TNPSC Thervupettagam

இந்துத்துவ சுவாமிஜியா விவேகானந்தர்

October 28 , 2023 440 days 315 0
  • ராமகிருஷ்ண மடாலயத்தை நிறுவிய சுவாமி  விவேகானந்தரின் பாரம்பரியத்துக்கு உரிமை கொண்டாடுவது சங்கப் பரிவாரங்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. சராசரி இந்தியர் அவரை காவியுடை தரித்த சன்னியாசியாகத்தான் அறிந்திருக்கிறார். அவர்களுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும் என்றுதான் ஆர்எஸ்எஸ் இயக்கமும் விரும்பும்.
  • நம்முடைய குடியரசை மீண்டும் கைப்பற்றத்துடிக்கும் சக்திகளுக்குத் துணை போகிறவர் தானா விவேகானந்தர்? இந்து மத மேலாதிக்க சித்தாந்தத்தை ஆதரித்தவரா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு மூதாதையரா, ‘இந்துத்துவாஎன்று பரிவாரங்கள் கூறும் கருத்துகளைக் கொண்டவரா அவர்?

புதிய புத்தகம் 

  • சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம் இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. விவேகானந்தர்: சுதந்திரக் கருத்துகளின் மெய்யியலாளர்’ (Vivekananda: The Philosopher of Freedom) என்ற அந்தப் புத்தகத்தை வி.கோவிந்த் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
  • இந்துத்துவர்கள் முன்வைக்கும் அனைத்து அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் எதிரானது அவருடைய சிந்தனைகள், இந்துத்துவம் குறித்த அதன் குறுகிய கண்ணோட்டம், இந்துக்களை மட்டும் கருத்தில் கொண்ட அதன் தனித்துவ தேசியம், கலாச்சாரப் பழமைவாதம், சர்வாதிகார நோக்கிலான கூட்டுத்தன்மை, அறிவுஜீவிகளைச் சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆகியவற்றுக்கு நேர் எதிரானது விவேகானந்தரின் சிந்தனைகள் என்று 485 பக்கங்களைக் கொண்ட அந்த நூலில் சான்றுகளுடன் விவரித்திருக்கிறார்.
  • கோவிந்த் கிருஷ்ணனின் நூலானது கருத்துகளை ஆராயும் வரலாற்றாசிரியர்களுக்கு மட்டும் ஈர்ப்பான வெறும் சொற்புரட்டு அல்ல. இந்தியாவின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை தொடர்பான அரசியல் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நூல் இருக்கிறது. விவேகானந்தரைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் ஆழங்கால் பட்டவன் இல்லை என்றாலும் இந்தக் காரணத்துக்காகவே இந்தப் புத்தகம் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
  • விவேகானந்தரின் மத சமூக மெய்யியல் கருத்துகளை ஆராய்ந்திருப்பதுடன் தேசிய உணர்வு ஏற்படுவதற்கு முன்னாலிருந்த இந்தியாவில் நிலவிய கருத்துகளுடனும், விக்டோரியா மகாராணி ஆட்சிக் காலத்தில் நிலவிய கருத்துகளுடனும் ஒப்பிட்டு அவற்றின் பின்னணியில் நூலை எழுதியிருக்கிறார்.
  • உரிய காலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம்  விவேகானந்தரின் மரபுப் பண்பை மீட்பதுடன், மிகப் பெரிய அரசியல் ஆபத்தாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியக் குடியரசின் மீதான நயவஞ்சகத் தாக்குதலை மீட்கவும் உதவுகிறது.

