TNPSC Thervupettagam

இந்தியாவிலும் தொடங்கப்படுமா கரைக்கடல் கப்பலோட்டம்?

December 2 , 2020 1510 days 691 0
  • சில மேற்கத்திய நாடுகளில், வீடுகளில் பீட்சா கொண்டுபோய்க் கொடுப்பதற்குக்கூடச் சிறிய கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணவன், மனைவி இணைந்து குடும்ப அளவிலேயே இத்தகைய சிறிய கப்பல்வழி தொழிலை மேற்கொள்கிறார்கள்.
  • இப்படி உலகம் எங்குமே கரைக்கடல், நதிநீர்ப் போக்குவரத்து புதுப்புதுத் தேவைக்கேற்ப நாள்தோறும் வளர்ந்தபடியே இருக்கின்றன. உலகம் இன்று எதிர்கொள்ளும் சாலைப் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு, எரிபொருள் சிக்கனம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு
  • சிறிய நாடுகள்கூடக் கரைக்கடல், நீர்வழிச் சாலைகளைப் பயன்படுத்துவதற்குத் திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். வரலாற்றுக் காலத்தில் கடல்வழி வாணிபத்தில் உலகமே வியந்து பார்த்த நாமோ, இந்த வகையான முன்னெடுப்பில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.
  • சாலை, ரயில், விமானம் மூலம்தான் பொதுப் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்ற மனநிலையிலிருந்து நமது ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கப்பலோட்டம் என்றாலே, விதேசிகள் ஆளுமை செய்யும் பெரும் சரக்குக் கப்பலோட்டம் மட்டுமே என்ற சிந்தனைப் போக்கு இங்கு இருக்கிறது.
  • இது ஒரு காலனியத் தாக்கம். நமது கரைக்கடல் பகுதிகளை முற்றிலுமாகக் கப்பலோட்டத்துக்குப் பயன்படுத்திய விதேசிகள் மீது நமக்குப் பிரமிப்பு இருக்கிறதே தவிர பொருளாதார வளர்ச்சிக்கான பாடத்தை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவே இல்லை.

புறக்கணிக்கப்படும் கடலோடிகள்

  • காலனியக் காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவான புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு, நமது கரைக்கடலில் செழிப்பாக நடந்த கப்பலோட்டத்தை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது.
  • அப்போதைய கடல்வழி வணிகச் சூழலோடுதான், இன்றைய நிலையை நாம் ஒப்பீட்டாக வேண்டும். வெளிநாட்டினரின் அன்றைய கரைக்கடல் கப்பலோட்டத்தில் முற்றிலுமாகப் பயணப்பட்டவர்கள் நமது கடலோடிகள். கடலோர எல்லைகளில் வாழும் அவர்களை, ‘மீனவர்கள்’ என்று குறுகி நோக்குவதே கப்பலோட்டத்தில் இன்றும் தொடரும் சிக்கலுக்கான முக்கியமான காரணம்.
  • நமது கடலோடிகளை ஆட்சி அதிகாரம் தொடர்ந்து புறக்கணித்ததன் காரணமாக, ‘கோட்டியா’ எனப்படும் இயந்திரம் பொருத்தப்பட்ட பாய்மரக்கலங்களின் உரிமையாளர்களாக அவர்கள் நலிவடைந்த நிலையில் இன்றும் தொடர்கிறார்கள்.
  • வெளிநாட்டுச் சரக்குக் கப்பல், சரக்குப் பெட்டகங்களின் வியாபாரப் போட்டிகளுக்கு இடையிலும் குஜராத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கும், தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு, இலங்கைக்கும் பாய்மரக் கப்பலோட்டம் இன்றும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், தொடர்ச்சியான பொருளாதார இழப்புகள் அவர்களை சோர்வடையச் செய்திருக்கிறது.

