும்.

 

தமிழ்நாட்டிலுள்ள ஈரநிலங்கள்

  • தமிழகத்தில் புவியியல் தகவல் முறைமைகளை (GIS)  பயன்படுத்திப்  பல்வேறு ஈரநில வகைகளின்  மதிப்பீடுகள் அவற்றின்  ஈரநில எல்லை, நீர் பரவியுள்ள வீதம் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொருத்து கணக்கீடு செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள மொத்த ஈரநிலப் பரப்பளவு 902534 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது புவியியல் பரப்பளவில் 6.92 % ஆகும்.
  • அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாட்டு மையம்  தேசிய ஈரநில வரைபடத்தை  வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன.
  • ஈர நிலங்களின் புவியியல் பரப்பளவு சென்னையில் 178 சதுர கிமீ ஆகவும் ஈரோட்டில்  8162 சதுர கிமீ ஆகவும் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  மாறுபடுகிறது.
  • ஈர நிலங்களின்  புவியியல் பரப்பளவில் அதிகபட்சத்தினை ராமநாதபுரம் மாவட்டமும் (18.05%)  கோவை மாவட்டம் (1.08%)  மிகவும்  குறைந்தபட்சப் பரப்பையும் ஆக்கிரமித்துள்ளது.
  • ஏரிகள் / குளங்கள் மற்றும் தொட்டிகள் / குளங்கள் ஆகியவை கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக பட்சமாக ஆதிக்கம் செலுத்தும்  ஈரநில வகைகளாகும்.
  • குளங்கள், அலைகளுக்கு இடையேயான சேற்று நிலங்கள் மற்றும் உப்பு ஏரிகள் ஆகியவை கடலோரப் பகுதிகளில் அதிக பட்சமாக ஆதிக்கம் செலுத்தும்  ஈரநில வகைகளாகும்.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 14 சதுப்பு நிலங்கள் உள்ளன.
  • அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 

1. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்

  • சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் "சித்ரங்குரி கண்மொழி" என்றும் அழைக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு அரசு 1989 ஆம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் ராமநாதபுரம் மாவட்டம் சித்ரங்குரி கிராமத்தில் அமைந்துள்ளது.
  • தமிழ்நாட்டிலுள்ள இந்தப் பறவைகள் சரணாலயம் கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது.
  • காட்டில் காணப்படும் புலம்பெயர்ந்த ஹெரான் இனங்கள் வாழ்வதற்கு ஏற்ற பல வாழ்விடங்கள் இந்த சரணாலயத்தில்  உள்ளன.

 

2. மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா

  • இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின்  முதல் கடல் உயிர்க்கோள காப்பகம் ஆகும்.
  • மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (Gulf of Mannar Marine National Park) இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும்.
  • தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியில் சுமார் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது.
  • பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் இந்தப் பூங்கா இதன் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது.
  • சமீபத்தில் தமிழ்நாடு அரசு மன்னார் வளைகுடா உள்ள பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு  பாதுகாப்புக் காப்பகத்தை நிறுவி உள்ளது.
  • தெற்காசியாவின் துணைப் பிராந்தியத்தில் இந்தியாவை கடற்பசுப்  பாதுகாப்பில் முன்னணி நாடாக செயல்படுவதற்கு  இக்காப்பகம் உதவுகிறது.

 

3. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்

  • கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
  • இது 1989 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தச் சரணாலயம் 66.66 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது
  • இது சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.
  • இந்த சரணாலயப் பகுதி சமூக  அணைக் கரைப் பகுதியில் அமைந்துள்ளது..
  • கருவேலமரங்களின்  கணிசமான வளர்ச்சிக்கு ஏற்ற  இடமாக  இந்தச் சரணாலயம்  உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு முதல் இந்தச் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

 

4. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

  • இது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இச்சரணாலயம் சென்னையிலிருந்து 75 கி. மி. தொலைவில் செங்கல்பட்டுக்கு தெற்கே அமைந்துள்ளது.
  • கரிக்கிலி வேடந்தாங்கலில் இருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • இங்குள்ள இரண்டு ஏரிகள் இணைக்கப்பட்டு 1988 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • இப்பகுதியைச் சுற்றிலும் திறந்தவெளிப் பகுதிகள், நெல் வயல்கள் மற்றும் புதர்க்காடுகள் உள்ளன.
  • கரிக்கிலியில் பல புலம்பெயர்ந்த பறவைகளான ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, சாதா உள்ளான் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துடன் சேர்த்து கரிக்கிலி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் ஒரு முக்கியப் பறவைகள் வசிப்பிடப் பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளன.
  • பல நீர்ப்பறவைகள் வேடந்தாங்கலைக் கூடு கட்டும் இடமாகவும், கரிக்கிலியினை உணவு தேடும் இடமாகவும் பயன்படுத்துகின்றன.
  • 2022 ஆம் ஆண்டு முதல் இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

5. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

  • இது 1994 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்  தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
  • நாங்குநேரி வட்டத்தில்  கூந்தன்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
  • திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளமானது தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஒரு பரபரப்பான நகரம் ஆகும்.
  • கூந்தன்குளம் மற்றும் காடன்குளம் பாசன ஏரிக்கரை இணைக்கப் பட்டு அதனை இணைப்பதற்கு ஏதுவாக தார் சாலை வசதியுடன் இக்காப்பகம் உருவானது.
  • தென்னிந்தியாவில் நீர்ப் பறவைகளை இனப்பெருக்கம் செய்வதற்கான மிகப்பெரிய இடமாக  இக்காப்பகம் உள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு  முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

6. பள்ளிக்கரணை சதுப்புநிலம்

  • பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும்.
  • சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.
  • பள்ளிக் கரணையிலிருக்கும் இந்த சதுப்புநிலம் தான் சென்னையில் எஞ்சியிருக்கும் ஒரே சதுப்பு நிலம் ஆகும்.
  • இது இந்திய அரசால் 1985-86 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட தேசிய சதுப்புநிலப்  பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 94 சதுப்புநிலங்களில் ஒன்று ஆகும்.
  • மேலும் இது தமிழ்நாட்டில் அவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ள மூன்றில் ஒன்று ஆகும்.
  • தமிழகத்தின் அந்த மற்ற இரண்டு சதுப்புநிலங்கள் கோடியக்கரை வன உயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவாகும்.
  • தமிழ்நாட்டின் முதன்மையான ஈரநிலங்களில் இதுவும் ஒன்று.
  • இது 2021 ஆம் ஆண்டு  முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சமீபத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்  2.5 ஹெக்டேர் பரப்பளவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றையும் திறந்து வைத்துள்ளது.

 

7. பிச்சாவரம்

  • பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • இது 1,100 ஹெக்டேர் பரப்பளவுடன் (11 சதுர கிலோமீட்டர்) உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக உள்ளது.
  • வங்கக் கடலிலிருந்து மணல் திட்டுகளால் இக்காடுகள் பிரிக்கப் பட்டுள்ளன.
  • இது அவிசீனியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்களைக் கொண்டது.
  • மேலும் இவை பல அரிய வகை கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்பு மீன்கள் நிறைந்ததாகவும் உள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு  முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

8.கோடியக்கரை

  • கோடிக்கரை அல்லது கோடியக்கரை (Point Calimere) இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பகுதியாகும்.
  • இது காலிமர் முனை அல்லது கள்ளி மேடு (Point Calimere) எனவும் அழைக்கப்படுகிறது.
  • தேவாரப் பாடல் பெற்ற கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.
  • இங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால கலங்கரை விளக்கம் 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது அழிக்கப் பட்டது.
  • 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கோடியக்கரை ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது.
  • கோடியக்கரை  இந்து  புராண இதிகாசமான ராமாயணத்துடன் தொடர்புடையது.    

                 

9. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

  • சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்  ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும்.
  • இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது, சுசீந்திரம் குளம், தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும்.
  • இது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் அமைந்துள்ளது.
  • இது மத்திய ஆசியப் பறவைகள் வலசைப் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்து உள்ளதால், புலம்பெயரும் பறவைகளுக்கு ஒரு முக்கியமான இடமாக உள்ளது.
  • 2002 ஆம் ஆண்டு இப்பகுதியைப் 'பறவைகள் சரணாலயம்' என அறிவிக்கக் கோரிக்கை விடப் பட்டு அது அரசின் பரிசீலனையில் உள்ளது.  
  • இந்தச் சரணாலயத்தின் சில பகுதிகள் 2022 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

10. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

  • உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இந்த சரணாலயம்  1999 ஆம் ஆண்டில்  பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

