TNPSC Thervupettagam

இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி

December 25 , 2024 14 days 84 0

இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி

  • இன்று டிசம்பர் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ராஜதந்திரியாக அவர் உயர்ந்து நிற்கிறார்.
  • 21ஆம் நூற்றாண்டை நோக்கிய இந்தியா​விற்கு மாற்றத்தின் சிற்பி​யாகத் திகழ்ந்த வாஜ்பாய்க்கு நாடு எப்போதும் நன்றிக்​கடன்​பட்​டிருக்​கும். 1998ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பதவியேற்​ற​போது, நமது நாடு நிலையற்ற அரசியல் காலக்கட்​டத்தைக் கடந்து சென்றது. அதற்கு முந்தைய 9 ஆண்டு​களில் 4 முறை மக்களவைத் தேர்தல் நடந்தது.
  • இந்திய மக்கள் பொறுமை​யிழந்​தனர்; அரசுகளால் நன்மைகளை வழங்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. நிலையான, சிறப்பான ஆட்சியை வழங்கியதன் மூலம் இந்த நிலையை மாற்றியவர் வாஜ்பாய். எளிய குடும்பத்​திலிருந்து வந்த அவர், சாதாரணக் குடிமகனின் வாழ்க்கைப் போராட்​டங்​களை​யும், மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையான நிர்வாகத்தின் சக்தியையும் உணர்ந்​திருந்​தார்.
  • நம்மைச் சுற்றி​யுள்ள பல துறைகளில் வாஜ்பாய் தலைமையின் நீண்டகால தாக்கத்தை ஒருவர் காண முடியும். அவரது சகாப்தம் தகவல் தொழில்​நுட்பம், தொலைத்​தொடர்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றில் பிரம்​மாண்டமான பாய்ச்சல் வேகத்தைக் குறித்தது. மிகவும் துடிப்பான இளைஞர் சக்தியை ஏராளமாகக் கொண்டுள்ள நமது நாட்டிற்கு இது மிகவும் முக்கிய​மானது. அடல் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கும் தொழில்​நுட்பம் கிடைக்கச் செய்வதற்கான முதல் முயற்​சியைத் தீவிரமாக மேற்கொண்டது.
  • அதேநேரத்​தில், இந்தியாவை இணைப்​பதில் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இந்தியாவின் நீள அகலங்களை இணைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை இன்றும்கூடப் பெரும்​பாலோர் நினைவு​கூர்​கின்​றனர். பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் போன்ற​வற்றின் மூலம் உள்ளூர் இணைப்பை மேம்படுத்த வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சி​களும் குறிப்பிடத்​தக்கவை.
  • அதேபோல், உலகத் தரம் வாய்ந்த உள்கட்​டமைப்புத் திட்டமாக விளங்கும் டெல்லி மெட்ரோ பணிகள், அவரது அரசின் மெட்ரோ இணைப்​புக்கு உந்துதல் அளித்தன. இத்தகைய முன்முயற்சி​களால், வாஜ்பாய் அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்கு​வித்தது மட்டுமின்றி, தொலைதூரப் பகுதிகளை நெருக்​க​மாகக் கொண்டு​வந்து, ஒற்றுமை​யையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தது.
  • சமூக நலனைப் பொறுத்​தவரை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய பிரிவினருக்கு நவீனக் கல்வி கிடைக்கும் இந்தியாவை உருவாக்க வாஜ்பாய் எவ்வாறு கனவு கண்டார் என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற முன்முயற்சி எடுத்​துக்​காட்டு​கிறது. அதேநேரத்​தில், அவரது அரசு பல பொருளாதாரச் சீர்திருத்​தங்​களுக்கு முன்னோடி​யாகத் திகழ்ந்தது. பல தசாப்​தங்களாக ஒரு வகையான பொருளாதாரத் தத்து​வத்தைப் பின்பற்றிய, நெருங்கிய நண்பர்​களுக்கு சாதகமானதை, தேக்கநிலை ஊக்கு​விக்​கப்​பட்டதை மாற்றி, இந்தியாவின் பொருளாதார எழுச்​சிக்கு இது களம் அமைத்தது.