கலாச்சார ஊட்டத்தில் வெற்றிடம்

  • இந்துத்துவர்களின் சித்தாந்தரீதியிலான தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் மதச்சார்பற்ற அரசியல் களம் தளர்ந்துவிட்டது வருத்தத்துக்குரியது. புதிய கருத்துகளைக் கண்டுபிடிக்கவும், புதிய சிந்தனையோட்டங்களை ஈர்க்கவும், புதிய நண்பர்களைப் பெறவும் முடியாமல் சுதந்திரச் சிந்தனையுள்ள முற்போக்காளர்கள் முகாம் கலாச்சார ஊட்டம் பெற முடியாமல் வற்றிவிட்டது.
  • ஆர்எஸ்எஸ் - பாஜகவின் செயல்களுடன் இதை ஒப்பிடுங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நாயகர்களை அவர்களுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்றாலும் - தங்களுடையவர்களாக  வரித்துக்கொண்டுவிட்டார்கள். சர்தார் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா ஏன் பகத் சிங்கைக்கூட சொந்தம் கொண்டாடுகிறார்கள்!
  • விவேகானந்தரின் சித்தாந்த மரபைக் கைப்பற்றுவது சங்கப் பரிவாரங்களுக்கு எளிதான செயலாகி விட்டது. படித்த சராசரி இந்தியனுக்கு விவேகானந்தரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர், சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் தன்னுடைய பேச்சால் அனைவரையும் மயங்க வைத்தவர் என்பது மட்டுமே தெரியும். காவியுடை அணியும் இந்து மத சாமியார்களைப் போலத்தான் அவரும் என்றே நினைக்கின்றனர். அந்தக் காவியுடையே இந்தியன்’ – ‘இந்துஎன்ற வெற்றுப் பெருமையைத் தீவிரமாக எழுப்புகிறது. அவர்களுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கமும் விரும்புகிறது.
  • துறவிகளுக்கு விதிக்கப்பட்டபடி பிரம்மச்சரியத்தையும் பொருள்களை நாடாமலும் வாழ்ந்த அவர், தொடர்ச்சியாக அதேசமயம் வெளிப்படையாக - புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர், ஆட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சி உணவை விரும்பி உண்டவர், யோகாசனத்தை உடற்பயிற்சியாக செய்வதை வெறுத்தவர் என்பது சராசரி இந்தியர்களுக்குத் தெரியாது. புதிது புதிதாகக் கோவில்களைக் கட்ட வேண்டும் என்ற கருத்தை ஏற்காதவர், மக்களுடைய வறுமையையும் பட்டினியையும் போக்க வழிசெய்யாமல் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களால் எரிச்சலுற்றவர். அப்படிப்பட்ட விவேகானந்தர் சங்கப் பரிவாரங்களுக்கு லட்சிய சாமியாராக இருக்க முடியாது.
  • ஆனாலும், அவர்களால் விவேகானந்தருக்கு சொந்தம் கொண்டாட எப்படி முடிந்தது என்றால் சுதந்திரச் சிந்தனை கொண்ட முற்போக்காளர்கள் விவேகானந்தரின் கருத்துகள் குறித்து அக்கறை காட்டியதே இல்லை அல்லது தீவிரமாக சந்தேகப்பட்டனர். பெரும்பாலும் அவரைப் பற்றி ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தனர் அல்லது வெகு அடக்கமாகவே புகழ்ந்தனர். மதச்சார்பற்ற சக்திகள் அவரை தங்களுடையவர் அல்ல என்று ஒதுக்கியபோதெல்லாம் சங்கப் பரிவாரங்கள் அவரைத் தங்களுடையவராக ஏற்க விரும்பிச் செயல்பட்டன.
  • இந்து வகுப்புவாத இயக்க அரசியலுக்கு அவருடைய சித்தாந்தமே அடிப்படை என்று பிரபா தீட்சித் 1975இல் கட்டுரை எழுதினார்; அது தொடங்கி 2013இல் ஜோதிர்மய சர்மா எழுதிய, ‘மதம் தொடர்பான மறுகூற்று: விவேகானந்தரும் இந்து தேசியவாத உருவாக்கமும்என்ற நூல் வரை விவேகானந்தரை விமர்சித்தும் சந்தேகித்துமேதான் பல ஆக்கங்கள் முற்போக்காளர்களால் கொண்டுவரப்பட்டன.
  • இந்துப் பழமைவாதி என்றும் இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பியவர் என்றும் அவரைச் சித்தரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட விளக்கங்களையெல்லாம் எதிர்த்து தபன் ராய்சௌத்ரி (1998), ஜி. பெக்கர்லெக்கி (2003), சுவாமி மேதானந்தா என்கிற ஆயோன் மகராஜ் (2020) உள்ளிட்டோரும் அதற்கும் முன்பு பலரும் எழுதியுள்ளனர்.

