- ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நகர்ப்புற மேம்பாடு மற்றும் மேலாண்மையில் ஒரு பிரபலமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் நகரங்கள் நவீனமாகும். அவற்றின் நீடித்த, நிலைத்த வளர்ச்சி உறுதி செய்யப்படும். இவற்றை எல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால், அது அனைவரின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருசாராரின் வாழ்விடத்தை, வாழ்வாதாரத்தை அழிப்பது அல்ல நகரமயமாக்கல். அவர்களுக்கான வாழ்க்கையை உறுதி செய்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையாளரின் நோக்கம், வலியுறுத்தல்.
- இதை நம்மூர் சிக்கலுடன் பொறுத்திப் பார்க்க ஓர் எளிமையான உதாரணம் உண்டு. ஒவ்வொரு முறை சென்னையில் குடிசை மாற்று வாரியம் அங்கு வசிப்பவர்களுக்கு புறநகரில் வீடு ஒதுக்கும்போதும் அவர்கள் செல்ல மறுத்து புலம்பும் குரலே இந்தப் பிரச்சினையில் ஆணிவேருக்கு சாட்சி. "ஐயா நான் இங்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கிறேன். அந்த சம்பாத்தியத்தில் தான் என் பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னை எங்கேயோ ஊருக்கு வெளியில் குடியமர்த்தினால் நான் அங்குபோய் என்ன வேலை செய்வேன்" என்று கேள்வி எழுப்பும் பெண்களை நாம் பார்த்திருப்போம்.
- அதுபோன்ற முறைசாரா தொழில்கள் பலவற்றில் உள்ள பெண்களின் குரலாகவே குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜோஸி விட்மர் தனது ஆய்வுக் கட்டுரையில் பல விஷயங்களை முன்வைக்கிறார்.
- இந்தியாவில் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் ரயில் மேம்பாலங்கள், நகர கண்காணிப்பு, தூய்மை மேம்பாடு ஆகியனவற்றில் கவனம் செலுத்துகின்றன.ஆனால், இவை அரசியல் ரீதியாக நடுநிலையானதாக, அனைவருக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறதா என்பதே கேள்வி. பணக்கார மக்களுக்கும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் வறுமைக் கோட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் பறிக்கின்றன என்ற உண்மை காணப்படுவதில்லை.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப புரட்சிகள் சமூக, அரசியல் சமத்துவத்தை நிலைநாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதனால் பாலின, சாதிய, இன, வர்க்க வேற்பாடுகள் இன்னுமே ஆழமாவதாகக் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் குப்பை மறுசுழற்சிக்கு உதவும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் அவர்கள் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூய்மை நகரத்தில் ஓர் அசுத்த பணி
- அகமதாபாத் நகரம்... இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்ற அடையாளம் கொண்ட நகரம். ’குப்பைக்காரிகள்’ என்று ஏளனமாக அழைக்கப்படும் குப்பை மறுசுழற்சிக்கு உதவும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு உள்ளனர். அவர்கள் காகிதம், கார்டுபோர்டு, பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட உலோகப் பொருட்களை சேகரித்து எடைக்கு விற்பனை செய்வார்கள். அதன்மூலம் அன்றாடம் ரூ.50 முதல் ரூ.150 வரை சம்பாதிப்பார்கள். இவரைப் போன்றோர் தங்களையும் அறியாமலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க உதவிவிடுகின்றனர். இதைக் குப்பை மேலாண்மைப் பணியில் இருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக செய்யத் தவறுவதால்தான் குப்பை மலைகளில் இவர்களின் வாழ்வாதாரம் இன்னும் சுழல்கிறது. ஆனால், இவ்வாறு குப்பைகளை சேகரிக்கும் இவர்களுக்கு சரும வியாதி தொடங்கி நுரையீரல் தொற்றுவரை பல அபாயகரமான உடல்நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- பாலினம், சாதி, ஏழ்மையால் அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து சந்தித்து தங்களையே அவர்கள் அசுத்தமானவர்கள், 'தீண்டத்தகாதவர்கள்' என்று எண்ணும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- இந்தியாவின் குப்பை மேலாண்மை பிரச்சினை பெருந்தொற்றுக்கு முன்னரே கவனம் பெற்றிருந்தது. நகர்ப்புறத் தூய்மை என்பது மிகப்பெரிய சமூக, அரசியல் அழுத்தமானது. ஸ்வச் பாரத் அபியான் மூலம் உலகத் தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கதல் உருவாகியிருந்தது.