அனுபவ அறிவு

  • கடலோடிகள், காக்கப்பட வேண்டிய மாபெரும் மனிதவளம் என்ற புரிதல் முதலில் அரசுக்கு வர வேண்டும். தொழில் சார்ந்த அவர்களது அனுபவ அறிவு அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கரைக்கடல் கப்பலோட்டத்துக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • தீபகற்பத்தில் சிறிய சரக்குக் கப்பல் கட்டும் தளங்கள் உருவாக்கப்பட்டு, பாரம்பரியக் கடலோடிகளைத் திட்டத்தில் அக்கறையோடு இணைத்து ஊக்குவித்தால், இந்தத் தொழிலை அவர்கள் தங்கள் தோள்களில் தாங்குவார்கள். கடலோரங்களும் பெருவாரியான வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் பொருளாதார மண்டலங்களாக மாறிவிடும்.
  • பெருகிவரும் மக்கள்தொகை, உற்பத்தி, தொழில், வியாபார வளர்ச்சி போன்றவற்றைக் கணக்கில் கொண்டால், கரைக்கடல் கப்பலோட்டத்துக்கான தேவை நாட்டில் நாள்தோறும் அதிகரித்தபடியே இருக்கிறது.
  •  ஆட்சியாளர்களின் மனநிலையில் மாற்றம் மட்டுமே தற்போதைய தேவை. ஒரு சிறிய 500 டன் கொள்ளளவு கொண்ட கரைக்கடல் கப்பல், குறிப்பிட்ட நேரத்தில் அதிக சரக்கு இடப்பெயர்ச்சியை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல் சாலைப் போக்குவரத்து நெரிசலையும் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாக்கி, காற்று மண்டல மாசுபாட்டையும் குறைக்கிறது.
  • சமீபக் காலத்தில் அரசின் பெரும் முதலீடுகளில் தீபகற்பமெங்கும் ‘சாகர்மாலா திட்ட’த்தில் கரைக்கடல் கட்டுமானங்கள் உருவாகின்றன.
  • தேசத்தில் உள்நாட்டுக் கப்பல் உரிமையாளர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே தொடரும் சூழலில், சாகர்மாலா வெளிநாட்டுக் கப்பல் உரிமையாளர்களின் பயன்பாட்டுக்கானதா அல்லது உள்நாட்டினருக்கானதாக என்ற கேள்வி எழாமல் இல்லை.
  • தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னிறுத்தி சாகர்மாலா அமைவதாய் இருந்தால், அது சுதேசிக் கடலோடிகளைக் கரைக்கடல் கப்பலோட்டும் தொழில்முனைவோராக்கி அவர்களின் வாழ்வை வளப்படுத்தும் முன்னெடுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • நாட்டின் உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்தில், கரைக்கடல் கப்பலோட்டம் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாற வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்னை போன்ற பெருந்துறைமுகங்களுக்கு சரக்குச் சேகரப் பணியாற்ற பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் போன்ற சிறு துறைமுகங்களிலிருந்து நமது பாரம்பரியக் கடலோடிகளின் சிறிய கப்பல்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

அரசு என்ன செய்யலாம்?

  • காற்று மாசுபடுதல், சாலை நெரிசல், எரிபொருள் சிக்கனம் என்ற நாட்டின் ஒருங்கிணைந்த பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு பாரம்பரியக் கடலோடிகளைத் தொழில் முனைவோராக்கி, அவர்களுக்கு எளிய கடனுதவிகள், எரிபொருள் மானியம் வழங்கி கரைக்கடல் கப்பலோட்டம் என்ற தொழில் நமது கரைகளில் தொடங்க வழிவகுக்க வேண்டும்.
  • மாலுமிகள் ஒப்பந்தம், சம்பளம் போன்ற பெரும் சரக்குக் கப்பல் போக்குவரத்தின் நடைமுறைச் சிக்கல்களைக் கொண்ட சட்டங்கள், கரைக்கடல் கப்பலோட்டத்தில் புகுந்து செலவீனத்தைக் அதிகரிக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும்.
  • தேசத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பயணமாதலால் சுங்கம், குடிமை போன்ற நிர்வாகச் சிக்கலற்றதாகக் கரைக்கடல் கப்பலோட்டம் உறுதிசெய்யப்பட வேண்டும். பயன்படாமல் கிடக்கும் சிறுதுறைமுகங்கள் புனரமைக்கப்பட்டு, அவற்றுக்கான தடையற்ற சாலை, ரயில் போக்குவரத்துகள் சீராக்கப்பட வேண்டும்.
  • வெள்ளையர்கள் ஆட்சியில் பயன்பாட்டில் இருந்த ஆந்திரத்தின் காக்கிநாடா முதல் தமிழ்நாட்டின் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழிச் சாலைகள் திரும்பவும் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
  •  பெருந்துறைமுகங்களிலும் கரைக்கடல் கப்பல்களைக் கையாளுவதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டு, பிரத்யேகமான ஏற்று, இறங்கு தளங்கள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
  • பாரம்பரியமாகப் பாய்மரக் கப்பலோட்டும் கடலோடிகளும், மாறும் சூழலைப் புரிந்துகொண்டு உள்நாட்டுக் கரைக்கடல் கப்பலோட்டும் தொழில்முனைவோராய் மாற முன்வர வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (02-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்