இந்து, மேலாதிக்கவாதி அல்ல

  • விவேகானந்தர் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர், அதைப் பின்பற்றியவர், இந்து என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர், உலக சமுதாயத்துக்கு அளிப்பதற்கு இந்த மதம் தன்னிடத்திலே சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்று கருதியவர். அவருடைய காலத்தில் நாட்டை அடிமைப்படுத்திய காலனிய ஆட்சியாளர்களும் ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களும் இந்து மதம் குறித்து ஏளனமாகப் பேசியபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அப்படிச் செய்ததாலேயே அவர் இந்து மேலாதிக்கவாதியாகிவிட மாட்டார்.
  • ஒரேயொரு சந்தர்ப்பம் தவிர வேறு (கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக ஒருமுறை நிதானமிழந்து பேசியிருக்கிறார்), எப்போதும் பிற மதங்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. தி இமிடேஷன் ஆஃப் கிறைஸ்ட்என்ற புத்தகத்தை எப்போதும் எடுத்துச் செல்வார், இயேசு மீது பக்தி கொண்டிருந்தார். இஸ்லாத்தின் மீதும் அவர் வெறுப்பு கொண்டதில்லை.
  • இந்திய சமூகத்தின் தாழ்ச்சிக்குக் காரணம் அதன் அசமத்துவமும் பிறருடன் கலவாத தனிப்போக்கும்தான், முஸ்லிம் படையெடுப்பாளர்களை இதற்கெல்லாம் குற்றஞ்சாட்டக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்காக இஸ்லாமிய மதப் பழக்க வழக்கங்களைப் புகழ்ந்திருக்கிறார், அத்வைத கொள்கையை நடைமுறையில் பின்பற்றும் ஒரே மதம் இஸ்லாம்தான் என்று கூறியிருக்கிறார்.
  • எல்லா மதங்களையும்விட வேதாந்தம்தான் சிறந்தது என்ற அவருடைய நம்பிக்கை பற்றி என்ன சொல்வது? எல்லா மதங்களையும் அவர் அவற்றின் மெய்யியல் கருத்துகள் அடிப்படையில் படிநிலையாக வரிசைப்படுத்தினார். அதை துவைத’ (இருமை) கொள்கையுடன் தொடங்கினார், ‘விசிஷ்டாத்வைதம்’ (இருமைக் கொள்கையை மேம்படுத்தியது) இறுதியாக அத்வைத’ (இருமை அல்ல) கருத்துடன் முடிக்கிறார். இவைதான் இந்துத்துவத்தின் சாரம் என்கிறார்.
  • விவேகானந்தர் மிகச் சிறந்த அறிவுஜீவியாக உருவான காலம் அது என்று குறிப்பிடும் மேதானந்தா போன்றவர்கள் முன்வைக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து மதங்களுமே வெவ்வேறு வழிகள்தான் அது நான்கு யோகங்களிலும் ஒன்று சத்தியமான பரம்பொருளை அடைவதற்கான மார்க்கங்கள் என்கிறார்.
  • இந்த விளக்கம்கூட நமக்கு உடன்பாடு இல்லை என்று கருதினாலும் தங்கள் மார்க்கமே சிறந்தது என்று கருதுவதற்காக இந்துவையோ இஸ்லாமியரையோ கிறிஸ்தவரையோ நாம் குறை காண முடியாது. காலனியாதிக்கத்தால் கலாச்சாரத்தின் மீது பெருந்தாக்குதல் நிகழ்ந்தபோது தன்னுடைய இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக ஒரு இந்து அப்படிக் கூறிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, இந்து மெய்யியல் கருத்தின் உன்னதமான அம்சம் எதுவென்றால் எல்லா மதங்களுமே சத்தியத்தை அறிவதை நோக்கித்தான் பயணிக்கின்றன என்பதை ஏற்றது. இதை மத மேலாதிக்கமாகப் பார்ப்பது விசித்திரமான கண்ணோட்டமாகும்.
  • இந்து மதக் கருத்துகளை காந்தி பின்பற்றியதும், இஸ்லாத்தின் மீது மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்ததும், இந்துமதக் கருத்துகளை ஸ்வாமி விவேகானந்தர் பிரச்சாரம் செய்ததும் முழுக்க முழுக்கப் பொருத்தமான செயலே, எந்த மதமும் இன்னொன்றின் மீது மேலாதிக்கம் செய்யக் கூடாது, அமைப்புரீதியான மதங்களிடமிருந்து அரசு விலகியே நிற்க வேண்டும் என்ற கருத்துகளுடன் உடன்பட்டதே. விவேகானந்தர் வலியுறுத்திய உலக சமயம்என்ற கருத்து, வெவ்வேறு மதங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்றல்ல, வெவ்வேறு மத பன்மைத்துவத்தைக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய கண்ணோட்டமாகும்.