- இந்தச் சூழலில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சிகள் பெருகின. பொதுத்துறை, தனியார் துறை பங்களிப்போடு நகர்ப்புற சுத்தத்தை உறுதி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குப்பை அகற்றும் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்கள் மூலம் குப்பை சேகரித்தல், ஐபிஎஸ் மூலம் குப்பை அகற்றம் கண்காணித்தல் ஆகிய வரிசைகட்டி வந்தன.
பெண்களுக்குப் பதிலாக ஆண்கள்
- அகமதாபாத்தில் குப்பை மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியின்போது, ஸ்மாட் சிட்டி திட்டங்களால் திடக்கழிவு மேலாண்மை நவீனமயமாக்கப்பட்ட பின்னர் அங்கு பெண்களுக்குப் பதில் ஆண்களே அதிகளவில் வேலை சேர்க்கப்பட்டதாக அத்தொழிலில் முறை சாராமல் ஈடுபட்டிருந்த பெண்கள் தெரிவித்தனர்.
- திடக்கழிவு மேலாண்மையில் நவீன உபகரணங்களும், அதிகளவில் ஆண் தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுவதால் வீட்டு வேலை முடித்து பெண்கள் குப்பை பொறுக்க கிளம்பும் முன்னரே முந்தைய நாள் இரவே அதை நிறுவனங்களும், அதில் உள்ள ஆண் தொழிலாளர்களும் செய்து முடித்துவிடுகின்றனர். இதனால் ஸ்க்ராப் எனப்படும் கழிவுப் பொருட்களை தேடி குப்பை மேடுகள் வரை பெண்கள் செல்கின்றனர். அங்கேயும் சரிவர கிடைக்காததால் அவர்கள் மன ரீதியாகவும், வருமானம் ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
- மார்ச் 2020-ல் இந்தியாவில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது குப்பைகளை அகற்ற புதிய ஒப்பந்ததாரர்கள், குப்பை அகற்றும் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் குப்பை சேகரிக்கும் பெண்கள் வீட்டில் வருவாய் இன்றி தவிக்க நேர்ந்தது.
மாற்று வழி என்ன?
- அகமதாபாத் நகரில் பெருந்தொற்றுக்குப் பின்னர் குப்பை அகற்றுதல் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் ஸ்மார்ட் வேஸ்ட் பின்கள் வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் குடிசைப் பகுதிகளை சீரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள்தான் குப்பை அகற்றும் பெண்களின் வாழ்வாதாரமும், வாழ்விடமும். கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மேலோங்கிய நிலையில் குப்பைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை சாதியைத் தாண்டி, சுகாதாரம் எனும் பெயரிலும் நீண்டிருக்கிறது.
- கரோனா பெருந்தொற்று நம் சமூகத்தில், பல்வேறு அமைப்புகளில் புரையோடிப் போயுள்ள சாதிய, பாலின இன்னும் பல பாகுபாடுகளை தெளிவாகக் காட்டியுள்ளது. ஆகையால் நகர்ப்புற மேம்பாட்டில் இன்னும் சமத்துவமான அனைவருக்குமான நீடித்த வளர்ச்சி வேண்டும்.
- இந்த மாற்றத்தை, புதிய கட்டமைப்புக்கான வளர்ச்சியை சற்றே மறுவடிவம் செய்ய வேண்டும். எந்த நகரம் ஸ்மார்ட் நகரமாக மாற்றப்பட இருக்கிறதோ அங்கே வாழும், வேலை செய்யும் எளிய சாமானிய மக்களின் அன்றாட பழக்கவழக்கங்கள், தேவைகளை ஆராய்ந்து அவற்றிற்கு ஈடுசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டு நகர்ப்புற மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
நன்றி: தி இந்து (29 – 05 – 2022)