- அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் இன்றும் வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்கும் நிலையில், மிகவும் துணிவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வெற்றிகரமாகப் பல தேர்தல்களில் பயன்படுத்தி இருப்பது இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்துக்கு, கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பிறகாவது முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
- தேர்தலில் வெற்றிபெறும்போது அது முறையாகச் செயல்படுவதாகவும், தோல்வியடைந்தால் அதன் நம்பகத்தன்மையைக் குறைகூறி அறிக்கை வெளியிடுவதும் அரசியல் முதிர்ச்சி இன்மைமையாகவும், மாற்றத்துக்கு எதிரான பிற்போக்குத்தனமாகவும்தான் தெரிகிறது.
- 1990-களில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனின் முனைப்புதான் இ.வி.எம். என்று பரவலாக அறியப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்திர அறிமுகம். எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பலனாக உருவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், உலக ஜனநாயகத்துக்கு இந்தியா வழங்கி இருக்கும் கொடை.
- இந்திய ஜனநாயகத்தில் பல குறைபாடுகள் இருப்பது உண்மை. பண பலம், ஜாதி பலம், மதம் சார்ந்த தாக்கங்கள் என்று பல ஜனநாயக முரண்கள் காணப்படுகின்றன என்றாலும், இதுபோன்ற முரண்கள் ஏனைய ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஜனநாயகம் என்பது முழுமையான, தவறில்லாத ஆட்சிமுறை என்று கூறிவிடவும் முடியாது.
- உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஜனநாயக முறை நிலவியது என்கிற வாதம் ஒரளவுக்குத்தான் சரியே தவிர, அந்தப் பெருமை நம்முடையது மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மூவேந்தர்கள் காலத்தில் குடவோலை முறை இருந்ததற்கான சில சான்றுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அது பரவலாக எல்லாப் பகுதிகளிலும் கையாளப் பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது.
- ஜனநாயகம் என்கிற ஆட்சிமுறையைக் கையாண்டவர்கள் கிரேக்கர்கள் என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. கிரேக்க மக்களில், மேல்தட்டு வர்க்கத்தினரான பிரபுக்கள் மட்டுமே நேரில் சென்று வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. பொதுமக்கள் அந்த வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை. கிரேக்கத்தில் பிரபுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இருந்தனர்; வம்சாவளி மன்னர்கள் இருக்கவில்லை, அவ்வளவே!
- நமது வேதங்களில் சபைகள், சங்கங்கள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவற்றை ஜனநாயகம் என்று கூறமுடியாது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில், பல குறுநில மன்னர்களின் ஆட்சியில், மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் சபைகள் இருந்தன. கபிலவாஸ்துவில் சாக்கியம், ராமகிராமத்தில் கோலியா, வைசாலியில் லிச்சாவி போன்ற சபைகள் இருந்தன. ஆனால் அரசர்களும் இருந்தனர். கிரேக்கத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர் என்பதால் அதை ஜனநாயகம் என்று அழைக்க முடியாது.
- 18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிதான் குடிமக்களின் உரிமை குறித்து முதல் முதலாக அறிவித்தது. அதன் நீட்சியாக உருவான ஜனநாயகத்தில் பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. அடுத்தடுத்த காலகட்டங்களில், அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் வாக்குரிமை என்பது உருவானது. அதுவும்கூட, மிக மிகத் தாமதமாக...
- "நாடாளுமன்றங்களின் மூலம்' என்று கருதப்படும் பிரிட்டனில், நிலச்சுவான்தார்கள் மட்டும்தான் முதலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 1832 சீர்திருத்தச் சட்டத்துக்குப் பிறகு நிலம் வைத்திருக்கும் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 1867-இல் அனைத்து ஆடவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை 1918-இல்தான் வழங்கப்பட்டது.
- பிரிட்டனில் வாக்குரிமை பெற பெண்கள் 1928 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதையும் போராடித்தான் பெற்றார்கள். பிரான்சில் 1944-க்குப் பிறகுதான் மகளிருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
- அமெரிக்காவில் 1861 முதல் நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக கறுப்பர் இன அடிமைகளுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் தென் மாகாணங்கள் "ஜிம்க்ரோ' சட்டம் இயற்றி பெரும்பாலான அடிமைகள் வாக்களிப்பதைத் தடுத்து விட்டன. அனைவருக்கும் வாக்குரிமை என்பது அமெரிக்காவில் சாத்தியமானது 1965 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குப் பிறகுதான்.
- ஏனைய நாடுகளில் மன்னராட்சி அகற்றப்பட்டு, பிரபுக்களின் ஆட்சி நிறுவப்பட்டு, அதற்குப் பிறகு தான் அனைவருக்கும் வாக்குரிமை சாத்தியமானது. இந்தியாவில் நாம் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பதை அறிமுகப்படுத்திவிட்டோம். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமை என்பதை, 75% மக்கள் எழுதப் படிக்கத் தெரியாத சுதந்திர இந்தியா அறிமுகப்படுத்தியபோது உலகம் நம்மை ஐயத்துடன் பார்த்தது.
- இப்போது இந்தியாவில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் தடம்புரளாமல் இருக்கிறது. ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போது (அவசர நிலைச் சட்டம்) படிப்பறிவு அதிகமற்ற அடித்தட்டு மக்கள்தான் இந்திய ஜனநாயகத்தை காத்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமை போலவே, வாக்குப் பதிவு இயந்திரமும் ஜனநாயகத்துக்கு நாம் வழங்கி இருக்கும் கொடை!
நன்றி: தினமணி (18 – 05 – 2023)