சாதி அடிப்படையிலான அசமத்துவத்தைக் கண்டித்தார்

  • வேண்டுமென்றே கூறப்படாவிட்டாலும் இன்னொரு தவறான புரிதல், ‘விவேகானந்தர் பிராமண மேலாதிக்கத்தை ஆதரித்தார் சாதிமுறை சரிதான் என்று வாதிட்டார்என்பது. அத்தகைய அவதூறுகளை மறுக்க நூலாசிரியர் தனி அத்தியாயத்தை நீண்டதாக எழுதியிருக்கிறார். சாதி தொடர்பாக விவேகானந்தர் கூறியதை சாதாரணமாகப் படித்தாலே, சாதியை பொதுவான அம்சமாகக் கருதிப் பேசியது, சமூகப் படிநிலையில் மேலாதிக்கம் செய்யும் வர்ணாசிரம முறையை அவர் வெவ்வேறு விதமாக அணுகியிருப்பது புரியும்.
  • முந்தையது - பன்மைத்துவத்தில் பொதுப்படையான பிரிவாக சாதி பற்றிய குறிப்புகள் இருப்பதாகக் கருதும் அவர், சமூக அமைப்புக்கு சற்றும் நியாயமற்றதும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமான சாதி அமைப்பை அவர் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அது ஒழிய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு இப்போதைய சாதி வேறுபாடுகள் மிகப் பெரிய தடையாகும். இது மிகவும் குறுகிய மனப்போக்கு கொண்டது, மக்கள் முன்னேற முடியாமல் கட்டுப்படுத்துகிறது, தனித்தனியாகப் பிரிக்கிறது. புதுப்புது எண்ணங்களுக்கு முன்னால் இந்த சாதியமைப்பு தகர்ந்து காணாமல் போய்விடும்என்று கூறியிருக்கிறார்.
  • அதேபோல பிராமணர்என்ற வார்த்தைக்கும் இருவேறு பொருள்பட பேசியிருக்கிறார். இரண்டுமே இந்திய அறிவுஜீவிகளின் மரபுக்குப் பழக்கமானவைதான். நல்ல குணங்களைக் கொண்டவர்களைக் குறிப்பிடுவதாக முதல் பொருளையும், பிறப்பால் மட்டுமே பிராமணர் என்று உரிமை கொண்டாடுவதை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறார்.
  • முதல் பிரிவினரை ஆதரிக்கிறார், இரண்டாவது பிரிவினரைக் கண்டிக்கிறார் - அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நெறிகளுக்கு ஏற்ப வாழத் தவறியவர்கள் - என்கிறார். பிராமண சாதி தன்னுடைய கையாலேயே தன்னுடைய சவக்குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறது, அது அப்படித்தான் நடக்க வேண்டும்; மேல் சாதி என்றும் சலுகைகள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும் கருதும் ஒவ்வொரு சாதியும் தங்களுடைய சவக்குழியைத் தாங்களே தோண்டிக் கொள்வதுதான் முதன்மையான கடமையாகக் கொள்ள வேண்டும்என்கிறார்.
