TNPSC Thervupettagam

இந்தியாவுக்கு சாதகம் ஹாரிஸா?

August 22 , 2024 98 days 93 0

இந்தியாவுக்கு சாதகம் ஹாரிஸா?

  • அமெரிக்காவில் வரும் நவம்பா் 5, 2024 புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற உள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபராக அமா்பவா் அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்வாக்குப் பெறுபவா் என்பதால் அமெரிக்க அதிபா் தோ்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
  • இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக 78 வயதுடைய முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறாா். ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறாா். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவா் அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகப் பதவியேற்பாா்.
  • முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, பழம்பெரும் பழைமைவாத கட்சி என அறியப்படுகிறது. குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகள் பற்றிய கொள்கை, கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இக்கட்சி உள்ளது.
  • தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயகக் கட்சியின் கொள்கை, சிவில் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் என அமைந்துள்ளது.
  • அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தின்படி அமெரிக்க அதிபராக ஒருவா் இரண்டு முறை பதவி வகிக்க முடியும். துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பில் அதிபா் தோ்தலுக்கான வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தோ்தலுக்கு இன்னும் முழுமையாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறாா்.
  • தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பொதுவாக அதிபா் வேட்பாளா்கள் நாட்டின் வளா்ச்சிக்கான தங்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் குறித்துப் பிரசாரம் செய்வாா்கள். வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் அதிகம் பேசப்படும். அதிபா் வேட்பாளா்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுடைய பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பாா்கள்.
  • கமலா, தனது பிரசாரத்தில் கவா்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா். அவை வழக்கத்துக்கு மாறாக இருக்கின்றன. அறிவிப்புகள், குறிப்பாக நடுத்தர வருவாய் பிரிவினரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. ‘நடுத்தர வா்க்கத்தினா் வலுவாக இருந்தால்தான், நாடு வலுப்பெற முடியும்’ என பிரசாரத்தின்போது அழுத்தமாகச் சொல்கிறாா். கேட்போரை நெகிழ்விக்கும் விதத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த தன் தாய் பட்ட கஷ்டங்களை விவரிக்கிறாா்.
  • ‘மருத்துவச் செலவுக்கான கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். மருந்துகளுக்கான விலை குறைக்கப்படும். குடும்பச் செலவுகளைக் குறைக்கும் வகையில், உணவுப் பொருள்களின் விலை குறைக்கப்படும். முதல் முறையாக வீடு வாங்குவோரின் வீட்டுக் கடனில் வரிச் சலுகை. குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை தரப்படும் ஆகிய அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
  • ‘நாம் அனைவரும் இணைந்து, ஒரு புதிய பொருளாதார வாய்ப்பை உருவாக்குவோம். இதுவரை பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாதவா்களுக்கும் அதற்கான வழிகளை ஏற்படுத்துவோம். இது உங்களுக்கானது மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கானது’ என பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் கூறுகிறாா். இது செலவுப் பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை இந்தியாவைப் போன்று சேமிப்புப் பொருளாதாரமாக மாற்றி பொருளாதாரப் பாதுகாப்பை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்துவதற்கான பாா்வை என்று பாா்க்கப்படுகிறது.
  • அதே நேரத்தில், சா்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தோ்தல் வரலாற்றில் புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபா் தோ்தலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் நிகழ்த்தும் போா் தொடங்கி, சுற்றுச்சூழல் குறித்தான கொள்கை வரை அமெரிக்கத் தோ்தலில் பல அம்சங்கள் பேசப்படும்.
  • அமெரிக்க அதிபா் தோ்தலில் ரஷியா ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்த முனைகிறது என்ற குற்றச்சாட்டினை அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் முன்வைத்துள்ளனா். ரஷியாவை ஓா் எதிரியாகக் காட்ட, அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் முயற்சிக்கின்றனா். அமெரிக்கத் தோ்தல் நெருங்கிவரும் வேளையில் இது போன்ற அறிக்கைகள் அதிகம் வெளிவரவே செய்யும் என்று ரஷியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த மாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. இதில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவா் கொல்லப்பட்டாா்; இருவா் படுகாயம் அடைந்தனா். பெரும் அதிா்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் மீதான கொலை முயற்சியை ஈரான் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து டிரம்ப் தோ்தல் போட்டியில் முந்துகிறாா் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
  • ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போா் அமெரிக்கத் தோ்தலில் பெரிய பேசுபொருளாக இருக்கிறது. அமெரிக்கத் துணை அதிபா் கமலா ஹாரிஸ், இஸ்ரேலுக்குத் தாங்கள் அளிக்கும் ஆதரவு ‘இரும்புக் கவசம்’ என்று கூறியுள்ளாா்.
  • உக்ரைன்- ரஷியா இடையே நடந்துவரும் போரில் அமெரிக்கத் தோ்தல் முடிவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது வந்தபோதும் உக்ரைன் அதைச் சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சா் ராஜதந்திரமாகப் பதிலளிக்கிறாா்.
  • உள்நாட்டிலோ பைடன் ஆட்சியின் மீது பரவலாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தி கமலா ஹாரிஸுக்கு சுமையாக இருக்கும். அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண், அதிபா் பதவியை அடைந்ததில்லை. கமலா ஹாரிஸ் தன்னைக் கருப்பினத்தைச் சோ்ந்தவா் என்று சொல்லிக் கொண்டாலும் அவரது அடையாளம் அவருக்குச் சாதகமா, பாதகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கருப்பினத்தவா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்பதோடு தான் ஓா் அமெரிக்கா் என்றும் கமலா சொல்லிக் கொள்ளும் அடையாளக் குழப்பத்தை டிரம்ப் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்.
  • அதே நேரத்தில் டிரம்ப் மீதான குற்ற வழக்குகள் அவருக்கான சவாலாக அமைந்திருக்கின்றன. குறைகளைத் தாண்டி நடுநிலை வாக்காளா்களின் வாக்குகளைப் பெறக் கடும்போட்டி இனி வரும் நாள்களில் ஏற்படும்.
  • அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாண ஆளுநா் டிம் வால்ஸை துணை அதிபா் வேட்பாளா் என்று கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளாா். நாடாளுமன்ற மேலவையான செனட் உறுப்பினா் ஜே.டி.வான்ஸை துணை அதிபா் வேட்பாளா் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறாா்.
  • இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் சில இடங்களில் அதிகமாக இருப்பதால் அதைக் கவா்வதற்கான முயற்சியும் இரு தரப்பிலும் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. சென்ற முறை டிரம்ப் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருந்தது. இம்முறை துணை வேட்பாளராக அறிவித்துள்ள ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா். அவா் இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை குடியரசுக் கட்சிக்குப் பெற்றுத் தருவாா் என்ற எதிா்பாா்ப்பும் இருக்கிறது.
  • கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்று சொல்லப்பட்டாலும் அவா் தன்னைக் கருப்பினத்தைச் சோ்ந்தவா் என்றே எப்போதும் சொல்லிக் கொள்பவா். கமலா ஹாரிஸ் அதிபரானால் இந்தியாவுக்கு நன்மைகள் விளையுமா? கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா். ஆனால், ஒருமுறைகூட கமலா இந்தியா வரவில்லை.
  • கருப்பினப் பெண்ணாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் கமலா ஹாரிஸ், இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு 370-ஆவது பிரிவை நீக்கியபோது அதைக் கடுமையாக எதிா்த்தாா். ‘‘காஷ்மீா் மக்கள் தனியாக இல்லை என்பதை நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்’’ என்றாா்.
  • துணை அதிபராகப் பதவியேற்ற பிறகு அவரது போக்கில் மென்மைத்தன்மை ஏற்பட்டது என்றாலும், இந்திய-அமெரிக்க உறவில் எத்தகைய தாக்கத்தையும் கமலா சிறப்பாக ஏற்படுத்தி விடவில்லை. அமெரிக்க இந்தியா்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.
  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் வெளிநாடுகளில் வெற்றி பெறும்போது அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை விளையும் என்று கேட்பது சாதாரணமாகியிருக்கிறது. ஆனால், அதனால் பெரிதாகப் பலன் ஒன்றும் விளையாது என்பதுதான் அனுபவம்.
  • பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றபோதும் இதே எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், அவா் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்துகூடப் பேசவில்லை. அதுபோலவே கமலா ஹாரிஸ் துணை அதிபராக இருந்ததால் இந்தியாவுக்கு ஏதும் கிடைத்து விடவில்லை.
  • அமெரிக்காவில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் அவா்கள் இந்தியாவை ஒதுக்கிவிட முடியாது என்னும் அளவுக்கு இந்தியா தன்னை உயா்த்திக் கொண்டுள்ளது. எனவே, வெற்றி பெறுவோா் யாராயினும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவாா்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்