TNPSC Thervupettagam

இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்

December 21 , 2023 334 days 268 0
  • “இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையாக ஏற்பட்டுவிட்டால் - சந்தேகமே வேண்டாம் அது இந்த நாட்டுக்கே பேராபத்தைக் கொண்டுவந்துவிடும்” – பி.ஆர்.அம்பேத்கர்.
  • பெங்களூருவில், எழுத்தாளர் பரகால பிரபாகர் சந்தித்தபோது, ‘சமீப காலமாக இந்திய அரசியல் மேடைகளில் தலைவர்களின் பேச்சில் ஒரு மாறுதலை உணர முடிகிறது’ என்று சுட்டிக்காட்டினார்.
  • இந்திய அரசியலில் பாஜக முக்கியமான கட்சியாக உருவெடுத்துக்கொண்டிருந்த 1980களில் அக்கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி மேடைகளில் பேசும்போது, ‘நேர்மறையான மதச்சார்பின்மையை’ ஆதரிப்பதாகக் கூறுவார். “காங்கிரஸ் கட்சி போலியான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கிறது, எங்களுடைய கொள்கை உண்மையிலேயே மதச்சார்பற்றதாக இருக்கும், அனைவருக்கும் நீதி - யாரையும் திருப்திப்படுத்தும் தனி முயற்சிகள் இருக்காது” என்பார்.
  • இந்தியா சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆன நிலையில், மதச்சார்பின்மை என்பது தூக்கிப்பிடிக்க வேண்டிய உயர்ந்த லட்சியமாகவும், கொள்கையாகவும் அப்போது திகழ்ந்தது; இந்துக்களின் நலனையே முக்கியமாகக் கொண்ட பாஜக போன்ற கட்சியின் தலைவர்கூட, நம்பகமான மதச்சார்பின்மையையே ஆதரிப்பதாகப் பேச வேண்டிய நிலை இருந்தது. மதச்சார்பின்மையை வலியுறுத்திய அதேவேளையில் உண்மையான இந்துவாகவும் இருக்க விரும்புவதை அவர்கள் தெரிவித்துவந்தனர்.
  • இப்போதோ, ஆளுங்கட்சியின் அரசியலை எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் பின்பற்றுவதுதான் உண்மையான இந்து மதம்; ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களைப் போல நாங்கள் போலியான இந்து மதத்தைக் கடைப்பிடிப்பதில்லை” என்று இந்துத்துவத்துக்குப் பதிலடி கொடுக்கப் பேசிவருகிறார். “ஆம், ராகுல் காந்தி இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர், சிறந்த சிவ பக்தர், பூணூல் அணிந்த இந்து” என்று காங்கிரஸில் உள்ள அவருடைய தீவிர ஆதரவாளர்கள் அதற்கு சான்றுரைத்து தங்களுடைய விசுவாசத்தையும் கூடவே பறைசாற்றுகின்றனர்.