  • விவேகானந்தர் சமூகவியலாளர் அல்லர், இந்த விஷயத்தில் அவருடைய கருத்துகள் தெளிவில்லாமலும் நழுவும் பாணியிலும், முரண்படும் வகையிலும் கூட இருக்கின்றன. அதற்காக அவருடைய உள்நோக்கத்தைச் சந்தேகிப்பது விஷமத்தனமாகும். சோஷலிசம் (சமத்துவம்) குறித்துப் பேசிய முதல் தொகுதி இந்தியர்களில் முதலாமவர் அல்ல என்றாலும் அவர் முக்கியமானவர். லண்டனில் வசித்த சமத்துவக் கவிஞர் எட்வர்ட் கார்பென்டருடனும், பாரீஸ் நகரில் வாழ்ந்த சிந்தனையாளர் (அனார்க்கிஸ்ட்) பீட்டர் குரோபோட்கினுடனும் தொடர்பில் இருந்தார்.
  • விவேகானந்தரின் ஆக்கங்களைப் படிக்கும் எவராலும் அவருக்கிருந்த உயர்ந்த சமத்துவ நோக்குகளைக் கவனிக்காமல் புறந்தள்ளிவிட முடியாது. ஆண் பெண் பேதம் கூடாது என்று வலியுறுத்திய முதல் தலைமுறை பாலின சமத்துவவாதிகளில் அவர் முக்கியமானவர். பெண்களுக்கு கல்வி அவசியம், அவர்களுக்கு வாக்குரிமையும் வேண்டும் என்று வலியுறுத்திய விவேகானந்தர், சாதி மத அடிப்படையில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
  • தற்செயலாக நடைபெறும் விபத்தைப்போல உயர் சாதியில் பிறந்துவிட்டவர்கள், மற்றவர்களை நடத்தும் விதத்தையும் அவர்களுக்கு இழைக்கும் அநீதிகளையும் அவர் தொடர்ந்து எதிர்த்தார் என்பதே உண்மை. அவரைப் பொருத்தவரை சாதி என்பது சமூகத்தில் ஏற்பட்ட அமைப்புதானே தவிர, அதற்கு மத முக்கியத்துவம் கிடையாது எனவே இந்துத்துவத்துக்கு சாதி அவசியமில்லை என்றே கூறினார்.
  • அவருடைய கருத்து நாராயண குரு கூறியதற்கு நெருக்கமாகவும் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியதற்கு எதிராகவும் இருப்பதைப் போலத் தோன்றும். அதனாலேயே அவர் சாதியை ஆதரித்தார் என்றோ சாதி அநீதியைக் கண்டுகொள்ளாதவர் என்றோ கூறிவிட முடியாது. அம்பேத்கர் சகாப்தத்துக்குப் பிறகு சாதி குறித்து நாம் விவாதிக்கும் விதத்தில் விவேகானந்தர் விவாதித்திருக்கவில்லை என்று நாம் அவரைக் குறை கூற முடியாது.
  • சித்தாந்த ஆயுதம், வழிகாட்டி
  • விவேகானந்தரைப் பற்றி அறிய அவர் வாழ்ந்த காலத்துக்கும் நாம் வாழும் காலத்துக்கும் சிந்தனைகளில் உள்ள மாற்றங்களை உள்வாங்கி, முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதுதான் நம்முன் உள்ள சவால். அரசியல் தாராளவாதம், சமூக நீதி, நவீனத்துவ சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய அளவுகோல்களின்படி அவர் எப்படி வாழ்ந்தார் என்ன பேசினார் என்று தகவல்களைத் திரட்டி வைத்துக்கொண்டு அவரைப் பற்றி முடிவு கட்டுவது சுலபம்.
