- இந்தியாவிலுள்ள பல பாசனக் கட்டுமானங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, அப்போதைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவை. கிராம சமுதாயங்கள் அவற்றை நிர்வகித்தன. இந்தியாவின் சிறுசிறு அரசுகளையும், நிலப்பகுதிகளையும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, தன்னுடன் இணைத்துக்கொண்டபோது, இந்தப் பாசனக் கட்டுமானங்களும் கம்பெனியின் சொத்துகளாயின. தொடக்கத்தில், தொடர்ச்சியாக வருவாய் வந்தால் போதும் என்று வெவ்வேறு அமைப்புகளிடம் இவற்றை கம்பெனி ஒப்படைத்துவிட்டு, அவற்றின் பயன்பாடு பற்றியோ, பராமரிப்பு பற்றியோ கவலைப்படாமல் இருந்தது.
- இவற்றில் சில பாசனக் கட்டுமானங்கள்/திட்டங்கள் சீரழிந்து, பாசனப் பரப்பு குறைந்தபோது, கிழக்கிந்திய கம்பெனிக்கு வருவாயில் இழப்பு ஏற்பட்டது. பிறகு, இந்தக் கட்டுமானங்களை கம்பெனி பழுது பார்க்கத் தொடங்கியது. 1858 வரை, மியான்மர், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பிரிட்டிஷ் இந்தியாவில் புதிய பாசனத் திட்டங்களை/கட்டுமானங்களை உருவாக்கிய கம்பெனி, சுமார் 1.30 கோடி ஏக்கர் (54 லட்சம் ஹெக்டேர்) நிலங்களுக்குப் பாசன வசதியை ஏற்படுத்தியது.
- பொதுப் பணிகளுக்கான அரசுத் துறைகள் உருவாக்கப்பட்ட 1850கள் வரையிலும், பிரிட்டிஷ் இந்தியாவில் பொதுப் பணிகளைச் செயல்படுத்தும் பொறுப்பு, இராணுவ வாரியத்திடம் இருந்தது. 1860 முதல் 1921 வரை பாசனம், மத்தியிலுள்ள நிர்வாகத்திடம் இருந்தது. 1850களில் இந்தப் பாசனத் திட்டங்களுக்கு நிதிஉதவி செய்வது எவ்வாறு என்பது பிரிட்டிஷாருக்கு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தியது. தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மக்களின் பங்குகளுடன் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களை (பப்ளிக் லிமிடெட் 18 ந தாமிரவருணி: சமூகபொருளியல் மாற்றங்கள் கம்பெனி) என்ற யோசனையை கர்னல் காட்டன் முன்வைத்தார். 1859 மற்றும் 1860இல் சென்னைப் பாசன மற்றும் கால்வாய் நிறுவனம் (மெட்ராஸ் இரிகேஷன் அன்ட் கனால் கம்பெனி லிமிடெட்) மற்றும் கிழக்கிந்திய பாசன நிறுவனம் (ஈஸ்ட் இந்தியா இரிகேஷன் கம்பெனி லிமிடெட்) ஆகியவை அமைக்கப்பட்டன. எனினும், ஒரு நல்ல அரசு என்ற முறையில் அனைத்து பாசனத் திட்டங்களையும் அரசே தன் பொறுப்பில் ஏற்க வேண்டும்; தனியார் கரங்களில் விடக்கூடாது என்று நிர்வாகத்தில் இருந்த பலரும் கருதினர். 1864இல் இந்த நிறுவனங்கள் யாவும் கலைக்கப்பட்டன (தர்மகுமார் 1982). 1921இல் சில விதிவிலக்குகளுடன், "தண்ணீர்', மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயமானது. 1937இல் "தண்ணீர்' முழுவதுமாக மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் வந்தது; இன்னமும் அவ்வாறே தொடர்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பாசனம் தொடர்பான விரிவான சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை பற்றிப் பரிசீலிக்கப்பட்டது. 1866இல் ஆறுகள் மற்றும் இயற்கை அருவிகளில் கிடைக்கும் தண்ணீர்ப் பயன்பாடு தொடர்பாக, நாடு தழுவிய பொதுவான சட்டம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் சட்ட முன்வரைவு ஒன்றை உருவாக்குமாறு இந்தியாவின் கவர்னர் ஜெனரல் அறிவுறுத்தினார். இதுவே, 1873ஆம் ஆண்டு வடஇந்திய கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் சட்டம் (நார்த்தர்ன் இந்தியா கனால்ஸ் அன்ட் டிரெய்னேஜ் ஆக்ட்) மற்றும் அதைத் தொடர்ந்து, வங்காளம் மற்றும் பம்பாய் அரசுகளால் இதேபோன்ற சட்டங்களும் உருவாகக் காரணமாக இருந்தது.
