TNPSC Thervupettagam

இந்தியாவில் இன்னும் இருக்கிறதா போலியோ?

September 2 , 2024 136 days 113 0

இந்தியாவில் இன்னும் இருக்கிறதா போலியோ?

  • மே​காலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்​டத்தில் இரண்டு வயதுக் குழந்தை இள ம்பிள்​ளைவாத நோயால் பாதிக்​கப்​பட்டு, அரசு மருத்​துவ​மனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகி​யுள்ளது. மத்திய சுகாதார அமைச்​சகம், இந்தத் தொற்று போலியோ தடுப்புச் சொட்டு மருந்து மூலம் பெறப்​பட்டது என்றும், இந்தியாவின் ‘இளம்​பிள்ளை வாதம் இல்லாத நிலை’யைப் பாதிக்காது என்றும் தெரிவித்​துள்ளது. இருந்​தா​லும், தொற்று பரவாமல் இருக்க அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்​டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இளம்பிள்​ளைவாதம் (Poliomyelitis) 2011இல் ஒழிக்​கப்​பட்டு​விட்டது. இளம்பிள்​ளைவாதம் பாதிப்புள்ள நாடுகளின் உலகப் பட்டியலிலிருந்து 2012இல் இந்தியா விடுதலை பெற்று​விட்டது. ‘இந்தியா இளம்பிள்​ளைவாதம் இல்லாத நாடு’ என்று 2014இல் உலகச் சுகாதார நிறுவனமும் அறிவித்து​விட்டது.
  • இந்த நிலையில், இந்தியாவில் போலியோ மீண்டும் தலைதூக்கி​யுள்ளது என்பது கவலை அளிக்​கிறது. காரணம், இந்தியாவில் இளம்பிள்​ளைவாதம் ஒழிக்​கப்​பட்டு​விட்டது என்று அறிவித்த பிறகு, 2013இல் மகாராஷ்டிரத்​தி​லும், டெல்லி​யிலும், கடந்த மாதம் கேரளத்​தி​லும், இந்த மாதம் மேகால​யத்​திலும் இதுவரை நான்கு பேருக்கு இளம்பிள்​ளைவாதம் தாக்கி​யுள்ளது.
  • அதிலும் குழந்தை​களுக்குக் கொடுக்​கப்பட்ட இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்​தினால்தான் அவர்களுக்கு இது வந்துள்ளது என்பது இங்கு கவனத்​துக்கு உரியது. மேலும், இந்தியாவில் இன்னும் போலியோ வைரஸ் ஒழியவில்லை என்பதையும் இது காட்டு​கிறது.

குழந்தைகளை முடக்கும் நோய்:

  • இளம்பிள்​ளைவாதம் என்பது ‘போலியோ வைரஸ்’ கிருமிகளால் ஏற்படுகிற ஒரு தீவிரத் தொற்று​நோய். இது பெரும்​பாலும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தை​களின் கைகால் தசை வளர்ச்​சியைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கவைக்கிற ஒரு வகை வாதநோய். இந்த நோயை உண்டாக்கும் கிருமிகள் அசுத்தமான உணவு - குடிநீர் மூலம் குடலுக்குள் செல்கின்றன.
  • அங்கிருந்து ரத்தத்தின் வழியாக மூளைக்குச் சென்று, நரம்பு மண்டலத்தைப் பாதிக்​கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகிற நரம்பு​களைப் பாதிப்​ப​தால், இந்த நோயாளி​களுக்குக் கால்கள் செயலிழந்து முடமாகின்றன. இந்த நோய்க் கிருமிகள் நோயாளியின் மலத்தின் வழியாக வெளியேறி மற்றவர்​களுக்குப் பரவுகின்றன.