  • அவரைப் பாராட்டுகிறவர்கள்கூட, நிபந்தனைகளுடன் அல்லது பீடிகைகளுடன்தான் பாராட்டுகிறார்கள். மதவாதியாக இருந்தாலும் பகுத்தறிவோடு பேசியிருக்கிறார்’, ‘இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும் மதச்சார்பற்றவராகவும் திகழ்ந்திருக்கிறார்’, ‘நம்முடைய பாரம்பரியத்தை ஆதரித்தாலும் நவீனமானவராகவும் இருந்திருக்கிறார்என்றெல்லாம் அவரைப்பற்றிக் கூறுகிறோம். இங்கேதான் அடிப்படையாகவே தவறு நிகழ்கிறது.
  • நாம் வாழும் இக்காலத்து மதிப்பீடுகள் ஏதும் அப்போது இல்லை என்பது ஒருபுறமிருக்க, இன்றைக்கு நாம் எடுத்திருக்கும் நிலைக்கு வருவதற்கே அவர் போன்றவர்களின் சிந்தனைகள்தான் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. நாம் நினைக்கிறோம் நாம் இன்று கடைப்பிடிக்கும் அளவுகோல்கள் உலகில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை, மாறவே மாறாது என்று.
  • நம்முடைய ஊகங்களையே மறுசிந்தனைக்கு உள்ளாக்குமாறு விவேகானந்தர் வலியுறுத்துகிறார். மதச்சார்பற்ற சக்திகளால் ஆன்மிக உலகில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடம் தொடர்பாக பேச நம்மை அழைக்கிறார். மதங்கள் தொடர்பாக பகுத்தறிவு சார்ந்த மூட நம்பிக்கைகளிலிருந்தும் மீண்டு வருமாறு கூறுகிறார்.
  • நம்முடைய நவீனத்துவம் எப்படி மேற்குலக நவீனத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும், இந்துத்துவத்துடன் நமக்குள்ள உறவு (பிற மதங்களுடனும்தான்) எப்படி இருக்கிறது என்று மறு சிந்தனைக்கு உள்படுவது அவசியம். மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும் ஆழ்ந்த மதச்சார்பற்றவராகவும் இருப்பது எப்படி என்பதை அனுபவிக்க வேண்டும்.
  • சங்கப் பரிவாரங்களைத் தாக்க விவேகானந்தர் சக்திவாய்ந்த ஆயுதம் என்பதில் ஐயமே இல்லை. அவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் சில தேவைகளுக்கு மட்டும் அவரை ஆயுதமாகப் பயன்படுத்துவது பரிதாபகரமானது. அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் அகமும் புறமும் ஞான ஒளியேற்றக்கூடியது. நம்முடைய பாரம்பரியமிக்க குடியரசை நாம் மீண்டும் மீட்க விவேகானந்தரால் உதவ முடியும், நாம் மட்டும் நம்முடைய குடியரசின் ஆன்மிக, கலாச்சாரங்களுக்கான பொருளை மீட்டுருவாக்க முடிந்தால். புதிய இந்தியக் குடியரசை அமைக்க அது வேதாந்த வழியிலான அணுகுமுறையாக இருக்குமோ?

நன்றி: அருஞ்சொல் (28 - 10– 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்