TNPSC Thervupettagam

இன அழிப்புக்குத் துணை நிற்கும் வல்லரசு

July 22 , 2024 175 days 161 0
  • சில நாள்களுக்கு முன்பாக உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனை மீது ரஷ்ய ராணுவம் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியது. போர் விதிகளுக்கு முற்றிலும் மாறான, சற்றும் மனிதத்தன்மையோ இரக்க உணர்வோ அற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக 32க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகின. மேலும், பொதுமக்கள் பலரும் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

துரோகமும் கோழைத்தனமும்:

  • இத்தகைய கொடிய தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் பலவும், குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்றவை தங்களின் வன்மையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, ‘மனிதத்தன்மையை உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கும்’ அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் மீது கொடுந்தாக்குதல் நிகழ்த்துவது போர் நெறிமுறைகளுக்கு எதிரானது. இது ரஷ்யாவின் வெறித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது” என்று திருவாய் மலர்ந்தார். அவரது இந்தக் கரிசனம் பாராட்டத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
  • ஆனால் உள்நாடு, உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்புகளையும் போர் எதிர்ப்பாளர்களின் எதிர்க் கருத்துகளையும் மீறி, சற்றும் செவி சாய்க்காமல் அவற்றைத் துச்சமெனப் புறந்தள்ளி, ஆக்கிரமிப்பையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிவரும் இன அழிப்புவாத, பயங்கரவாத இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுத வழங்கலை இடையறாது செய்துவரும் அமெரிக்க அதிபருக்கு இதைப் பேசத் தகுதி உண்டா?
  • நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு மனித உயிர்களை - அதிலும் குறிப்பாகக் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் கொன்று குவிப்பதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து வருகிறார்கள் அமெரிக்காவின் ஜோ பைடனும் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவும்.
  • காஸாவில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கர்ப்பிணிகளுக்குக் குடிநீரோ, உணவோ ஏதுமற்ற நிலை. குடிநீரும்கூட வழங்க மறுத்துப் பெண்களையும் குழந்தைகளையும் தங்கள் எதிரிகளாகப் பாவிக்கும் இஸ்ரேலின் ஜியோனிஸ ராணுவத்தினர் கோழைகள் அல்லாமல் வேறு யார்?

குற்றவாளி அமெரிக்கா மட்டுமல்ல...

  • காஸாவின் 20 லட்சம் மக்கள்தொகையில் 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இவர்களில் பலரும் 2023இல் போர் தொடங்கிய பிறகு பிறந்தவர்கள். ஆயுதங்களின் பேரோசையை மட்டுமே தாலாட்டாகக் கேட்டு வளர்ந்து வந்தவர்கள்.
  • இதன் விளைவாக, அவர்களின் எதிர்காலம் சூன்யம் நிறைந்ததாக அல்லவா இருக்கிறது! இவர்கள் வளர்ந்து இந்த உலகைக் கண்களால் காண்பார்களா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்ததாக இருக்க வேண்டிய குழந்தைப் பருவம் பாலஸ்தீனியக் குழந்தைகளுக்குத் துரோகமும் துயரமும் கேடுகளும் சூழ்ந்ததாக அல்லவா இருக்கிறது! அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உளவியல் சிக்கல்களும் பாதிப்புகளும் எத்தகைய வலி நிறைந்தவை! அவை என்றைக்குத்தான் தீரும்?
  • 2023ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்களை அல்ஜஸீரா இணையதளம் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும், அந்த இணையதளம் பதிவுசெய்துள்ள பெயர்ப் பட்டியலின் இறுதியில், ‘இவை கொல்லப்பட்ட குழந்தைகளில் சரி பாதி மட்டுமே’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள், விமான நிலையங்கள் என அனைத்துக் கட்டுமானங்களையும் தகர்த்து, மண் குவியலாக்கி அழித்ததன் மூலம், ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளியாகும் செய்திகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
  • 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் அங்கங்களை இழந்து ஊனம் அடைந்துள்ளனர். கற்பனையிலும் காண முடியாத இன அழிப்பும் பேரழிவும் அல்லவா இவை? இத்தகைய பேரழிவுக்குப் பின்னரும் தன் ஆயுத வழங்கலை நிறுத்த அமெரிக்கா முயற்சி செய்யவில்லையே?
  • இஸ்ரேலின் இன அழிப்புப் படுகொலைகளுக்கு நேட்டோ நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமெரிக்கா மட்டும் காரணமல்ல, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும்தான். இந்நாடுகள் ஜியோனிஸப் போருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியும் நல்கியிருக்கின்றன.

சடலங்கள் நிரம்பிய நரகம்:

  • காஸாவிலிருந்த 32 மிகப்பெரிய மருத்துவமனைகள் குண்டுவீச்சில் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன. அதில் 28 மருத்துவமனைக் கட்டிடங்கள் முழுவதுமாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளும் மண்ணோடு மண்ணாகப் புதைந்துபோயுள்ளனர்.
  • அழிவுகளின் சாட்சியமாக காஸா பகுதியில் சிதிலமாகிக் கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கிடக்கும் உயிரற்ற உடல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. போரின் உக்கிரத்தால் காயமடைந்து உயிர் பிழைத்துக் கிடந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக வந்த அனைத்து நாடுகளின் மீட்புக்குழுவைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டவர்களும் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொன்றழிக்கப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் நிலையும் அதுதான்.
  • ஒரு லட்சத்து 28 ஆயிரம் வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காஸாவில் 4 கோடி டன் கட்டிட இடிபாடுகள் உள்ளதாகவும் அவற்றை முற்றிலும் அகற்ற ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் ஐ.நா. நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றை அகற்ற 50 கோடி டாலர்கள் செலவாகும் என்றும் நூற்றுக்கணக்கான லாரிகள் தேவைப்படும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
  • பாலஸ்தீன இன அழிப்பு இஸ்ரேல் ராணுவத்தால் ‘பெரியண்ணன்’ அமெரிக்காவின் ஆயுத பலத்துடன் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய முதலாளிகள், அவர்களைச் சார்ந்து நிற்கும் முதலாளிகள் இரு சாராருமே மனிதத்தன்மையை விடுத்து, மனசாட்சியை அடகு வைத்தவர்கள்.
  • அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜோ பைடனோ, டொனால்டு ட்ரம்ப்போ இருவரில் யார் வென்றாலும் பாலஸ்தீன மக்களின் மீது எந்த வேறுபாடுமின்றி இனவாத வன்மத்தைக் கக்குவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் இவர்கள் தங்கள் ஆயுத விற்பனையை மட்டும் நிறுத்தப்போவதில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்