இந்துத்துவமயமாகும் அரசியல் மேடைகள்

  • பரகால பிரபாகர் சுட்டிக்காட்டியபடி இந்த மேடைப் பேச்சுகள், தொடங்கிய திசையிலிருந்து வட்டமடித்து இப்போது எதிர்ப் பக்கத்துக்கு வந்துவிட்டன. ஒருகாலத்தில், பாஜகவினர், ‘காங்கிரஸ்காரர்களைவிட நாங்கள் நல்ல மதச்சார்பற்ற அரசியலர்கள்’ என்று கூறிக்கொண்டிருந்தனர். இப்போதோ காங்கிரஸ் தலைவர்கள், ‘பாஜகவில் இருக்கும் தலைவர்களைவிட நாங்கள் சிறந்த இந்துக்கள்’ என்று பேசிவருகின்றனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் முதல்வர் பதவி வேட்பாளருமான கமல்நாத், முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சௌகானைவிட தான் மேம்பட்ட இந்து என்று காட்டிக்கொண்டார்.
  • அரசியல் மேடைகள் இந்துத்துவமயமாவது சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாகிவிட்டது. அயோத்தியில் ராமருக்குக் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்டமான கோவில் திறக்கப்பட்ட பிறகு இது மேலும் வலிமையடையும். ராமர் கோயில் தொடக்க விழாவை பாஜகவினர் நிச்சயம் வெற்றிப் பெருமிதத்துடனேயே கொண்டாடுவார்கள். மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பிற கட்சிகளைச் சேர்ந்த சிலரும் இதை மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள்.
  • மோடி-ஷா கூட்டுத் தலைமையின் கீழ் அரசியல் அணிச் சேர்க்கையில் ஈடுபட விரும்பும் பல சிறிய கட்சிகளின் தலைவர்கள் உற்சாகக் குரலோடு கோஷ்டி சேருவார்கள். கர்நாடகத்தில் பாஜகவுடன் அரசியல் கூட்டணி வைத்த பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.குமாரசாமி தனது பொதுக்கூட்ட உரைகளை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தோடுதான் முடிக்கிறார்.
  • நான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியபோது பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவரான கே.கவிதா, “அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டப்படுவது கோடிக்கணக்கான இந்துக்களுக்கு பெருமிதம் தரும் நிகழ்வு” என்று சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட மூலக் காரணமாக இருந்ததே எங்களுடைய தலைவர் ராஜீவ் காந்திதான்; அவர்தான் கோயிலின் பூட்டை உடைத்துத் திறந்து மக்கள் வழிபட முதலில் அனுமதித்து ராமஜன்ம பூமி இயக்கத்துக்கே உயிர் கொடுத்தார், அத்வானியோ – நரேந்திர மோடியோ அல்ல’ என்றுகூட காங்கிரஸைச் சேர்ந்த தலைவர் யாராவது இனி உரிமை பாராட்டவும் கூடும்.

கொண்டாட முடியாத நிகழ்வு

  • ஒரு இந்துவாக என்னால், இந்தப் புதிய கோயிலின் வருகையைப் பெரிதாகக் கொண்டாடவே முடியாது; இந்தக் கோயில் தொடர்பான வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் – அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் - இந்துக்களும்கூட இறந்தனர். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் அயோத்தியிலிருந்த மசூதியை இடித்துத் தள்ளியபோதும், பிறகும் கலவரங்கள் ஏற்பட்டன.
  • பாகல்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு 1989இல் சென்று கலவரப் பாதிப்புகளை நேரில் பார்த்தேன். முஸ்லிம் நெசவாளர்களின் வீடுகளும் தறிகளும் நெசவுக்கூடங்களும், நான் பின்பற்றும் அதே மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கலவரக்காரர்களால் - நாசமாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
  • கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்துக் கட்டப்படும் பிரம்மாண்டமான கட்டுமானத்தில் வழிபட்டுத்தான் என்னுடைய மத நம்பிக்கையை, கடவுள் பக்தியைக் காட்ட வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கைக் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது டேராடூனில் வாய்க்கால் கரையோரம் இருந்த சிறிய ராமர் கோவிலுக்குத்தான் என் அம்மா கூட்டிச் செல்வாள். பெங்களூருவில் என்னுடைய மாமியாரும் சிவாஜி நகரில் உள்ள சிறிய ராமர் கோவிலுக்குச் சென்றுதான் வழிபடுகிறார்.
  • காந்தியின் மாணவனாகவும் அவருடைய வரலாற்றை எழுதியவனாகவும் இருந்தபோது, தனது ராம பக்தியைக் காட்ட அவருக்குப் பெரியதாகவோ சிறியதாகவோ ஒரு கோவிலும் தேவைப்படவில்லை என்று அறிந்துகொண்டேன்; இறக்கும் தறுவாயில்கூட ராமருடைய பெயரையே அவரது உதடுகள் உச்சரித்தன.