தடுப்பூசி தந்த பலன்:

  • சென்ற நூற்றாண்டில் உலக அளவில் லட்சக்​கணக்​கானோர் இளம்பிள்​ளைவாத நோயால் பாதிக்​கப்​பட்டு முடமா​யினர். இந்த நிலைமை ஆண்டு​தோறும் அதிகரித்து வந்தது. ஆகவே, இந்த நோய்க்குக் கடிவாளம் போட வேண்டியது அவசிய​மா​யிற்று. 1955இல் தடுப்பூசி கண்டு​பிடிக்​கப்​பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கி​விட்டது.
  • இந்தியா​வில், தற்போது இளம்பிள்​ளைவாத நோயைத் தடுப்​ப​தற்கு இரண்டு வகைத் தடுப்பு மருந்​துகள் உள்ளன. ஒன்று, இளம்பிள்​ளைவாதத் தடுப்பூசி (Inactivated Polio Vaccine - IPV). மற்றொன்று, இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து (Oral Polio Vaccine - OPV). இன்றைய நடைமுறைப்படி, குழந்தை பிறந்​ததுமே இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
  • அதன் பிறகு, 6 வாரம், 10 வாரம், 14 வாரம் முடிந்​ததும் இளம்பிள்​ளைவாதத் தடுப்பூசி போடப்பட வேண்டும். பிறகு, 6 மாதம், 9 மாதம் முடிந்​ததும் இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து தரப்பட வேண்டும். அடுத்து, 16 - 18 மாதத்​துக்குள் மீண்டும் இளம்பிள்​ளைவாதத் தடுப்பூசி போடப்பட வேண்டும். கடைசியாக, 4 ½ - 5 வயதுக்குள் இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து தரப்பட வேண்டும்.
  • இது தவிர, இந்திய அரசாங்கம் ஆண்டு​தோறும் ஏற்பாடு செய்யும் இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து சிறப்பு முகாம்​களிலும் (Pulse Polio Immunization Programme) 5 வயதுக்கு உள்பட்ட குழந்தை​களுக்குத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்​கப்பட வேண்டியது அவசியம்.

மருந்தே எதிரி​யானால்?

  • இளம்பிள்​ளைவாதம் நோயைத் தடுக்கத் தடுப்​பூசி, தடுப்புச் சொட்டு மருந்து இரண்டுமே பயன்படு​கின்றன என்றாலும், வாய்வழி​யாகத் தரப்படும் தடுப்புச் சொட்டு மருந்​தினால், ஒன்றரை லட்சம் குழந்தை​களில் ஒருவருக்கு இளம்பிள்​ளைவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று உலகளாவிய ஆய்வுகள் பல உறுதிப்​படுத்​தி​யுள்ளன. அதேநேரத்​தில், இளம்பிள்​ளைவாதத் தடுப்பூசி போட்டுக்​கொள்​பவர்​களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் அவை உறுதி​செய்​துள்ளன.
  • ஆகவே, இந்த நோய்க்குத் தடுப்பூசி போட்டுக்​கொள்​வதுதான் சிறந்த வழி என்று ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்​துவக் கழகம்’ (Indian Academy Of Paediatrics) அறிவுறுத்​தி​யுள்ளது. மேலும், குழந்தை​களுக்குத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுப்​பதைப் படிப்​படியாக நிறுத்​தி​விட்டு, அதற்குப் பதிலாக ‘இளம்​பிள்​ளைவாதத் தடுப்​பூசி’ மட்டுமே போடப்பட வேண்டும் என்றும், இதனைத் தேசியத் தடுப்​பூசித் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இக்கழகம் அரசுக்குப் பலமுறை ஆலோசனை கூறியுள்ளது.
  • ஆனால், இந்திய அரசாங்கம் இதுவரை இந்த யோசனையை ஏற்றுக்​கொள்ள​வில்லை; இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்தின் விலை குறைவு என்பதா​லும், இதைக் குழந்தை​களுக்கு வாய்வழியாக எளிதில் தந்து​விடலாம் என்பதா​லும், இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுப்​பதையே விடாப்​பிடி​யாகப் பின்பற்றச் சொல்கிறது.

தேவை தடுப்புமுறை மாற்றம்!

  • அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ச்​சி​யடைந்த மேல்நாடு​களில் குழந்தை​களுக்கு இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்​கப்​படு​வ​தில்லை. அங்கு பல ஆண்டு​களுக்கு முன்பிருந்தே இளம்பிள்​ளைவாதத் தடுப்பு ஊசிதான் போடப்​படு​கிறது. காரணம், இளம்பிள்​ளைவாதத் தடுப்​பூசியில் உயிரற்ற போலியோ வைரஸ் கிருமிகள் உள்ளன.
  • இவை குழந்தை​களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டும் ஏற்படுத்து​கின்றன; நோயை ஏற்படுத்து​வ​தில்லை. ஆனால், இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்தில் உயிருள்ள, ஆனால், செயல் குறைந்த போலியோ வைரஸ் கிருமிகள் உள்ளன. இவை பலருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. அதேநேரத்​தில், ஒரு சிலருக்கு மட்டும் இளம்பிள்​ளைவாத நோயை உண்டாக்கு​கின்றன. இதை உறுதிப்​படுத்தும் விதமாக உள்ளது, மேகாலயா மாநிலத்தில் ஏற்பட்ட நிகழ்வு.
  • அப்படி​யானால் - நோயைத் தடுக்க வேண்டிய மருந்தே நோயை உண்டாக்கு​கிறதென்றால் - அதற்கு என்ன காரணம்? பொதுவாக, முறைப்படி தடுப்​பூசிகள் போடப்படாத குழந்தை​களுக்கும் ஊட்டச்​சத்துக் குறைந்​துள்ள குழந்தை​களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்​கும். சில குழந்தை​களுக்குப் பிறவி​யிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்​திருக்​கும். இப்படிப்பட்ட குழந்தை​களுக்கு இளம்பிள்​ளைவாதத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்​கப்​படும்​போது, அதில் உள்ள உயிருள்ள கிருமிகள் மரபணு மாற்றம் அடைந்து, வீரியம் பெற்று, இளம்பிள்​ளைவாத நோயை உண்டாக்கு​கின்றன. அடுத்து, குறிப்​பிட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு முழுமை​யாகத் தடுப்பு மருந்து கொடுக்​காமல் விடுபட்​டிருந்​தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.
  • இந்தியா​வில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தை​களில் சுமார் 17% எடை குறைவாக​வும், 36% வளர்ச்சி குன்றிய​வர்​களாக​வும், 6% சவலைக் குழந்தை​களாகவும் உள்ளனர் என்று பெண்கள் - குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஜூலை 26 அன்று தெரிவித்​துள்ளது.
  • இந்த நிலையில், இனியும் இந்தியாவில் இளம்பிள்​ளைவாத நோயைத் தடுக்கத் தடுப்புச் சொட்டு மருந்து மட்டுமே பயன்படுத்​தினால் மேகால​யத்தில் தடுப்புச் சொட்டு மருந்தால் இளம்பிள்​ளைவாதம் ஏற்பட்​டுள்​ளதைப் போல், இந்தியாவில் மற்ற மாநிலங்​களிலும் ஏற்படு​வதற்குச் சாத்தியம் உள்ளது. இப்படிப் பாதிக்​கப்​படுவது ஒரு சில குழந்தைகளே ஆனாலும் அவர்களுக்கும் ஆரோக்​கி​யத்​துடன் வாழ உரிமை உண்டல்லவா?
  • ஆகவே, ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்​துவக் கழகம்’ ஆலோசனை சொல்வது​போல், இந்தியக் குழந்தை​களுக்குத் தடுப்புச் சொட்டு மருந்து கொடுப்​பதைப் படிப்​படியாக நிறுத்​தி​விட்டு, அதற்குப் பதிலாக ‘இளம்​பிள்​ளைவாதத் தடுப்​பூசி’ மட்டுமே போடப்பட வேண்டும் என்பதைக் கொள்கை அளவில் இந்திய அரசாங்கம் ஏற்றுக்​கொண்டால் நல்லது. இதன் மூலம் இளம்பிள்​ளைவாத நோயை இந்தி​யாவில் முற்றிலும் தடுத்​துவிட முடியும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்