TNPSC Thervupettagam

இந்தியாவும் அதன் மாநிலங்களும்: கல்வி - டேட்டா ஸ்டோரி

June 26 , 2023 565 days 413 0
  • ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வித் துறையின் மேம்பாடு என்பது மிக அடிப்படையானது. இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் கல்வி அறிவு பெற்றிருந்த மக்களின் எண்ணிக்கை 12 சதவீதம்தான். இன்று, அது 77 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் தங்கள் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. கல்வித் துறையைப் பொருத்தவரையில், அதற்கு ஒதுக்கப்படும் நிதி, கல்வி நிலையங்களின் எண்ணிக்கை, மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளிட்டவை கவனம் செலுத்தி பார்க்க வேண்டிய காரணிகள் ஆகும்.

கல்வியறிவு

  • கேரளா (96.2%), லட்சத்தீவு (92.2%), மிசோரம் (91.5%), டெல்லி (88.7%), திரிபுரா (87.7%) ஆகியவை கல்வியறிவில் முன்னிலை வகின்றன.
  • தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மொத்த மக்கள்தொகையில் 83% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
  • நாட்டிலேயே கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருக்கும் மாநிலம் ஆந்திர பிரதேசம். அங்குள்ள மொத்த மக்களில் வெறும் 67% பேர்தான் கல்வியறிவு பெற்றுள்ளனர். அதற்கடுத்த இடத்தில், அருணாச்சல பிரதேசம் (67%), ராஜஸ்தான் (70%), பிஹார் (71%), தெலங்கானா (73%) உள்ளன.

பள்ளிகளின் எண்ணிக்கை

  • இந்தியாவில் மொத்தம் 14.90 லட்சம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இவற்றில் 97 லட்சம் ஆசியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை 26.5 கோடி.
  • மாநிலம்வாரியாக பார்த்தால், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2.58 லட்சம் பள்ளிகள் உள்ளன. அதற்கு அடுத்ததாக,மத்திய பிரதேசத்தில் 1.25 லட்சம் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 58,801 ஆகும்.
  • உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தபோதிலும், நாட்டிலேயே ஓராசிரியர் பள்ளிகள் அந்த மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
  • இந்தியாவில் மொத்தம் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. அதாவது, அந்தப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும்தான் பணியில் இருப்பார். அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 16,630 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. ஆந்திராவில் 12,386 மற்றும் உத்தர பிரதேசத்தில் 8,040 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன.

நிதி ஒதுக்கீடு

  • 2023 - 24 நிதி ஆண்டில் மத்திய அரசு கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகம் ஆகும்.
  • ஆனால், கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமென்றால், நாட்டின் ஜிடிபியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரையில் இந்த அளவுக்கு மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை.
  • கல்விக்கான தேசிய சராசரி நிதி ஒதுக்கீடு 15.4%-ஆக உள்ளது. அதாவது, மாநிலங்கள் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது தேசிய சராசரிக்கு மேல் ஒதுக்கீடு செய்வது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
  • டெல்லி நடப்பு நிதி ஆண்டில் அதன் மொத்த பட்ஜெட்டில் 21% நிதியை கல்விக்கு ஒதுக்கியுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அசாம், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார் மாநிலங்கள் உள்ளன. இம்மாநிலங்கள் அதன் மொத்த பட்ஜெட்டில் 17%-க்கு மேல் கல்விக்கு ஒதுக்கியுள்ளன.
  • சத்தீஸ்கர், பிஹார் ஆகிய மாநிலங்கள் கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் இருப்பதால், அம்மாநிலங்கள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • நடப்பு நிதி ஆண்டில், தெலங்கானா அதன் பட்ஜெட்டில் வெறும் 6.5% மட்டுமே கல்விக்கு ஒதுக்கியுள்ளது. கல்வியறிவில் பின்தங்கி இருக்கும் தெலங்கானா குறைந்த அளவு நிதி ஒதுக்கியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
  • தமிழ்நாடு நடப்பு நிதி ஆண்டில் கல்விக்கு ரூ.47,266 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
  • கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

நன்றி: தி இந்து (26  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்