இந்திரா காந்திக்கு எதிராக நின்ற ஆளுமை: இந்திய அரசியல் களத்தில் சீதாராம் யெச்சூரி யார்?
- கடந்த மாதம் 19-ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72), சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். இந்திய அரசியலின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்த இவர், பிறந்த இடம் சென்னை. 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் யெச்சூரி சீதாராம ராவ். ஆந்திரப் பிரதேசத்தின் காகிநாடாவை பூர்விகமாகக் கொண்ட வைதீக பிராமண குடும்பம் இவருடையது.
- இவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜலு யெச்சூரி, ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பொறியாளராக பணியாற்றியவர். இவரது தாய் கல்பகமும் அரசு ஊழியர். விஜயவாடாவிலும், ஹைதராபாத்திலும் பள்ளிப் படிப்பை படித்தவர். 1967-68-ல் தெலங்கானா போராட்டம் தீவிரமடைந்தை அடுத்து, இவரது குடும்பம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.
- டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படித்த யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ பொருளாதாரம் படித்தார். ஜேஎன்யு-வில் படிக்கும்போதுதான் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. தலைமைப் பண்பு காரணமாக, யெச்சூரி மாணவர் சங்க தலைவராக தேர்வானார். அப்போது, அவசரநிலையை பிறப்பித்த பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார்.
- பிரதமர் பதவியை இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், அப்போதைய துணைவேந்தர் பி.டி.நாக் சவுத்ரியை வளாகத்துக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அரசு பல்கலைக்கழகத்தை மூட உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்தனர். அனைத்து வகுப்புகளும் நடத்தப்பட்டன. சுமார் நாற்பது நாட்கள் இவ்வாறு பல்கலைக்கழகம் நடந்தது. ஜேஎன்யு வேந்தராக பதவியில் தொடர எதிர்ப்பு தெரிவித்து இந்திரா காந்திக்கு எதிராக ஜேஎன்யு மாணவர்கள் பேரணி நடத்தியபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 5 பேரை மட்டும் சந்திக்க அனுமதி அளித்தார் இந்திரா காந்தி.
- இந்தச் சம்பவம் குறித்து ஒருமுறை ‘தி இந்து’-வுக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்த யெச்சூரி, “நாங்கள் 500 பேர் இருந்தோம். இந்திரா காந்தியைச் சந்திக்க நாங்கள் ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று அவருடைய உதவியாளர் எங்களிடம் கூறினார். ஆனால், நாங்கள் வற்புறுத்தியபோது, இந்திரா காந்தியே வெளியே வந்தார். அவருக்கு எதிரான எங்கள் தீர்மானத்தை நாங்கள் படித்தோம். அதை அவர் கேட்டார். தீர்மானத்தை நான் அவரிடம் கொடுத்தேன். அவரும் அதை நாகரிகமாக பெற்றுக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்தார்” என்று கூறினார். இந்திரா காந்தியின் முன், மாணவர்கள் புடைசூழ தீர்மானத்தை கையில் பிடித்தபடி யெச்சூரி நிற்கும் புகைப்படம் மிகவும் பிரபலமானது.
- சிபிஎம்-ன் முதல் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பி. சுந்தரய்யா. இவரது இயற்பெயர் சுந்தர ராம ரெட்டி. சாதி பெயரை இணைத்துக்கொள்ள விரும்பாத அவர், சுந்தரய்யா ஆனார். சுந்தரய்யாவால் ஈர்க்கப்பட்ட யெச்சூரி சீதாராம ராவ், அவரைப் பின்பற்றி சீதாராம் யெச்சூரி ஆனார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) தேசிய தலைவராக 1984-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, அதே ஆண்டு சிபிஎம் மத்திய குழுவின் நிரந்தர அழைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் மத்திய குழுவின் முழுமையான உறுப்பினரான சீதாராம் யெச்சூரி, 1992-ல் பொலிட் பீரோ உறுப்பினரானார்.
- 32 வயதில் மத்தியக் குழு உறுப்பினராகவும், 40 வயதில் பொலிட்பீரோ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, 2015-ல் கட்சியின் மிக உயர்ந்த பதவியான பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 3 முறை அவர் பொதுச் செயலாளராக தேர்வானார்.
- 2005 முதல் 2017 வரை மாநிலங்களவை உறுப்பினராக மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கினார். கூர்மையாகவும் அதேநேரத்தில் நகைச்சுவையாகவும் பேசக் கூடியவர் யெச்சூரி. பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் இலகுவாக பழகக்கூடியவராக விளங்கிய அவர், அதேநேரத்தில் உறுதியான மார்க்சிஸ்ட்டாகவும் திகழ்ந்தார்.
- 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை வகுப்பதில், ப.சிதம்பரம், எஸ்.ஜெய்பால் ரெட்டி உள்ளிட்டோருடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றினார் சீதாராம் யெச்சூரி. 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோதும், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
- நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் சீதாராம் யெச்சூரி. கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கும் தனது ஆளுமையைப் பயன்படுத்தியவர் அவர். ஒரு காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக நின்ற சீதாராம் யெச்சூரி, அவரது மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரன் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் திகழ்ந்தார்.
- பொருளாதார படிப்பில் தங்கப் பதக்கம் வென்றி சீதாராம் யெச்சூரி, வாழ்க்கைப் பாதையில் பல அடையாளங்களைக் கடந்தவர். அவர் ஒரு மார்க்சிஸ்ட், அவர் ஒரு பன்மொழியாளர், மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, எளிய மக்களுக்கும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தெளிவாகப் பேசக்கூடியவர். அவரது மறைவால் ஏற்பட்டிருக்கும் இழப்பு, மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமானதல்ல.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2024)