இரண்டாவது குடியரசு

  • ஆலயம் தொடர்பாக நான் இப்படிக் கூறுவதால், அயோத்தியில் இருந்த மசூதிக்கு ஆதரவான சித்தாந்தம் உள்ளவன் என்று பொருள்கொண்டுவிடாதீர்கள். ‘பாபர் மசூதி’ என்பது மத அடையாளம் மட்டுமல்ல - அந்தச் சேனையின் வெற்றிச் சின்னமும்கூட, அதனால்தான் பாபரின் பெயர் தாங்கி நின்றது. புதிய ஆலயமும்கூட ஒரு மதப் பெருமிதத்தின் அடையாளம்தான், இந்த நாட்டில் எல்லாவற்றிலும் இந்து மதத்துக்குத்தான் முதலுரிமை என்பதைச் சுட்டிக்காட்டுவதும்கூட.
  • ராமருக்காகக் கோயில் கட்டித்தான் ஆக வேண்டும் என்றால் அது மிகப் பெரியதாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை, ஆளுங்கட்சியின் அங்கீகாரமும் – பிரதமரின் நேரடிப் பங்கேற்பும்கூட கேட்டுப் பெற வேண்டிய கட்டாயமும் இல்லை.
  • என்னுடைய நண்பர் கூறினார், “அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள இந்தப் பிரம்மாண்டமான ஆலயம், நாட்டின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உணர்த்துகிறது? இந்தியாவில் ‘இரண்டாவது குடியரசு’ உதயமாகிறது, அரசியலிலும் – கொள்கை வகுப்பிலும் இனி இந்துக்களுடைய நலன்தான் முதலில் கவனிக்கப்படும், 1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட ‘முதலாவது குடியரசு’ புரட்டிப்போடப்பட்டுவிட்டது, அரசின் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளைப் பெரும்பான்மை மத மக்களின் நம்பிக்கை அடிப்படையில் ஏற்க மறுத்த முதலாவது குடியரசு மாற்றியமைக்கப்பட்டுவிட்டது என்பதையே இது காட்டுகிறது!”

சாம்ராஜ்யாதிபதி மோடி

  • கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பார்த்தால் அந்தத் திசையில்தான் நாடு பயணிப்பதும், அதற்கு எதிர்க்கட்சி பெரும்பாலும் உடந்தையாக இருப்பதுபோலவும் தெரியவருகிறது. ராமர் கோயில் திட்டத்தில் அரசே ஈடுபடுவது, ‘இந்தியா என்பது இந்து நாடுதான்’ என்பதை மேலும் வலியுறுத்துவதற்காகத்தான் என்று தெரிகிறது. ‘குடியரசு’ என்ற வார்த்தையை இனி எச்சரிக்கையுடன்தான் பயன்படுத்த வேண்டும்.
  • அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் தொடக்க நிகழ்ச்சியிலும் - திருக்குட முழுக்கு நிகழ்ச்சியிலும் பிரதமர் முன்னிலை வகிப்பது, ஒரு சக்கரவர்த்தியின் பங்கை அவர் நிகழ்த்துவதைப் போல இருக்கிறது.
  • இந்த ஒரு கோயிலுக்கு மட்டும்தான் என்றில்லை. 2021 டிசம்பரில் காசியில் காசி விசுவநாதர் ஆலய திருக்குடமுழுக்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோது அங்கிருந்த ஆலயப் பூசாரிகள் அனைவரும், ‘ராஜா சாஹேப் கி ஜெய்’ என்று வாழ்த்து கூறித்தான் வரவேற்றனர். நரேந்திர மோடிக்கு இருக்கும் சாம்ராஜ்யாதிபதி ஆசையை அதிர்ச்சி தரும் வகையில் வெளிக்காட்டியது புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவின்போது, பூசாரிகள் புடைசூழ அவர் மட்டும் தனியாக செங்கோலுடன் பவனி வந்த காட்சி.
  • மக்களாட்சியின் உயர்பீடமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்துக்கான கட்டிடத்தில் அவர் மாமன்னரைப் போல நடந்துவந்தார்.
  • இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நம்முடைய பக்கத்து நாடுகளின் நிலைமை என்ன என்று முதலில் பார்க்க வேண்டும். பாகிஸ்தானும் வங்கதேசமும் தங்களை ‘முஸ்லிம் நாடுகள்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன. அந்நாடுகளில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இரண்டாம் தர குடிமக்களே. இலங்கையும் மியான்மரும் (பர்மா) தங்களை ‘பௌத்த நாடுகள்’ என்று அறிவித்துவிட்டன.
  • அகிம்சையை போதிக்கும் பௌத்தத்தை மதமாக ஏற்றுள்ள அவ்விரு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராக அரசு ஆதரவிலான அடக்குமுறைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மத நம்பிக்கையில் இப்படிப்பட்ட பக்கத்து நாடுகளிடமிருந்து விலகியிருந்த இந்தியா, இப்போது மதத்தை முன்னிலைப்படுத்தும் பிற தெற்காசிய நாடுகளின் சங்கத்தில் சேர்ந்துவிட்டது.

