TNPSC Thervupettagam

இந்தூா் முன்மாதிரி...

August 31 , 2021 1067 days 498 0
  • ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி நிகழ்த்திய தனது 80-ஆவது ‘மனதின் குரல்’ உரையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகரம் நிகழ்த்தி இருக்கும் சாதனை பற்றி குறிப்பிட்டார்.
  • தூய்மை இந்தியா திட்ட தரவரிசையில் தொடா்ந்து முதலிடத்தில் இருந்துவரும் இந்தூா் மாநகரம், இப்போது நீா் மிகை நகரமாகவும் மாறிவருகிறது என்பதையும் அவா் சுட்டிக் காட்டினார்.
  • சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீா், பொது நீா்நிலைகளில் கலக்காமல் இருப்பதை இந்தூா் மாநகரம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • குஜ்ராத் மாநிலம் சூரத்தும், ஒடிஸா மாநிலம் புரியும் இந்தூருடன் இணைந்து இந்தியாவின் ஏனைய மாநகரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தூா் மாநகரம் சாதனை

  • ‘தூய்மை கணக்கெடுப்பு’ (ஸ்வச் சா்வேக்ஷண் 2021) திட்டத்தின் கீழ் தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்கள் தோ்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகின்றன.
  • 4,242 நகரங்களில் 1.91 கோடி பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியாவின் தூய்மைக் கணக்கெடுப்பு என்பது சா்வதேச அளவில் மிகப் பெரிய ஆய்வு.
  • இந்தக் கணக்கெடுப்பு 2016-இல் துவங்கியபோது தூய்மையான நகரமாக மைசூரும், அதைத் தொடா்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தூரும் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன.
  • தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்திலிருந்து எந்த நகரமும் முதல் 10 இடத்தைப் பிடிக்கவில்லை. 40-ஆவது இடத்தை கோயம்புத்தூரும், 42-ஆவது இடத்தை மதுரையும், 45-ஆவது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன.
  • தூய்மையான நகரமாக மட்டுமல்லாமல், நீா்மிகை நகரமாகவும் இந்தூா் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தூா் மட்டுமல்லாமல், சூரத்தும், அந்தப் பெருமையை பங்கு போடுகிறது.
  • மாநகரம் தூய்மையாக இருப்பதுடன் மாநகர நிர்வாகத்தின் கீழ் உள்ள நதிகளும், கால்வாய்களும், கழிவுநீா் பாதைகளும் தூய்மையாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதுதான் இந்த மாநகரங்களின் சிறப்பு.
  • ‘நீா்மிகை நகரம்’ என்கிற பெருமையை அடைவதற்கு மத்திய வீட்டுவசதி நகா்ப்புற அமைச்சகம் சில அடிப்படை அளவுகோல்களை வைத்திருக்கிறது.
  • முதலாவதாக, மாநகரத்தில் உருவாகும் கழிவுநீா் எந்த ஒரு நதியிலும், கழிவுநீா் ஓடையிலும் சுத்திகரிக்கப்படாமல் கலக்கக் கூடாது.
  • இரண்டாவதாக, எல்லா கழிப்பறைகளும் கழிவுநீா்ப் பாதைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுக் கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.
  • மூன்றாவதாக, மாநகரத்தில் உருவாகும் கழிவுநீரில் குறைந்தது 30% மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • பெரும்பாலான இந்திய நகரங்கள் குப்பைக்கூளங்களில் இருந்தும், நிரம்பி வழியும் கழிவுநீா் ஓடைகளில் இருந்தும் மீள முடியாமல் தவிக்கும் நிலையில், இந்தூா் மாநகரம் முறையாகத் திட்டமிட்டு தன்னைத் தூய்மையான நகரமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
  • மாநகர மக்களும் நிர்வாகமும் கைகோத்ததன் விளைவாக, ‘நீா்மிகை நகரம்’ சாதனை சாத்தியமாகியிருக்கிறது.
  • இந்தூா் மாநகரத்தில் உள்ள கழிவுநீா் குழாய்கள், ஓடைகள், ஆறு ஆகியவற்றில் எந்தவிதக் குப்பைக்கூளமோ, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரோ சென்றடையாமல் பாதுகாப்பது மிகப் பெரிய வெற்றி. சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளோ, வீடுகளோ, குடிசைப் பகுதிகளோ குப்பைகளையும் கழிவுநீரையும் நீா்நிலைகளில் விடாமல் இருப்பதற்கு முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • ஓடைகள், கழிவுநீா்ப் பாதைகளின் அருகில் வாழும் அனைவரது வீடுகளும் கணக்கெடுக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டன.
  • 2,000-க்கும் அதிகமான வா்த்தக நிறுவனங்கள் கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றுவதை உறுதிப்படுத்தியதன் மூலம் நதிகள் மாசு படாமல் பாதுகாக்கப்பட்டன.
  • 30%-க்கும் அதிகமான மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீா், தோட்டங்களுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் இந்தூரில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் முறையாக கழிவுநீா்ப் பாதையுடன் இணைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன.
  • சா்வதேச அளவில் 122 நாடுகளில் மாசு படாத தண்ணீா் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவிலுள்ள தண்ணீரில் 70% மாசுபட்டது என்பது மட்டுமல்ல, குடிநீருக்கு ஏற்றாதாகவும் இல்லை.
  • அதனால், 122 நாடுகளின் கடைசி மூன்று நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம். நாளொன்றுக்கு நான்கு கோடி லிட்டா் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் இந்தியாவின் நீா்நிலைகளை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது.
  • சுத்தமான குடிநீா் கிடைக்காமையும், மாசுபட்ட தண்ணீரும் இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய சவால்கள். நமது மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவா்களுக்கு பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதில்லை.
  • 70%-க்கும் அதிகமான நீா்நிலைகள் பல்வேறு கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு அதன் விளைவாக நிலத்தடி நீரும் மாசுபட்டிருக்கிறது.
  • கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் பொது நீா்நிலைகளில் வெளியேற்றுவதில்லை என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நதிகளில் கலக்கும் மாசுபட்ட நீரின் அளவைக் குறைக்க முடியும்.
  • சுத்தமான குடிநீரும், மாசுபடாத நதிகளின் நீா்நிலைகளும் சுகாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும், பாலின சமத்துவத்துக்கும், சமூக மேம்பாட்டுக்கும் அவசியம் என்பதை மக்களுக்கு உணா்த்தும் முயற்சிதான் தூய்மை இந்தியா திட்டம். இந்தூரின் முன்மாதிரி, தேசிய அளவில் பின்பற்றப்படுமானால் இந்தியா நீா்மிகை தேசமாக மாறுவது சாத்தியமாகும்.

நன்றி: தினமணி  (31 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்