- என்றாலும், இதுபோன்ற சட்டம் எதுவும் தென் இந்தியாவில் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு அடிப்படையில் இரு காரணங்கள் இருக்கின்றன. நாட்டின் வட பகுதியில் பாசனத் திட்டங்கள் யாவும் "ஜமீன்தாரி' மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்த முறையில், தண்ணீரை வழங்குவதிலும் வருவாயை வசூலிப்பதிலும் இடைப் பட்டவர்கள் ஜமீன்தாரி ஈடுபட்டுவந்தனர்.
- ஜமீன்தார்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த அதிகாரபூர்வமான ஒரு சட்டம் மட்டுமே தேவைப்பட்டது. தென் இந்தியாவில், ரயத்துவாரி முறையில், இந்த விஷயங்களை அரசு ஊழியர்களே நேரடியாகக் கவனித்தனர். எனவே, இந்த மாநிலங்களுக்குச் சட்டம் எதுவும் தேவைப்படவில்லை. இரண்டாவதாக, தென் இந்தியாவில் உள்ள பாசனத் திட்டங்கள்/ அமைப்புகள் அனைத்திலும் நெல்தான் சாகுபடி செய்யப்பட்டது; ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு, விவசாயிகள் தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடான ஒரு முறையை ஏற்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொண்டனர். ஆக, தென் இந்திய மாநிலங்களில், தண்ணீர்த் தீர்வை, பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவசியம் எனக் கருதப்படாததால், தண்ணீரை ஒழுங்குபடுத்தவும் விநியோகிக்கவுமான குறிப்பிட்ட சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
- நாட்டின் விடுதலைக்குப் பிறகு பிரதமரைத் தலைவராகக் கொண்ட ஒரு திட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956), பாசனத்துக்கும் உணவு உற்பத்திக்கும் அதிக அளவு முன்னுரிமை வழங்கியது. திட்டச் செலவில் இருபத்தியிரண்டு சதவீதம், பாசனத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஏராளமான அணைகள் கட்டப்பட்டன; கூடுதலான பரப்புக்குப் பாசனம் அளிக்கும் நோக்கில் விரிவான அளவில் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டன. பாசனத் திட்டங்களை மதிப்பிட பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய லாபக் கணக்கு பார்க்கும் முறை, சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. "லாபத் தொகை' கணக்கிடும் முறையை மாற்ற வேண்டும் என காட்கில் கமிட்டி பரிந்துரைக்கும் வரையிலும், 1964 வரையிலும் இந்த முறை நடைமுறையில் இருந்தது.
- 1970 வரையிலும் பாசனத்துக்காக மூவாயிரம் கோடி அளவுக்குப் பெரிய தொகை (அந்தக் காலத்தில்) முதலீடு செய்தபோதிலும் "உருவாக்கப்பட்ட' பாசனத் திறனுக்கும் "பயன்படுத்தியதற்கும்' பெரிய இடைவெளி இருந்தது. இதன் காரணமாக, 1969இல் இரண்டாது பாசன கமிஷனை இந்திய அரசு நியமித்தது. (1901-1903இல் முதல் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது). இரண்டாவது பாசன கமிஷன் தன்னுடைய அறிக்கையில் (1972) பாசனப் பகுதி மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நடுத்தர மற்றும் பெரிய பாசனத் திட்டங்களின் பாசனப் பகுதிகளின் ஒருங்கிணைந்த மற்றும் விரைவான மேம்பாட்டுக்கு சிறப்பு நிர்வாக முகமையொன்று மிகவும் அவசியம் என்று பாசன கமிஷன் கருதியது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களில் பாசனப் பகுதி மேம்பாட்டு ஆணை யங்கள் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதில் கூடுதல் அழுத்தம் தரப்பட்டது. எழுபதுகளின் பிற்பகுதியில் பாசனத் திட்டத் திறப்புக்குக் கீழே விவசாயிகளிடையே தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துடன் இது இணைக்கப்பட்டது.