11. வடுவூர் பறவைகள் சரணாலயம்

  • வடுவூர் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள வடுவூர் கிரமத்தில் அமைந்துள்ளது.
  • இது 1999 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக  அறிவிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நீர்ப்பாசனத் தொட்டிக்கு தண்ணீர் வருவதால்   ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளை இது ஈர்க்கிறது.
  • இந்தச் சரணாலயம் வெள்ளை ஐபிஸ், வர்ணம் பூசப்பட்ட நாரை, கிரே பெலிகன், பின்டெயில்ஸ், கார்மோரண்ட்ஸ், டீல்ஸ், ஹெரான்கள், ஸ்பூன்பில்ஸ், டார்ட்டர்ஸ், கூட்ஸ், ஓபன் பில் நாரைகள் மற்றும் ஃபெசண்ட்-டெயில் ஜக்கனா போன்ற 40க்கும் மேற்பட்ட  நீர்ப் பறவைகளை  ஈர்க்கிறது.
  • புலம்பெயர்ந்தப் பறவைகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகவும் பிடித்தமான இடமாக இந்த சரணாலயம் உள்ளது.

 

12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுக்காவில் அமைந்துள்ளது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயரும் பருவத்தில் 40,000க்கும் மேற்பட்ட பறவைகள் (26 அரிய இனங்கள் உட்பட) இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
  • வேடந்தாங்கல் புலம்பெயர்ந்த பறவைகளான பின்டைல், கார்கேனி, சாம்பல் வாக்டெயில், நீலச்சிறகுகள் கொண்ட டீல்,  சாண்ட் பைப்பர் மற்றும் பலவற்றின் தாயகமாக உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு  முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • வேடந்தாங்கல் நாட்டிலேயே மிகவும்  பழமையான நீர்ப் பறவைகள் சரணாலயம் ஆகும்.
  • தமிழ் மொழியில் வேடந்தாங்கல் என்பதின் பொருள் 'வேட்டைக்காரனின் குக்கிராமம்' ஆகும்.
  • உள்ளூர் நிலப்பிரபுக்களின் விருப்பமான வேட்டையாடும் இடமாக இந்தப் பகுதி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது.
  • இப்பகுதி பல்வேறு பறவைகளை ஈர்க்க காரணம் இதில் பறவைகளுக்கு உணவளிக்கும் இடமாக பல சிறிய ஏரிகள் நிறைந்திருப்பது தான் ஆகும்.
  • இந்தப் பகுதியின் பறவையியல் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு 1798 ஆம் ஆண்டிலேயே வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது.
  • 1858 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இது நிறுவப்பட்டுள்ளது.

 

13. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

  • இது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாதியளவு வறண்ட புதர்களால் சூழப்பட்ட ஒரு பெரிய ஏரிக்கு அருகில் வெள்ளோடு உள்ளது.
  • ஈரோடு அருகே உள்ள இந்தச் சரணாலயம் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளுக்கு ஒரு முக்கிய வாழிடமாக உள்ளது.
  • இந்த சரணாலயத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்ற நிலையில், அவற்றில் சிலவற்றை எளிதில் அடையாளம் காண முடியும்.
  • கார்மோரண்டுகள், டீல்ஸ், பின்டைல் வாத்துகள், பெலிகன்கள் மற்றும் டார்டர்கள் ஆகியவை எளிதில் அடையாளம் காண முடியும் சில பறவை இனங்களாகும்.

14. வேம்பன்னூர் பறவைகள் சரணாலயம்

  • வேம்பன்னூர் பறவைகள் சரணாலயம்  ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும்.
  • இது, இந்தியாவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது சுசீந்திரம் குளம், தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும்.
  • இது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் அமைந்துள்ளது.
  • இது மத்திய ஆசியப் பறவைகள் வலசைப் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், புலம்பெயர் பறவைகளுக்கு ஒரு முக்கியமான இடமாக உள்ளது.
  • 2002 ஆம் ஆண்டு இப்பகுதியை 'பறவைகள் சரணாலயம்' என அறிவிக்கக் கோரிக்கை விடப் பட்டு அது அரசின் பரிசீலனையில் உள்ளது.  
  • இந்தச் சரணாலயத்தின் சில பகுதிகள் 2022 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளங்களாக அறிவிக்கப் பட்டுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்