மத மைய நாடு, நன்மை பயக்குமா

  • நம் நாட்டின் அரசியலையும் கொள்கைகளையும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவது நாட்டு நலனுக்கு உதவுமா? மத மைய நாடுகளின் சுதந்திரத்துக்குப் பிந்தைய நிலைமையைப் பார்த்தால் அது நல்ல சகுனமாகத் தெரியவில்லை. மிகவும் குறிப்பாக உதாரணம் காட்ட வேண்டும் என்றால் இலங்கை இருக்கிறது.
  • தெற்காசிய நாடுகளிலேயே மிகச் சிறந்த மனிதவளக் குறியீடுகள் நிரம்பிய நாடு இலங்கை. நன்கு படித்த மகக்கள், மிகச் சிறந்த சுகாதார கட்டமைப்பு – மருத்துவ வசதிகள், மகளிருக்கு எதிரான குற்றங்களும் பாரபட்சமான செயல்களும் மிக மிகக் குறைவு.
  • மிகச் சிறந்த சுயதொழில் திறமை மிக்கவர்கள் அதிகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அழகிய கடற்கரைப் பகுதிகள், வரலாற்றுத் தலங்கள், வன்முறைகள் ஏதுமற்ற காலனி ஆட்சி வரலாறு என்ற அம்சங்களைக் கொண்டது (இலங்கையை பிரிட்டிஷ் அரசு பிரிவினைக்கு உட்படுத்தவில்லை). சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சிறுபான்மைத் தமிழர்களுக்கு (அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள்) எதிராகத் திரண்டெழுந்து அவர்களை ஒடுக்காமல் இருந்திருந்தால் உள்நாட்டுப் போரே ஏற்பட்டிருக்காது, ஆசியாவிலேயே இலங்கை மிகுந்த செல்வ வளம் மிக்க நாடாகவும் அமைதி நிரம்பிய நாடாகவும் இருந்திருக்கும்.
  • உலகிலேயே அதிக வருமானம் உள்ள நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துவிட்டது இந்தியா என்று நம்முடைய தலைவர்கள் மார்தட்டுகின்றனர். தனிநபர் வருமானம், சிசு மரண விகிதம், வேலை செய்யும் தொழிலாளர்களில் மகளிரின் பங்களிப்பு போன்றவற்றில் இந்தியா உலக அளவில் மிகவும் கடைசியில்தான் இருக்கிறது.
  • பொருளாதாரம் – சமூகம் ஆகிய இரண்டு தளங்களிலும் நல்ல வளர்ச்சி பெற்ற ஆசிய நாடுகளாக ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா திகழ்கின்றன. இவற்றில் ஜப்பானும் தென் கொரியாவும் முறையான ஜனநாயகம் திகழும் நாடுகள். சிங்கப்பூர் பகுதியளவு ஜனநாயக நாடு.
  • இருந்தும் இந்த மூன்று நாடுகளிலும் அரசியலிலும் பொதுவாழ்விலும் மதத்தின் பங்கு, அடக்கியே வாசிக்கப்படுகிறது. அயோத்தியில் புதிய – பெரிய ஆலயம் கட்டப்பட்டு திறக்கப்படுவதைக் கொண்டாட அரசியலர்கள் விரையும் நிலையில், பிற ஆசிய நாடுகளின் நிலை நமக்கொரு நிதானத்தைத் தந்து சிந்திக்க வைக்க வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (21 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்