- "வாராபந்தி' முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 350 வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அளவுக்கு "வாராபந்தி' யோசனைக்கு வரவேற்பு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து வடமேற்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் அதிக அளவில் "வாராபந்தி' முறை பின்பற்றப்படுகிறது. "வாராபந்தி' என்பதன் நேரடியான பொருள் "நிர்ணயிக்கப்பட்ட முறை (வைப்பு)'. குறிப்பிட்ட நாள், நேரம், ஒருவருக்குச் சொந்தமான நிலத்தின் அளவுக்கேற்ப, தண்ணீர்த் திறப்பதிலிருந்து தண்ணீர் வழங்கும் காலம் ஆகியவற்றை ஏற்கெனவே திட்டமிட்டபடி, முறைவைத்து சரிசமமாகத் தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும் முறையே "வாராபந்தி' எனப்படுகிறது (மல்ஹோத்ரா, எஸ்.பி. 1982). ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு "வாராபந்தி' வெற்றி பெறவில்லை.
- எண்பதுகளின் பிற்பகுதியில், "தேசிய தண்ணீர்க் கொள்கை' (இந்திய அரசு, 1987) உருவாக்கப்பட்டது. நீர்வளங்களைப் பெறுதல்/ உருவாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதன் தேவை ஆகியவற்றுக்கான வழிகாட்டி நெறிகளை அளித்தது. பாசன வேளாண்மையில் விவசாயி களின் கூடுதலான பங்கேற்பை இந்தக் கொள்கை பரிந்துரைத்தது.
- ஆனால், தேசிய தண்ணீர்க் கொள்கையானது எழுத்தளவிலேயேதான் இருந்தது. நாட்டிலுள்ள எந்த மாநில அரசிடமும் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய (மத்திய) அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1994இல் தமிழக அரசு, "மாநில தண்ணீர்க் கொள்கை'யை அறிவித்தது. மாநில தண்ணீர்க் கொள்கையின் மிக முக்கியமான சில நோக்கங்களாவன:
- 1. பாசனத்துக்காகவும் இல்லப் பயன்பாட்டுக்காகவும் தண்ணீரைப் பயன்படுத்துவோரிடையே சமத்துவத்தையும் சமூக நீதியையும் மேம்படுத்துவது.
- 2. தண்ணீரைத் திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலுமாக அனைத்து வகையிலும் பயனீட்டாளர்களின் பங்கேற்பை மேம்படுத்துவது.
- 3. குடிநீருக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கி, தண்ணீரைப் பயன்படுத்தும் வெவ்வேறு துறைகளுக்கான பகிர்வு முன்னுரிமையை உருவாக்குவது.
- 4. பிற தண்ணீர்ப் பயனீட்டாளர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு நீர் மின்னுற்பத்தியை அதிகப்பட்சமாக்குவது மற்றும்
- 5. தொழிற்சாலைகளுக்குப் போதுமான தண்ணீர் வழங்குவது.
- பற்றாக்குறைக் காலங்களில் எதற்கு முன்னுரிமை என்பது பற்றி இந்தத் தண்ணீர்க் கொள்கை எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில், அரசு அங்கீகரித்த "விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிகளின்' அடிப்படையில் பாசனத் திட்டங்களைப் பாசனத் துறை இயக்கிக் கொண்டிருக்கிறது. பாசனத் திட்டங்களை இயக்குவதற்கான வழிகாட்டியாக, மாநிலத்திலுள்ள அனைத்து அணைகள் மற்றும் பாசன அமைப்புகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான "விதி களின் சிறப்புத் தொகுப்பு' (தமிழக அரசு, 1984) இருக்கிறது. இந்த விதிகள், மிகவும் (பொத்தாம்) பொதுவானவை. பெரும்பாலான விஷயங்கள், அவற்றை நிர்வகிக்கும் அரசு அலுவலர்களின் முடிவுக்கே விடப்படுகின்றன.
- தாமிரவருணி: சமூக - பொருளியல் மாற்றங்கள் ஆய்வு நூலிலிருந்து
- [டிச. 29- முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவு நாள்]
நன்றி: தினமணி (29 – 12 – 2023)