TNPSC Thervupettagam

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான தொடர்பு குறித்த தலையங்கம்

December 26 , 2021 952 days 353 0
  • ஆப்கானிஸ்தானை கைவசப்படுத்தியிருக்கும் தலிபான்களின் ஆட்சி, பாகிஸ்தானுக்கு நெருக்கமானதாக இருப்பதும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும் உலகறிந்த உண்மை.
  • அங்கே நிலவும் பசியும் பஞ்சமும் முறையான ஆட்சியின்மையும் இந்தியாவுக்கு எப்போது இருந்தாலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
  • இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான தொடர்பு என்பது பல நூற்றாண்டு வரலாறு உடையது. அதனால்தான் ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வந்தது.
  • 10 நாள்களுக்கு முன்பு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 1.6 டன் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பிக் கொடுத்தது.
  • அந்த மருந்துகளை உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்து காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மூலம் இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கிய மனி தாபிமான உதவியை தலிபான்கள் அங்கீகரிக்கிறார்களோ இல்லையோ, ஆப்கன் மக்கள் மனதளவில் வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.

பட்டினியின் பிடியில்...

  • சாமானிய ஆப்கானியர்களையும் தலிபான்களையும் உலகம் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் போன்ற பொதுவான அமைப்புகளின் மூலம் மனிதாபிமான உதவிகளை வறுமையின் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிக் கொடுக்காவிட்டால், அது மனித இனத்துக்குச் செய்யப்படும் வஞ்சனையாகிவிடும்.
  • கொவைட் 19-இன் பிடியில் சிக்கி ஆப்கானிஸ்தானின் மருத்துவக் கட்டமைப்பு உருக்குலைந்துவிடாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தலிபான் தலைமையுடன் உலக சுகாதார நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கிறது.
  • அதற்கு உதவும் வகையில் உயிர்காக்கும் மருந்துகள் மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களையும் இந்தியா அனுப்பிக் கொடுக்க முன்வந்திருப்பதைப் பாராட்டாதவர்கள் இல்லை.
  • இந்தியாவிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை அனுப்புவதற்கு வாகனங்கள் தயாராக இருந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பாகிஸ்தான் முனைந்ததை என்னவென்று சொல்ல? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தக உறவு கடந்த மூன்று ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
  • அதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான தரைவழிப் போக்குவரத்து முடங்கியது என்னவோ உண்மை. உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைத்ததற்குக் காரணமும் அதுதான்.
  • ஆப்கானிஸ்தானுக்கான உணவுப் பொருள் உதவியை இந்தியா எடுத்துச் செல்வதற்கு முதலில் தனது எல்லையைத் திறந்துவிட ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், தனது நிலையை மாற்றிக் கொண்டது.
  • வாகா எல்லையில் தனது வாகனங்களின் மூலமோ, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் வாகனங்களின் மூலமோதான் அந்த உணவுப் பொருள்களை ஏற்றிச்செல்ல முடியும் என்று பாகிஸ்தான் பிடிவாதம் பிடித்து இந்திய உதவியைத் தடுத்திருப்பதை ஆப்கானிஸ்தான் மக்கள் உணர்கிறார்களா என்று தெரியவில்லை.
  • பாகிஸ்தான் மூலமாக உணவுப் பொருள்கள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும்போது பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் அதை அனுமதிக்குமா என்கிற சந்தேகமும் எழுகிறது.
  • தலிபான்கள் ஆகஸ்ட் மாதம் காபூலைக் கைப்பற்றி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச பொருளாதாரத் தடையை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.
  • அதனால், ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 55% (2.28 கோடி பேர்) கடுமையான குளிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலையில் தவிக்கிறார்கள்.
  • 10 லட்சம் குழந்தைகள் உள்பட 90 லட்சம் ஆப்கன் மக்கள் உயிருக்குப் போராடும் மிகப் பெரிய பஞ்சத்தில் சிக்கியிருக்கிறார்கள்.
  • இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் மனிதாபிமான உதவியையும், பாகிஸ்தான் அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
  • ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் தகவல்களிலிருந்து மூன்று உண்மைகள் தெரிய வருகின்றன. தலிபான் ஆட்சியில் குறைந்த அளவு மனித உரிமைகூட இல்லாமல் இருப்பதும், தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை காணப்படுவதும் முதலாவது உண்மை.
  • கல்விச்சாலைகளில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது மட்டுமல்லாமல், தலிபான்களின் ஆட்சிக்கு எதிர்ப்பான எந்தவொரு செயலும் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இரண்டாவதாக, தலிபான்களுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிரிவான கோரோசான் அமைப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
  • அதனால், ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
  • மூன்றாவதாக, பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்து உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்குவதற்குக்கூட வழியில்லாத நிலையில் தலிபான் ஆட்சி யாளர்கள் இருக்கிறார்கள்.
  • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் உற்பத்தியும், வர்த்தகமும் அல்லாமல் வேறு எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் இல்லாததால் ஆப்கானிஸ்தான் அந்நிய உதவிகளை மட்டுமே நம்பியிருக்கிறது.
  • சீனா உள்பட எந்தவொரு நாடும் தலிபான்களையும், ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்து காப்பாற்றி விட முடியாது. இப்படியே போனால், மக்கள் மத்தியில் உணவுக்கான புரட்சி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
  • உலகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா, இல்லை தலிபான்களுக்கு உதவப் போகிறதா?

நன்றி: தினமணி  (26 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்