  • வாஜ்பாய் தலைமைக்கு ஓர் அற்புதமான உதாரணத்தை 1998 கோடைக்காலத்தில் நாம் கண்டோம். அவரது அரசு அப்போதுதான் பதவியேற்றிருந்தது. இருப்​பினும் மே 11 அன்று, ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பொக்ரான் அணு ஆயுத சோதனைகளை இந்தியா நடத்தியது. இந்தச் சோதனைகள் இந்திய அறிவியல் சமூகத்தின் வலிமைக்கு எடுத்​துக்​காட்டாக இருந்தன. இந்தியாவின் சோதனை​களைக் கண்டு உலகமே அதிர்ச்​சி​யடைந்தது. கோபத்தை வெளிப்படுத்தியது.
  • எந்தவொரு சாதாரணத் தலைவரும் இதற்கு அடிபணிந்​திருப்​பார். ஆனால் வாஜ்பாய் அதை வேறுவித​மாகக் கையாண்​டார். அதன்பிறகு என்ன நடந்தது? இரண்டு நாட்களுக்குப் பின் மே 13 அன்று, மற்றொரு தொகுப்புச் சோதனை​களுக்கு அரசு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் இந்தியா உறுதி​யாகவும் தீர்மானகர​மாகவும் நின்றது! 11ஆம் தேதி சோதனைகள் அறிவியல் திறனைக் காட்டின என்றால், 13ஆம் தேதி சோதனைகள் உண்மையான தலைமைப்​பண்பை எடுத்​துக்​காட்டின.
  • இதன்மூலம் அச்சுறுத்​தல்கள் அல்லது அழுத்​தங்​களுக்கு இந்தியா அடிபணியும் நாட்கள் முடிந்து​விட்டன என்கிற செய்தி உலகிற்குத் தெரிவிக்​கப்​பட்டது. சர்வதேசத் தடைகளை எதிர்​கொண்ட போதும், வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக நின்றது. இறையாண்​மையைப் பாதுகாப்​ப​தற்கான இந்தியாவின் உரிமையை வெளிப்​படுத்​தியது. அதே நேரத்தில் உலக அமைதியின் வலுவான ஆதரவாள​ராகவும் இருந்தது.
  • இந்திய ஜனநாயகத்​தை​யும், அதை வலிமை​யானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்​தையும் வாஜ்பாய் அறிந்​திருந்​தார். இந்திய அரசியலில் கூட்ட​ணிகளை மறுவரையறை செய்த, தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கு​வதில் வாஜ்பாய் தலைமை தாங்கி​னார். அவர் மக்களை ஒன்றிணைத்து, வளர்ச்சி, தேச முன்னேற்றம், பிராந்திய லட்சி​யங்​களுக்கான சக்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை மாற்றி​னார்.
  • அரசியல் பயணம் முழுவ​திலும் அவரது நாடாளுமன்ற மதிநுட்பம் வெளிப்​பட்டது. அவர் ஒரு சில எம்.பி.க்​களைக் கொண்ட ஒரு கட்சியைச் சேர்ந்​தவர்​தான். ஆனால், அந்த நேரத்தில் சர்வ சக்தி வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வலிமையை அசைக்க அவரது வார்த்​தைகள் போதுமானதாக இருந்தன.
  • பிரதமராக இருந்த​போது, எதிர்க்​கட்​சிகளின் விமர்​சனங்​களைத் தனக்கே உரிய பாணியிலும், பொருள் ஆழத்துடனும் எதிர்​கொண்டு மழுங்​கச்​செய்​தார். எதிர்க்​கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றிய​போதும், அவரது வாழ்க்கையில் யாருக்கும் எதிராக ஒருபோதும் கசப்பு​ணர்வை அவர் வெளிப்​படுத்​தி​ய​தில்லை. ஆனால், அவரைத் துரோகி என்று அழைக்கும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்​து​போனது!
  • சந்தர்ப்பவாத வழிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தில் ஒட்டிக்​கொண்​டிருப்​பவராக அவர் இருந்​த​தில்லை. குதிரை பேரம், இழிவான அரசியல் பாதையைப் பின்பற்று​வதற்கு பதிலாக 1996இல் அவர் பதவியை ராஜினாமா செய்யவே விரும்​பி​னார். 1999இல் அவரது அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்​கப்​பட்டது. அப்போது நடக்கும் முறைகேடான அரசியலுக்கு சவால் விடுக்​குமாறு நிறைய பேர் அவரிடம் கூறினார்கள். ஆனால், விதிகளின்படி செல்ல அவர் விரும்பி​னார். இறுதி​யில், அவர் மக்கள் தந்த மற்றொரு மகத்தான வெற்றி​யுடன் திரும்பி வந்தார்.
  • நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்​ப​திலும் வாஜ்பாய் உயர்ந்து நிற்கிறார். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்​ஜியின் உயிர்த் தியாகம் அவரை மிகவும் பாதித்தது. பல ஆண்டு​களுக்குப் பின், அவர் அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் தூணாகத் திகழ்ந்​தார். நெருக்கடி நிலைக்குப் பின், 1977 தேர்தலுக்கு முன், தனது சொந்தக் கட்சியை (ஜனசங்கம்) ஜனதா கட்சியில் இணைக்க ஒப்புக்​கொண்​டார். இது அவருக்கு ஒரு வேதனையான முடிவாக இருந்​திருக்கும் என்று நான் நம்பு​கிறேன். ஆனால், அப்போது அவருக்கும் மற்றவர்​களுக்கும் அரசமைப்பைப் பாதுகாப்பது மட்டுமே முக்கிய​மானதாக இருந்தது.
  • இந்தியக் கலாச்​சா​ரத்தில் வாஜ்பாய் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்​தக்கது. இந்திய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்​பேற்ற பின், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த ஒரு செயல், இந்தியாவின் பாரம்​பரியம், அடையாளத்தின் மீதான அவரது மகத்தான பெருமிதத்தை வெளிப்​படுத்தி, உலக அரங்கில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச்​சென்றது.
  • வாஜ்பாயின் ஆளுமை​யானது ஈர்க்கும் காந்தசக்தி நிறைந்தது. இலக்கியம், கருத்து வெளிப்​பாட்டின் மீதான காதலால் அவரது வாழ்க்கை வளம் பெற்றது. அவர் ஒரு சிறந்த எழுத்​தாளர், கவிஞர். ஊக்கமளிக்​க​வும், சிந்தனையைத் தூண்ட​வும், ஆறுதல் அளிக்​கவும் அவர் சொற்களைப் பயன்படுத்​தி​னார். அவரது கவிதைகள், பெரும்​பாலும் உள்மனப் போராட்​டங்கள், தேசத்​திற்கான நம்பிக்கைகளைப் பிரதிபலிக்​கின்றன. இவை அனைத்து வயதினரிடமும் தொடர்ந்து எதிரொலித்​துக்​கொண்டு இருக்​கின்றன.
  • பாரதிய ஜனதா கட்சியில் என்னைப் போன்ற பல தொண்டர்கள், வாஜ்பாய் போன்ற ஒருவருடன் கலந்துரை​யாட​வும், அதன்வழி கற்றுக்​கொள்ளவும் முடிந்தது எங்களின் பாக்கிய​மாகும். பா.ஜ.க.வுக்கு அவரது பங்களிப்பு அடித்​தள​மானது. அந்த நாட்களில், ஆதிக்கம் செலுத்தும் காங்கிரசுக்கு மாற்றாக ஒரு கருத்​தாக்​கத்தை முன்னெடுத்தது அவரது மகத்தான ஆளுமையைக் காட்டியது. எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி போன்ற மகத்தான தலைவர்​களுடன் கட்சியை அதன் தொடக்கக் காலத்​திலிருந்து அவர் வளர்த்​தார்.
  • சவால்கள், பின்னடைவு​களைக் கடந்து வெற்றிகள் மூலம் அதை வழிநடத்​தி​னார். சித்தாந்தம், ஆட்சி அதிகாரம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்​தெடுக்கும் நிலை வந்தபோதெல்​லாம், அவர் முந்தையதையே தேர்ந்​தெடுத்​தார். காங்கிரசுக்கு மாற்றான ஓர் உலகப் பார்வை சாத்தியம் என்றும், அத்தகைய உலகப் பார்வையை வழங்க முடியும் என்றும் அவரால் நாட்டுமக்களை நம்பவைக்க முடிந்தது.
  • அவரது 100ஆவது பிறந்த நாளில், அவரது கொள்கைகளை நனவாக்​க​வும், இந்தியா​வுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்​றவும் நம்மை மீண்டும் அர்ப்​பணித்துக் கொள்வோம். நல்லாட்சி, ஒற்றுமை, முன்னேற்றம் என்ற அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கப் பாடுபடு​வோம். நமது நாட்டின் ஆற்றல் மீது வாஜ்பாய் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, உயர்ந்த இலக்கை அடையவும், கடினமாக உழைக்​கவும் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்